காவல்துறையினர் அப்பாவிகளை அழைத்து வந்து கொலை செய்வது பின்னர் எதிர் தாக்குதல் எனப்பட்டம் கட்டுவது. பொய்களையும் புனைந்துரைகளையும் பக்கம் பக்கமாக எழுதி அந்தக் கொலையை நியாயப்படுத்துவது. இது காவல் துறைக்கு கைவந்த கலை.இவர்களின் இந்த கொலைகளுக்கு பாராட்டுக்கள் பதக்கங்கள். அதுவும் விழாக்களில். அதாவது காவல்துறையினர் நடத்தும் கொலைகளுக்கு அரசியல் நடத்துவோர் அங்கீகாரம் தருகின்றனர்.பின்னர் விவகாரம் நீதிமன்றம் செல்கிறது. நீதிபதிகள் காவல்துறையின் ' ஏட்டைய்யா ' போல நடந்துக்கொண்டு மொத்த நீதியையும் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள். இதில் பெரும்பாலும் அ நாதைகளும் அடித் தட்டுக்கு அல்லாடும் அன்றாடம் காய்ச்சிகளும்தான் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் அவர்களால் துப்பாக்கிகளைத் ' துஷ்பிரயோகம் ' செய்யும் இந்த அடங்காத காவல் துறையின் முன்னால் நின்றிட முடிய வில்லை.

இப்படி இந்தியக் குடிமக்களை - இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தங்கள் தொப்பைகளை நிரப்பிக் கொண்டும் கொலை செய்யும் பெரும் பாதகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கீழ் நிலையில் உள்ளவர்கள் செய்யும் கொலைகளுக்கு மேல் ' மட்டத்தில் ' உள்ள காவல்துறை அதிகாரிகள் தரும் ஆதரவுக்கு அளவே இல்லை. இறந்தவர்களின் உடல் அடக்கப் படுவதற்கு முன்னரே அவர்களுக்குப் பதக்கங்களைத் தர காத்துக் கிடக்கும் ஆட்சியாளர்கள். இப்படி கொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் இந்த பதவி உயர்வுகளும் பதக்கங்களும் மின்னல் வேகத்தில் வழங்கப்படுவதுண்டு.

அரசியல் வாதிகளின் - அரசுகளின் இஸ்லாத்திற்கு எதிரான மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகள், மாநில முதல்வர்களையும் ஏன் குடியரசு தலைவர் களையும் ஏமாற்றிய வரலாறுகள் ஏராளம்! தாராளம்! இவற்றை நாம் வைகறை வெளிச்சம் இதழில் நிரம்பவே சுட்டிக்காட்டியுள்ளோம். இன்னும் அதிகமாக வெளிக்கொணர்வோம்.இந்த அநியாயங்களையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்திட உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். குறிப்பாக PUCL - என்ற மனித உரிமை அமைப்பு[People`s Union For Civil Liberties ] உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் ' 13 கட்டளைகளை ' பிரஸ்தாபித்துள்ளது. அவற்றை தொகுத்து தருகிறோம்.

கட்டளை - 1

குரூரமான குற்றங்கள் நடக்கும் என்ற தகவல் அல்லது உளவு காவல்துறையை எட்டினால் காவல்துறை உடனேயே அதற்கு எழுத்து வடிவம் தந்து ஏதாவது வடிவில் பதிவு செய்ய வேண்டும். இதனை காவல் நிலைய டைரியில் - நிலைய நாட்குறிப்பில் பதிவு செய்திட வேண்டும்.[ Preferably in The Case Diary Or Some Electronic Form] அதாவது கம்யூட்டர் போன்றவற்றில் பதிவு செய்து வைத்திட வேண்டும். இதனை ஏட்டைய்யா செய்கிறார். கொலை நடந்தப்பின்.

கட்டளை - 2

[ என்கவுண்டர் ] என்ற எதிர்த்தாக்குதல் நடந்தால் அதில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டால் அதன் விளைவாக மரணம் நிகழ்ந்தால் உடனேயே F.I.R என்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவேண்டும். அதனை உடனேயே 157. CRPCஇன் கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பிட வேண்டும். இதில் தாமதம் ஏதும் கூடாது.

கட்டளை - 3

எதிர்த்தாக்குதல் அல்லது நிகழ்வு நடந்த காவல் நிலையம் அல்லாத இன்னொரு காவல் நிலையம் வழி, ஒரு காவலர் குழுமம் [Police Team] அல்லது உளவுத்துறை CID ஒரு விசாரனையை நடத்திட வேண்டும். இதனை உயர்மட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கண்காணித்திட வேண்டும்.காவல்துறையினர் செய்யும் எதிர்த்தாக்குதல் என்ற படுகொலையை காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது அத்தனை அநீதிக்கும் வழிவகுக்கும். ஒரு பேட்டை ரவுடி செய்யும் கொலையை இன்னொரு பேட்டை ரவுடி தனது தாதாவின் மேற்பார்வையின் கீழ் விசாரித்து உடனயே அறிக்கையை தரவேண்டும் என இனி நமது நீதிபதிகள் நீதியை ஜனரஞ்ச படுத்தினால் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

கட்டளை - 4

ஒரு மாஜிஸ்டிரேட் என்ற நடுவரைக் கொண்டு ஒரு விசாரணையை நடத்திட வேண்டும். இது CRPC - 176 ஆம் பிரிவின் கீழ் நடந்திட வேண்டும். இது எதிர்தாக்குதலில் துப்பாக்கி சூடு வழியாக மரணம் நிகழும் போதெல்லாம் நடத்தப்பட வேண்டும்.

கட்டளை - 5

எதிர் தாக்குதலில் காயம்பட்டு அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அவரிடம் ஒரு வாக்கு மூலம் வாங்கிட வேண்டும். அந்த வாக்கு மூலம் ஒரு நடுவரால் - மாஜிஸ்டிரேட்டால் வாங்கப்பட வேண்டும். அல்லது அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரியால் வாங்கப்பட வேண்டும்.

கட்டளை - 6

முதல் தகவல் அறிக்கை F.I.R நிலைய வழக்கு பதிவேடு [Case Diary] ஆகியவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏதும் இருக்கக்கூடாது. நம்ம ஊரில் இதெல்லாம் நடப்பதில்லை. கொலையை செய்யும் காவல்துறை அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்ட வர்களின் இல்லங்களில் என் மகன் தானாகவேதான் இறந்தான் என அறிக்கைகள் தயார் செய்து தந்து விடுவது மிகவும் எளிதாக நடக்கிறது. இதில் காவல்துறை அதிகாரிகள், (S.P.. முதல்) தலைமைக் காவல்துறை அதிகாரி முதல் கடைசி காவல்துறை ஏவலர் வரை ஒரே அணியில் செயல்படுகின்றார்கள். தங்களின் முரட்டு அதிகாரத்தைத் தாராளமாகப் பயன்படுத்துகின்றார்கள். ஏழை எளிய மக்களால் இவர்களின் கெடுபிடிகள், கொடூரங்கள் இவற்றைத் தாங்கிட இயலுவதில்லை. ஒரு பையனோடு போகட்டும் என விட்டுவிடு கின்றார்கள்.மேலும் காவல் துறையின் கெடுபிடிகள் தாங்கிட முடியாமல் அவர்கள் காட்டும் இடத்தில் கையப்பம் போட்டுக் கொடுக் கின்றார்கள் மகனைப் பறிகொடுத்த பெற்றோர்கள். இந்த வழி காட்டுதல்கள் வெரும் ஏட்டுச்சுரைக் காயாகத்தான் நாட்டில் நடந்து கொண்டி ருக்கின்றது. இனியும் அப்படியேத்தான் இருக்கும்.

கட்டளை எண் - 7

புலண்விசாரணை முடிந்தவுடன் நீதிமன்றத்தில் அறிக்கையை விரைந்து தந்திட வேண்டும். இது CRPC - 173 இன் கீழ் நடக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானல் விரைந்து விசாரணையை நடத்திட வேண்டும். உச்ச நீதிமன்றம் இதில் புதிதாக ஒன்றையும் பிரஸ்தாபித்து விடவில்லை. ஏற்கனவே நடப்பில் உள்ளவற்றைத்தான் உச்ச நீதிமன்றம் பீற்றித்திடிகின்றது. உச்சநீதி மன்றம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுவெல்லாம் இங்கே நடப்பதில்லை.

கட்டளை - 8

எதிர்தாக்குதலில் மரணம் நிகழ்ந்து விட்டால் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு உடனேயே தகவல் சொல்லிட வேண்டும்.

கட்டளை - 9

புலனாய்வுக்குப்பின் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவலர் துப்பாக்கியைப் பயன்படுத்தி யிருக்கின்றார், அவர் குற்றம் புரிந்திருக்கின்றார், என்பன போன்ற தகவல்கள் கிடைத்தால் அவர் மீது உடனேயே வழக்குப் பதிவு செய்திட வேண்டும். அந்த வழக்கை விரைந்து நடத்திட வேண்டும்.

கட்டளை - 10

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் பொருத்தவரை CRPC 357 ஐ உடனேயே பின்பற்றிட வேண்டும். இந்த சுண்டக்காய் இழப்பீட்டை கொலை செய்யும் காவல்துறையின் ' தாதா ' தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் (SP) யே முடிவு செய்து கிடைப்பதை வாங்கிக்கொள் அல்லாமல் நீங்கள் ஒன்றும் செய்திட இயலாது என்கிறார். இதை இழப்பீட்டை பெற்றுக் கொள்ள அவர்கள் போடும் தாளங்கள் அனைத்திற்கும் ஆடிட வேண்டியதிருக்கின்றது. இந்த அநீதியை களைந்திட உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் எள்ளளவும் உதவிடவில்லை.

கட்டளை - 11

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி, தன்னுடைய ஆயுதத்தையும், அதோடு தொடர் புடைய இதர கருவிகளையும் புலனாய்வு செய்யும் குழுக்களிடம் உடனேயே ஒப்படைக்க வேண்டும். இது அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 20 - இன் கீழ் நடந்திட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு தலும் வெள்ளறிக் காயில் வெண்ணை தடவியது போல் தான் இருக்கின்றது.

கட்டளை - 12

எதிர்தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உடனேயே சாகச விருதுகள் அதிரடி பதவி உயர்வுகள் போன்றவற்றை வழங்கிடக் கூடாது. அவர்களின் ' சாகசம் ' சந்தேகங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படும் வரை இவற்றில் எதையும் வழங்கிடக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் அக்கட்டளை முன்னரே செயலுக்கு வந்திருந்தால் ஆயிரக்கணக்கான போலி என்கவுண்டர்கள் தவிர்க்கப் பட்டிருக்கும். பல்லாயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். காரணம் அண்மை காலங்களில் நடக்கும் அத்தனை என்கவுண்டர்களும், பணம், பதவி உயர்வு, பதக்கம், ஆகியவற்றிற்காகவே நடத்தப்பட்டன. முதலமைச்சர்கள் முதல் ஜனாதிபதி என்ற குடியரசு தலைவர் வரை ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த விவகாரத்தில் இனி இப்படி சன்மானங்கள் வழங்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் காட்டி நாம் அவற்றை நிறுத்தலாம். இதனை செய்திட மக்கள் முன்வர வேண்டும்.

கட்டளை - 13

காவல்துறையினர் செய்யும் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேலே சொல்லப்பட்ட இந்த நெறிமுறைகள், பின்பற்றப்படவில்லை, அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. விசாரணைகள் சுதந்திரமாக இல்லை, இந்த விசாரணையில் சிலர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள், என்றால் மாவட்ட நீதிமன்றத்தில் [மாவட்ட தலைமை நீதிமன்றத்தில்] புகார் மனுவை தாக்கல் செய்யலாம். இப்படியரு மனு தாக்கல் செய்யப்படுமேயானால் மாவட்ட நீதிபதி அதனை ஆய்வுக்குட்படுத்தி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது இப்போது கடைபிடிக்கப்படாத ஒரு நியதி. இதனை செய்திட பொதுமக்களும் சமுதாய அமைப்புகளும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற் கொண்டிட வேண்டும். நீதிமன்றங்களும். கண்ணை மூடிக் கொண்டு காவல்துறை சொல்வதையெல்லாம் நம்புவதை நிறுத்திட வேண்டும்.உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த நெறிமுறைகளுக்காக நாம் உச்ச நீதிமன்றத்தைப் பாராட்டிட இயலவில்லை. காரணம் எல்லா என்கவுண்டர்களிலும் கொலையை செய்யும் காவலர் மீது இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவேண்டும் என்ற நியதி இங்கே மீண்டும் வலியுறுத்துப் படவில்லை.

காவலர்களைத் தூக்கிலிட வேண்டும்.

[Potlice men involved in encounters should be hanged ] அன்றொரு நாள் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்தது நமது உச்ச நீதிமன்றம். ஆதாரம் : [The hindu = Tuesday, Aug,9.2011 ] "They are nothing but cold blooded brutal murder" should be treated as the rarest of rare offences, and police pensonnel responsible for it should be awarded death sentense. They should be hanged justice katji said'' (ibid) TH. Aug 9/2011.என்கவுண்டர் என்பவை பட்டப் பகலில் நடக்கும் குரூர கொலைகள் அல்லாமல் வேறொன்றுமில்லை. இந்த குற்றங்களை அரிதானவற்றிலும் அரிதானவை என எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பொருப்பான காவலர்களுக்கு மரண தண்டனை வழங்கிட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட வேண்டும். இந்த காரமும் கசப்பும் உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய பரிந்துரையில் இல்லை.

– எம்.ஜி.எம்.

Pin It