“இருபுறமும் மக்கள் குழுமியுள்ள நிலையில் இடையில் நடப்பதற்காக இருந்த மூன்று அடி இடைவெளியில் மக்களை பார்த்து இருகரம் கூப்பியவறாக காந்தியடிகள் வந்துக் கொண்டிருந்தார். காந்தியாருக்கு அருகாமையில் ஆறு அல்லது ஏழு அடி தூரத்தில் நின்ற ஒருவன் அவருக்கு மூன்று அடி நெருக்கத்தில் வந்து அவருடைய வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியென மூன்று முறை சுட்டான். இதனால் நிலைகுலைந்த காந்தியடிகள் “ராம் ராம் “என்று கூறியவாறு பின்னால் சரிந்து மரணித்தார்கள். காந்தியாரை சுட்டு படுகொலை செய்தவன் புனேவைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்பதை நான் பின்னால் தெரிந்துக் கொண்டேன் “ [நந்து லால் மேத்தா30 ஜனவரி 1948, அன்று இரவு 9;45 மணிக்கு பதியப்பட்ட காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை]

gandhi

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ் - இன் உறுப்பினர்கள் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொலை, கொள்ளை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை சம்பவங்களில் தொடர்பு உள்ளது. மேலும் இவர்களிடம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் பெரும் வெடிகுண்டுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினர்கள் மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்பி தீவிரவாத நடவடிக்கைகளின் மூலம் ஆயுதங்களை கொண்டு கலகம் செய்ய தூண்டக் கூடிய துண்டு பிரசுரங்கள் வெளியிட்டதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினர்கள் உள்ளொன்றும் புறமொன்றுமாக இரட்டை நிலையில் செயல்படக்கூடியவர்கள் என்றும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இன் வெளிப்படையான அஜெண்டாவை பின்பற்றவில்லை என்பதையும் அரசு ஊர்ஜிதம் செய்கிறது.( 4 - பிப்ரவரி 1948 அன்று காந்தியாரின் கொலைக்கு பின்பு ஆர்.எஸ்.எஸ் இன் தடைக்காக இந்திய அரசு வெளியிட்ட அரசாணை )சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல் எது? என்கின்ற கேள்வியெழுப்பினால் ஒட்டுமொத்தமாக எல்லோராலும் அளிக்கப்படும் பதில் மஹாராஷ்டிரா புனேவை சேர்ந்த நாதுராம் கோட்சே என்ற பார்பனிய இந்துத்துவ தீவிரவாதியால் ஜனவரி 30 1948 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட காந்தியார் படுகொலை என்பதாகும்.

கோட்சே இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எஸ் - ஐ சார்ந்தவன், கோட்சே 1930 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் - இன் அங்கமாக சேர்ந்து அவ்வமைப்பின் பௌத்திய காரியவாதியாக செயல்பட்டான். கோட்சேவிற்கும் ஆர்.எஸ்.எஸ் இன் முதல் சாரசங்கசலக் ஹெட்கேவருடன் நெருக்கமாக இருந்து அவருடன் ஆர்.எஸ்.எஸ் இன் வளர்ச்சிக்காக பல இடங்களும் பயணம் மேற்கொண்டுள்ளான்.

இந்துத்துவா தீவிரவாதிகள் காந்தியாரை கொள்வதற்காக எப்படியெல்லாம் சதி திட்டம் தீட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இரண்டாம் சாரசங்கசலக் கோல்வார்கர் மற்றும் சாவர்களின் விஷமத்தனமான கருத்துக்கள் மற்றும் பிரச்சாரங்களின் முடிவு காந்தியாரை கொல்லும் அளவிற்கு கோரமான நிகழ்வை ஏற்படுத்தியது என்பதனை ஜூலை 18 1948 ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்து மகா சபையின் பொறுப்பாளர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து கண்டுக் கொள்ளலாம்.

இந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி தான் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ் இன் உதவி யுடன் பாரதீய ஜனசங்கத்தை தோற்றுவித்தார்.பட்டேலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :”அரசின் விசாரணைகளின் மூலம் காந்தியாரின் படுகொலைக்கு இரண்டு அமைப்புகளின் விஷமத்தனமான பிரச்சாரமும் அவர்களின் செயல்பாடுகளுக்கே காரணியாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மாபாதக சதி செயலில் இந்து மகா சபையின் அடிப்படைவாத மதவெறியர்களுக்கும் தொடர்புண்டு என்பதனை நான் அறிவேன். ஆர்.எஸ்.எஸ் இன் நடவடிக்கைகள் அரசிற்கும், நாட்டிற்கும், எதிரானதாக உள்ளது. அதனாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப் பட்டுள்ளது. மோசமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசின் நடவடிக்கை இன்னும் கடுமையானதாக இருக்கும்.

“அறுபத்தொரு வருட கால சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்கள் குறித்து கேள்வியெழுந்தால்? சீக்கிய மெய்க்காப்பாளரால் நிகழ்த்தப்பட்ட இந்திராகாந்தி படுகொலை. 500 ஆண்டுகால பழைமை வாய்ந்த இறையில்லம் பாபரி மஸ்ஜித் இந்துத்துவ தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை சொல்லலாம். அதிலும் குறிப்பாக 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த கலவரத்தை இந்துத்துவ சக்திகளே முன்னின்று நடத்தின. இந்திரா காந்தி சீக்கியரால் படுகொலை செய்யப்பட்டதையொட்டி அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை.

சீக்கிய படுகொலையால் திடீரென முளைத்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் அல்லது 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இந்து இருதய சாம்ராட்டால் (ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களின் கூட்டமைப்பு) நிகழ்த்தப் பெற்ற மனித குலத்திற்கு எதிரான படுகொலை.இப்படியாக சுதந்திர இந்தியாவில் நிகழ்வுபெற்ற தீவிரவாத சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தால் அதனை ஊடகங்கள் எவ்வாறு கையாண்டது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

 சம்பவம் நிகழ்வுபெற்ற பின் பெரும்பான்மை சமூகம் குற்றம் சுமத்தப் படுகிறாதா?சிறுபான்மை சமூகம் குற்றம் சுமத்த படுகிறதா?என்று பார்த்தால் சந்தேகமே இல்லை! சிறுபான்மை சமூகமே இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

எண்பதுகளில் பிந்தைய காலம் தொட்டு தொன்னூறுகளில் தொடக்கம் வரை டர்பன் கட்டிய சீக்கியராக சித்தரிக்கப்பட்ட தீவிரவாத முத்திரை 21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் தாடி வைத்த முஸ்லிமாக மாறிப்போனது.காந்தியடிகள் மீது பகைமை கொண்ட இந்துத்துவ தீவிரவாதிகள் அவர் கொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு முன்னதாக நான்கு முறை முயன்று தோல்வியுற்ற உண்மைகள் எல்லாம் ஒரு சிலருக்கே தெரியும்.( வைத்தியா என்ற குஜராத்தை சேர்ந்த காந்திய வாதி 1948 - ல் இரயிலை கவிழ்த்து காந்தியாரை கொல்ல முயன்றது உட்பட ஆறு முறை இந்துத்துவ தீவிரவாதிகள் முயன்றதாக ஆதாரங்களுடன் கூறியுள்ளார். )

முதல் முயற்சி : ஜனவரி 25 1934 ஆம் ஆண்டு புனேவில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நிகழ்வுபெற்ற கூட்டத்திற்கு உரை நிகழ்த்துவதற்காக காந்தியார் தனது மனைவி கஸ்த்தூரியா காந்தியுடன் சென்றுக் கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராத விதமாக அவர் வந்த வாகனம் பழுதடையவே மாற்று வாகனத்தில் சற்று தாமதமாக நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்தடைந்தார். அவர் அரங்கத்தை அடைந்தவுடன் அவர் வாகனத்தின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு குறிதவறி வேறு இடத்தில் வெடித்ததில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சிலருக்கே காயம் ஏற்பட்டதோடு காந்தியாரும் அவர் மனைவியும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இரண்டாம் முயற்சி : இந்த முயற்சி மே மாதம் 1944 ஆம் ஆண்டு புனேவிற்கு அருகாமையிலுள்ள சிறு மலை பிரதேச மான பச்சாகனியிற்கு காந்தியார் சென்ற போது அவரை படுகொலை செய்த இந்துத்துவ தீவிரவாதி கோட்சேயால் மேற்கொள்ளப்பட்டது. காந்தியார் பச்சாகனியிற்கு வந்தபோது ஒரு வாடகை பேருந்தில் 15 முதல் 20 இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் காந்தியாருக்கு எதிராக அன்றைய நாள் முழுவதும் போராட்டம் நடத்தினர். அவர்களை காந்தியார் பேச அழைத்த போது அழைப்பினை நிராகரித்து விட்டனர். அன்றைய மாலைப்பொழுதில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற போது கையில் பட்டா கத்தியுடன் காந்தியை நோக்கி கோட்சே வேகமாக முன்னேறினான். ஆனால் கூட்ட நெறிசலில் மக்களைத் தள்ளிக் கொண்டு முன்னேற இயலாமல் போனதால் கோட்சேவின் முதல் முயற்சியும் இந்துத்துவ தீவிரவாதிகளின் இரண்டாம் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

மூன்றாம் முற்சி : இது செப்டம்பர் மாதம் 1944 ஆம் ஆண்டு முஹம்மது அலி ஜின்னாவிடம் பேச்சு வார்த்தைக்கு சேவகிராமம் ஆசிரமத்தில் இருந்து பம்பாய் செல்வதற்காக காந்தியார் புறப்பட்ட போது நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு புறப்பட்ட காந்தியாரை கோட்சேவின் தலைமையில் வந்த தீவிர வாத எண்ணம் கொண்ட இந்துத்துவ இளைஞர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காந்தியார் மும்பை செல்லக் கூடாது என்பதுதான் அவர்களின் வாதம். அப்போதும் கோட்சே தனது கையில் பட்டாக் கத்தியுடன்தான் இருந்தான். இந்த முற்சியும் தோல்வியில் முடிவுற்றது.

நான்காம் முயற்சி : இது ஜூன் மாதம் 4 - ஆம் தேதி 1946 ஆம் ஆண்டு காந்தியாரை அவர் சென்ற இரயிலைக் கவிழ்த்து கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காந்தியார் இரயில் மூலம் புனேவிற்கு சென்றுக் கொண்டிருந்த போது சிறப்பு இரயில் கர்ஜத் “நெருல் “என்ற இரயில் நிலையங்களுக்கு இடையே நள்ளிரவில் போய்க் கொண்டிருக்கும்போது இரயிலை கவிழ்ப்பதற்கு ஒரு பயங்கர சதித்திட்டம் தீட்டப்பட்டது. தண்டவாளத்தின் மீது மிகப்பெரிய பாறாங்கற்ளைப் போட்டு இரயிலைக் கவிழ்ப்பதற்கு சதி செய்திருந்த்தனர்.. அதிஷ்டவசமாக இரயில் இஞ்சின் டிரைவர் சாமர்த்தியனால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இப்படியாக டிரைவர் சாமர்த்தியனால் காந்தியாருடைய உயிரும் அந்த இரயிலில் பயணம் செய்த அப்பாவி பொது மக்களின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது.

ஐந்தாம் முயற்சி : இது 20 ஜனவரி 1948 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது . இந்நிகழ்வில் இந்துத்துவ தீவிரவாதிகள் காந்தியையும் பெங்காள் தலைவர் ஹ¨சைன் சஹீது சழ்ராவதியையும் கொல்ல திட்டமிட்டனர். இதற்காக ஈடுபட்ட குழுவில் மதன் லால் பெஹ்வா, சங்கர் கிஸ்தய்யா, திகம்பர் பட்கே, விஷ்னு கர்கரே, கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயன ஆப்தே ஆகியோர் ஈடுபட்டனர். மதன்லால் பெஹ்வாவினால் வீசப்பட்ட குண்டு காந்தியார் தங்கிய பிர்லா பவன் மேடையில் விழாமல் குறி தவறி வீழ்ந்ததினாலும், காந்தியாரை சுடவேண்டிய நபர் குண்டு சப்தத்தினால் மக்கள் விழிப்படைந்ததால் சுட இயலாமல் போனதாலும் எவ்வித சேதமும் இல்லாமல் காந்தியார் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த முயற்சியும் தோல்வியில் முடிவுற்றதோடு குண்டு வீசிய மதன்லால் பெஹ்வா கைது செய்யப்பட்டார்.

ஆறாவது மற்றும் கடைசி முயற்சி ஜனவரி 30 1948 ஆம் ஆண்டு 5;17 மணிக்கு திட்டப்படி மிக நெருக்கத்தில் இந்துத்துவ தீவிரவாதி நாதுராம் கோட்சேவால் மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த மாபாதக கொடுஞ்செயலில் ஊடகத்தினரை கவரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயணன் ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும் மற்றய அனைவருக்கும் ஆயுள் தண்டனை. என நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இவ்வழக்கின் சதிகாரராக செயல்பட்ட சாவர்கர் போதிய ஆதாரமில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும் ஜவஹர்லால் நேரு அவர்களும் காந்தியின் இரண்டு மகன்களும் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் மறைமுகமாக இயக்கியது மேல்நிலையில் உள்ள இந்துத்துவ தலைவர்கள்தான் என்பதை உணர்த்திருந்தனர். காந்தியார் மரண தண்டனையை விரும்பாதவர் என்றாலும் அவர் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் நாராயணன் ஆப்தே ஆகியோர் நவம்பர் 15, 1949 ஆம் ஆண்டு அம்பாலா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டனர்.காந்தியாரை படுகொலை செய்தவர்கள் அவரை கொன்றதற்காக சில காரணங்களை கூறி நியாப்படுத்தினர் அவை :

முதலாவதாக முஸ்லிம்களுக்கு தனி தேசம் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்வதன் மூலம் காந்தியார் நாட்டு பிரிவினைக்கு காரணமாக இருந்தார்.

இரண்டாவதாக அவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். எல்லா பிரச்சனைகளிலுமே முஸ்லிம்களையே சார்ந்திருந்தார்.

மூன்றாவதாக இந்திய அரசாங்கம் பிரிக்கப்பட்டதாக இந்திய நிதியிலிருந்து ரூபாய் 55 கோடியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிலும் இந்தியா மீது பிரகடனப்படுத்தாத போரை பாகிஸ்தான் காஷ்மீரில் தொடங்கியிருந்தபோது கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

காந்தியாரை படுகொலை செய்த இந்துத்துவ தீவிரவாதிகள் சுமத்திய இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்பது அந்த கால வரலாற்றை நன்கறிந்தவர்களுக்கு தெரியும்.இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் - ஐ சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் தேசத்தை இந்துமய மாக்குவதிலேயே முனைப்பாய் இருந்தனர். அதற்காக அவர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.

ஆனால் காந்தியாரோ பன்மை சமூகம் கொண்ட இந்த தேசத்தை வேற்றுமையில் ஒற்றுமையாய் அமைதியாக வாழவேண்டும் என்பதற்காக தனது வாழ்வினை தியாகம் செய்தவராவார்.காந்தியாரை கொல்வதற்காக அவருடைய வாழ்வில் 14 வருடங்கள் நீண்ட கொலை முயற்சியை மேற்கொண்டு எப்படியாவது அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி அவரை படுகொலை செய்ததின் மூலம் தங்களின் சித்தாந்தத்தை நிறைவேற்றுவதற்கு எத்தகைய மாபாதக செயலையும் செய்ய இந்துத்துவ தீவிரவாதிகள் விழைவார்கள் என்பதனை காட்டுகிறது.

மனித குலத்திற்கு எதிரான மாபாதக குற்ற செயலான 2002 குஜராத் படுகொலை நிகழ்த்தியவர்கள் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொண்ட வீடியோ பதிவுகள் [Tehelka sting Operation Published on 7 nov 2007. http://tehelka.com Story main 35 asp? File Name : Ne031107 gujarat_sec.asp ]அல்லது [reddif.com] இணையதளத்திற்கு கேகா சாஸ்திரி அளித்த பேட்டி [Sheela bhatt '' it had bedone, VHP Leader says of riots 12 march 2002,rediff.com. http;//www.rediff.com/news/2002/mar//12 train.htm]

இதுபோன்ற வீடியோ பதிவுகள் மற்றும் பேட்டிகள் வெளிப்படையாக வெளிவந்தப் பின்னும் அவர்கள் குற்றவாளியாக கருதப்படுவதில்லை. அரசு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க தயாரில்லை.

மேலும் சாத்வி பிரக்யாசிங்கோ அல்லது புரோஷித்தோ அல்லது தயானந்த பாண்டேயோ அல்லது மொத்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்த அசிமானந்தாவே தீவிரவாத சதி செயல்களில் ஈடுபட்டு குற்றம் நிறுபிக்கப் பட்டாலும் அதனை ஒரு விதிவிலக்காகவே பார்க்கின்றோம்.

ஊடகங்களும் அதனை அத்துனை முக்கியப் படுத்துவதும் இல்லை. இதையே ஒரு முஸ்லிம் இளைஞனை போலிஸ் கைது செய்தால் அவனை தான் முக்கிய சதிகாரன் எனவும், அவன் பல தீவிரவாத செயல்களில் தொடர்புடைய பெரிய பயங்கரவாதி என பரப்புரை செய்ய ஊடகங்களும் தயாராக உள்ளது வேதனையே.”எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே “என்று குற்றவாளிகளின் கூடாரமான பி.ஜெ.பி பரப்புரை செய்தது வேதனையிலும் வேதனையே.

இப்படியாக பொய்வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் அப்பாவி முஸ்லிம்கள் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவிக்கும் போது அவனை மிகப்பெரிய தீவிரவாதியாக சித்தரித்த எந்த ஊடகமும் அதனை பெரிதுப்படுத்துவதுமில்லை அதற்கான கண்டனங்களை பதிவு செய்வதுமில்லை.

இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது இந்தியர்களுக்கு கிடைத்த அருட்கொடையாகும். இங்கே பல மதத்தவர்களும் பல மொழி பேசுபவர்களும் இரண்டரக் கலந்து வாழ்கின்றனர். இதில் பெரும்பான்மை சமூகத்தின் வகுப்பு வாத செயல்களை “தேசிய வாதமாக”சித்தரிப்பதும் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை கூட “மதவாத”கண்ணோட்டத்தோடு பார்ப்பதும் சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரின் தீவிரவாத செயல்கள் கோபத்தினால் ஏற்பட்டது என கூறுவதும் பெரும்பான்மையினரின் தாக்குதலுக்கெதிராக சிறுபான்மையினர் நடத்தும் சிறிய போராட்டங்களை கூட தேச விரோத செயலாக சித்தரிப்பதும் இந்துத்துவாவினரின் ஒரு சார்பு மத சகிப்புத்தன்மையையே தெளிவாக காட்டுகின்றது. அது பண்முகத்தன்மை கொண்ட தேசத்திற்கு உகந்தது அல்ல.

தீவிரவாதம் என்பது எந்த ஒரு சமூகத்தின் தனிப்பட்ட அடையாளம் அல்ல. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு முழுவதுமாக சித்தரிப்பது என்பது “9/11”பின்பாக அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற பொய் பரப்புரையின் மூலம் பரப்பப்பட்டதாகும்.

நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்கள் நிகழ்வுபெற்ற பின்பும் அதில் இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களுக்கு உள்ள தொடர்பு நிருபனமான பின்பும் அரசாங்கம் சட்டம் இழுங்கை முறையாக பயன்படுத்தவில்லை. கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை அரசு மென்மை போக்குடனையே கையாண்டுள்ளது. இது அரசியல் தளத்தில் இந்துத்துவ இயக்கங்கள் வலிமை பெருவதையே ஊக்குவிக்கும்.

சுயம் சேவக் கோட்சே

ஆர்.எஸ்.எஸ் - இற்கும் கோட்சேவிற்கும் ஆன தொடர்பானது இன்றுவரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால் காந்தியார் படுகொலை குறித்து எழும் கருத்து பரிமாற்றங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தோழமை இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் குற்றம் சாட்டப்படாமல் இருந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ் கோட்சேவையும் அவனது குழுவினரையும் வெளிப்படையாக எதிர்மறை கருத்துடனையே விமர்சித்து தாங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் காட்டிக் கொள்கிறது.

ஆகஸ்டு 2004 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த திரு. அர்ஜுன் சிங் அவர்கள் காந்தியாரின் கொலை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் சாதனை என கருத்து தெரிவித்தார். இதனை கடுமையாக எதிர்த்த ஆர்.எஸ்.எஸ் அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் இதனை நான் பொருட்படுத்த போவதில்லை என்றும் உங்களால் இயன்றதை செய்துக்கொள்ளுங்கள் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என திரு. அர்ஜுன் சிங் அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் 17 ஆகஸ்டு 2004 ஆம் ஆண்டு காந்தியாரின் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதனை திட்டவட்டமாக மறுத்து அதற்கு ஆதாரமாக காந்தியார் படுகொலை செய்யப்பட்டு இருபது நாள் கழித்து அன்றைய உள்துறை அமைச்சர் சர்தன் வல்லபாய் பட்டேல் அவர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு எழுதிய கடிதத்தை காட்டியுள்ளது.

 ஆனால் அதே கடிதத்தில் காந்தியாரின் படுகொலையில் சாவர்கருக்கு தொடர்பிருப்பதாகும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை காந்தியாரின் படுகொலையை வரவேற்பதாகவும் கூறியுள்ளதை மறைத்து காந்தியாரின் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு ஆதாரமாய் பிப்ரவரி 20 1948 ல் தேதியிட்ட பட்டேலின் கடிதத்தின் நகல்களை பரப்பியது.

கொலை மற்றும் விசாரணைகளின் தகவல்கள் உள்ளடங்கிய அந்த மூன்று பக்ககடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது”விசாரணையின் போது பல்வேறு தரப்பட்ட மக்களையும் விசாரித்ததில் ஆர்.எஸ்.எஸ் இதில் சம்பந்தப்படவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அந்த கடிதத்தின் அடுத்த வார்த்தை என்னவென்றால் தீவிரவாத சிந்தனை கொண்ட இந்துமகா சபையின் பிரிவு சாவர்கரின் தலைமையின் கீழ் இந்த சதி செயலை நிறைவேற்றியிருக்கக்கூடும் “எனக் கூறுகிறது.[Neena Vyas RSS ''releases proof Of its innocense'' (18 Aug 2004.The Hindu]

ஆர்.எஸ்.எஸ் ஆதாரமாக காட்டிய அதே நேரத்தில்தான் இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டு அமைப்புகளும் காந்தியாரின் கொலையை கொண்டாடியதாகவும் இவ்வமைப்பினர் காந்தியாரின் பன்முகத்தன்மை கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் இற்கும் கோட்சேவிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை மிகவும் சிரத்தை எடுத்து கூறிவருகின்றது.

அதனை மேலும் உருதிபடுத்த ஆர்.எஸ்.எஸ் இன் மூத்த உறுப்பினரும் பி.ஜெ.பி.யின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி இப்படிக் கூறினார்.`கோட்சேவோடு செய்வதற்கு எங்களுக்கொன்றுமில்லை. அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் - இற்கும் தொடர்பில்லை. காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் - யையும் இந்துக்களையும் வலுவிலக்கச் செய்வதற்காக இப்படி கூறிகின்றது.”[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 22 நவம்பர் 1993 ]

அத்வானியின் இந்த குற்றச்சாட்டை கோட்சேவின் சகோதரரும் குற்றம் நிருபிக்கப்பட்டு சிறையில் இருந்தவருமான கோபால் கோட்சே மறுத்துள்ளார். இதனை அவர் ( ) காந்தியை நான் ஏன் கொன்றேன் என்ற நூலில் மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நாதுராம் கோட்சேதான் ஆர்.எஸ்.எஸ் - ஐ விட்டு வெளியேறியதாக கூறினார். அவர் ஏன் அப்படி கூறினார் என்றால் காந்தியாரின் படுகொலைக்கு பின்னர் கோல்வாக்கருக்கும் ஆர்.எஸ்.எஸ் இற்கும் நிறைய பிரச்சனைகள் எழுந்தது. இதனை தீர்க்கவே அவர் அப்படி கூறினார்.

ஆனால் உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் - ஐ விட்டு விலகவில்லை என்ற முக்கியமான தகவலையும் வெளிப்படுத்தியுள்ளார். அத்வானியின் கருத்து கோழைத்தனமானது என்றும் கோபால் கோட்சே அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.இதனை கோபால் கோட்சே 28 ஜனவரி 1994 - ஆம் ஆண்டு பிரண்ட்லைனில் அரவிந்த் இராஜகோபாலுக்கு அளித்த பேட்டியும் உறுதிப்படுத்தி உள்ளது.

கேள்வி : நீங்கள் ஆர்.எஸ்.எஸ் - இன் உறுப்பினரா?

பதில் : ஆம். நான், நாதுராம், தாத்ரேயா, மற்றும் கோவிந்த் ஆகிய நான்கு சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ் - இல் இருந்தோம். நாங்கள் ஆர்.எஸ்.எஸ் - இல் வளந்தவர்களே தவிர எங்கள் வீட்டில் வளந்தவர்கள் அல்ல. ஆர்.எஸ்.எஸ் தான் எங்களின் குடும்பம்.

கேள்வி : நாதுராம் ஆர்.எஸ்.எஸ் - இல் இருந்தார அல்லது வெளியே சென்று விட்டாரா?

பதில் : நாதுராம் ஆர்.எஸ்.எஸ் - இன் பௌத்திய காரியவாதியாக இருந்தார். அவர் தனது வாக்கு மூலத்தில் ஆர்.எஸ்.எஸ் - ஐ விட்டு வெளியேறி விட்டதாக கூறினார்.அவர் ஏன் அப்படி கூறினார் என்றால் காந்தியாரின் கொலைக்கு பின்பு கோவல்கருக்கும் ஆர்.எஸ்.எஸ் - இற்கும் நிறைய பிரசனைகள் வந்தது. அதனை தீர்பதற்காகவே அவர் வெளியேறியதாக கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஆர்.எஸ்.எஸ் - ஐ விட்டு விலகவில்லை.

கேள்வி : நாதுராமிற்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் தொடர்பில்லை என அத்வானி கூறியுள்ளாரே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில் : நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். அவ்வாறு கூறுவது கோழைத்தனம். “சென்று காந்தியை கொன்று விட்டு வா “என ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இற்கும் நாதுராமிற்கும் சம்பந்தமில்லை என்று கூற முடியாது. இந்து மகா சபை அவ்வாறு கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ் - இல் பௌத்திய வாதியாக இருந்து கொண்டே 1944 ஆம் ஆண்டு முதற்கொண்டே நாதுராம் இந்து மகா சபையில் பணியாற்றத் தொடங்கினார். நாதுராம் கோட்சே தூக்கிலிடப் படுவதற்கு முன் நடந்த கடைசி நிகழ்வுகள் குறித்தும் கோபால் கோட்சே தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.நாதுராம் தூக்கிலிடப் படுவதற்கு முன்பாக தூக்குமேடையை அடைந்த வுடன் தாய் நாட்டிற்கான தனது அர்பனிப்பு மிகுந்த வாசகங்களை பின்வருமாறு கூறினான். ”நமஸ்தே சதா வந்சலே மாத்ருபூமிதூய ஹிந்து பூமி சுகவர்தித்தே ஹ¨ம்,மஹாமங்கல புணே பூமி துத்ற்தேபதிவேஷ் கயா நமஸ்தே நமஸ்தே. “

ஆர்.எஸ்.எஸ் - இன் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தால் நமக்கு தெரியும் அவர்கள் ஷாகாக்களை அந்த வாசகத்தை கொண்டே ஆரம்பம் செய்கின்றனர். இது ஒன்றே போதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் கோட்சேவின் தொடற்புகளை உறுதி செய்வதற்கு.

கோட்சே - சாவர்கர் உறவு

”யாஷாஸ்வி ஹோஹ¨ன்யா “(வெற்றியுடன் திரும்பி வாருங்கள்) என்று நாதுராம் கோட்சே மற்றும் நாராயணன் ஆப்தே ஆகிய இருவரிடமும் காந்தியாரை படுகொலை செய்வதற்கு முன்னதாக கூறியதாக வி.டி.சாவர்கர் கூறியதாக போலிஸ் பதிவுகளில் உள்ளது.

காந்தியார் படுகொலை செய்யப் பட்டதில் இருந்தே கோட்சே தன்னை ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து சாவர்கரிடமிருந்தும் தூரப்படுத்திக் கொண்டான். ஆனால் கோட்சே 1935 - ஆம் ஆண்டு முதல் சாவர்கருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளான். கோட்சே மற்றும் குற்றவாளிகள் அனைவரும் சாவர்கரை காப்பாற்றுவதிலேயே முனைப்பாய் இருந்தனர். இருப்பினும் சாவர்கர் தான் முக்கிய சதிகாரன் என்பது பின்பு விசாரணைகளில் தெரியவந்தது.

காந்தியார் படுகொலை வழக்கு சம்பந்தமாக நியமிக்கப்பட்ட நீதிபதி அத்மாசரண் காந்தியீன் படுகொலையில் சாவர்கர் உட்பட எட்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக முதல் குற்றப்பத்திரிக்கையினை உறுதி செய்தார். வழக்கின் முடிவில் இருவருக்கு மரண தண்டனையும் ஐவருக்கு ஆயுள் தண்டனையும் அளித்த நீதிமன்றம் சாவர்கரை விடுதலை செய்தது.

இவ்வழக்கில் திகாம்பர் பட்கே அப்ரூவராக மாறி தனது வாக்குமூலங்களை பதிவு செய்தார். இவரின் வாக்கு மூலமே வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. திகம்பரின் வாக்கு மூலங்கள் நம்பகத்தன்மை யானது என்றாலும் அதனை உறுதி செய்ய இரண்டாவது சாட்சியம் இல்லாத காரணத்தாலே சாவர்கர் விடுதலை செய்யப்பட்டார். திகம்பர் பட்கே நம்பகத்தன்மையானவர் என்றும் அவரின் வாக்குமூலங்கள் உண்மையானது என்றும் வழக்கின் நீதிபதி கூறினார். திகம்பர் பட்கே இந்து மகா சபையை சேர்ந்தவர். இவரே கோட்சேவிற்கு துப்பாக்கியை வழங்கியவர். இவர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் இன் முக்கிய அங்கம் சாவர்கருக்கு காந்தி படுகொலையில் உள்ள தொடர்பு குறித்து தெளிவாக கூறினார்.

திகம்பர் பட்கே கொலையாளிகளின் சதித்திட்டம் குறித்து போலிஸிடம் தெளிவாக வாக்கு மூலமளித்தார். “நாராயணன் ஆப்தே அவருடன் சேர்ந்து தில்லிக்கு வரமுடியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் எதற்காக என்று கேட்டேன் அதற்கு அவர் “தத்யாரவ்”என்றார். அதற்கு அர்த்தம் கேட்டதற்கு காந்திஜி, ஜவஹர்லால், மற்றும் ஹ¨சைன் சஹிது சஷ்ராவதி ஆகிய மூவரையும் கொலை செய்ய சாவர்கர் திட்டம் தீட்டியிருப்பதாகவும் அந்த பொருப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.போகும் வழியில் சாவர்கர் வீட்டை அடைந்தவுடன் என்னை வெளியே இருக்க சொல்லிவிட்டு கோட்சே மற்றும் ஆப்தே இருவரும் சாவர்கரை சந்திக்க சென்றனர். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். அவர்களை பிந்தொடர்ந்து வந்த சாவர்கர் “யாஷஸ்வி ஹோஹ¨ன்யா “( வெற்றியுடன் திரும்பி வாருங்கள் என்றார். ) சாவர்கர் வீட்டிலிருந்து புறப்படும் போது ஆப்தே என்னிடம் `தத்யாரங்”திட்டமிடப்பட்டு விட்டதாகவும் காந்தியின் வாழ்க்கை முடியப் போவதாகவும் கூறினார்.[ Rajesh RamachandranThe Master mind, Out Lokk, 6.sep.2004]

ஜனவரி 20 1948 ஆம் ஆண்டு மதன்லால் பெஷ்பா கைது செய்யப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சாவர்கரின் வீட்டை தீவிரமாக கண்காணித்து வருமாரு மும்பை மாகானத்தின் உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் மும்பை காவல்துறை ஆணையர் ஜம்செத் நாகர்வாலாவிற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.காந்தியாரை கொலை செய்யும் சதி செயலில் தொடர்புள்ளதால்தான் சாவர்கரின் வீடு கண்காணிப்பிற்குள்ளானது.

இது குறித்து நீதி மன்றத்தில் கேள்வி எழுப்பிய சாவர்கரின் வழக்கறிஞர் அதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்கு வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தார். இதற்கு பதில் அளித்த மொரார்ஜி தேசாய் பதிலை நான் தயார் செய்திருப்பதாகவும் நான் பதில் அளிக்க வேண்டுமென சாவர்கர் முடிவு செய்தால் பதிலளிப்பதாகவும் கூறினார். அதற்கு சாவர்கரின் வழக்கறிஞர் தான் கேள்வியினை வாபஸ் வாங்கிக் கொள்வதாக கூறினார்.   ] J.C.Jain The Murder Of Mahatma Gandhi : Proud And After Match Centre, Mumbai.1961,p.104]

சரியாக காந்தியார் கொல்லப்பட்டு பதினாறு வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை கைதிகள் (12 நவம்பர் 164 ஆம் ஆண்டு) விடுதலை செய்ய்ப்பட்டனர். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை இந்துத்துவாவினர் புனேவில் விழாவாக கொண்டாடினர். விழாவையட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சில பேச்சாளர்கள் தங்களுக்கு கொலை குறித்து முன்பே தெரியும் என பேசினர். இதனால் கொதிப்படைந்த மக்கள் மற்றும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தினால் அப்போதைய உள்துறை அமைச்சர் கல்கரிவாய் நநத்தா கொலை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜிகன்லால் கபூர் தலைமையில் விசாரணை கமிஷனை 1965 ஆம் ஆண்டு நியமித்தார்.

நீதிமன்றத்தில் காந்தியாரின் கொலை யின் மொத்த பழியையும் கோட்சேவே எற்றுக் கொண்டதாலும் அப்ரூவர் திகம்பர் பட்கேவின் சாட்சியத்தை உருதி செய்ய இன்னொரு சாட்சி இல்லாததாலும் சாவர்கர் விடுதலை செய்யப்பட்டார். சாவர்கருக்கும் கோட்சேக் கும் இடையே இருந்த இருந்த அரசியல் கோட்பாடு உறவு பற்றிய ஆதாரம் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது இருந்தது என்றாலும் 1966 - இல் சாவர்கர் இறந்தபின் மேலும் சில சாட்சியங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. சாவர்கரின் மெய்க்காப்பாளரான அப்பா இராமச்சந்திரா மற்றும் செயலாளரான கஜான் விஷ்னு தாங்லே ஆகியோர் நீதிபதி கபூர் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்கு மூலங்கள் அளித்தார்கள்.

அவர்கள் ஜனவரி 24 - இல் கோட்சே மற்றும் ஆப்தே ஆகிய இருவரும் காந்தியை கொல்வதற்கு முன் சாவர்கரை சந்தித்ததை உறுதி செய்தனர். இவையெல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சாவர்கர் தலைமையிலான குழுவே திட்டம் தீட்டி காந்தியை படுகொலை செய்ததாக நீதிபதி கபூர் தனது தீர்ப்பை வழங்கினார்.

- ஹாரிஸ் முஹம்மது

Pin It