தமிழகத்தின் கடலோர மாவட்டம் இராமநாதபுரம். அதில் கடற்கரை பகுதி எஸ்.பி.பட்டிணம். இங்கு செய்யித் முஹம்மது என்றொரு முஸ்லிம் இளைஞன். தந்தை இல்லை. கூலி வேலை செய்து தன் தாயாரை காப்பாற்றி வருபவன்.இங்கு பைக் முதலியனவற்றை பழுது பார்ப்பவர் அருள்தாஸ். அவரிடம் செய்யித் முஹம்மதின் நண்பன் பைக்கை பழுதுப்பார்க்க கொடுத்திருக்கிறார். அதை வாங்கி வர தன் நண்பனின் கோரிக்கையின் கீழ் சென்றிருந்தான் செய்யத் முஹம்மது.

sp pattinam

ஆனால் அவன் செல்லும் போது பைக் தயாராகவில்லை. இதனால் காலம் கடந்த அருள்தாஸ் பைக் - ஐ கொடுத்த செய்யத் முஹம்மதுவின் நண்பனிடம் போனில் தொடர்பு கொண்டு பைக்கை செய்யதிடம் தரலாமா? என கேட்டிருக்கிறான். அவனும் கொடுக்கலாம் என கூறியிருக்கிறார். ஆனால் அருள்தாஸ் பைக் தயாராக இல்லை. சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்ளலாம் என வாய்தா போட்டார்.வாய்தா காலம் முடிந்து வந்தார் செய்யத் முஹம்மது. வண்டியை கேட்டார். ஆனால் அருள்தாஸ் அப்போதும் தன் வேலையைக் காட்டவே வாய்ச்சண்டை நடந்திருக்கிறது. சற்று சூடு அதிகமாகவே வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி இருக்கின்றது.

 ஊர் நாட்டில் நடப்பது போல் அக்கம் பக்கத்தினர் வந்து விலக்கி விட்டிருக் கின்றனர்.ஆனால் மெக்கானிக் அருள்தாஸ் தனக்கு எல்லாவகையிலும் உதவி வரும் பக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் சென்று கூறியுள்ளார். ஆனால் புகார் எதுவும் எழுதித்தரவில்லை. அதன் பின் காவல்துறையினர் செய்யத் முஹம்மதுவை அடித்து இழுத்து சென்றுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைந்துள்ளார்கள்.அடி தாங்க முடியாமல் செய்யத் முஹம்மது அலறி இருக்கின்றான். அலறல் சப்தம் கேட்டு சிலர் காவல் நிலையம் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரின் தொடர் கொடூரங் களால் மூர்ச்சையானான் செய்யத் முஹம்மது. இவையெல்லாம் மதியம் 2 மணிக்கே முடிந்துவிட்டது.

இந்த காவல் நிலையத்தில் காளிதாஸ் என்பவர்தான் துணை ஆய்வாளர். இவர் மதியம் 3 மணிக்கு தன் கடமைகளைச் செய்திட காவல் நிலையம் வந்திருக்கின்றார். பின் எஸ்.ஐ. காளிதாஸ் தன் பங்கிற்கு செய்யத் முஹம்மதுவை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இவரின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டவே செய்யத் முஹம்மது இறந்து போனான்.சையது முகம்மது கத்தும் சத்தம் பின்னர் கேட்கவில்லை. மருந்து கடை இரமேஷ் இறப்பை உறுதி செய்துள்ளார். ஆயுர்வேதிக் படித்து பார்மசிஸ்ட்டாக உள்ள இரமேஷ் சுமார் ஐந்து மணியளவில் ஒரு காவலரால் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, அந்த காளிதாஸிற்கு ஏற்பட்ட இடது கை, இடதுபக்க வயிற்றுக் கீறல்களை காண்பித்து நரம்பு தேசம் அறுந்து விட்டதா என்று கேட்டுள்ளார். அதன் பின் அதற்கு பஞ்சு வைத்து கட்டிவிடவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ஆனால் இரமேஷோ இதற்கு நான் மருத்துவம் பார்க்கக் கூடாது என்று திரும்பி வந்து விடுகிறார்.அப்போது இரமேஷ் ஒரு அறையில் ஒருவர் சாய்ந்து படுத்து இருப்பதை பார்த்துள்ளார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். அவருடைய உடம்பிலோஒரு சொட்டு இரத்தம் கூட இல்லையென்று தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆசாத்

ஆசாத் நம்மிடம் கூறும்போது தாம் டி.என்.டி.ஜெ விற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பதாகவும், சம்பவம் நடந்த அன்று மாலை சுமார் 4.30 முதல் 4.45 மணிக்குள் தன்னை அழைத்ததாகவும், தாம் தொண்டியிலிருந்து 10 நிமிடத்தில் காவல் நிலையத்திற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.அவரை காவல்துறையினர் கேட்டுக்கு வெளியே இருக்கும் படி சொல்லியுள்ளனர். இவர் கூற்றுப்படி பார்த்தால் சையது முகம்மது 4.30 மணிக்கு முன்பாகவே இறந்துவிட்டார். இவர் மருந்து கடை இரமேஷ் உள்ளிருந்து வெளியே வந்ததை பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் எஸ்.ஐ. காளிதாஸ் காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிவப்பு காரில் ஏறி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் தான் £வெளியில் நின்றதாகவும் ஆசாத் தெரிவித்தார்.பின்னர் தன்னை காவலர்கள் உள்ளே வரும்படி அழைத்ததாகவும் தன்னிடம் உள்ள செல்போனை வாங்கிக் கொண்டதாக கூறினார். தான் வண்டியில் ஏறி உட்கார்ந்து பின்னால் உள்ள ஜன்னல் வழியாக பார்க்கும்போது, இரண்டு காவ லர்கள் சையதுவின் உடலைக்கொண்டு வந்து போட்டதாகவும், பின்னர் தான் “என்ன சார் யாரோ காயம் அடைந் துள்ளார் என்று கூறினீர்கள் இப்போது உடலைக் கொண்டு வந்து போடுகிறீர்கள்? “எனக் கேட்டபோது இதனை யாரிடமும் வெளியே சொல்லவேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டதாகவும். டி.எஸ்.பி.சேகர் வந்து எஸ்.ஐ. (இவர் வேறோரு எஸ்.ஐ) சொல்லும்படி வண்டியை ஓட்டும் படியும் வழியில் யார் நிருத்த சொன்னா லும் நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் வண்டியை திருபாலகுடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் அங்கு எஸ்.பி. மயில் வாகனன் வந்து ஆம்புலன்ஸில் இருந்த உடலை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இங்கு ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரம் நின்றதாகவும் பின்னர் சுமார் 7.10 மணிக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவித்தார். தான் இதனையே மாஜிஸ்ரேட்டிடம் தெரிவித்ததாக நம்மிடம் சொன்னார்.

சையது அலி ஃபாத்திமா சையது அகமது தாயார்

இவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர், இன்னும் இவர் கணவர் காட்டுபாவா அவர்கள் இறந்து 10 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. 2 மாதத்திற்கு முன்புவரை இவரது மகன் சையது சென்னையில் கார் டிரைவராக இருந்துள்ளார். கடந்த இரண்டு மாத காலமாக இறால் பண்ணையில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரிவித்தார். இன்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இவர் அழுதுக் கொண்டே இருந்ததால் இந்த தகவலை இவரின் சகோதரி அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.தன்னுடைய மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விவரத்தை தம்மிடம் கூறாமல் மறைத்து விட்டதாகவும், இன்னும் தன்னுடைய மகன் இறந்த விடயமே தனக்கு தொலைக்காட்சியை பார்த்த பின்புதான் தெரிந்ததாக கூறினார். மறுநாள் 15.10.14 அன்று ஆய்வாளர் துரை பாண்டி தவறு நடந்து விட்டது என்று சொல்லி திருவாடணை டி.எஸ்.பி சேகர் கொடுத்த கடிதத்தை காண்பித்து அதில் கையெழுத்து போடுமாறு கேட்டுள்ளார்.

அதில் “இன்று 14.10.2014 மாலை 3.மணிக்கு எஸ்.பி. பட்டிண காவல் நிலைய கு.எண் : 90/2014 வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்ட தங்களது மகன் சையது முகமது காயம் பட்டு அதன் தொடர்பாக இராம நாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார் என்பதனையும் இது தொடர்பாக எஸ்.பி. பட்டிணம் காவல் நிலையம் கு.எண் : 91/2014 பிரிவு 176(4) கீழ் சி.ஆர்.பி.சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் “என்று இருந்தது. ஆனால் அந்த கடிதத்தில் கையெழுத்து போட குடும்பத்தார்கள் மறுப்பு தெரிவித்து அனுப்பி வைத்ததாக கூறினார்கள். இதில் ஒரு கொலையை மறைக்க ஆய்வாளர் துரை பாண்டி மற்றும் டி.எஸ்.பி சேகர் மற்றும் எஸ்.பி மயில் வாகனன் போன்றோர் முயற்சி செய்தது தெரிகின்றது.

இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு முன் கூடிவிட்டனர். அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. உடனே சம்பவ இடத்திற்கு எஸ்.பி, ஐ,ஜி, டி.ஐ.ஜி போன்றவர்கள் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். இன்னும் கிட்டதட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட போலிஸார் அங்கு குவிக்கப்பட்டார்கள். மக்கள் மறியலில் இருந்த போது தைக்கால் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் மைக் மூலம் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறியவுடன் மக்கள் கலைந்து சென்றுள்ளனர். மாலை 5.30 மணிக்கு பிறகு ஆம்புலன்ஸ் சென்றவுடன் வெள்ளதுறை ஏ.டி.எஸ்.பி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் இரவு முழுவதும் அங்கிருந்து மக்களை அடக்கும் திட்டத்தை நிறைவேற்ற முகாமிட்டிருந்த தாக மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.மறுநாள் 15.10.2014 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி நீதிபதி என். வேலுச்சாமி மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அவர் மாலை நடைபெற்ற உடல் பரிசோதனையின் போது உடன் இருந்தவர். மேலும் தலைமை மருத்துவர் தலைமையில் சுமார் 5 மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டார் கள். இதனை வீடியோ படம் எடுக்கப்பட்டது. இரண்டு வழக்கறிஞர்கள் உடன் இருந்துள்ளனர்.ஊர் மக்கள் 302 கொலை வழக்கு பதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் 16.10.2014 அன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக மனுதாக்கல் செய்யப் பட்டது. அதில் இரண்டாவது முறையாக உடல்பரிசோதனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் எல்லாம் உச்ச நீதிமன்ற வழகாட்டுதல்படி நடந்துள்ளது என் அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்னதால் வழக்கில் இரண்டாவது உடற்பரிசோதனை தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் அன்று மாலை 6.00 மணிக்கு மேல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் உள்ளூர் மக்கள், மற்றும் சில இயக்க உறுப்பினர்கள் கூடி பேசினார்கள். இதில் அவர் உச்ச நீதி மன்றம் சொன்ன 13 விதிகளும் பின்பற்றப்பட்டதால் உடலை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார். இதனை சிலர் 302 கொலை வழக்கு போடுவது பற்றி கேட்டுள்ளனர். இறுதியில் அவரின் நிர்பந்தத்தால் உடலை பெறுவது என மக்கள் முடிவு செய்துள்ளனர். மறுநாள் மஃரிப் தொழுகையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.வைகறை நிருபர் மாஜிஸ்ரேட் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்தார், மாஜிஸ்ரேட் சம்பவம் நடந்த எஸ்.ஐ.காளிதாஸ் அறையை பார்வையிட்ட போது அவரும் பார்த்தார் அப்போது அந்த அறையில் எந்த ஒரு சிறு சேதாரமோ,சிதறலோ, இரத்தக்கறையோ இல்லாமல் இருந்ததை பார்த்தார். இங்கு காவல்துறையினரால் தடயம் அழிக்கப்பட்டது தெளிவாகிறது. இன்னும் சையது ஒரு ரவுடி என்று காவல் துறை சொன்னதை பற்றி மக்களிடம் கேட்டபோது அதனை மக்கள் மறுத்தனர், இன்னும் சையது ஜெயலலிதா கைதை தொடர்ந்து எஸ்.பி பட்டிணத்தில் பஸ் எரிக்கப்பட்டபோது இவர் சென்று பலரை காப்பாற்றியுள்ளார்.

- இக்பால் & ரிஸ்வான்

Pin It