மூன்று காவல் துறை இயக்குனர்கள் இணைந்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கின்றார்கள்.அந்த அறிக்கையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் மும்பை நிருபர் சுமிதா நாயர் இப்படி தலைப்பிட்டு எழுதினார் :'' முஸ்லிம்களின் பார்வையில் நாம் ( காவல் துறையினர் ) முஸ்லிம்களுக்கு எதிரான மாச்சர்யம் கொண்டவர்கள், வகுப்புவாதிகள், ஊழல்மயமானவர்கள் '' முஸ்லிம்கள் காவல்துறையை எப்படி பார்க்கின்றனர். அல்லது காவல் துறை முஸ்லிம்களை எப்படி பார்க்கின்றது என்பது குறித்த அறிக்கையை தயாரித்தவர்கள் மூன்று மாநிலங்களில் காவல்துறையை இயக்குபவர்கள். DGP Director General of Police. அவர்களில் ஒருவர் நமது தமிழகத்தின் காவல்துறை இயக்குநரான இராமானுஜம் ஆவார்.

 hindutwaகாவல்துறையினர் முஸ்லிம்களை எப்படி நடத்துகின்றார்கள் என்பதை நன்றாக உணர்ந்த காவல்துறை இயக்குநர்களில் நமது இயக்குநரும் இருக்கின்றார் என்பது தமிழ் நாட்டை சார்ந்த நமக்குப் பெருமை சேர்க்கின்றது என்றாலும் கீழ்கடையில் என்ன நடக்கின்றது என்பது நம்மை நெகிழச் செய்கின்றது.

நமது காவல்துறை இயக்குநர் கே. இராமனுஜம் அவர்களுடன் இந்த அறிக்கையை அதாவது முஸ்லிம்கள் காவல் துறையை எப்படி பார்க்கின்றார்கள் என்ற அறிக்கையை - தயாரித்த இன்னும் இரண்டு காவல் துறை இயக்குநர்கள்:

1. திரு. சஞ்சீவ் தயால் இவர் மராட்டிய காவல்துறை இயக்குநராக இருந்தவர்.

2. திரு. தியோராஜ் நாகர் இவர் உத்திரபிரதேச காவல் துறையின் இயக்குநராக இருந்தவர்.

நடுவு நிலையான இந்த மூன்று உள்ளங்கைகளோடு ஒரு உளவுத்துறை அதிகாரியும் உண்டு. இவர்கள் 2013 ஆம் ஆண்டு இந்த அறிக்கை அவ்வாண்டு நடந்த அகில இந்திய இயக்குநர்களின் மாநாட்டில் சமர்ப்பித்தார்கள்.முஸ்லிம்கள் காவல் துறையை எப்படி பார்க்கின்றார்கள் என்ற ஆய்வு சிறுபான்மையினர் விவகாரங்களில் காவல் துறையினரை அக்கறையுடன் நடந்துக் கொள்ள செய்திட ஓரு வியூகம்.பல நல்ல பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையை இரவு நேர பாரதீய கட்சியாகிய காங்கிரஸ் அரசு, தன்னுடைய கல்லாப்பெட்டிக்குள் வைத்து இறுக்கப் பூட்டிப் போட்டு விட்டது. முஸ்லிம்களும், சிறுபான்மையினரும் மிகவும் குறைவாகவே காவல் துறையில், அங்கம் வகிக்கின்றார்கள். இதனால், அவர்களுக்கு காவல்துறை மீதுள்ள அவநம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களின் அவ நம்பிக்கையை உறுதிபடுத்தும் அளவில்தான் பல்வேறு வகுப்புக் கலவரங்களின் போதும் காவல்துறையினர் நடந்துக்கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மிகவும் முக்கியமானவர்கள் காரணம் அவர்கள் மிகப்பெரிய சிறுபான்மையினர். இதன் மூலம் மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதியினர். பெரும்பாலான மாநிலங்களில் இதுவே நிலை. இதனால் காவல்துறையினரின் மனநிலையிலும் போக்கிலும், மாற்றங்களை விரைந்து நிறைவேற்றிட வேண்டிய ஒன்று.

அதன் மூலம் காவல்துறையின் மீது அவர்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டும்.இந்த வகையில் முதன் முதலாக காவல்துறையின் அனைத்து மட்டங் களிலும், மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவந்திட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்களுக்கெதிராக நிலவும் மாச்சார்யத்தை உடைத்திட வேண்டும். இந்த தீர்வின் முதல் படி - முதல் நடவடிக்கை காவல் துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு மாச்சர்யம் நிலவுகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதேபோல காவல் துறையில் உள்மாற்றங்கள் வேண்டும் என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நிலையை மாற்றுவதில் நாம் காலம் தாழ்த்திட இயலாது. காரணம் இந்த மனநிலை காவல் காப்பதன் பல முக்கிய பகுதிகளைப் பாதிக்கின்றது. இதில் தீவிரவாதத்திற்கு எதிரான நட வடிக்கைகளும் அடங்கும். இதனால் நாட்டின் உள்நாட்டுப்பாதுகாப்பும் அடங்கும்.சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையிலிருந்து விடுபட்டிடும் அளவில் காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.அத்தோடு மாநிலங்கள் அனைத்திலும் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். சைபர் பிரிவு என்ற இணையதளங்களைக் கண்காணிக் கும் பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறுமான்மையினருக்கு எதிரான வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுத்திடலாம். அத்தோடு சமூக தளங்களை மற்றும் சோசியல் மீடியாவையும் கண்காணித்திடலாம். இதன் வழி வகுப்பு வெறிகள் தூண்டப் படுவதைத் தடுத்திடலாம். இந்தப் பிரிவு மாநில அரசின் இணையதள பாதுகாப்புப் பிரிவு ( CERT ) இன் கீழ் இருந்திட வேண்டும். பிரிதொரு பிரிவு மக்கள் தொடர்பு பிரிவாக இருந்திட வேண்டும். இந்த பிரிவு உணர்வுகளைத் தூண்டிடக் கூடிய செய்திகள் குறிப்பாக சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உதவும்.பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை இன்னொரு செய்தியைப் பதிவு செய்கின்றது. அது வகுப்புவாத கலவரங்களை உருவாக்கும் சூழ்நிலைகளை முன் கூட்டியே அறியத் தரும் முறை ஒன்றை நிறுவிட வேண்டும், இது வகுப்புக் கலவரங்களை உருவாகும் சூழலை தடுக்கவும் வகுப்பு கலவரங்களை உருவாக்குபவர்களை கைது செய்யவும் உதவும்.

வகுப்புவாத சக்திகள் மிகைத்த பகுதிகளில் அந்த சமுதாயத்தை நன்றாக அறிந்த, அதிகாரிகளையே அந்தப் பகுதியில் வேலையில் அமர்த்திட வேண்டும். ஆனால் அனைத்திற்கும் முன்னதாக காவல் துறையின் உள்ளே குடியிருக்கும் மாச்சர்யங்களை அகற்றிட வேண்டும்.அத்தோடு சமுதாயக் கண் காணிப்புகளை அதிகப்படுத்திட வேண்டும். வகுப்புக் கலவரங்கள் உருவாகிடும் முன்னே தகவல்களைத் தெரிந்திடும் வண்ணம் உளவுத்துறையை முடக்கிவிட வேண்டும். கலவரங்களை உருவாக்கிடும் அளவில் பேசுபவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் போன்றவர்களை நாம் கண்காணித்து அவர்களின் பேச்சுக்களையும், நிகழ்ச்சிகளையும் பதிவு செய்திட வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக மக்கள் கூடுவதை தடுத்திட இப்போது இருக்கின்ற சட்டங்கள் போதாது. இன்னும் கூர்மையான சட்டங்கள் வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் சீருடை அணிந்து அல்லது அணியாமல் அமைப்புகள் அணிவகுப்பை நடத்திடும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தோடு வகுப்புவாத அமைப்புகளுக்குப் பணம் வந்திடும் பாதைகளைக் கண்காணிக்கும் தனி நீதிமன்றங்களை அமைத்திடவும் வழி கண்டிட வேண்டும்.இப்படி காவல்துறையின் மன நிலையை குறிப்பாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான மனநிலையை மாற்றிடவும் வகுப்பு கலவரங்களைத் தடுத்திடும் வகையிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கை குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு விட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பல ஆலோசனைகள் செயலில் கொண்டு வந்திட இயலாதவை.இப்படியொரு அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதிலும் அதில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பது 2013 - இல் தான் நடந்தது என்றில்லை. மாறாக காவல்துறையின் வரலாறு முழுவதும் இப்படியே பதிவாகி இருக்கின்றது.

ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் அதில் கட்டுரையை எழுதிய சுமிதா நாயர் ஆகியோர் முதல் வரியில் முதன்முதலாகக் காவல்துறை ஊழல் மயமானது, சிறுபான்மையினருக்கு எதிரான மாச்சர்யங்கள் உள்ளது என்பது ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது என எழுதுகிறார்கள்.நமது இராமானுஜம் அவர்களைப் போல் எத்தனையோ காவல்துறை உயர் அதிகாரிகள் இதற்கு முன்னால் இதுபோன்ற இன்னும் சொன்னால் இதைவிட அழுத்தமான அறிக்கைகளைத் தாக்கல் செய்துவிட்டனர்.

muslim attack

அவையெல்லாம் இந்த அறிக்கையைப் போல் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.ஜி.ஜி.கோஷ்என்ற காவல்துறை அதிகாரி 17 வகுப்புக் கலவரங்களில் காவல்துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு இந்துத்துவ வெறியர்களைப் போல் முஸ்லிம்களைக் கொலை செய்யவும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் செய்தார்கள் என்பதைத் தெளிவுப்படுத்தி யிருந்தார்கள்.தனது அறிக்கையை அரசாங்கம் கண்டுக்கொள்ளாததால் அவர் அதனை மக்கள் மன்றத்தில் வைத்தார். அதற்கு உணர்வுப் பூர்வமான தலைப்பு ஒன்றையும் தந்தார். அந்த தலைப்பு ( Communalism - Let Us Combat ) வகுப்பு வாதம் அதை நாம் எதிர்த்து போர் செய்வோம்.

ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமானதே தவிர நிலைமை சீரடையவில்லை.இந்த ஆய்வு தொடர்ந்து இன்னும் பல ஆய்வுகளும் அறிக்கைகளும், அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளும் வந்தாலும் அவற்றிற்கெல்லாம் மகுடம் கட்டியதைப் போல் வந்தது விபூதி நாராயண ராய் அவர்களின் ஆய்வறிக்கை.வெறும் ஆய்வறிக்கையாக மட்டுமில்லாமல் அவருடைய முனைவர் பட்டத்திற்கும் வழிவகுத்தது.

இதில் எப்படி வகுப்பு கலவரங்களின் போது மொத்த நிர்வாகமும் முஸ்லிம்களுக்கெதிராக சுழலுகின்றன. என்பதை தெளிவுப் படுத்தியிருந்தார்.இவருடைய அறிக்கை ஆதங்கங்கள் இவற்றையும் நமது அரசுகள் கண்டு கொள்ளவில்லை. ஆதலால் அவரது ஆய்வை செயலில் கொண்டுவந்திட அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. ஆதலால் அவரும் தனது ஆய்வை மக்கள் மன்றத்தில்தான் வைத்தார்கள்.பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள், இவற்றில் மேற்கோள் காட்டிடும் ஓர் ஆய்வாகத்தான் அது அமைந்தது.

ஆனால் அரசு அவருடைய ஆய்வை பரிந்துரை செய்வதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரக்தி வயப்பட்ட விபூதி நாராயண ராய் அவர்கள் தன்னுடைய ஆய்வு முடிவுகளை இன்னும் சணரஞ்ச கப்படுத்திட விரும்பினார்கள்.

தன்னுடைய ஆய்வை அடிப்படையாக கொண்டு புதினம் ஒன்றை எழுதினார்கள். அதன் பெயர் '' ஊரடங்கு உத்தரவு '' இதனை நாம் தமிழிலும் வெளியிட்டோம். ( இந்த நூல் தற்போது அச்சில் உள்ளது இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் வேர்கள் வெளியீட்டகம் வழி வரும் ).ஆனால் இவற்றின் வழி மக்கள் விளக்கங்களையும் விபரங்களையும் பெற்றார்களே அல்லாமல் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சங்கப்பரிவாரத்தின் பாசிச போக்கிற்கே எல்லா அரசுகளும் துணை நின்றன. நிலைமை இன்னும் மோசமானது.

பாகல்பூர் படுகொலைகளை நடத்தின. இதில் காவல்துறையினர் முற்றாகக் களமிறங்கி படுகொலைகளைச் செய்துக்கொண்டிருந்தனர். இந்த செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையில் ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் இவர் காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்வதைப் பொருத்துக்கொள்ள இயலாமல் காவல்துறையினரை தடுத்தார். தடுக்க முயன்ற அடுத்த நிமிடமே பிணமாக சாய்ந்தார். அவருடைய உடலைப் பிளந்து சென்ற துப்பாக்கிக் குண்டு அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டருடைய துப்பாக்கியிலிருந்து பாய்ந்தது.விசாரணைகள் ஆய்வறிக்கைகள் எல்லாம் வந்தன. ஆனால் அந்த சப் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் கூட செய்திட இயலவில்லை. முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகளும் பிரதம அமைச்சர் வரை சென்று சந்தித்து மனுக்கொடுத்தார்கள்.

இதே பாகல்பூரில் காவல்துறையில் அடைக்கலம் புகுந்த பல முஸ்லிம்கள் மறுநாள் பிணமாக கிடந்தார்கள்.இதுவேதான் காசிம்புராவில் நடந்தது. காசிம்புராவில் கலவரம் நடந்துக் கொண்டிருக்கின்றன. சங்கப் பரிவாரத்தினர் முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெறித்து ஓடுகின்றார்கள். ஒரு பணக்கார முஸ்லிமின் பங்களாவில் அடைக்கலம் தேடுகிறார்கள். பங்களாவுக்கு சொந்தக்காரர் தொடர்ந்து காவல்துறைக்கு தொலைபேசியில் பேசுகின்றார். நீண்ட நேர முயற்சிக்குப்பின் காவல்துறையின் வாகனம் ஒன்று அங்கு வருகின்றது. '' ஆபத்துப்பாந்தவன் '' வந்துவிட்டான் என அந்த முஸ்லிம்கள் சற்றே நிம்மதியடைகிறார்கள். அந்த முஸ்லிம்களை காவல் துறை வாகனத்தில் ஏற்றுகின்றார்கள். பின்பு அடுத்த ஒரு ஏரியில் அவர்கள் பிணமாகக் கிடக்கின்றார்கள். அதற்கான விசாரணை இன்றளவும் நடந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த படுகொலைகளை செய்த பல காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் பெற்றிட வேண்டிய பதவி உயர்வுகள், ஓய்வூதியம், ஓய்வு பெறும்போது பெற்றிட வேண்டிய மொத்த பணம் இவை அனைத்தையும் பெற்றுவிட்டார்கள். இதற்கான வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விசாரணை, இதற்கான தீர்ப்பு இவற்றால் விளையப்போவது எதுவுமில்லை. அவர்கள் பெறவேண்டியவற்றை யெல்லாம் பெற்றுவிட்டார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின் நிலைமை இன்னும் மோசமானது. அங்கே கரசேவகர்கள் இடித்தது போக மீதியை இடித்தவர்கள் மத்திய அரசின் முகவர்கள். பாபரி மஸ்ஜித் - ஐ இடித்ததில் பெருமைப்படுகின்றோம். என்று சொன்ன பால்த்தாக்கரே சகல அவகாசத்தோடும் மும்பை படுகொலைகளை நடத்தினார். கையில் முஸ்லிம்களின் பெயர் பட்டியல்களை வைத்துக் கொண்டு நடத்திய பட்டப்பகல் படுகொலைகள் அவை.

அந்த படுகொலைகளை ஆய்வு செய்யவும். ஸ்ரீ. கிருஸ்ணா கமிஷன் என்றொரு கமிஷனை நியமித்தார்கள். இந்த ஸ்ரீ. கிருஸ்ணா கமிஷனிடம் சில குறிப்பான விடயங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தி அறிக்கை தந்திட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டது. அதில் மும்பை கலவரங்களுக்கு யார் குற்றவாளிகள் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டார்கள்.

நீதிபதி ஸ்ரீ. கிருஸ்ணா அவர்கள் காடு மேடுகளையெல்லாம் கடந்து சென்று நீதிபதியின் சிகரமாய் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார்கள். இந்த அறிக்கையில் 2000 அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு, பால்தாக்கரே தான் காரணம். அவர் தொலைபேசியில் இங்கே சென்று கொல்லுங்கள் அங்கே சென்று கொல்லுங்கள் என உத்தரவுகளை பிறப் பித்துக் கொண்டிருந்தார் என்பதை யெல்லாம் தக்க ஆதாரங்களுடன் சமர்பித்தார்.1992 - 1993 மும்பை படுகொலைகள் நடந்து முடிந்து நீதிபதி ஸ்ரீ. கிருஸ்ணா அவர்கள் தங்கள் அறிக்கையை சமர்பித்தபோது, கொலைகளைச் செய்த பாசிச பரிவார கும்பலே ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த கும்பல் ஸ்ரீ. கிருஸ்ணா அறிக்கையை சட்ட சபையில் சமர்பிக்கமாட்டோம் எனக் கூறிவிட்டது. அதன் பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளிவந்தது. ஆனால் அதில் பிரதான குற்றவாளி இனப்படுகொலைகளை தொடங்கி நடத்தியவர் என குற்றம் சாட்டப்பட்ட, பால்தாக்கரேயை கைது செய்திடவில்லை.

இதற்காகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.. பின்னர் கைது என்ற பெயரில் ஐந்து நிமிடங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறைக்கு அனுப்பப்படவில்லை. அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொலை குற்றம் சாட்டப்பெற்ற பால்தாக்கரே இறந்தார். அவரின் உடலின் மீது தேசியக் கொடியைப் போர்த்தினார்கள்.

அதாவது சங்கப் பரிவார பாசிசம் தேசிய அங்கீகாரம் பெற்றது. இதற்கு பின்னும் நமது இந்தியாவில் நீதியும் நேர்மையும் நிலை நாட்டப்படும் என்று எந்த முட்டாளும் நம்பமாட்டான்.அன்றிலிருந்து காவல் துறையினர் முஸ்லிம்களை எதிர்தாக்குதல் என்ற பெயரில் கொலை செய்வது பெருகி வருகின்றது. இந்த எதிர்தாக்குதல்களை எத்தனை இலாவகமாக செய்திட இயலுமோ அத்தனை இலாவகமாகச் செய்தார்கள்.எடுத்துக்காட்டாக மும்பையில் டயாநாயக் என்றொரு காவல்துறை துணை ஆய்வாளர் என்ற சப் - இன்ஸ்பெக்டர். இவர் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை பிடித்து வைத்துக் கொள்வார். குஜராத் மற்றும் ஆந்திராவிலுள்ள காவல்துறையினரிடம் என்கவுண்டர் செய்திட முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமா? குண்டு வெடிப்புகளில் இணைத்திட முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமா? எனக்கேட்பாராம்! இவர் குறுகிய காலத்திலேயே பலகோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்.

ஆனால் இவரைச் சட்டம் சீண்டிப் பார்த்திடவில்லை. இப்படி முஸ்லிம் இளைஞர்களை எதிர்த்தாக்குதலில் பயன்படுத்திடும் பொருள்களாகப் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இன்றளவும் அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

Pin It