மனித உறவுகள் எப்படி இருக்கின்றன, அதற்கு என்ன காரணம், அவை எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு சிறுகதை மிக ஆழமாகச் சொல்கிறது. அந்தக் கதையினுடைய பெயர் மேடு என்பது, அந்த நூலிலே இருக்கிற எல்லாக் கதைகளும் கொங்குப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. அவற்றைத் தொகுத்த ஆசிரியர் பெருமாள் முருகன், உள்ளே அவருடைய கதையையும் சேர்த்திருக்கிறார். அந்தக் கதையினுடைய பெயர் தான் மேடு.

பள்ளத்திலிருந்து மேட்டுப் பகுதியை நோக்கி மிதி வண்டியைத் தள்ளிக் கொண்டு ஒரு பெண்ணும், அவளுக்கு உதவியாய் இன்னொரு பெண்ணும், அந்த மிதி வண்டியிலே உட்கார்ந்து கொண்டு இரண்டு குழந்தைகளுமாக நடந்து போகிற நேரத்தில், அவர்களுக்குள் நடக்கிற உரையாடல் தான் கதை. அந்தச் சிறுகதைக்கு முன்னும் பின்னும் பிற செய்திகள் எதுவும் இல்லை.

ராமாயி என்கிற அருந்ததிய வகுப்பைச் சேர்ந்த உழைக்கிற பெண் ஒருத்தி, வெயில் தாளாமல் ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறாள். மிகக்கடுமையான வெயில், களைபறித்து... நாற்று நட்டு வேலை செய்து வியர்வை சொட்டச் சொட்டப் பாடுபட்டதற்குப் பிறகு ஏற்பட்ட களைப்பினால், தன்னை அறியாமல் உறங்கிப் போகிற பெண். அடடா நேரம் ஆகிவிட்டதே என்று எழுகிறாள்.

அப்போது தூரத்தில் ஒரு பெண் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறாள். அந்த வண்டியிலே பின்னாலே இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இந்த நேரத்திலே, இந்த இடத்திலே யாராக இருந்தால் என்ன? யாரோ ஒரு பெண் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருகிறது. இந்த மேட்டில் ஏற வேண்டும். நமக்கும் பேச்சுத் துணையாக ஆகும். அந்தப் பெண்ணுக்கும் உதவி செய்ததாக ஆகும் என்று எண்ணி அந்தப் பெண்ணை நோக்கி நடக்கிறாள். இவளே உழைத்துக் களைத்துப் போயிருக்கிற ஒரு பெண். ஆனாலும்கூட மேட்டில் மிதி வண்டியைத் தள்ளிப் போகிற இன்னொரு பெண்ணுக்கு உதவியாக இருக்கலாமே என்று தோன்றுகிறது.

அந்தப் பெண் யார் என்று தெரியவில்லை. தலைசீவிப் புதிதாக ஆடை அணிந்து, பார்த்தால் யாராவது வெளியூராக இருக்கும் என்று தோன்றுகிறது. பக்கத்திலே போய் அந்தப் பெண்ணைப் பார்த்த உடனே முகமெல்லாம் மலர்ந்து "சின்னக் காட்டுப் பெரிய பண்ணையார் மகள்தானே நீ!” என்று கேட்க, அவள் "ஆமா' என்கிறாள்... அதற்கு மேல் வேறொன்றும் சொல்லவில்லை. "அடடே, என்னைத் தெரியவில்லையா உனக்கு, நான் உங்க பண்ணைக்காட்டிலே வேலை செய்த ராமாயி. 10 வருசமா உங்க சாப்பாட்டுல இந்த உடம்ப வளத்துட்டேன்' என்கிறாள். அந்தப் பண்ணை இவள் உழைப்பால் வளர்ந்தது என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அந்தப் பெண் மேல்ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்திலே பிறந்தவள். இவளோ உழைக்கிற வர்க்கத்திலே தலித் குடும்பத்திலே பிறந்திருக்கிற பெண். இதுதான் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலே இருக்கிற வேறுபாடு. "பின்னாலே இருக்கிற பிள்ளைகள் இரண்டு பேரும் உன் பிள்ளைகளா' என்று கேட்கிற போது அவள் "உம்' என்று சொல்கிறாள். ராமாயிக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்னக் குழந்தையாக இருந்தபோது தான் தூக்கி வளர்த்த பொண்ணுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள். "அடடே இவ்வளவு பெரிய பொம்பளையா வளர்ந்து விட்டாயா' என்று தன்னுடைய சொந்த மகளையும் பேரன் பேத்தியையும் பார்த்த ஒரு மகிழ்ச்சியோடும் வாஞ்சையோடும் ராமாயி பேசுகிறாள். இரண்டு குழந்தைகளிலே ஒரு குழந்தைக்கு மொட்டை அடித்திருக்கிறது. உடனே அந்த மொட்டை தலையை வருடிக் கொடுக்கிறாள்.

மேட்டுப்பகுதி வந்து விடுகிறது. மேட்டுப்பகுதி வருகிறபோது அந்த மிதி வண்டியைக் கொஞ்சம் அழுத்தித் துன்பப்பட்டு அந்தப் பெண் மேலே தள்ளுகிறபோது. "மேடு கஸ்டம்தாம்மா, அதனால் தான் நான் ஓடிவந்தேன். தள்ளு... நானும் பின்னாலே இருந்து கொஞ்சம் தள்ளி விடுகிறேன்' என்றுபின்னாலே இருந்து அந்த மிதி வண்டியைத் தள்ளி விடுகிறாள். தள்ளுகிற போதும் ராமாயியால் பேசாமல் அதைச் செய்ய முடியவில்லை. பேசிக் கொண்டே இருக்கிறாள். "ஏம்மா இவ்வளவு வெயில் அடிக்கிறது. மொட்டை அத்திருக்கும் பிள்ளைக்கு ஒரு குல்லாய் வைக்கக்கூடாதா' என்று கேட்கிறாள். அவள் பதில் சொல்லவில்லை. ஆனாலும் ராமாயிக்குப் பொறுக்கவில்லை. மொட்டைத் தலையிலே இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே என்று தன்னுடைய முந்தானையை எடுத்து அந்தப் பிள்ளைக்கு ஒரு தலைப்பாகையாய் கட்டி விடுகிறாள். அதைப் பார்த்த உடனேயே அந்தப் பெண் சட்டென்று திரும்பி மொட்டைத் தலையின் மேலே போட்டிருக்கிற ராமாயினுடைய முந்தானையைக் கீழே தள்ளிவிட்டுத் தன் கைக்குட்டையை எடுத்துக் கட்டி விடுகிறாள். அதற்கும் ராமாயி கோபப்படவில்லை. "கைக்குட்டையை முதலிலேயே கட்டியிருக்கலாமே, பாவம் பிள்ளைக்குச் சூடு உரைக்கிறது' என்று சொல்கிறாள்.

மறுபடியும் பேசிக்கொண்ட போகிற போது ராமாயி கேட்கிறாள். "பெரிய பண்ணையார் இப்போது எப்படி இருக்கிறார்? அப்பவே அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியாக இல்லையே?, "இருக்கிறார்...' அந்தப் பெண்ணினுடைய பதில் அவ்வளவுத்தான். மறுபடியும் கேட்கிறாள், "அந்த பெரியம்மா எப்ப பார்த்தாலும் கால்வலி கால்வலி என்று இருப்பாங்களே, இப்போது எப்படி இருக்கிறது' என்று கேட்கிறாள். "பரவாயில்லை', என்பது அவளுடைய பதில்.

மறுபடியும் இரண்டு பேரும் அந்த மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் சிரித்துக் கொண்டே அந்தப் பெரியம்மாவை, ராமாயியைப் பார்த்துக் கொண்டே அந்த மிதி வண்டியிலே அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ அந்த மேட்டினுடைய பாதித் தூரத்திற்கு வந்திருக்கிறார்கள். ராமாயி தொடர்ந்து பேசுகிறாள். "இப்போது யார் பண்ணையைப் பார்த்துக் கொள்கிறார்? சின்னப் பண்ணையாரா?' என்றுகேட்கிறாள். ம் என்று அவள் பதில் சொல்கிறாள். "ஆமா நான் கேட்கவே மறந்துவிட்டேன் உங்க பெயர் என்னம்மா? ரொம்ப நாளாச்சு மறந்து போயிட்டேன் என்கிறபோது, "ரம்யா' என்கிறாள். ஆமா, ரம்யா நான் மறந்தே போயிட்டேன். முகம் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. பெயர் மறந்துவிட்டேன். உன் பொண்ணு பெயர் என்ன? "சுகன்யா', "சுகன்யாவா? நல்ல பெயர். உன் பெயர் மாதிரியே வைத்திருக்கிறாய்' என்று சொல்கிறாள்.

இவள். பேசிக் கொண்டே இருப்பதும், வாஞ்சையோடும், பாசத்தோடும், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களைப் பற்றி ஒவ்வொருவராய் விசாரிப்பதும், அவள் எதற்குமே பதில் சொல்லாமல் ஒரு வார்த்தையும், இரண்டு வார்த்தையும் சொல்வதுமாக அந்தப் பயணம் தொடர்கிறது. இரண்டு பேருக்கும் இடையிலே உரையாடுகிற கதைதான் அந்தக் கதை.

இப்போது அந்த மிதிவண்டித்யைத் தள்ளிக்கொண்டிருக்கிற பெண் முதல் முறையாக ராமாயியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறாள். இதுவரையில் ராமாயி கேட்ட கேள்விகளுக்கு அரைமனத்தோடும், ஆம் என்றும் இல்லை என்றும் ஒற்றைச் சொல்லிலும் விடை சொல்லிக் கொண்டிருந்தவள், முதல் முறையாக ஒன்றைக் கேட்கிறாள். "பண்ணைக்கு வேலை செய்ய ஆள் கிடைக்குமா' என்று கேட்கிறாள். "என்ன ஆள் வேண்டும் சித்தாளா? பெரியாளா?' என்று ராமாயி கேட்க...' ஒரு சித்தாள் தான் வேண்டும்', எங்கம்மா கிடைக்குது சித்தாள். இப்பல்லாம் அதது நாட்டு நடப்பு என்று போகிறது. ஆள் கிடைப்பதில்லை' என்கிறாள். ராமாயி. இது ஒன்றுதான் அந்தப் பெண் இவளைப் பார்த்துக் கெட்டது. அதுவும் அவளுக்கு வேலைக்கு ஆள் தேவை என்பதற்காக, வேறு எந்த உரையாடலிலும் பங்கெடுக்கவில்லை. அந்த மேட்டுப் பகுதியின் உச்சிக்கு வருகிறபோது இன்னும் கொஞ்சம் தூரம்தான் கஷ்டப்படாதே நான் தள்ளுகிறேன் என்று அந்தப் பெண்ணுக்குக் கை வலிக்கக்கூடாதே என்று ராமாயி கவலைப்படுகிறாள். மெல்ல மேட்டுப் பகுதிக்குப் போய்ச் சேர்ந்ததற்குப் பிறகு, திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த மிதிவண்டியைக் கொஞ்சம் சாய்த்து காலை அந்தப் பக்கத்திலே போட்டு இருக்கையிலே ஏறி அமர்ந்த ரம்யா, ஒன்றும் சொல்லாமல் அந்த மிதி வண்டியை ஓட்டிக் கொண்டே போகிறாள்.

அப்போதும் ராமாயில இங்கிருந்து சொல்கிறாள், "பார்த்து மெதுவா போகண்ணு, பிள்ளைகள் எல்லாம் பின்னாலே இருக்குமெதுவாப் போ!' திரும்பி அவள் எதுவும் சொல்லவில்லை... போய் வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை.. அவள் போய்க் கொண்டே இருக்கிறாள்.

ராமாயி தொடக்கத்திலே இருந்து அவள் குடும்பத்திலே இருக்கிற ஒவ்வொருவர் பற்றியும் நலம் விசாரிக்கிறாள். ஆனால் அந்தப் பெண் ராமாயியைப் பார்த்து எந்தவிதமான நலன் விசாரணையும் செய்யவில்லை. எந்தக் கேள்வியும் இல்லை. வேலைக்கு ஆள் கிடைக்குமா என்று கேட்ட கேள்வியைத் தவிர, மற்றவையெல்லாம், இவள் கேட்டதற்கு ஒற்றைச் சொல்லிலும் ஒற்றை வரியிலும் விடை சொன்னதுதான். பிறகு அந்த மேட்டுப் பகுதிக்கு வந்ததற்குப் பிறகு, இந்த வெளியிலும் சிரமப்பட்டுப் பின்னாலே இருந்து தள்ளிக்கொண்டு வந்தாளே என்கிற அந்த அன்புப் பரிமாற்றம் கூட இல்லை. மேட்டுப் பகுதிக்கு வந்த உடனே அந்த மிதிவண்டி போய்க்கொண்டே இருக்கிறது.

ராமாயிக்கு அப்பவும் இப்படிப் போகிறாளே என்று தோன்றவில்லை. பார்த்துப் போம்மா பிள்ளைகள் பின்னாடி இருக்கு என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இந்த ஏழைப் பெண்ணுக்கு. அவ்வளவுதான் இந்தக் கதை. இது இரண்டு பேருக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் மட்டுமன்று இரண்டு பேருக்கும் இடையே சமூக உறவையும் காட்டுகிற நிகழ்ச்சி.

இரண்டு பேருக்கும் இடையிலே எது நிற்கிறது என்றால் மிகப்பெரிய சுவராக அந்தச் சாதிதான் நிற்கிறது என்பதை அந்தக் கதை ஆசிரியர் எந்த இடத்திலேயேயும் சொல்லவில்லை. ஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் புரிகிறது. சாதி என்பது எவ்வளவு கொடிய நஞ்சு என்பது.

Pin It