satyaki royநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (15)

ஆசிரியர்: சத்யகி ராய்

டெல்லியில் உள்ள தொழில்துறை மேம்பாட்டுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ.டி), இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வளரும் நாடுகளில் தொழில்மயமாக்கத்தில் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பு ஏற்படுத்தும் தாக்கம், உலகமயச் சூழலில் உலகளாவிய மேலாதிக்கத்தின் வளர்ச்சிப் போக்கு ஆகியவை அவரது தற்போதைய ஆய்வுப் புலங்களாகும்.

தலைப்பு:

ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சியக் கோட்பாடு (1)

உலகளாவிய மேலாதிக்கத்தின் பரிமாணங்களைக் கொண்டுள்ளது ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியம் குறித்துப் பல்வேறு கண்ணோட்டங்கள் காணப்படுகின்றன.

ஏகாதிபத்தியம் என்ற கோட்பாட்டுக் கருத்தினம் இன்றைய சூழலில் பொருத்தப்பாடு உடையதல்ல என்று கூறுபவரும் உண்டு. தாராளமயக் கோட்பாடுகள் ஏகாதிபத்தியத்தை முரண்பாடுகளுடன் மட்டுமே அடையாளப்படுத்துகின்றன. போர் ஏற்பட்டால் ஏகாதிபத்தியமாகவும், போர் இல்லையெனில் ஏகாதிபத்தியம் அல்ல என்றும் அவை விளக்கமளிக்கின்றன.

முன் - முதலாளித்துவத்தையும், முதலாளித்துவத்துக்கு பிந்தைய கால கட்டத்தையும் அவை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஆனால் எந்த ஒரு மார்க்சியரும் ஏகாதிபத்தியத்தின் விளைவே போர் என்று விளக்குவாரே தவிர போரின் இருப்பை வைத்து ஏகாதிபத்தியத்தை வரையறை செய்ய மாட்டார்.

காலனியாதிக்கத்தில் தேசம் அதன் புவியியல் எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்தப்பட்டது. அதன் இறையாண்மையும், அதிகார ஆற்றலும் நீட்சி பெற்றன.

காலனியாதிக்கம் என்பது ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதியே. ஏகாதிபத்தியம் இல்லாமல் காலனியாதிக்கம் இருக்க முடியும் என்பது கொச்சைவாதம். ஏகாதிபத்தியத்தின் வரலாற்று முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவப் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்பதை முன்-முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் நீட்சியாகவும் காணலாம்.

மூடிய பொருளாதார வடிவிலான மூலதனத்தின் வேலைதிட்டத்தில் மார்க்ஸ் வீழும் லாபவீதப் போக்கை எதிர்த்து இயங்கும் காரணிகளை விவரிக்கிறார். மூலதனத்தில் உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான உறவையும், வெவ்வேறு மூலதனங்களுக்கிடையிலான உறவையும் விவரிக்கிறார். மூலதனத்தின் முதல் பகுதியில் கிட்டத்தட்ட ஒத்த அங்கக மதிப்புடைய மூலதனமே கருத்தில் கொள்ளப்பட்டது.

வெவ்வேறு நாடுகளிடையே உபரி - மதிப்பு எவ்வாறு அபகரிக்கப்படுகிறது என்பது மூலதனத்தில் பரிசீலிக்கப்படவில்லை. கிரண்ட்ரிசில் (Grundrisse) வெளிநாட்டு வர்த்தகம் குறித்துக் கூறும் போது ஏகாதிபத்தியம் குறித்து மார்க்ஸ் விவரித்திருக்கலாம்.

லாப வீதத்தின் வீழ்ச்சி என்பது ஒரு போக்கை மட்டுமே குறிக்கிறதே தவிர அதைத் தவிர்க்க முடியாத நிலையாகவோ, அதனால் முதளாளித்துவம் தானாகவே வீழ்ந்து விடும் என்ற பொருளிலோ மார்க்ஸ் குறிப்பிடவில்லை.

உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைக்கப்படுவதன் மூலமும், மற்ற நாடுகளிலிருந்து மலிவு விலையில் மூலப் பொருட்களைப் பெறுவதன் மூலமும், உழைப்புச் சக்திக்கான நுகர்வுப் பொருட்களை மலிவாக்குவதன் மூலமும், மற்ற நாடுகள் மேல் கொண்டிருக்கும் மேலாதிக்கத்தின் மூலமாக மலிவான நுகர்வுப் பொருட்களை அங்கிருந்து ஏற்றுமதி செய்வதன் மூலமும் லாப வீத வீழ்ச்சிக்கு எதிர்ப்போக்கை ஏற்படுத்த முடியும் என மார்க்ஸ் விவரிக்கிறார்.

முதலாளித்துவம் என்பது உலகளாவிய அமைப்பு. முதலாளித்துவத்தின் முக்கியப் பண்புகளில் ஒன்று சீரற்ற வளர்ச்சி.

மூலதனம் முதல் பாகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும் உபரி-மதிப்பு ஆக்கமும் பரிசீலிக்கப்பட்டது.

முலதனம் இரண்டாம் பாகத்தில் உபரி - மதிப்பின் சுற்றோட்ட முறை விவரிக்கப்பட்டது.

முலதனம் மூன்றாம் பாகத்தில் முதலாளித்துவ அமைப்பு அதன் முழு வடிவில் பரிசீலிக்கப்படுகிறது. மொத்த உபரி-மதிப்பு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதும் முதலாளித்துவ அமைப்பின் சீரற்ற தன்மையும் விவரிக்கப்பட்டன.

ஒரு சரக்கில் பொதிந்துள்ள மதிப்பே அதன் உற்பத்தி விலையாகிறது. அதில் பொதிந்துள்ள உபரி-மதிப்பு முதலாளியின் லாபம் ஆகிறது. சரக்குகளில் உபரி - மதிப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், அது லாபத் திறனைக் கொண்டிருந்தாலும், இழப்பும் ஏற்படலாம். ஏனெனில் சரக்குகளின் உபரி - மதிப்பு பணமாக ஈடேற்றம் பெற வேண்டும்.

மூலதனம் மூன்றாம் பாகத்தில் மொத்த உபரி - மதிப்பும் எவ்வாறு வெவ்வேறு முதலாளிகளிடம் விநியோகிக்கப்படுகிறது, அவர் லாபத்தில் எவ்வளவு பங்கு பெறுகிறார் என்பது அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்பதைப் பொறுத்துள்ளது. அதன் அடிப்படையிலே மொத்த உபரி - மதிப்பில் அவரது தனிப்பட்ட பங்கு அவர் எவ்வளவு உபரி - மதிப்பு அபகரிக்கிறார் என்பதைச் சாராமல் நிர்ணயிக்கப்படுகிறது. லாபத்தின் மதிப்பு = சராசரி லாப வீதம்*முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் அளவு.

லாப வீதம் சராசரியாக்கப்படும் நிகழ்வில் வெவ்வேறு மூலதனங்களுக்கு இடையிலான வேறுபாடு அவற்றின் அங்கக மதிப்பில் காணப்படும் வேறுபாடே. மூலதனத்தின் அங்கக மதிப்பு அதிகமாக இருக்கும் போது அது பெறும் லாபமும் அதிகமாகிறது. உலகளாவிய முதலாளித்துவ அமைப்பில் உபரி - மதிப்பு நாடுகளிடையே விநியோகிக்கப்படுகிறது.

வளரும் நாடுகள் கூடுதலாகச் சுரண்டப்படுகின்றன. ஒவ்வொரு தேசிய, பிராந்திய நிகழ்வும் ஒரு உலகளாவிய முதலாளித்துவப் பின்னணியைக் கொண்டுள்ளது. உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறை சீரற்ற மூலதனத் திரட்டலும், மூலதனத்தைக் குவிக்கும், மையப்படுத்தும் போக்கும் கொண்டுள்ளது.

ஏகாதிபத்தியம் பற்றிய பல்வேறு கருத்தாக்கங்கள் உள்ளன. அவை ஏகாதிபத்தியத்தைக் குறை நுகர்வுவாதம், ஏகபோக முதலாளித்துவம், முதலாளித்துவ சகட நெருக்கடியின் வெளிப்பாடு, புரட்சிக்கு முந்தைய காலகட்டம் எனப் பல்வேறு விதமாக விளக்குகின்றன.

வெவ்வேறு மூலதனங்களுக்கிடையில் சமமற்ற அதிகார உறவுகள் உள்ளன. இது வெறும் பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல, ஏகபோகக் கட்டத்தில் மூலதனக் குவிப்புக்கும் அதிகார உறவுகளுக்கும் இடைமுகமாகவும் ஏகாதிபத்தியம் கருதப்படுகிறது. ஏகாதிபத்தியம் குறித்து ஒற்றைக் கோட்பாடு இல்லை. காலனியாதிக்க ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடுகள், காலனியாதிக்கத்திற்குப் பிற்கால ஏகாதிபத்தியம் குறித்த கோட்பாடுகள் எனப் பலவும் உள்ளன.

தடையற்ற போட்டியுடைய முதலாளித்துவம் என்ற ஒன்று என்றுமே இருந்ததில்லை.

19ஆம் நூற்றாண்டிலேயே முதலாளித்துவம் அதன் ஏகபோகக் கட்டத்தை அடைந்து விட்டது. ஏகாதிபத்தியத்தின் முழுமையான இயங்கியலை ஒரே கோட்பாட்டின் மூலம் விளக்கி விட முடியாது (மார்க்சியக் கோட்பாடுகளுக்குள் கூட).

ஒரு கோட்பாட்டில் ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. முதலாளித்துவம் அதன் இயல்பிலேயே ஏகாதிபத்தியத்தைக் கொண்டிருப்பதாக விளக்கப்படுகிறது.

ரோசா லக்சம்பர்க்கின் குறை நுகர்வுவாதம் முதலாளித்துவம் எப்போதுமே ஈடேற்றப் பிரச்சினையை கொண்டிருக்கும். அதன் உபரி-மதிப்பை முழுவதுமாக ஈடேற்றம் பெற முன் - முதலாளித்துவச் சந்தைகள் தேவைப்படும்.

மொத்த உபரி - மதிப்பையும் ஒரு மூடிய பொருளதார அமைப்பில் ஈடேற்றம் செய்ய முடியாது என்றும் முதலாளித்துவம் தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. மூலதன முதலீடுகளுக்கான தூண்டுதலைப் பெறவும் அதற்கு முன்-முதலாளித்துவச் சமூக அமைப்பு தேவைப்படுகிறது என்றும் விவரித்துள்ளார்.

ஏகாதிபத்தியத்தை முதலாளித்துவத்தின் ஏகபோக வடிவமாகக் குறிப்ப்பிட்டு, நிதிமூலதனம் எவ்வாறு அதில் உட்பொதிந்துள்ளது என்பதையும் ஹாப்சன், ஹில் ஃபெட்ரின் ஆகியோர் விளக்குகிறார்கள். உள்நாட்டில் முதலீடுகளைக் குறைத்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் போது கூடுதல் லாபம் பெற முடியும் எனவும், ஏகபோக முதலாளித்துவத்தில் மூலதனக் குவிப்பின் விளைவாக எந்தப் பொருளார்ந்த வரையறையும் இல்லாமல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்ற நிலை உருவாகிறது என்றும் ஹாப்சன் குறிப்பிடுகிறார். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பொருட்கள் மூலதனமாகின்றன.

ஹில்ஃபெர்டின் கூட்டுப் பங்கு நிறுவனத்தின் தோற்றம் குறித்தும், வங்கியின் கடன் நிதியை மேலும் பெருக்குவதற்காக, வங்கி மூலதனம் தொழில் துறை மூலதனத்துடன் இணைந்து நிதி மூலதனம் உருவெடுப்பதையும் விவரித்துள்ளார். இதனால் வங்கி மூலதனத்தின் நலன்களும், நிதி மூலதனத்தின் நலன்களும் கூட்டு சேர்கின்றன. பெரு முதலாளிகளின் சர்வாதிகாரம் ஏற்படுகிறது. அதனால்தான் வாராக் கடன் உள்ள விஜய் மல்லயாவுக்கு மீண்டும் கடன் கொடுக்கப்பட்டது.

முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமே ஏகாதிபத்தியம் என்றும், அதை ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுக் காலகட்டமாகக் குறிப்பிட்ட லெனின் அதிகார உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விவரித்து உழைக்கும் வர்க்கத்தின் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதலையும் தந்தார்.

லெனினும், ஓரளவிற்கு புகாரினும் ஏகாதிபத்தியத்தை புரட்சிக்கு முந்தைய காலகட்டமாகக் கருதினர். லெனின் வளர்ச்சி குன்றிய காலனியாதிக்க நாடுகளின் விடுதலைப் புரட்சியையும் அதில் இணைத்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்தியம் குறித்த வேறு பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.

டேவிட் ஹார்வி புதிய ஏகாதிபத்தியம் குறித்து ஒரு கோட்பாட்டை அளித்துள்ளார். அவர் ஏகாதிபத்தியத்தை ஏகபோக முதலாளித்துவமாகக் கருதவில்லை. முதலாளித்துவச் சுழற்சியில் ஏற்படும் நெருக்கடியின் விளைவாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு மார்க்சிய மரபினர், ஏகாதிபத்தியம் என்ற ஒன்றே இல்லை என்றும் பேரரசே உள்ளது எனவும் வாதிடுகிறார்கள்.

வில்லியம் ராபின்சன் தேச அரசு என்ற கருத்தாக்கம் அதன் பொருத்தப்பாட்டை இழந்து விட்டது. தேசம் கடந்த முதலாளித்துவ வர்க்கம் தோன்றியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். பிரபாத் பட்நாயக் ஏகாதிபத்தியம் குறித்து ஒரு புதிய கோட்பாட்டை அளித்துள்ளார். ஜான் ஸ்மித் லாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கின் அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியம் குறித்து விவரிக்கிறார்.

குறை நுகர்வு என்பது தவிர்க்க முடியாததல்ல, ஆனால் முதலாளித்துவத்தின் நோக்கம் நுகர்வு அல்ல, அது தற்செயலான விளைவே ஆகிறது. லாபமே அதன் நோக்கம். உழைப்பாளி உபரி - மதிப்பு உருவாக்கும் வரை மட்டுமே அவரை உயிருடன் இருக்க வைக்க வேண்டிய தேவை முதலாளிக்கு உள்ளது.

உழைப்பாளர்களின் பெரும் பட்டாளம் உபரி - மதிப்பு உருவாக்கத் தேவையில்லை என்றும், வளர்ச்சி பற்றிய மீள் சிந்தனையில். உழைப்பாளரின் சேமப் பட்டாளம் முதலாளித்துவத்திற்குத் தேவை இல்லை என்ற கட்டத்தை அடைந்துள்ளது என்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்கவே அது தேவைப்படுவதாகவும் கல்யாண் சன்யால் கூறுகிறார்.

உழைப்புச் சந்தை தேக்கம் அடைந்துள்ளது. தொழிற் சங்கங்களின் பேர சக்தி குறைந்துள்ளது. சராசரி உழைப்பு தரப்படுத்தப்படும் (standardization) போது சரக்காக்கப் படுகிறது. தரப்படுத்தப்பட்ட உழைப்பைத் துல்லியமான குறியீடாக்க முடியும் (codification). உழைப்பின் திறன் அதிகரிக்கும் போது அதைக் குறியீடுகளாக்க மேலும் அதிக தரப்படுத்துதல் தேவைப்படுகிறது.

அறிவு விற்பனைக்குரிய சரக்காக்கப்படுகிறது. கூட்டு மதிநுட்பமாக இருந்த அறிவு தரப்படுத்தும் நிகழ்முறைக்கு உட்படுகிறது. மருத்துவருடைய, பொறியியலாளருடைய மூளைப் பணியைப் குறியீடாக மாற்ற முடியாது. ஆனால் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் உழைப்பைத் தரப்படுத்திக் குறியீடாக்க முடியும். தொழிற்சங்கங்கள் இருப்பினும் கூட, உழைப்பின் தரப்படுத்தல் அதிகமாகும் போது, கூட்டு பேர சக்தி குறைக்கப்படும்.

(தொடரும்)

- சமந்தா

Pin It