புதிய ஏற்பாடு:

அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம்  இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று மிதப்பில் உலகப் பொருளாதாரத்தையே தன் கைக்குள் அடக்கியாளப் பார்க்கிறது. அமெரிக்க அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து ஏமாற உடன்படாத நாடுகளைத் தன் வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடைகள் விதிக்கிறது.

டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால்தான் அமெரிக்க அரசின் கொட்டமும் அடங்கும். இது சாபம் அல்ல. டாலர் தான் என்றென்றும் உலகப் பணமாக இருந்ததா, என்ன? இல்லவே இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா? உலக வரலாற்றில் எந்தெந்த நாடுகள் வல்லரசுகளாக முன்னணியில் இருந்தனவோ அந்தந்த நாடுகளின் நாணயம் உலகப்பணமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. அவ்வாறு முதலில் போர்த்துக்கீசிய நாணயத்திலிருந்து டாலர் வரை உலகப் பணமாக 6 நாணயங்கள் மாறியுள்ளன. டாலருக்கு முன்பு பிரிட்டிஷ் பவுண்டு உலகப் பணமாக இருந்தது. வரலாற்று வழியாக உலகப் பணமாக ஒரு நாணயத்தின் ஆயுட்காலம் சராசரியாக 90 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறப்பு என்று இறந்தால் இறப்பும் உண்டு இல்லையா, அதற்கு டாலர் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனால் டாலர் தான் ஏற்கெனவே இறந்து பிணமாகி விட்டது என்று கூறினோமே! ஆமாம் அமெரிக்க டாலர் செத்தும் 76 ஆண்டுகளாக உலகப் பணமாக நீடித்து வருகிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போமா?

தங்கத்தின் மதிப்பு குறைந்தால் கூட அமெரிக்க டாலர் மதிப்பு குறையாது, டாலர் விலையுயர்ந்தது, அமெரிக்கா சம்பந்தப்பட்ட அனைத்துமே விலையுயர்ந்ததுதான். ஏனென்றால் அமெரிக்கப் பொருளாதாரம் நவீனமயம், தொழில்வளர்ச்சி மற்றும் வெளிப்படைத் தன்மையால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி ஆராய்ந்தால் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என அதிர்ந்து போவோம். ஏமாந்தது நீங்களும் நானும் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் 37 வருடங்களுக்கு மேல் ஏமாற்றியுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது.

உதாரணமாக நாம் ஒரு கடையில் தங்கம் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அது 24 காரட் மதிப்பில் இருந்ததால் நம்பிக்கை ஏற்பட்டு அந்தக் கடையின் வாடிக்கையாளராகி விடுகிறோம்., சில மாதங்களுக்குப் பின் தங்கத்துக்கு பதிலாக அச்சு அசலாகத் தங்கம் போல் உள்ள மதிப்பில்லாத போலியை கடைக்காரர் நம் தலையில் கட்டுகிறார். ஆனால் நம்பிக்கை, நாணயம், கைராசி அடிப்படையில் வாடிக்கையாளரான நமக்கு வாங்கிய பொருளின் மதிப்பைச் சரிபார்க்க வேண்டும் என்று ஒரு போதும் தோன்றவில்லை. ஆனால் நம் இரவல் பணத்தில் கடைக்காரர் இலவசமாக ஒரு சொகுசு வாழ்க்கையையும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்று அமோகமாக வாழ்கிறார். இப்போது கடைக்காரருக்கு பதிலாக அமெரிக்க அரசையும், போலித்தங்கத்திற்கு பதில் டாலரையும் போட்டுப் பார்த்தால் நாம் ஏமாந்து போன கதையின் சுருக்கம் கிடைக்கும்.

டாலர் பற்றிய உண்மையை அறிய முதலில் டாலர் எப்பொழுது உலகப் பணமானது என்பதிலிருந்து பார்ப்போம். டாலருக்கு முன் பிரிட்டிஷ் பவுண்டுதான் உலகப் பணமாக இருந்தது என்று கூறியிருந்தோம் இல்லையா.. இந்தியாவிடமிருந்து பெருமளவு சுரண்டியிருந்த போதும் இரண்டு உலகப்போர்களால் பிரிட்டிஷ் பொருளாதாரம் கடனில் மூழ்கி நிலைகுலைந்ததால் பிரிட்டனின் தங்க இருப்பு குறைந்து போனது. அதனால் பிரிட்டிஷ் பவுண்டை தங்கமாக மாற்ற வழியில்லாமல் போனது. போரில் நேரடியாகப் பங்கேற்காத அமெரிக்கா ஆயுத விற்பனையால் பெருலாபம் பெற்று அதிக உபரித் தங்கத்தைக் கொண்டிருந்தது. உலகின் தங்க இருப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்தது, அதனால் டாலர் அதிகாரப்பூர்வமாக உலக பணமாகும் தகுநிலை பெற்றது.

இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில்,1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போரினால் பாதிக்கப்பட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி ஐக்கிய நாடுகளின் நாணய மற்றும் நிதி மாநாடு (இதுவே பிரெட்டன்வுட்ஸ் மாநாடு என்று அழைக்கப்படுகிறது) நியூ ஹாம்ப்ஷயரின் பிரெட்டன்வுட்ஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் உலகின் 44 நாடுகளிலிருந்தும் 730 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மூன்று வாரம் நடைபெற்ற மாநாட்டில் அன்று ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய நிதி அமைப்புகளே இன்று நவீன தாராளமயத்தால் உலகமக்களை அடக்கியாண்டு வருகின்றன.

அந்த அமைப்புகளாவன:

  1. சர்வதேசப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐபிஆர்டி) இதுதான் இப்போது உலக வங்கி என்று அழைக்கப்படுகிறது.
  2. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்). கூடுதலாக, வணிகம் மற்றும் கட்டண வீதங்கள் தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) ஏற்படுத்தப்பட்டது இது தற்போது உலக வர்த்தக அமைப்பு (WTO )என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் தங்க மதிப்பின் அடிப்படையில் உலகப் பணமாக / சர்வதேசப் பணமாக அங்கீகரிக்கப்பட்டது. $35 அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையான விகிதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு முழுமையாக மாற்றத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்டது. உலகளாவிய நாணயங்களும் யு.எஸ். டாலருடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு அமெரிக்கா உலகின் புதிய பொருளாதாரத் தலைவராக உருவெடுத்தது. பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் விளைவாக, டாலர் "தங்கத்தைப் போலவே பாதுகாப்பானது" என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

1960களில் அமெரிக்காவின் வெளிநாட்டுத் தலையீடுகளாலும், ஆடம்பர நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உபரித் தங்கத்தின் மதிப்பு குறைந்து போனது. வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரால் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்தது. இந்தப் பெருகிவரும் கடனாலும், தொடர்ச்சியான மோசமான நிதி/நாணயக் கொள்கைகளாலும் அமெரிக்க டாலர் மதிப்பிழந்தது. மற்ற நாடுகள் டாலரின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கின. தங்க இருப்பு குறைந்த நிலையில் மற்ற நாடுகளிடம் உள்ள டாலர்களுக்கு ஈடாக அமெரிக்கா தங்கம் வழங்க வேண்டியிருந்தது. இவ்வாறு வாஷிங்க்டன் தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டது. 1971 ஆகஸ்ட் 15,இல், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் யு.எஸ். டாலர்களை இனிமேல் தங்கமாக மாற்ற முடியாது என பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டை அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்து உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இவ்வாறு உலகப்பணமாகிய அமெரிக்க டாலர் 27 வயதிலே மதிப்பிழந்து மண்டையைப் போட்டது அதாவது மதிப்பில்லா வெற்றுக் காகிதமானது.

புதிய ஏற்பாடு:

அமெரிக்கா தங்க சாளரத்தை அதாவது டாலருக்கான தங்க மாற்றீட்டை ஒரு சுமையாக, தனது செலவினங்களுக்கு ஒரு தடையாகக் கருதியதால் தங்க சாளரத்தை மூடியது."தங்க சாளரத்தை மூடுவதன்" மூலம், வாஷிங்டன் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல - உலகளாவிய பொருளாதாரக் கொள்கையையும் பாதித்தது. பிரெட்டன்வுட்ஸின் சர்வதேச தங்கத் தரத்தின் கீழ், அனைத்து நாணயங்களும் டாலரின் மதிப்பிலிருந்து அவற்றின் மதிப்பைப் பெற்றன. டாலர் அதன் தங்க இருப்புகளின் நிலையான விலையிலிருந்து அதன் மதிப்பைப் பெற்றது. ஆனால் டாலரின் மதிப்பு தங்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட போது, டாலர் “மிதக்கும்” நாணயமானது” (floating currency).அதாவது மதிப்பு நிர்ணயிக்கப்படாத நாணயமானது. “மிதக்கும் நாணயம்” என்பதற்கு, நாணயத்தின் மதிப்பு எதனுடனும் இணைக்கப்படவில்லை என்று பொருள். டாலர் ஒரு "மிதக்கும்" நாணயமாக மாறிய போது, முன்னர் டாலருடன் பிணைக்கப்பட்டிருந்த உலகின் பிற நாணயங்கள் திடீரென்று "மிதக்கும்" நாணயங்களாக மாறின. அது நாணய ஊக வணிகத்தையே ஊக்குவித்தது.

எப்படியாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க செய்யவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாயிருந்தது. ஏன் உலகப் பொருளாதாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற பொது நலமா என்ன? இல்லை டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால் பிறகு எப்படி அமெரிக்கா விரும்பிய படி ஏகாதிபத்தியப் போர்ச் செலவுகள் செய்ய முடியும்? அந்நாட்டின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு யார் தீனி போட முடியும்? என்ற சுய தன்னலம்தான்.

அமெரிக்கா நிதி ஒழுங்கை நிலைநாட்ட விரும்பவில்லை. மற்ற நாடுகளின் தயவில் புதிதாய்க் கிடைத்த இரவல் ஆடம்பர வசதி வாய்ப்பையும் விட விரும்பவில்லை. நிதி ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என மற்ற நாடுகளை ஏவும் அமெரிக்க அரசு, தனது நாணயத்தின் மதிப்பில் நிதி ஒழுங்கை நிலைநாட்டவில்லை. டாலரை நியாயமான முறையில் உலகப் பணமாக நீடிக்கவைக்க அமெரிக்கா என்ன செய்திருக்க வேண்டும்? முதலாவதாக தனது பெருகிவரும் கடனையும், செலவினங்களையும் குறைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக புதிய பொருளாதார யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் துல்லியமாக தங்கத்தின் டாலர் விலையை அதிகரித்திருக்கவேண்டும். இதைச் செய்திருந்தால் டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான நம்பகத் தன்மையை மீட்டெடுத்திருக்கலாம். ஆனால் இவை இரண்டுமே நிதிக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரப் பொறுப்பாண்மையையும் கோருவதால் ஆடம்பர அமெரிக்கா அவற்றை விரும்பவில்லை, குறுக்கு வழியையே விரும்பியது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் கீழ் சர்வதேசத் தங்கத் தரத்தை நீக்குவது அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தனர். அமெரிக்கா தனது ஆடம்பர மற்றும் போர்ச் செலவினங்களை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டுமானால் இந்த "செயற்கை டாலர் தேவையை" பராமரிப்பது மிக முக்கியமானது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

டாலரைத் தங்கமாக மாற்ற முடியாததால், சர்வதேச அளவில் அதன் நம்பகத்தன்மை காலாவதியாகி விட்டது. அதனால் உலக அளவில் டாலரின் தேவை குறைந்து விட்டால் அதன், மதிப்பும் குறைந்து விடும். பின் அமெரிக்கா நினைத்தபடி செலவு செய்ய முடியாது. என்ன செய்தாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க வைக்க வேண்டும், ஆனால் தங்கச்சுமை வேண்டாம் என்றே முடிவு செய்தனர்.

டாலரின் மதிப்பை அதிகரிக்க வேண்டுமானால் டாலருக்கான தேவை அதிகமாக வேண்டும். டாலருக்கான சர்வதேசத் தேவையை அதிகமாக்க வேண்டுமானால் எந்தப் பொருளுக்கு சர்வதேச அளவில் அதிகத் தேவையுள்ளதோ அந்தப் பொருளின் வர்த்தகத்தை டாலருடன் கோர்த்து விட வேண்டும், அதாவது டாலரில் விற்க வாங்கச் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நிக்சன் அரசு தீர்மானித்தது உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள், கச்சா எண்ணெய்க்கே என்றென்றும் குறையாத அதிகத் தேவை உள்ளதால் கச்சா எண்ணெய் விற்பனையை டாலருடன் கோர்த்து விட முடிவு செய்தது.

தீவிர முயற்சிகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவையைத் தக்கவைக்கும் முயற்சியில், பெட்ரோ டாலர் அமைப்பு என்று புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டது.

பெட்ரோ டாலர்:

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரச குடும்பத்துடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் 1973ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, 1) சவுதி அரேபியா எண்ணெய் விற்பனை அனைத்தையும் யு.எஸ். டாலர்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யு.எஸ். டாலர் தவிர வேறு எந்த நாட்டுப் பணத்தையும் தங்கள் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டணமாக சவுதி அரேபியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.) இவ்வாறு சவுதி அரேபியாவிலிருந்து ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் சவுதிப் பணமான ரியாலில் விற்க அமெரிக்கா தடை விதித்தது. இந்தப் புதிய ஏற்பாட்டின் கீழ், சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வாங்க முற்படும் எந்தவொரு நாடும் முதலில் தங்கள் சொந்தத் தேசிய நாணயத்தை யு.எஸ். டாலராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

2) சவுதி அரேபியா தங்கள் உபரி வருவாயை யு.எஸ். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு பதிலாக அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்கள் வழங்குவதாகவும் இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அதன் எண்ணெய் வயல்களைப் பாதுகாப்பதாகவும் வாக்குக் கொடுத்தது.

தங்கத்துக்கு டாலர் என்றிருந்த அமைப்பு எண்ணெய்க்கு டாலர் என்று மாறியது. எண்ணெய் உற்பத்தியாளரால் எண்ணெய் விற்பனைக்கு ஈடாகப் பெறப்படும் அமெரிக்க டாலரே பெட்ரோ டாலர் என அழைக்கப்படுகிறது, பெட்ரோ டாலர்களை அமெரிக்க நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வது பெட்ரோ டாலர் மறுசுழற்சி என அழைக்கப்படுகிறது..

1975இல் சவுதியின் ஆதிக்கத்தினால் ஒபெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எண்ணெய் விற்பனையை அமெரிக்க டாலர்களில் செய்யவும், அமெரிக்க. அரசின் கடன் பத்திரங்களில் தங்கள் உபரி எண்ணெய் வருமானத்தை முதலீடு செய்யவும் ஒப்புக் கொண்டன.

இதனால் அமெரிக்க டாலருக்கான தேவை செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் எண்ணெய்த் தேவை காரணமாக அமெரிக்க. டாலர்களுக்கான தேவையும் அதிகரித்தது. இவ்வாறு டாலர் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டது.

யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பால் அமெரிக்க அரசு பெருங்கொள்ளை அடிக்கிறது நாசூக்காகச் சொல்ல வேண்டுமெனில் பெரும் லாபமடைகிறது. இது எப்படி எனப் பார்த்தோமானால், டாலர்களுக்கான உலகளாவிய தேவை அமெரிக்க மத்திய அரசுக்கு மேலும் டாலர் அச்சிட “அனுமதிச் சீட்டு” அளிக்கிறது. அது வரையறை இல்லாமல் தன் விருப்பம் போல் அச்சிடுகிறது. மிதக்கும் நாணயங்களின் இந்தப் புதிய சகாப்தத்தில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தங்கத் தரத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால் புதிய நாணய உற்பத்திக்கு ஈடான தங்க இருப்புக்கள் இல்லை என்ற அச்சம் இல்லாமல் இப்போது விரும்பிய படி "டாய்லெட் பேப்பர்” போல் டாலர் நோட்டுக்களை அச்சிட்டுக் கொண்டே இருக்கிறது.

மற்ற நாடுகளில் இந்தளவிற்குப் பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் எக்கச்சக்கமாக உயர்ந்து விடும். ஆனால் அமெரிக்கா பணவீக்கத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா அதிக அளவில் ஆயுதங்களை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை, அமெரிக்க டாலரையும் ஏற்றுமதி செய்கிறது.

இதனால்தான் புதிய "எண்ணெய்க்கான டாலர்கள்" முறை முந்தைய "தங்கத்திற்கான டாலர்கள்" முறையை விட அமெரிக்க அரசால் மிகவும் விரும்பப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையின் முதன்மைப் பயனாளி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆகும். இது பொதுத்துறை வங்கியல்ல. இது ஒரு தனியார் வங்கி. யு.எஸ். டாலர் பெடரல் ரிசர்வ் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்குக் கடனாக வழங்கப்படுகிறது, டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இவ்வாறுதான் அமெரிக்கா குறுக்கு வழியில் ஓர் இடைத்தரகு ஏற்பாட்டின் மூலம் நாணயமில்லா டாலருக்கு நாணயமில்லா முறையில் மறுவாழ்வு கொடுக்க சவுதி அரேபியாவைக் கட்டாயப்படுத்தியது.                                                              

தொடரும்

Pin It