தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுவோம் என்ற உறுதியோடு, எண்ணத்திலும் செயலிலும் நீக்கமற ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த மேடையில் அமர்ந்து இருக்கின்ற, பல்வேறு அமைப்புகளின் மதிப்புமிக்க தலைவர்களே, அன்புச் சகோதரிகளே, செய்தியாளர்களே வணக்கம்.

"மாண்டொழியட்டும் மரண தண்டனை' என்ற இலக்கை ஈடேறச் செய்வதற்காக, மக்கள் கருத்தை ஒருமுகப்படுத்துகின்ற அரும்பணியில் ஈடுபட்டு இருக்கின்ற, அனைத்து இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற, இப்பயன் தரும் மாநாட்டின் இரண்டாம் அமர்வில், கருத்து உரை ஆற்றுகின்ற வாய்ப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள், மனித உரிமைச் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டபோது, அன்றைக்கு மரண தண்டணையை ரத்துச் செய்து இருந்தவை வெறும் எட்டு நாடுகள் தான். அதற்கு 29 ஆண்டுகளுக்குபிறகு, 1977 இல் மரண தண்டனையை ஒழித்த நாடுகள் வெறும் 16 தான். 2007 இல் அந்த எண்ணிக்கை 90 ஆனது. இன்று இந்தப் புவியின் பெரும்பகுதியில் உலகத்தில் 137 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன.

உச்சநீதிமன்றத்தில் நீதி அரசராகப் பணியாற்றிய ஒருவர் இதுகுறித்துச் சொல்லுகிறார். உண்மையில் ஒரு குற்றத்தைச் செய்தவன், நிரபராதி என்று கருதப்பட்டு விடுவிக்கப்படுவான். குற்றம் புரியாத நிரபராதி, குற்றவாளி என்று தண்டிக்கப்படுவான். இதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வழக்கை உணர்ச்சிமயமானதாக ஆக்குவதால், அதன் விளைவாகக் கூட தண்டனை வரலாம். ஒரு கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, அவர்கள் சிலரைத் தண்டிக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டால், அப்போது நீதிபதி மரண தண்டனை விதிக்க வாய்ப்பு இருக்கின்றது.

அது இப்போது அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்று இருக்கின்றது. கூச்சல் எழுப்பிய கூட்டத்தைத் திருப்தி செய்வதற்காகத் தீர்ப்பு வழங்கினான் பிலாத்து மன்னன். மரண தண்டனைக்கு உள்ளானவர்தான் நாசரேத்தின் இயசு கிறிஸ்து.

நம்மை இன்றைக்கு நேரடியாகப் பாதித்து இருக்கின்ற வழக்குகளுள் ஒன்று.இந்த மூவருடைய வழக்கு. ஆனால், திருப்பெரும்புதூர் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமே தவிர, நாட்டுக்கு எதிரான குற்றம் அல்ல என்று நீதிபதிகளே தீர்ப்பு அளித்து இருக்கின்றார்கள்.

1991 சூன் 11 ஆம் நாள் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தூக்குமர நிழலிடில் இருந்து கொண்டு எழுதி இருக்கின்ற மடல் நெஞ்சைப் பிளக்கும். அதை நாங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட விழாவில், பேராசிரியர்ஜெக்மோகன் அவர்கள், தில்லியில் வந்து பங்கு ஏற்றார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய ஏ.பி. பரதன் அவர்களும் வந்து பங்கு ஏற்று நூலை வெளியிட்டார்கள்.

21 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கின்றார்கள். இங்கே மணியரசன் அருமையாக ஒரு கேள்வியை எழுப்பினார். தடா வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. நேராக, உச்சநீதிமன்றத்துக்குத் தான் செல்ல வேண்டும். சித்திரவதை செய்து போலிஸ் அதிகாரிகள் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களைக் கொண்டு 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்கள். இந்த வழக்கில், அரசுத் தரப்புச் சாட்சியாக நானும் கூண்டில் நிறுத்தப்பட்டேன். அய்ந்து நாள்கள் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். கூண்டில் ஏற்றிய 15 நிமிடங்களிலேயே அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்னைப் பிறழ் சாட்சியாக அறிவிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

அந்த நீதிமன்றத்தில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டøனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு. அதற்காக அண்ணன் பழ. நெடுமாறன் பெரு முயற்சி எடுத்தார். வழக்கறிஞர் நடராஜன் வாதாடினார். 19 பேர்களுக்கு விடுதலை, நான்கு பேருக்குத் தூக்கு, மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை என்று உச்சநீதிமன்றம் விடுவித்து விட்டது. அப்படியானால், 26 பேருக்குமே தூக்குத் தண்டனை என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தால், இந்த 19 பேர்களுடைய கதி என்ன? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

98 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் நாள், தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 99 மே 11 இல் உச்சநீதிமன்றம், 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. அவர்கள் போட்ட மறு ஆய்வு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து. தமிழக ஆளுநருக்குக் கருணை மனு போடுகிறார்கள். பத்தே நாள்களில், நான்கு பேருடைய கருணை மனுக்களையும் நிராகரிக்கின்றார் ஆளுநர். இன்றைக்குச் சென்னை உயர்நீதி நீதிபதியாக இருக்கின்ற சந்துரு அவர்கள். அதை எதிர்த்து வாதாடினார். நீதி அரசர் கோவிந்தராஜன் அவர்களுடைய மன்றத்தில் இந்த வழக்கு வந்தது. "ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லாது; தமிழக அமைச்சரவை எடுத்த முடிவைத்தான் ஆளுநர் செயல்படுத்த வேண்டுமே தவிர, ஆளுநருக்கு இதில் தனி அதிகாரம் கிடையாது' என்று தீர்ப்பு அளித்தார்.

அதற்குப்பிறகு, கலைஞர் கருணாநிதி அவர்களுடைய அமைச்சரவை கூடி முடிவு எடுத்தது. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம்தேதி, இதில் முதலாவதாக உள்ள "நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனையாக ஆக்கிவிடலாம். மற்ற மூவருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றலாம்' என்று முடிவு செய்தது. இதன்பிறகு, 25 ஆம் தேதி ஆளுநர் முடிவு எடுக்கிறார். நளினியின் மரண தண்டனைக் குறைக்கப்படுகிறது. மற்ற மூவருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, இந்த மூவருடைய கருணை மனுக்களை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள். 1998 இல் இருந்து கணக்கு எடுத்துப் பாருங்கள் 15 ஆண்டுகளாக மரணக் கொட்டடியில் இருக்கின்றார்கள்.

அவர்களை விசாரித்தபோது எவ்வளவு சித்திரவதைகள்? ஒன்றா, இரண்டா? கைது செய்து, எட்டு நாள்களுக்குப் பிறகுதான், நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துகின்றார்கள்.அந்த எட்டு நாள்களும் சித்திரவதைகள்தான். நீராட அனுமதி இல்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லுகின்ற போதுகூட கையில் விலங்கு, உடைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, கொட்டடிக்கு உள்ளே போட்டு அடைத்து, அங்கே தண்ணீரை ஊற்றிவிட்டு, தூக்கம் வருகின்ற வேளையிலும் அடித்து உதைத்துத் துன்புறுத்தித் தூங்க விடாமல் செய்து இப்படி எவ்வளவு சித்திரவதைகள், உடம்பையே பிய்க்கின்ற அளவுக்கு, 180 டிகிரிக்கு இரண்டு கால்களையும் விரித்து இழுத்து இருக்கின்றார்கள். இரும்புக் குழாய்களைக் கொண்டு அடித்து இருக்கின்றார்கள். நகக் கண்களிலே ஊசியை ஏற்றி இருக்கின்றார்கள். பேரறிவாளன் இரண்டு பேட்டரி செல் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். அவ்வளவுதான். என்ன ஏது என்று தெரியாது. அந்த பேட்டரி செல் வாங்கியதற்காக, பெட்டிக்கடைக்காரன் ரசீது கொடுத்தானாம். அதை, பேரறிவாளன் சட்டைப் பையில் வைத்து இருந்தானாம். என்ன திறமையான பொய். இனிமேல் வழக்கின் உள்ளே உச்சநீதிமன்றம் செல்ல முடியாது. அது முடிந்துவிட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திலே கூட்டத்தோடு இருந்ததாகச் சொல்லப்படுகின்ற நளினியைத் தவிர, சம்பவ இடத்திலே இருந்த எல்லோரும் இறந்து போனர்கள். இன்றைக்குத் தூக்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த மூவரும் சம்பவ இடத்திலும் கிடையாது. அவர்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எந்தத் தவறும் புரியாமலேயே அவர்கள் இத்தனை ஆண்டுகளாகத் துன்பத்தை அனுபவித்து விட்டார்கள். இந்த வேதனையில் இருந்து இவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் செங்கொடி தன்னை மாய்த்துக் கொண்டாள். முத்துக்குமார் சென்ற பாதையிலே தணலுக்குத் தன்னைத்தந்து விட்டாள் ஆகஸ்ட் 28 ஆம் நாள்.

இந்த வழக்கை, சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கக்கூடாது என்று மத்திய அரசைத் தலைமை ஏற்று நடத்துகின்ற காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டின் பேரில், ஒரு அநாமதேயப் பேர்வழியின் பெயரில் ஒரு வழக்கைத் தொடுத்தார்கள். ஈவு இரக்கம் இன்றி இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு, மகிந்தனுக்கு ஆயுதங்களையும் அனைத்து உதவிகளையும் கொடுத்து, தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான மத்திய அரசும் அந்தக் கட்சித் தலைமை தான் இதற்குப் பின்னணி.

பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்தார்கள். சாந்தன், முருகன், பேரறிவாளன் கழுத்தை மரணக்கயிறு இறுக்கிவிடுமோ என்ற வேதனை படர்ந்த வேளையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் திரண்டு இருந்தார்கள். அமைதி, அமைதி, அமைதி, மூச்சுக்காற்று விட்டாலும் அரங்கம் முழுமையும் கேட்கின்ற அளவுக்கு அமைதி. இதைவிட வேறு என்ன வேண்டும்? குஜராத் முதல் அமைச்சருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துவிட்டது என்று, உச்சநீதிமன்ற வளாகத்துக்கு உள்ளேயே வெடிகளை வெடித்துக் கொண்டாடினார்களே? இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை என்று தமிழக அரசின் வழக்குரைஞரும் தன் கருத்தைப் பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலே அமைதியான சூழ்நிலை இல்லை என்பது அப்பட்டமான பொய் அல்லவா? இந்த வழக்கிலே ராம் ஜெத்மலானி வாதாடினார். உச்சநீதிமன்ற நீதி அரசர்கள், இந்த வழக்கு குறித்து, நாடு முழுமையும் இருக்கின்ற மரண தண்டனைக் கைதிகள் எல்லோரும் மேல் முறையீடு செய்ய வசதி அற்றவர்கள் தானே, நீங்கள் அமிகஸ் கியூரியாக, இந்த நீதிமன்றத்துக்கு நண்பனாக இந்த வழக்கிலே செயல்படலாம் என்று அவரையும் அந்தி அர்ஜூனாவையும் கேட்டுக் கொண்டார்கள்.

மரண தண்டனை கூடாது என்பதற்கான வாதங்களை, பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார் ராம் ஜெத்மலானி, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தாலே அவர்களைத் தூக்கில் போடக்கூடாது என்று நீதிபதி சின்னப்ப ரெட்டி வழங்கிய தீர்ப்பு. அதனை மறுத்து வந்த அடுத்த வழக்கின் தீர்ப்பு, இப்படிப் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் அலசப்பட்டு மணிக்கணக்கில், நாள் கணக்கில் எண்ணற்ற முறை வாதாடினார்கள். ஒவ்வொரு முறையும் நான் தில்லிக்குச் சென்று கலந்து கொண்டு இருக்கின்றேன். ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு பதிவு அன்று வாக்கு அளிக்க முடியாமல் முதல் நாளே டெல்லிக்குச் சென்றேன்.

இப்போது, இந்த வழக்கு, புல்லர் வழக்கு, மகேந்திரநாத் தாஸ் வழக்கு ஆகியவற்றில், இரு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து விட்டன. தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றோம். என்ன கருத்து வரப்போகின்றது என்பதை எதிர்பார்த்து இருக்கின்றோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த வழக்கையும் நாங்களே விசாரிக்கின்றோம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. சூலை 10 ஆம் நாள் இந்த மூவரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம்.

இந்த மரண தண்டனை எதிர்ப்பு மாநாட்டை, தேவையான நேரத்தில் கூட்டி இருக்கின்றார்கள். நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடும். நாசரேத்திலே ஏசுக்கு அப்படித்தான் தண்டனை விதிக்கப்பட்டது என்று தீர்ப்பு எழுதியவர் யார் தெரியுமா? இந்த மூவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகளுள் ஒருவரான கே.டி. தாமஸ் அவர்கள்தான். அது மட்டும் அல்ல, 1940 முதல் 50 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு இருந்தது. அப்போது குற்றங்கள் குறைவு. மீண்டும் மரண தண்டனை வந்ததற்குப் பிறகு, குற்றங்கள் அதிகரித்தன.

ஆகவே, மரண தண்டனை வேண்டும் என்ற வாதம் அடிப்பட்டுப் போய்விடும். மரண தண்டனை என்பது, நீதிமன்றங்கள் செய்கின்ற கொலை. யார் சொல்லுகிறார்? நீதி அரசர் பகவதி சொல்லுகிறார். அத்தகைய மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பரப்புவோம். கூடாது மரண

தண்டனை. மாண்டொழிக மரண தண்டனை. அகற்றுக தூக்குத் தண்டணையை!

(அனைத்திந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம், தமிழ்நாடு சார்பில் 2.6.2012 அன்று சென்னையில் நடைபெற்ற மரண தண்டனை எதிர்ப்பு மாநாட்டில் வைகோ ஆற்றிய உரையில் ஒரு பகுதி).

Pin It