ஈழத் தமிழர் சாந்தன் மறைந்தார்! இந்திய ஆட்சியாளர்களின் கருணையின்மைக்கும் தமிழக ஆட்சியாளர்களின் உறுதியின்மைக்கும் இன்னுமோர் உயிர் பலியாகியுள்ளது. நீதிமன்றம் சட்டப்படி விடுதலை செய்த பின்பும் சாந்தனை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பாமல், சிறப்பு முகாமில் அடைத்து வைத்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கிச் சாந்தன் மரணமடையக் காரணமானவர்கள் மீது அரசே நடவடிக்கை எடுத்திடுக!

முன்னாள் இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி கொலை வழக்கில் ‘தடா’ சிறப்பு நீதிமன்றத்தில் கொலைத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களில் சரிபாதிப்பேர் ஈழத் தமிழர்கள். மேல்முறையீட்டில் இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்தது. எஞ்சிய எழுவரில் ஒருவரான சாந்தன் உட்பட நான்கு பேருக்குக் கொலைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. நால்வரில் நளினிக்கு மட்டும் மாநில அரசின் பரிந்துரைப்படி தூக்குத் தண்டனை, வாழ்நாள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

எஞ்சிய மூவரான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு ஆணை பிறப்பித்த போது, அத்தண்டனைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பாரிய அளவில் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் உச்சமாகக் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி தீக்குளித்தார். மூவர் உயிர்காக்கத் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் இயற்றியது. அவர்களைத் தூக்கிலிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இறுதியில் இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களைத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவித்து, வாழ்நாள் சிறைப்பட்டோராக்கியது. ஏற்கெனவே இந்த வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை கழித்து வரும் நால்வரையும் சேர்த்து இந்த எழுவரையும் உரிய நடைமுறைகளைக் கடைப்பிடித்து முன்விடுதலை செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது. இந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியாவில் அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் இந்திய அரசு அவர்களின் விடுதலையை மறுத்து விட்டதோடு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றது.

குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி இந்த எழுவரையும் முன்விடுதலை செய்ய இந்திய அரசின் ஒப்புதல் தேவை என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன்படி மாநில ஆளுநருக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்யத் தடையில்லை என்றும் தெளிவாக்கியது. இந்த அடிப்படையில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அமைச்சரவை கூடி எழுவர் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் ஆண்டுக் கணக்கில் அதை முடக்கிப் போட்டார். பன்வாரிலால் புரோகித் போய் ஆர்.என். இரவி வந்த பிறகும் எழுவர் விடுதலைக் கோப்பு கிண்டி ராஜ் பவனில் முடங்கியே கிடந்தது.

இதற்கிடையில் சிறையில் இருந்தபடி பேரறிவாளன் தொடர்ச்சியான சட்டப் போராட்டம் நடத்தினார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்திய அரசின் அநீதியான நடைமுறைகளை அம்பலமாக்கினார். வெளியே அவர் தாயார் அற்புதம்மாள் அரும் பாடாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி – முருகனும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனும் தொடர்ந்த வழக்குகளில் தமிழக ஆளுநர் சொன்ன சட்டக் காரணங்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுபடவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திப் பேரறிவாளனை விடுதலை செய்ய ஆணையிட்டது. அதே வழக்கு, அதே சட்டச் சிக்கல், அதே நியாயங்கள் என்ற அடிப்படையில் சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவி, நளினி ஆகியோரையும் அரசு விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. எனவே இந்த ஆறு பேரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். உச்ச நீதிமன்றம் மீண்டும் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 2022 நவம்பர் 11 ஆம் தேதி அன்று அனைவரையும் விடுதலை செய்தது. அதே நாளில் சாந்தன் முதலான ஆறு நபர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நளினியும் இரவியும் விடுதலை செய்யப்பட்டு இல்லம் போய்ச் சேர்ந்தார்கள். சாந்தனுக்கும் இராபர்ட் பயசுக்கும் முருகனுக்கும் ஜெயக்குமாருக்கும் இந்த விடுதலை வாய்க்கவில்லை. அவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்பதால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்கள்.

வேலூர் சிறையிலிருந்து சாந்தன் – முருகனும், புழல் சிறையிலிருந்து இராபர்ட் பயஸ் – ஜெயக்குமாரும் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சிறப்பு முகாமில் ‘வைக்கப்பட்டனர்’. உச்சநீதிமன்ற ஆணைப்படி விடுதலை பெற வேண்டியவர்கள் சிறைமாற்றலே பெற்றனர். அவர்களின் புதிய இடத்துக்குப் பெயர் சிறை இல்லை, சிறப்பு முகாம்!

அது என்ன சிறப்பு முகாம்? இந்தியா பிரித்தானியக் காலனியாக இருந்த காலத்தில் 1946ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அயலார் சட்டம் (Foreigners Act, 1946) உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் வந்து விட்ட அயலாரைத் திருப்பி அனுப்பும் வரை அல்லது அவர்கள் தங்கியிருப்பதை முறைப்படுத்தும் வரை தற்காலிகாமாக ஒரு முகாமில் தங்க வைப்பதற்கு வகை செய்கிறது. இதுதான் சிறப்பு முகாம்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலியருக்கு இவ்வாறான முகாம்கள் அமைக்கப்பட்டதற்கு ஒரு வரலாறு உண்டு. 1983 தொடக்கம் இலங்கைத் தீவிலிருந்து கடல்கடந்து வந்து தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த இலட்சத்திற்கு மேற்பட்டவர்களில் பலரும் (கிட்டத்தட்டப் பாதிப்பேர்) மண்டபம் முதலான ஏதிலியர் (அகதி) முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மறு பாதிப்பேர் காவல்நிலையப் பதிவுடன் வெளியில் தங்கிக் கொண்டனர். முகாம்களில் தங்க வைக்கப்படுகிறவர்களில் போராளிகளும் உள்ளனர் என்று காரணங்காட்டி அவர்களுக்காகச் சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டன.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தமிழகக் காவல்துறையின் கியூ பிரிவு சொன்னதைத்தான் அரசு நிர்வாகம் செய்கிறது. இந்த கியூ பிரிவு சிறிலங்கா உளவுப் பிரிவோடு நெருங்கிய தொடர்பில் உள்ளது. இந்த இரு பிரிவுகளும் தமக்குள் தகவல் பரிமாற்றம் செய்து முகாம்வாசிகளின் வாழ்வைத் தீர்மானிக்கின்றனர்.

முகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் கொடிய கல்லீரல் நோயால் அவதியிற்று வந்தார். ஆனால் உரிய சிகிச்சை உரிய காலத்தில் வழங்கப்படவில்லை இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன்பாகத் தாமதமாகச் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், தாமதமான சிகிச்சையின் காரணத்தால் சாந்தன் இறந்து போனார்.

சட்டப்படி சாந்தன் விடுதலை செய்யப்பட்ட பிறகும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் அனைத்தும் சாந்தனுக்கு மறுக்கப்பட்டுள்ளது இது சர்வதேச உடன்படிக்கையின்படி குற்றமாகும். உரிய காலத்தில் சாந்தனை அவரது தாய் நாட்டிற்கு அனுப்பி இருந்தால் அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார். ஆனால் திட்டமிட்டு சாந்தனை சிறப்பு முகாமில் அடைத்து வைத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்காமல், அவர் உயிர் போவதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்துகிறது.

மேலும், சிறப்பு முகாமில் இருக்கும், முருகன், ராபர்ட்பயஸ், செயக்குமார் ஆகியோரை அவரவர் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில, ஒன்றிய அரசுகளைக் கோருகின்றோம்.

- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

Pin It