கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மனித உரிமைகள் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்ட இடமொன்று உண்டு. அதிகாரத்தை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, மனித உயிர்களை வேட்டையாடும் மிருகங்களே அங்கு நிறைந்திருக்கின்றன. ஆதிக்கவாதிகளுக்கு வாலாட்டியபடியே எலும்புத் துண்டுகளுக்காக - எந்தத் திசையிலும் அவை மனித வேட்டைக்குக் கிளம்பும். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பவர்களின் முடிவு, வதைக் கூடங்களில் எழுதப்படும். உரிமைகளை நசுக்கவும் உயிரைக் குடிக்கவும் வெறிபிடித்து அலையும் காவல் துறை எனும் சீருடை மிருகங்களிடம் கவனமாக இருங்கள்...

காரணம், எல்லாவற்றுக்கும் உயிரே முதன்மை. உயிர் வாழ்வதற்கான உரிமையே மனித உரிமைகளில் முதன்மையானது.

சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் அளிக்கும் மரண தண்டனைகளை எதிர்த்து உலகெங்கும் உரத்த குரல்கள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு தழுவிய அளவில் பெரிய இயக்கங்கள் செயல்படுகின்றன. ஆனால், இந்த மரண தண்டனைகளை விடவும் மிகக் கொடியதாக, கேள்வியற்றதாக, எந்தவித விசாரணையோ, வாத எதிர்வாதங்களோ இன்றி, காவல் துறையினரால் நேரடியாக சில மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன - மோதல் சாவுகள் (என்கவுன்டர்) என்ற பெயரில்!

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுபவர்களை ஒடுக்க, கண்ட இடத்தில் சுடும் அதிகாரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. இன்று அது போன்ற எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இன்றியே, காவல் துறை நினைத்தவர்களை எல்லாம் சுட்டுக் கொல்கிறது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 7ஆவது பிரிவு, ‘ஒரு காவல் துறை அதிகாரி, தற்காப்புக்காக ஒருவரை சுட்டுக் கொல்லலாம்' எனச் சொல்வதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர் கொலைகளை தற்காப்பு என்ற பெயரில் காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். ‘தற்காப்புக்காக சுடுவதென்றால், கையிலோ, காலிலோ சுட்டு செயலற்றவராக ஆக்கலாம். ஆனால், திட்டமிட்டே சாகும்படி சுடுகின்றனரே தவிர தற்செயலாகவோ, பாதுகாப்புக்காகவோ அல்ல’ என்று மனித உரிமையாளர் சுதா ராமலிங்கம் கூறுவது மிக நியாயமானது.

காவல் துறையின் மோதல் சாவுகள் தொடங்கியது அண்மையில் அல்ல. இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, ‘அதிகாரம் மட்டுமே கைமாறி இருப்ப'தாகக் கூறினார் பெரியார். அது முற்றிலும் உண்மை என்பதற்கு சான்றளிப்பதைப் போல, 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 21 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரியார் மட்டுமே அந்தப் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்தார். அன்று நான்கு சுவர்களுக்குள் எவரும் அறியாமல் நடந்த கொலைகள், இன்று எவ்விதத் தயக்கமுமின்றி நட்ட நடு வீதியில் மக்கள் திரளுக்கு இடையே, இரவு பகல் பாராது வெளிப்படையாக நடக்கின்றன. ஆனால், யாருடைய மனசாட்சியையும் இந்த அப்பட்டமான கொலைகள் உலுக்குவதில்லை.

ஆங்கிலேய அரசின் காவல் துறையினர் எவ்வாறு மக்கள் நேயமற்ற மூர்க்கத்தனத்துடனும் அதிகார வெறியுடனும் செயல்பட்டனரோ, அதற்கு சிறிதளவும் குறையாமல், சொல்லப் போனால் அதைவிட அதிகமாக இன்று விடுதலை பெற்ற இந்திய ஜனநாயக அரசின் காவல் துறையினர், மக்களை அடிமைகள் எனவும் அடிமைகளின் உயிர் துச்சமெனவும் கருதி வெறியாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

1970களின் தொடக்கத்தில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த அப்பு, காவல் துறையினரால் கொல்லப்பட்டதாக செய்தி பரவிய போது, அது நம்ப இயலாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இன்று வரையில் அப்பு எப்படி கொல்லப்பட்டார் என்பதும், அவர் கதி என்ன ஆனது என்பதும் வெளிவராத செய்தியாகவே உள்ளது. பின்னர், சீவலப்பேரி பாண்டி தப்பியோட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானபோது, அதற்கு மிக குழப்பமான எதிர்வினைகளே ஏற்பட்டன. நாடறிந்த ஒரு குற்றவாளி; ஏற்கனவே ஒரு முறை தப்பி ஓடியவர்; பல கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்; காவல் துறைக்கு பெரும் சவாலாக நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தவர் என்பது போன்ற காரணங்களால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது எவ்விதத்தில் எதிர் வினையாற்றுவதென மனித உரிமை இயக்கங்களுக்கிடையேகூட பெரும் விவாதங்கள் நடைபெற்றன.

பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஓர் அரசியல் கூட்டத்தில் பங்கெடுக்க வந்த பாலன் எனும் இளைஞர், தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான துன்புறுத்தலுக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டபோது, அது தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளையும் ஒருவித அச்ச உணர்வையும் தோற்றுவித்தது. பாலனின் கால் நரம்புகள் வெட்டப்பட்டதாகவும், அவர் கொடூரமாக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள், மனித உரிமை இயக்கங்களின் பெரும் கண்டனத்திற்கு உள்ளாயின. பாலனின் கொலையைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டமெங்கும் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தப்பட்டு, ஒன்றுமறியாத இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். அப்போது பழ. நெடுமாறன் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று அப்பகுதிகளுக்குச் சென்று விசாரணைகளை நடத்தி அறிக்கை அளித்தது. பிறகு அரசு தலையிட்டு, அக்கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. பாலன் கொலை யைப் பின் தொடர்ந்த காவல் துறையின் அட்டூழியங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்க நெடுநாட்களாயின.

இப்படிப் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்த அல்லது நடத்தப்பட்ட மோதல் சாவுகள், அண்மைக் காலமாக ஆண்டுக்கு இத்தனை என்று கணக்கெடுக்கும் அளவிற்கு சாதாரணமாக நடத்தப்படுகின்றன. மாறி மாறி வரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு அரசுகளுமே காவல் துறைக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கி அவர்களின் கொடுஞ்செயல்களைப் போற்றி சன்மானங்களையும், பதவி உயர்வுகளையும் அளிக்கின்றன. வெங்கடேசப் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டபோது அதற்காக குரல் கொடுத்து, அதை அரசியலாக்கி, அவரது மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்து, அவரை தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவே ஆக்கிக் கொண்ட தி.மு.க. பதவியேற்று 10 மாதங்களுக்குள் 8 மோதல் சாவுகள்; 13 காவல் நிலைய சாவுகள் (Custodial Death). மே 9, 2006 உருண்டை ராஜன் கன்னியாகுமரி; சூன் 7, 2006 நாகூர் மீரான் சென்னை; ஆகஸ்டு 2, செந்தில் குமார் திருப்போரூர், சென்னை; அக்டோபர் 2, முட்டை ரவி - திருச்சி; நவம்பர் 18, கொர கிருஷ்ணன் - காஞ்சி; டிசம்பர் 12, பங்க் குமார் - சென்னை; சனவரி 13, டோரி மாரி - மேலூர்; பிப்ரவரி 5, மணல்மேடு சங்கர் - மயிலாடுதுறை.

கடந்த 5 ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 60 பேர் காவல் துறையினரால் மோதல் சாவு என்ற பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதிரடிப்படைத் தலைவராக இருந்து வீரப்பனைச் சுட்டுக் கொன்ற விஜயகுமாரின் தலைமையில் நடந்த மோதல் சாவுகள் மட்டும் 12. அவருக்கு அடுத்த நிலையில் அந்தப் ‘பெருமை'யைப் பெறுபவர் சங்கராச்சாரி கைதில் புகழ் பெற்ற பிரேம்குமார். சீவலப்பேரி பாண்டியை சுட்டுக் கொன்றதில் தொடங்குகிறது, இவரது மோதல் சாவு வரலாறு. ஆக யார் ஆட்சிக்கு வந்தாலும் காவல் துறை தான் செய்ய நினைத்ததை செய்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நேர்மையற்ற அரசியல் கட்சிகள், தங்களின் மோசடி செயல்களுக்கு காவல் துறையையே நம்பி ஆட்சி நடத்துகின்றன. அதனால் காவல் துறையினரை தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ வக்கற்று இருக்கின்றன.

இரண்டாவது மிக முக்கிய காரணம், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ரவுடிகளாக, குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் என்பதால், அவர்களை சுட்டுக்கொல்வதற்கு கற்பிக்கப்படும் நியாயங்கள். ஆனால், பெரும் ‘தாதா'க்களாக வலம்வரும் இந்த குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்து விடுவதில் அரசியல் கட்சிகள், காவல் துறை இரண்டிற்கும் சம பங்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசியல்வாதிகளுக்காகப் பலவித குற்றங்களை அவர்கள் செய்யும்போது, காவல் துறையின் உதவியோடு அவர்களை தண்டனையிலிருந்து காக்கும் அரசியல் கட்சிகள், ஒரு கட்டத்திற்குப் பிறகு அதே குற்றவாளிகள் இவர்களுக்கு தேவையற்றவர்களாக ஆகிவிடும் போதோ அல்லது இவர்களின் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்துவிடும்போதோ, அதே காவல் துறையின் உதவியோடு மோதல் சாவுகள் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் அவர்களை ஒழித்துக் கட்டிவிடுகின்றன.

இதற்கு மிகச் சிறந்த சான்று அயோத்தியாகுப்பம் வீரமணி. அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. நடத்திய பேரணியில் ஊடுருவி குழப்பம் விளைவிக்கவும், அதை காரணமாக வைத்து அடிதடி, துப்பாக்கிச் சூடு என தி.மு.க.வினரை அடித்து விரட்டவும் பயன்படுத்தப்பட்ட அயோத்தியாகுப்பம் வீரமணி சுட்டுக்கொல்லப்பட்டதும் அதே அ.தி.மு.க. ஆட்சியில்தான். பல முறை சரணடைய விரும்புவதாக சொல்லி அனுப்பியும் அதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல், சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பனின் கதையும் இது போன்றதே. வீரமணியின் கதை சுருக்கமானது என்றால், வீரப்பனின் கதை சற்றே விரிவானது. ஆனால், அடிப்படையில் இருவருமே அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு, அவர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களுக்கே தலைவலியான பிறகு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது வெளிப்படையான உண்மை.

இப்படி சுட்டுக் கொல்லப்படும் சமூகக் குற்றவாளிகளாக அறியப்பட்டவர்களின் சாவு பெறும் முக்கியத்துவம்கூட, காவல் துறையினரால் இதே விதத்தில் சுட்டுக் கொல்லப்படும் ரவீந்திரன், சிவா போன்ற மனித உரிமையாளர்களின் சாவு முக்கியத்துவம் பெறுவதில்லை என்பது மற்றொரு வேதனை. ஊடகங்களும் அதை ஒரு பத்தி செய்தியாகவே பார்க்கின்றன. தருமபுரி மாவட்டத்தின் கிராமங்களில் மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரவீந்திரனை 2000 ஆம் ஆண்டு மரண்டஹள்ளி எனும் ஊருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் காவல் துறை சுட்டுக் கொன்றது. அந்த நிகழ்விற்கு ஒரே நேரடி சாட்சியான சிவா என்ற பார்த்திபன். பின்னர், 2002 ஆம் ஆண்டு அதே தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நக்சல் இயக்கத்தினர் என 26 இளைஞர்கள் ‘பொடா'வில் கைது செய்யப்பட்டபோது, இவர் மட்டும் தப்பியோட முயன்றதாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல் துறை தனக்கு எதிரான சாட்சிகளை ஒருபோதும் விட்டுவைப்பதில்லை.

தமிழ்த் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜாராம், சரவணன் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் சென்னை கோட்டூர்புரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 4.10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து அவர்கள் கிளம்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கோட்டூர்புரத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்லப்பட்டுள்ளனர்.

சைதாப்பேட்டையிலிருந்து கோட்டூர்புரத்திற்கு ஜீப்பில் வருவதற்கு அதிகபட்சம் 20 - 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 

ஏறத்தாழ 3 மணி நேர இடை வெளியில் என்ன நடந்தது என்பது அப்போது பெரும் கேள்வியாக்கப்பட்டது. ஏறத்தாழ 5.30 மணியிலிருந்தே கோட்டூர்புரத்தில் போக்குவரத்தை தனது கட்டுப்பாட்டில் காவல் துறை கொண்டு வந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அச்சாலையில், நிகழ்வு நடந்த நேரத்தில், போக்குவரத்தே இல்லை என்பது அப்பட்டமான பொய். இதுபோன்ற பொய்களை நம்புவதற்கு மக்களை ஏற்கனவே மூளைச்சலவை செய்துவிட்டன, அரசும் காவல் துறையும்.

ஒவ்வொரு மோதல் சாவின்போதும் காவல் துறையினருக்கு இடது கையில்தான் அடிபடுகிறது. ஒரு காவலர்கூட இதுவரை இத்தகு மோதல் சாவில் கொல்லப்பட்டதில்லை. இவை அனைத்தும் அப்படி ஒரு மோதல் சாவு நடப்பதற்கு முன் காவல் துறை எவ்வாறு மிகுந்த நேர்த்தியான திட்டமிடுதலுடன் செயல்படுகிறது என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

1997 ஆம் அண்டு ஆந்திர சிவில் உரிமைக் கழகத்தின் புகாரின் பேரில் ஆந்திராவில் அந்த ஆண்டு நடந்த மோதல் சாவுகள் குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், மோதல் சாவுகள் நடந்தால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சில பரிந்துரைகளை அளித்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அப்பரிந்துரைகளின்படி, பிரேத பரிசோதனையை ஒளிப்படம் எடுக்க வேண்டும். பெயரளவில் நடக்கும் பிரேத பரிசோதனையை அதே பெயரளவில் ஒளிப்படமும் எடுத்துவிட்டு, அவசரம் அவசரமாக சுட்டுக் கொல்லப்பட்டவரின் உடலை எரித்து விடுவதே காவல் துறையின் வழக்கமாக இருக்கிறது. இத்தகு மோதல் சாவில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளின் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்று உறுதி செய்யும் வரை, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவித பதவி உயர்வும், விருதுகளும் அளிக்கக் கூடாது என்கிறது, மனித உரிமை ஆணையத்தின் மற்றொரு பரிந்துரை.

ஆனால், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே, அதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து அதிரடிப்படையினருக்கும் அரசு இரட்டை பதவி உயர்வும், விருதும் அளித்து சிறப்பித்தது. மனித உரிமைகளுக்கே மதிப்பில்லாதபோது, மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது வீண்.

கடந்த பிப்ரவரி 5 அன்று மயிலாடுதுறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் தாய் ஓர் ஊராட்சி மன்றத் தலைவி. இவர் மீதும் இவரது மகன் சங்கர் மீதும் காவல் துறை தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு தொந்தரவு செய்து வந்துள்ளது. அது மட்டுமின்றி, சங்கரின் சாவு எங்கள் கையில்தான் என்று வெளிப்படை யாகவே காவல் துறை அதிகாரிகள் கூறிவந்திருக்கின்றனர். இதனால், சங்கரின் தாய், தனது மகனின் உயிருக்கு காவல் துறையால் ஆபத்து உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்; சென்னை வந்து தமிழக காவல் துறை தலைவரிடமும் மனு அளித்துள்ளார். இத்தனைக்குப் பிறகும் சங்கரை ஒரு வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பியோட முயன்றதாகக் கூறி அவரைச் சுட்டுக் கொன்றுள்ளது காவல் துறை. ஆக, உள்ளூர் காவல் துறை தலைவர், உச்ச நீதிமன்றம் என எதைப் பற்றியும் இவர்களுக்கு அச்சமோ, கவலையோ இல்லை.

இப்படி பரவலாக ஏறத்தாழ ஆண்டிற்கு சராசரியாக ஏழு, எட்டு என நடக்கும் மோதல் சாவுகள் மக்களி டையே ‘மற்றுமொரு செய்தி'யாக மட்டுமே சென்றடைவது மிகப் பெரும் வேதனை. பாலன் சாவு ஏற்படுத்திய அதிர்வலைகள் போன்று இன்று எந்த மோதல் சாவும் அதிர்வலையை ஏற்படுத்துவதில்லை. வழக்கம் போல் மனித உரிமை இயக்கங்கள் மட்டும் குரல் கொடுத்துவிட்டு, உச்சபட்சமாக ஓர் உண்மை அறியும் குழுவை அமைத்து ஓர் அறிக்கையை அளிக்கின்றன. அந்த அறிக்கையும் ஒரு செய்தியாக மட்டுமே வெளிவருகிறது. இவை அனைத்துமே வெறும் சடங்காக மாறி விட்டது பெரும் துயரமே. அதோடு ‘கொல்லப்படுகிறவர்கள் யாரும் உத்தமசீலர்கள் அல்லர். அவர்களும் குற்றவாளிகள்தானே; அவர்களைக் கொல்வதில் என்ன தவறு இருக்கிறது' என்ற உளவியல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. சுட்டுக் கொல்லப்பட்டவரைப் பற்றி காவல் துறை ஊடகங்களுக்கு தரும் செய்திகள் அனைத்துமே அத்தகைய உளவியலுக்கான உரமே.

அப்பு கொல்லப்பட்ட காலகட்டத்தில்தான் ‘தங்கப்பதக்கம்' திரைப்படம் வெளியானது. மகனாகவே இருந்தாலும் அவன் தவறு செய்கிறபோது அவனை சுட்டுக் கொல்லத் தயங்காத ஒரு காவல் துறை அதிகாரியின் கதையாக காவல் துறையை தூக்கிப்பிடிக்கும் அந்த திரைப்படம், அப்பு கொலையை ஒட்டி வெளியானது தற்செயலானதோ திட்டமிட்டதோ; ஆனால், ‘தங்கப்பதக்கம்' முதல் ‘காக்க காக்க' வரையிலான இத்திரைப்படங்கள் அனைத்துமே இத்தகு கொலைகளை நியாயப்படுத்தும் உளவியலுக்கு வலு சேர்ப்பதாகவே அமைகின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர் குற்றவாளியாக இருக்கலாம்; பலவித குற்றங்களை செய்தவராக இருக்கலாம். ஆனால், அவர்களை விசாரணையின்றி கொல்லும் அதிகாரத்தை காவல் துறைக்கு வழங்கியது யார் என்பதே முக்கியக் கேள்வி. குற்றத்தைத் தடுப்பதும், அதை மீறி குற்றம் இழைத்தவர்களை கண்டுபிடித்து, தக்கச் சான்றுகளோடு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதுமே காவல் துறையின் வேலை.

சனவரி 13, 2007 அன்று மதுரை மாவட்டம் மேலூரில் சுட்டுக் கொல்லப்பட்ட டோரி மாரி மீது 1998 இல் இருந்தே வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக அவரைப் பிடிக்க வக்கற்று இருந்ததா காவல் துறை? சரி, டோரி மாரியை சுட்டுக் கொன்றாகி விட்டது. அவர் மீதான வழக்குகளின் நிலை என்ன? சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் கேள்வியின்றி புதைக்கப்படுகின்றன. இதனால் கொல்லப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. ஆனால், இத்தகு குற்றாவாளிகள் மிக எளிதாக தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள் என்ற காரணத்தை காவல்துறை முன் வைத்தால், தக்க சான்றுகளோடு அவர்களின் குற்றத்தை உறுதி செய்ய இயலாதது - காவல் துறையின் இயலாமையா அல்லது காவல் துறையினருக்கு நீதிமன்றங்களின் மீதிருக்கும் அவநம்பிக்கையா? அப்படி காவல் துறையினருக்கே தங்கள் மீதும் நம்பிக்கை இல்லையெனில், மக்கள் எதற்கு அவர்களை நம்ப வேண்டும்? அத்துறையை மதிக்க வேண்டும்?

உண்மையான காரணம் இவை எதுவுமே அல்ல. இந்த மோதல் சாவுகள் அனைத்துமே காவல் துறை, அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை என அனைவரும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட நாடகமே!

இதில் கொடுமை என்னவெனில், இது நாடகம் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர். ஆனால், காவல் துறை என்றால் அப்படித்தான் என்று ஏற்றுக் கொண்ட மனநிலையோடு மிக எளிதாக இச்செய்திகளை உள்வாங்கிக் கொள்கின்றனர்.

இந்த மன நிலைக்கு மக்களை தள்ளிவிட்டுவிட்ட நிறைவோடு, அரசு எந்திரமும் துணிச்சலோடு மேலும் மேலும் வெளிப்படையாகவும், திட்டமிட்டும், பல நேரங்களில் அறிவித்து விட்டேகூட இக்கொலைகளை நடத்துகின்றன. மக்கள் மீதான அரசின் வன்முறை எல்லைகள் கட்டுப்பாடற்று விரிந்து கொண்டே செல்கின்றன. காஷ்மீரில் 1990 முதல் நடந்த மோதல் சாவுகள் குறித்து அண்மையில் வெளிவந்திருக்கும் செய்திகள் - காவல் துறை, ராணுவம், நீதித்துறை, அரசியல்வாதிகள், சர்வதேச சமூகம் என அனைத்தின் மீதும் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழக்க வைக்கின்றன.

அமெரிக்க ராணுவம் ஈராக்கிய மக்களை துன்புறுத்திக் கொன்ற செய்திகள் வெளிவந்தபோது, இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்துமே அதைக் கண்டு அதிர்ந்து எதிர்த்துக் குரல் எழுப்பின. ஆனால், காஷ்மீரில் இந்திய ராணுவம், அதற்கு எந்த வகையிலும் குறைந்திராத கொடூரங்களை நாளும் நிகழ்த்தி வருவது இன்று வெளிவந்துள்ளது. காவல் துறையினரும், ராணுவத்தினரும் அவர்களுக்கு பணிக்கப்பட்ட ‘கணக்கை' எட்ட, பொதுமக்களை கடத்தி, அடையாளம் காண இயலாத போராளிகள் என முத்திரை குத்தி, சுட்டுக் கொன்றுள்ள செய்தி வெளிவந்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல... 1990இல் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கில்... இந்த காலப்பகுதியில் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம்' என்று ஓர் அமைப்பே அங்கு நிறுவப்பட்டு, காணாமல் போனவர்களின் கதி என்னவாயிற்று என்று கண்டறிவதில் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்கள் வெறுமனே சுட்டுக் கொல்லப்படுவது இல்லை; கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். இதற்கென பாதுகாப்புப் படையினர் சிறப்பு வதை முகாம்களை நடத்தும் செய்தியும் வெளிவந்துள்ளது.

வதை முகாம்களில் உயிருடன் வெளிவந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். போராளிகளின் தாக்குதல் எங்கு நடந்தாலும், உடனே பாதுகாப்புப் படையினர் தேடி வருவது இப்படிப்பட்டவர்களைத்தான். பொய் வழக்குகளில் சிக்க வைப்பதும், அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், லட்சக்கணக்கில் பணம் கேட்பதும், அதற்கு மறுத்தால் சுட்டுக் கொல்வதும் அன்றாட நிகழ்வாகவே ஆகிப் போனது. பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என வதை முகாம்களில் நடத்தப்படும் வதைகள், ஒரு நாகரீக சமூகத்தால் நினைத்துக்கூட பார்க்க இயலாதவையாகவே இருக்கின்றன. இத்தகைய வதைகளை ஒரு முறை அனுபவித்தவர்கள், பாதுகாப்புப் படையினர் என்ன சொன்னாலும் செய்யக் கூடிய மன நிலைக்குச் சென்று விடுகின்றனர். அப்படி சித்ரவதைகளை அனுபவித்து, பாதுகாப்புப் படையினரின் கைப்பாவையாக மாறிப்போன பரூக் அகமத் பத்தார் என்னும் காவல் துறை ஓட்டுநரின் உதவியோடு, ஒன்றுமறியா பல இளைஞர்களைக் கடத்தி கொலை செய்துள்ளது காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் குரு, அண்மையில் ‘தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த வழக்கில் சிக்குவதற்கு முன், பாதுகாப்புப் படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரை, ஏறத்தாழ மூன்று மணி நேரம் அவர் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகக் கூறியுள்ளார் (‘தலித் முரசு' ஏப்ரல் 2007 இதழ் காண்க).

ஒரு சில வாரங்கள் போராளி இயக்கத்தில் இருந்ததற்காக, அதிலிருந்து விலகி இயல்பான வாழ்க்கை வாழ முயற்சித்த நிலையிலும் அவரை நாளும் துன்புறுத்தியது ராணுவம். இதனால், காவல் துறை அதிகாரி ஒரு புது நபரைக் காட்டி தில்லிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியபோது, எவ்வித மறுப்புமின்றி அதை ஒப்புக் கொள்ளும் நிலையிலிருந்தார் அப்சல். ஆனால், அந்தப் புதிய நபர்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போகிறவர் என்பதோ, அதற்காகத்தான் அவர் தில்லி செல்கிறார் என்பதோ, பின்னாளில், இதே காரணத்திற்காகத் தான் தூக்கு மேடை வரை செல்வோம் என்பதோ - அப்சலுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தாலும் அவரால் மறுத்திருக்க முடியுமா என்பது வேறு கேள்வி. காஷ்மீரில் வெளிவரத் தொடங்கியிருக்கும் கொடுமைகள்... நாடெங்கிலும் வெளிவராத வேதனைகளாகவே குமுறிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை காணவில்லை என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் வெளிவந்திருக்கும் உண்மைகள், அதற்கு சான்றுரைக்கின்றன. நவம்பர் 26, 2005 அன்று சொரா புதீன் ஷேக், அகமதாபாத்தில் உள்ள வைஷாலா எனும் இடத்தில் குஜராத் பயங்கரவாதிகள் ஒழிப்புப் பிரிவு மற்றும் ராஜஸ்தான் சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலை நடந்த உடன் குஜராத் பயங்கரவாதிகள் ஒழிப்புப் பிரிவுத் தலைவர் வன்சாரா, மிகப் பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பங்கேற்ற அந்த சந்திப்பில், சொராபுதீன் லஷ்கர் இதொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், தாவூத் இப்ராகிம் உத்தரவின் பேரில் குஜராத் முதலவர் நரேந்திர மோடியை கொல்வதற்காகவே குஜராத் வந்திருந்தார் என்றும் கூறினார். அந்தக் கொலைக்குப் பிறகு சொராபுதீனின் மனைவி கவுசர் பீயை காணவில்லை.

அண்மையில் கவுசர் பீ, தனது கணவரை காவல் துறையினர்தான் அழைத்துச் சென்றனர் என்றும், அதன் பிறகு அவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத் தரும்படியும் ஆள் கொணர்வு மனு ஒன்றை அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மார்ச் 23 அன்று, குஜராத் அரசு, காணாமல் போன சொராபுதீன் காவல் துறையினரால் கடத்தி கொலை செய்யப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சி.பி.அய். நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

சொராபுதீனும் அவரது மனைவியும், உடன் இருவரும் காவல் துறையினரால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சொராபுதீன் நவம்பர் 26, 2005இல் கொல்லப்படுகிறார். அவருடன் கடத்தப்பட்ட துளசிராம் கங்காராம் பிரஜாபதி, டிசம்பர் 28, 2006 அன்று கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, இக்கொலைகளின்போது பொறுப்பில் இருந்த காவல் அதிகாரியான வன்சாரா, இதற்கு முன் பொறுப்பில் இருந்த பிற பகுதிகளிலும் இதே போன்ற கொலைகள் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2002இல் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட சமீர்கான் பதான், அக்டோபர் 22, 2002இல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சனவரி 13, 2003இல் சாதிக் ஜெமால் மேத்தார் என்பவர் நரோதாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சூன் 15, 2004இல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் சுமத்தப்பட்ட ஒரே குற்றச்சாட்டு, இவர்கள் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்டு வந்தனர் என்பதே.

இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கருதப்படும் காவல் அதிகாரி வன்சாரா, நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு முடிவதற்குள் அந்த அதிகாரி ஓய்வு பெற்று விடுவார். அத்தோடு வழக்கின் முக்கியத்துவமும் குறைந்து, அனைவரும் மறந்துவிட்ட ஒரு நாளில் தீர்ப்பு வரும். அந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகவும் இருக்கலாம்; அல்லது உச்சப்பட்ச தண்டனையாக அந்த அதிகாரியை பதவி நீக்கம் செய்வதாகவும் இருக்கலாம்; ஆனால், அதற்குள் அந்த அதிகாரி தனது பதவியில் அனுபவிக்க வேண்டியவற்றை எல்லாம் அனுபவித்து, ஓய்வு பெற்றிருப்பார். அதோடு முடியுமா? உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். அங்கு வழக்கு முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியாது.

அதன் தீர்ப்பு வரும் நாளில் அதைக் கேட்க மனு செய்தவர் உயிருடன் இருக்க வேண்டும். இத்தனைத் தடைகளையும் கடந்து என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் நிற்கும் கவுசர் பீ போன்ற ஒரு சிலரால் மட்டுமே இந்த அளவாவது உண்மைகள் வெளிவருவது சாத்தியப்படுகிறது. மிகப் பெரும்பான்மையான போலி மோதல் சாவுகளின் பின்னணியில் இருக்கும் உண்மைகள் இறுதி வரை வெளிவராமலேயே போய் விடுகின்றன என்பதே வேதனையான உண்மை.

“மோதல் சாவினை எதிர்த்துப் போராடி வரும் மனித உரிமை அமைப்புகள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரி வருகின்றன. நீதிபதி வெங்கடாசலய்யா, மோதல் சாவுகள் குறித்த தனது பரிந்துரையில் இதனை வலியுறுத்தி இருக்கிறார். காவல் துறை அதிகாரிகள், தங்கள் தற்காப்புக்காகத் தான் இந்தக் கொலையை செய்தோம் என்பதை நீதிமன்றத்தில் சான்றுரைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால், இன்று வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. ஆர்.டி.ஓ. விசாரணை மட்டுமே நடத்தப்படுகிறது. ஆர்.டி.ஓ. என்பவர் ஓர் அரசு அதிகாரி. அரசை மீறியோ உள்ளூர் காவல் துறையினரை மீறியோ அவர் என்ன செய்துவிட முடியும்? அதனால் நீதிபதி வெங்கடாசலய்யாவின் பரிந்துரையைப் பின்பற்றி குறைந்தபட்சமாக மோதல் சாவுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 307இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்’ என்கிறார் மனித உரிமை ஆர்வலர் எஸ்.வி. ராஜதுரை.

மக்களின் நலன்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல் துறையும் ராணுவமும் ஒருபோதும் அதனை செய்ததில்லை. மாறாக, ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களின் நலன்களைக் காக்க மட்டுமே அவை பயன்பட்டு வந்திருக்கின்றன. அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது இயலாமையை மறைக்கவும், அதிகாரத்தை காத்துக் கொள்ளவும் எதையும் செய்யத் தயாராக உள்ளன. அதற்கான கூலிப்படையாகவே காவல் துறையையும் ராணுவத்தையும் அவை பயன்படுத்துகின்றன. எங்கோ யாருக்கோ எதுவோ நடக்கட்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளவரை, அரசுகளின் இந்த மனப்போக்கு மாறப்போவதில்லை.

இந்தியா விடுதலை பெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகளாகும் நிலையிலும், ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகள் நமக்குப் புரிவதில்லை. நமக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரத்தில் நக்சலைட்டுகளுடன் ஒருபுறம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் சுட்டுக் கொல்லும் கொடுமைகளும் நமக்கு உறைப்பதில்லை.

தடா, பொடா, தேசிய பாது காப்புச் சட்டம் என எத்தனை அடக்குமுறைச் சட்டங்கள் யார் மீது போடப்பட்டால் என்ன... அது வெறும் எண்ணிக்கை. விசாரணையேயின்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒன்றுமறியாத எளிய மக்களைப் பற்றி நமக்கு தெரியவே தெரியாது. லாக்அப் கொலைகள், லாக்அப் வன்புணர்வுகள்... அது அந்த குடும்பத்தினரின் கவலை. இத்தனைக் கொடுமைகளையும் தன் மக்களின் மீதே ஏவி விடும் அரசுக்குப் பெயர் : மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசு.

வாழ்க ஜனநாயகம்!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை 2003

1. காவல் துறை மோதலால் ஒரு சாவு நிகழ்ந்த செய்தி வந்தவுடன், நிகழ்வு நடந்த பகுதியின் காவல் நிலையத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரி, உடனடியாக அதை காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

2. மோதல் சாவில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் அதே காவல் நிலையத் தைச் சேர்ந்தவர்களானால், விசாரணை - குற்றவியல் புலனாய்வு பிரிவு போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும்.

3. ஒரு மனிதரின் சாவில் முடியக் கூடிய குற்றத்தில் காவல் துறையினர் ஈடுபட்டிருப்பதாகப் புகார் வருமாயின், உடனடியாக இந்திய குற்றவியல் சட்டத்தின் சரியான பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். விசாரணை கண்டிப்பாக குற்றவியல் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

4. காவல் துறை நடவடிக்கையால் நிகழ்ந்த சாவுகளுக்கு, கண்டிப்பாக ஒரு மாவட்ட நீதிபதியின் விசாரணை நடத்தப்பட வேண்டும். இறந்தவரின் மிக நெருங்கிய உறவினர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

5. மாவட்ட நீதிபதியின் விசாரணையிலோ, காவல் துறையின் விசாரணையிலோ குற்றவாளியாக சான்றளிக்கப்படும் காவல் துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் துறை நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளபட வேண்டும்.

6. இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது, அந்தந்த வழக்கின் சூழல்களைப் பொறுத்தது.

7. நிகழ்வு நடந்த உடன், அதில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு எந்த உடனடி பரிசுத் தொகையோ, பதவி உயர்வோ வழங்கப்படக் கூடாது. அந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றமற்றவர்கள் என்று சான்றளிக்கப்பட்ட பிறகே அதுபோன்ற விருதுகளோ, பதவி உயர்வோ வழங்கப்படலாம்.

8. ஆண்டுதோறும் சனவரி 15 அன்றும் சூலை 15 அன்றும், அந்த ஆறு மாதங்களில் காவல் துறை நடவடிக்கைகளால் நிகழ்ந்த சாவுகள் குறித்த அறிக்கையை, மாநில காவல் துறை தலைவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.

- பூங்குழலி