தமிழ்த்தேசியத்தின் தனிப்பெரும் பாவலராய்த் திகழ்பவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார். பெரியாரின் கவிதைப்போர் வாளாய்ச் சுற்றிச் சுழன்ற சுயமரியாதைச் சூறாவளி. தணல் நெருப்பாய் வெளிப்பட்ட தன்மான இயக்கச் சிந்தனைகளை அனல் நெருப்புத் தமிழில் அப்படியே வடித்தெடுத்த அரிமாத்தமிழன்

bharathidasan_315ஆரியப் பார்ப்பனியத்தின் அடிமைச்சகதியில் சிக்கி உழன்ற தமிழினத்தை நேரிய வழியில் மீட்டெடுத்த நிறைதொண்டின் பழமான தந்தை பெரியார், அந்த ஆரியப் பொய்களைக் கட்டுடைக்கும் கருதியல் போர்கருவியாகத் "திராவிடம்' என்னும் கருத்தியலை முன்னெடுத்தார். 1938 இல் தமிழ் மண்ணில் வெடித்த முதல் இந்திய எதிர்ப்புப் போரில், முன்னணிப் படை மறவராய்க் களமிறங்கிய பெரியார் முதன்முதலாய்த் "தமிழ்நாடு தமிழர்க்கே' என்கிற முழக்கத்தை முன்வைத்தார்.

1916 நவம்பர் 20 ஆம் நாள் தொடக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்நாளில் நீதிக்கட்சி என்று அழைக்கப்பெற்றது. 1920 முதல் 1936 வரை பதினாறு ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி வேலைவாய்ப்புகளில் மாபெரும் சாதனைகளைக் குவித்தது. 1937 தேர்தலில் தோற்ற நீதிக்கட்சியைப் பெரியார் தேற்றினார். 1938 ஆம் ஆண்டு நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் சிறையில் இருந்த நிலையிலேயே பெரியார் அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் கீழ்மைக்குக் காரணம் அவர்களிடையே இனவுணர்வு இல்லாமைதான். இவ்வுணர்வை ஏற்படுத்த அவர்களைக் குறிக்கும் ஓர் அடையாளச்சொல் தேவை என்று கருதிய பெரியார் "திராவிடர்' என்ற சொல்லைக் கையாள முற்பட்டார் "திராவிடர்' என்ற சொல் இந்தியர் என்ற சொல்லுக்கு எதிரான பொருளிலும் அமைந்தது. மேலும் "பார்ப்பனர் அல்லாதார்' என்ற சொல்லைப் புறந்தள்ளிய பெரியார் "நம்மைக் குறிக்கப் பார்ப்பனர் அல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லதோர் ஆக வேண்டும்?” என்று விளக்கம் தந்தார்.

பின் நாட்களில் "திராவிடம்' என்பதும் "தமிழகம்' என்பதும் ஒன்றே என்று பெரியார் அரசியல் நிலைப்பாடு எடுத்தார். பெரியாரின் கருத்துக்கு இசைவாகவே "திராவிடம்' என்பதும் "தமிழகம்' என்பதும் ஒன்றே எனப் பாவேந்தர் பாட்டிசைத்தார்.

மன்னும் தமிழே திராவிடம் என்று
திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை

திருத்தமிழம் எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்
திரமிளம், பிறகு திராவிடம் ஆனது
திராவிடம் இன்பத் தமிழின் திரிபன்றோ?

என்றெல்லாம் திராவிடர் மேன்மைப் பற்றி எழுதிப் பாவேந்தர் பெருமிதம் கொண்டார்.

திராவிடர் கழகத்தின் உடை மற்றும் கொடி ஆகியன பற்றிப் பெரியார் கொண்டிந்த கருத்தையே பாவேந்தரும் கொண்டிருந்தார்.

வைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும்
திராவிடர் மணிக்கொடி குறிக்கும்
வாழ்விருள் தவிர்ப்போம் தனிப்பெரும் புரட்சியை
வரவேற்றல் கொடியின் நோக்கம்

பெரியார் கொண்டிருந்த திராவிட நாட்டுப் பிரிவினைக் கோட்பாடும் பாவேந்தருக்கு உடன்படானதாகவே இருந்தது என்பதைப் பின்காணும் பாட்டு வரிகள் வெளிப்படுத்தும்.

பிறர்க்கிட மின்றித் திராவிட நாட்டைப்
பிரித்திட வேண்டும் இப்போதே – இதைப்
பின்னும் வடக்கர் சரக்கினை விற்கப்
பெருஞ்சந்தை ஆக்குதல் நன்றோ?

மீள்வது நோக்கம் – இந்த
மேன்மைத் திராவிடர் மீறுவதனின் நீடில்
மாள்வது நோக்கம் – இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்

1947 ஆகஸ்ட் 15 இல் வெள்ளையன் இந்நாட்டை விட்டு வெளியேறிய பின் மொழிவழி மாகாணக் கோரிக்கைகள் பல்வேறு பகுதிகளில் முகித்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசிய தென்னாட்டிலும் இந்த முழக்கங்கள் எதிரொலித்தன. திராவிடர் ஒற்றுமையை விரும்பிய பெரியார் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

“மொழிகளில் (சாதி, மத, இன, வேறுபாட்டு நிலை) அப்படிக் கொள்கையோ, திட்டமோ, அனுபவமோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியும் இல்லை. மொழியினால் பெருமை, சிறுமை, இலாப, நட்டம் ஒன்றுமில்லை. ஆதலால் இதைக் காரணம் காட்டிப் பிரித்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி : 2, பக்.723)

பெரியாரின் கருத்தையே பாரதிதாசனும் வழிமொழிகிறார் :

கேரளம் என்று பிரிப்பதும் – நாம்
கேடுற ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தமிழ்த்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே – அதைக்
கொய்திட வேண்டும். அண்ணே!

இப்படித் தென்னக மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய பெரியார் மற்றும் பாவேந்தரின் கருத்துகள் பின்னால் எப்படி மாற்றம் பெற்றன? கேரளத்தார் ஆதிக்கம் தலைகால் தெரியாமல் வளர்ந்து அது தமிழர்களின் உரிமைகளைக் காவு கொள்ளத் தொடங்கியதை உணர்ந்த பெரியார் மலையாளிகள் திராவிடத்திலிருந்து பிரிந்து ஒழிவதே நன்று என்று எழுதுகிறார்.

இதில் குறிப்பாகக் கூறவேண்டுமானால் மலையாளிகளின் தொல்லையோ மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரியமொழியையும் ஆரிய வருணாசிரம தருமத்தையும் ஆதரிக்கிறவர்கள். அதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளைப் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக் கொண்டு, பார்ப்பனரல்லாதவர்களுக்கு என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்குக் கொடுப்பதையே அவர்கள் தாரளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனர் அல்லாத பெரும்பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்படுகிறார்கள். முதலில் சில உதாரணங்கள் கூறுகிறேன். சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான சீப் செக்ரட்டரி திரு. இராமுண்ணிமேனன், சீப் என்ஜினியர் திரு. கேகேநம்பியார் இப்படியான நீண்ட மலையாள அதிகாரிகளின் பட்டியலாகச் செல்கிறது அந்த அறிக்கை – விடுதலை அறிக்கை 17.9.1954 (பெரியார் சிந்தனையாளன் பக். 1467

ஆந்திரம் மொழிவழி மாநிலமாகப் பிரிந்த பின்னர் அதனையும் பெரியார் வரவேற்றார்.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்துக்கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்துக் கொண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரம் பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால் இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதிவந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரியநேர்ந்துவிட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன். (விடுதலை அறிக்கை 17.9.1954 - பெரியார் சிந்தனையாளன் பக். 146)

பெரியாரின் கருத்தியலைப் பின்பற்றி பாவேந்தரும் பைந்தமிழ்நாட்டின் விடுதலைக்குப் போர் முரசும் ஒலிக்கிறார். இனப்பெயர் யாதெனக் கேட்டவர்க்குத் திராவிடன் எனத் தேனாய்த் இனிக்கச் சொன்னவரின் இப்போதைய நிலை என்ன?

"செந்தமிழா உன் நாட்டின் பேரென்ன செப்பென்றால்
இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்றுசொல்வான்
எந்தவகை இச்சேய் உருப்படுவான் என்தாயே!

என்று நாடென்றால் அஃது தமிழ்நாடு மட்டுமே என நயம்பட உரைப்பார்.

"அதுதான் என் ஆசை – தமிழ்
அன்னை அவள் முன்னைப் போலத்
தன்னைத்தானே ஆள வேண்டும்'

என்பதே அவர் ஆசையாக உள்ளது.

"கன்னடம் தெலுங்கு மலையாளம் களிதுளுவம்
முன்னடைந்து ......... மூவாது ........ முள்பகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான் இவ்வையத்தை ஆள்கஎனக்
கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே
 
எனக் கவிஞர் குயிலுக்கே கட்டளையிடுகிறார். அதுமட்டுமன்று. தமிழிசையின் இடத்தைத் தெலுங்கிசை தாழ்த்தியது கண்டு சினந்து பொங்கும் பாவேந்தர்

"தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள்! தமிழே பாடச்
செய்யுங்கள்! அதற்காகத் திரண்டெழுங்கள்
இலகுதமிழ் மொழியினிலே பாடல் இல்லை
என உரைத்தால், அறையுங்கள்'

என்பவர், திரைப்படத்துறையில் தெலுங்கர், கன்னடர், கேரளர் ஆதிக்கம் மிகுந்து போவதையும் கண்டிக்கிறார்.

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்
தெலுங்குக் கிங்கு நடிப்பெதற்காக?
வந்திடும் கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடுமோகலை அண்ணே? இங்கு
மாயும் படக்கலை அண்ணே

தமிழ்ப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெங்களூர் சென்றபோது அங்குக் கன்னட வெறியர்களால் இழிவு செய்யப்பட்டபோது கடுஞ்சீற்றம் கொண்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பெரியார் "திராவிட நாடு' கேட்டபோதும், "தமிழ்நாடு தமிழர்க்கே' என முழங்கிய போதும் அவருடைய உள்ளம் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மை விடுதலையைத்தான் அவாவி நின்றது. சாதியொழிந்த தமிழகம்தான் எப்போதும் எண்ணமாக இருந்தது. இன்று பெரியாரைக் கன்னடர் என்றும் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் காய்ந்த கன்னட இன வெறியர் என்றும் பலபேர் கழிசடைத் தனமாகப் பேசுகின்றனர், எழுதுகின்றனர் திராவிடம் பேசித் தமிழ்நாட்டையே சீரழித்த இனப்பகைவர் என்றும் அவர் பெயர்மேல் எச்சில் துப்புகின்றனர். தொண்ணூறு வயதைக் கடந்த நிலையிலும் தொண்டுக் கிழமாய் உழைத்த அவர் பணிகள் தமிழ் மக்கள் மேல் அண்டிய அழுக்குகளைக் கழுவத்தான் பயன்பட்டது என்பதை அறச்சிந்தனை கொண்ட அனைவரும் ஒப்புவார். ஆம், அவர் வழிவந்த பாவேந்தரும் அத்தகைவரே!

அவர்தான் பெரியார்
தமிழர்தவம் செய்த நன்கொடை
தன்மானம் பாயும் தலைமேடை
    – பாவேந்தர்

Pin It