அடுத்த நிதியாண்டு (1965 – 66)க்குரிய வரவு–செலவு (பட்ஜெட்)த் திட்டங்கள் மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசுகள் சார்பிலும் வெளியாகிவிட்டன. இவை பற்றிய ஆளுங்கட்சியாரின் பேச்சுகளும், எதிர்க்கட்சியாரின் கண்டனங்களும், மந்திரிமார்கள் விடைகளும் சுருக்கமாக வெளிவந்துவிட்டன.

இவற்றில் எங்குத் தேடிப் பார்த்தாலும் சமுதாயக் கேடுகளை ஒழிக்கும் முயற்சி, ஆசை, நோக்கம், இருப்பதாகத் தெரியவேயில்லை. இதில் வியப்புமில்லை; ஏமாற்றமுமில்லை.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தல், வாக்குப்பெறும் வழி, வெற்றிப் பாதையின் தொலைவு, பதவி நாற்காலியின் பெருமை – ஆகிய நினைவுகள் மட்டுந்தான் இருக்கும். இவற்றைத் தவிர, மக்கள் ஒற்றுமைக்கும், தன்னம்பிக்கைக்கும், நல்வாழ்க்கைக்கும் இடையூறாக உள்ள சாதிகள், மதவெறி நடத்தைகள், மூடநம்பிக்கைகள் – ஆகியவற்றை ஒழிப்பதோ, குறைப்பதோ முக்கியம் என்ற எண்ணமே இருக்காது; இருக்க முடியாது.

இதை உணர்ந்துதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, அரசப் பதவியைத் துறந்துவிட்டுச் சமுதாயப் புரட்சி முயற்சியில் இறங்கி அருந்தொண்டாற்றினார் புத்தர். அம்மாதிரி தொண்டாற்றுவதற்கு இன்று தலைவருமில்லை, தொண்டருமில்லை.

நாட்டில் கல்வி வளர்ந்துவிட்டால் போதும்; அறிவு வளர்ந்து விடும், மடமை ஒழிந்துவிடும், சாதி அழிந்துவிடும் – என்றெல்லாம் பேசுவார்கள் சிலர்.

இதோ, இவ்வாரம் மயிலாப்பூரில் திருவிழா நடைபெற்றது. இறுதி விழாவாக அறுபத்து மூவர் விழாவும் நடைபெற்றிருக்கிறது. தேரும், தெப்பமும் பிறவும் இங்கு மட்டுமன்று; பல ஊர்களில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. அடுத்த மூன்று மாத காலமும் விவசாய உற்பத்தி வருமான காலமாதலால் ஊர்தோறும் கோயில் திருவிழாக்கள் தனிச் சிறப்புடன் நடந்து கொண்டேயிருக்கும்.

இவற்றால் எத்தனை லட்ச ரூபாய் மக்களின் பணம் பாழாகிறது என்பது அரசியல்வாதிகள் அறியாததல்ல. இவற்றால் அந்த நேரப்பொழுதுபோக்குத் தவிர, இதுவரையில் மக்களின் ஒழுக்கமோ, ஒழுங்கு முறையோ, இம்மியளவேனும் சீர்பட்டதுண்டா? இந்நாட்டின் உற்பத்தியோ, மக்களின் ஒற்றுமையோ இவற்றால் கடுகளவேனும் வளர்ந்திருப்பதாகக் கூற முடியுமா? அப்படியிருந்தும் இவற்றின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதும், கூட்டம் பெருகிக் கொண்டிருப்பதும் எதனால்? இவற்றிலுள்ள பொய்ம்மையையும், ஏமாற்றையும், மடமையையும் – பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு ஆள் இல்லை; ஏடுகள் இல்லை என்பதுதானே காரணம்?

சங்கராச்சாரியார் பல்லக்கில் ஏறி ஊர் ஊராகப் பிரசாரம் செய்கிறார். திரு. கிருபானந்தவாரியாரது புராணப் பிரசாரக் கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் எந்தத் தலைவருக்கும் வராத அளவுக்குக் கும்பல் கும்பலாகச் செல்கின்றனர்.

இராமாயண – பாரத பிரச்சாரம் நாற்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த மாதிரி, அதைவிடச் சிறப்பாக, பெரிய பெரிய நகரங்களில் நடந்து கொண்டேயிருக்கிறது.

பழைய கோயில்கள் பொது மக்கள் நன்கொடை மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

வானொலியில் மணி தோறும் பேச்சு, பாட்டு, நாடகம் இவை யாவும் கடவுள் – மதம் பற்றியே நடந்து கொண்டிருப்பதைக் கேட்கிறோம்.

உத்தியோகம், படிப்பு, திருமணம் – முதலிய ஒவ்வொரு துறையிலும் சாதி வெறி தலை தூக்கி நிற்பதைக் காண்கிறோம்.

மேற்கண்ட இவ்வளவிலும் ஈடுபடுகிறவர்கள் யாவருமே படிக்காதவர்களா? தற்குறிகளா?

கல்வி பெருகினால் மட்டும் போதா; பகுத்தறிவுக் கல்வி பரவினால்தான் மேற்கண்ட கேடுகளெல்லாம் ஒழியும் என்பதற்கு இவைகளெல்லாம் எடுத்துக் காட்டுகளல்லவா?

"மதப்பண்டிகை' என்ற பெயரால் மடமையை வளர்த்துக் கொண்டிருப்பவர்களில் படித்தவர்கள் இல்லையா? இவர்கள் படிப்பு இந்தத் துறையில் ஏதாவது பயனளித்திருப்பதாகக் கூற முடியுமா?

ஆகவே படிப்பு வேறு பகுத்தறிவு வேறு என்பதும், கல்வி பரவி விட்டால் போதும், சாதி ஒழிந்துவிடும், மதம் ஒழிந்துவிடும், மடமை அகன்று விடும் – என்றெல்லாம் கூறுவது வெறும் ஏமாற்றுப் பேச்சு, அல்லது கையாலாகாத பகட்டுரை என்பது தெரியவில்லையா?

மக்களைச் சோம்பேறிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், தன் முயற்சியில் நம்பிக்கையற்றவர்களாகவும் ஆக்கி வருகின்ற சோதிடம், குதிரைப் பந்தயம் போன்ற தீமைகள் நாட்டில் பெருகிக் கொண்டேயிருப்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா?

இவற்றையெல்லாம் அரசாங்க உத்தரவு, அல்லது சட்டம் மூலம் தடுத்து நிறுத்தக் கூடாதா? இவை பற்றி மாற்றுக் கட்சிக்காரர்கள் யாராவது பேசுகிறார்களா? சட்டமன்றங்களில் பேச்சு மூச்சு உண்டா?

சாதி ஒழிவதற்குக் கலப்பு மணம் ஒன்றுதான் வழி என்கிறார்களே! அதை ஊக்கப்படுத்துவதற்காகவாவது அரசாங்கத்திடம் திட்டமிருக்கிறதா? இதற்காக ஏன் ஒரு கோடி ரூபாயாவது ஒதுக்கக் கூடாது?

எனவே, சமுதாயப் பிணிகளை ஒழிப்பதில் அரசாங்கத்துக்கும் அக்கறையில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் கவலையில்லை என்பது விளங்கவில்லையா?

இந்நிலையில் அரசியலில் ஈடுபடாத, நேரடித் தொடர்பு கொள்ளாத, சமுதாய ஊழியர்கள், கட்சி சார்பற்றவர்கள் – (அல்லது பல கட்சிகளிலும் உள்ளவர்கள்) ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டாமா?

இந்நாட்டின் செல்வமும் கல்வியும் மட்டும் பெருகினால் போதாது; பகுத்தறிவும், செல்வத்தைச் செலவிடும் நல்வழியும் உணர்த்தப்பட வேண்டாமா? இப்பணியில் வறுமையை அணைத்துக் கொண்டு ஈடுபட்டுள்ள சுயமரியாதை இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டாமா? இந்த இயக்கமும் இல்லாவிடில் இதுபற்றிக் கேட்பதற்குக் கூட இன்று தமிழகத்தில் யாருமில்லையே!

("அறிவுப்பாதை' – 19.3.1965)

Pin It