kuthoosi gurusamy 263மந்திரி வேலையென்றால் அவ்வளவு சுளுவானதல்ல. பழைய காலத்து மந்திரிகள் அவ்வளவு புத்திசாலிகள் அல்லவென்பதே என் எண்ணம்! இப்படிப் பச்சையாக எழுதுவதற்காக நீங்கள் வருத்தப்பட்டாலும் சரி! உண்மையை நான் மறைத்து வைக்கத் தயாராயில்லை! பழைய மந்திரிகளெல்லோரும் இன்றைய மந்திரிகளை விட மூன்று மடங்கு அதிகமான சம்பளம் வாங்கினார்களே!

யாராவது காலணா மீத்திருப்பார்களா? 5-6 பேர் கடனாளிகளாகக் கூட ஆனார்கள்! எனக்கல்லவோ தெரியும், சிலர் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தார்கள் என்பது? அப்படியாவது பணத்தை வாரி இறைத்து அவர்களை அவ்வளவு நாணயமாக இருக்கும்படி யார் சொன்னது? நான் கேட்கிறேன்!

சம்பளத்தை அப்படியே மிச்சம் பிடிக்கத் தெரிந்த மந்திரிதான் கெட்டிக்காரர்! (கிம்பளம் வாங்கத் தெரிந்தவர்களைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது! அவர்கள் மனிதர்களேயல்ல! அதாவது, தேவர்கள்!)

உதாரணமாக, தம் சொந்த வேலையாக ஏதோ ஒரு ஊருக்குப் போக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த ஊரில், அல்லது அதற்குப் பக்கத்துக் கிராமத்தில் ஏதாவதொரு விழாவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

10-12 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டவேண்டிய ஏதாவதொரு கட்டடத்துக்கு அஸ்திவாரம் கல் நாட்டலாம்! அல்லது 2-3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிந்து போன ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்கலாம்!

அல்லது வ. உ. சி. படம், நேரு படம், படேல் படம் - என்று ஏதாவதொரு படத்தை எங்கேயாவது ஒரு இடத்தில் திறந்து வைக்கலாம்!
அல்லது ஏதாவதொரு வாய்க்கால் பாலத்தைத் திறந்து வைக்கலாம்!

அல்லது ஒரு புது மண் ரோடுக்கு மைல் கல் நாட்டலாம்! (அல்லது பழைய மைல் கல்லில் புதிதாக எழுதி அதைத் திறந்து வைக்கலாம்!) 

அல்லது ஒரு பெண் பள்ளிக்கூடத்தின் கோலாட்டக் கொண்டாட்டத்துக்குத் தலைமை வகிக்கலாம்!

அல்லது கிராமத்துப் பள்ளங்களில் மண்ணை வாரிக்கொட்டி மூடுவதைத் துவக்கி வைக்கலாம். (அதாவது, திறப்பு விழாவைப் போல இது மூடு விழா!) அல்லது சப்பாத்திகளை வெட்டுகின்ற விழாவுக்குத் தலைமை வகிக்கலாம்! (அதாவது வெட்டு விழா!)

அல்லது, அரச மரத்தடிப் பிள்ளையாருக்குக் கதர் மாலை போடும் விழா என்ற ஒன்றைப் புதிதாகத் துவக்கலாம்! (சென்னையில் ஒரு மந்திரி திருப்பதிக் குடையைத் திறந்து வைத்தார்! குடையை அவரால் திறக்க முடியாது! ஆதலால் குடைத் திறப்பு விழாவைத் திறந்து வைத்தார்!)

- இவைகளைப் போல் எத்தனையோ உண்டாக்கிக் கொள்ளலாம், மந்திரிகள் மனம் வைத்தால்!

இதில் என்ன லாபமென்றால், சர்க்கார் செலவிலேயே நாடு முழுவதையும் சுற்றிவிடலாம்! சொந்த வேலைகளையும் அப்படியே கவனித்துக் கொள்ளலாம்!

ஸ்தல ஸ்தாபன மந்திரி காசிக்குப் போக ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! உடனே என்ன செய்யவேண்டும், தெரியுமா? காசி! முனிசிபாலிடியார் எப்படி விபசார விடுதிகளை விஸ்வநாதர் சாட்சியாக வெற்றிகரமாக நடத்தி, வரி வசூல் செய்து வருகிறார்கள் என்பதை நேரில் கண்டு கலந்து (விபசாரிகளையல்ல! வரி விஷயத்தை) வருவதற்காக - என்று கூறிவிட்டுப் புறப்பட வேண்டியதுதானே!

எல்லா இலாகா மந்திரிகளும் இதே போலச் செய்யலாம்!

இதில் ஏதாவது சந்தேகமோ, கூச்சமோ இருந்தால் கனம் ராஜாஜி அவர்களைப் போன்ற பெரிய டில்லி மந்திரிகளைப் பார்த்தால் தெரிகிறது!

கீழ்ப்பாக்கம் திருமணத்திற்காக டெல்லியிலிருந்து ஒருமுறை வந்தாரல்லவா?

திருவண்ணாமலை பாதாள லிங்கக் குகையை (மூடியிருந்ததை)த் திறந்து வைப்பதற்காக ஒருமுறை வந்தாரல்லவா?

திருப்பதியில் நந்தவனத்தைத் திறப்பதற்காக ஒருமுறை வந்தார் அல்லவா?

இதோ, இம்மாதம் 22-ந் தேதி மீண்டும் வரப்போகிறார் எதற்காகத் தெரியுமா?

திருவையாற்றில் நடைபெறப் போகும் தியாகராஜ ஆராதனை மகோத்சவத்தில் கலந்து கொள்வதற்காக!

- குத்தூசி குருசாமி (11-1-51)

நன்றி: வாலாசா வல்லவன்

 

Pin It