முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு மத்திய காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்டிருந்த 4.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறது ஆந்திர உயர் நீதிமன்றம். இதற்கு மத்திய காங்கிரஸ் அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆந்திரப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணய்யா என்பவரும் இன்னும் பலரும், சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தனித் தனியாக தாக்கல் செய்த மனுவை விசாரித்துதான் தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.

இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு காரணமாக, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், சிறுபான்மையினருக்கான சிறப்புச் சலுகை பெறும் அளவிற்கு முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

4.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு அறிவித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது என குரலெழுப்பியது. இன்றுவரை பிரவீன் தொகாடியா போன்றவர்கள் இந்தக் கருத்தை முன்னிலைப்படுத்தித்தான் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லி கூப்பாடு போட்டு வரு கிறார்கள்.

பாஜக எதிர்ப்பு தெரிவித்தபோதே... முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களின் பின் தங்கிய சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் தான் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று மத்திய அரசு பதிலளித்தது.

இதே பதிலை ஆதாரத்துடன் ஆந்திர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியது காங்கிரஸ் அரசின் குற்றம்தான்.

ஆந்திர உயர் நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகை என்ற வகையில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆதாரங்களையோ, நியாயங்களையோ மத்திய அரசு முன் வைக்கவில்லை... என்று தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “அரசியல் அமைப்பின்படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்தது சரிதான்...” என்று கூறியுள்ளதோடு, “மத்திய அட்டார்னி ஜெனரலுடன் விவாதித்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவினை தாக்கல் செய்வோம்...” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, கடந்த ஜனவரி 1, 2012ல் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தபோதே, சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் முஸ்லிம் மக்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் கமிஷனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்திருக்கிறது; அதன் அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியது.

உத்திரப் பிரதேச தேர்தலை கவனத்தில் கொண்டு அவசர அவசரமாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இல்லை என்ற போதும் மத்திய அரசின் இந்த முயற்சி குறித்து முஸ்லிம்கள் சிறிய அளவில் திருப்தி அடைந்தனர்.

4.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கிய மத்திய அரசு அதை முஸ்லிம்களுக்காக மட்டுமல்லாது சீக்கியர்கள், பார்ஸிகள், சௌராஸ்டிரர்கள், கிறிஸ்தவர்கள் என ஏனைய சிறுபான்மை சமூகத்தையும் இந்த 4.5க்குள் இணைத்ததை முஸ்லிம்கள் விரும்பவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடின் பலன் கிடைக்காது என்றே அவர்கள் கருதினர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 27 சதவீதத்திற்குள் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டைத் தான் உள் ஒதுக்கீடாக பிரித்துக் கொடுத்தது மத்திய அரசு. இதையும் கூட தக்க வைக்க முடியாமல் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கை பிசைந்து நிற்கிறது மத்திய அரசு.

அட்டார்னி ஜெனரலுடன் விவாதித்து மேல் முறையீடு செய்வோம் என சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை தான். இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே அதற்கு எந்த சிக்கலும் வராத அளவிற்கு போதுமான தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தியிருந்தால் - எந்த நியாயத்தின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்கிற ஆதாரத்தை ஆந்திர நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் உச்ச நிதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கால மற்றும் பொருளாதார விரயம் செய்யும் நிலை மத்திய அரசுக்கு வந்திருக்காது.

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்காக போகும் நிலையிலும் மத அடிப்படையில் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதற்கான உறுதியான ஆதாரங்களை சமர்ப்பித்து சமூக நீதியை மத்திய அரசு காக்குமா என்பதில் முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றி விட்டது என்ற எண்ணவோட்டம் தான் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது.

“முஸ்லிம்கள் இருக்கட்டும்... இதர பிற்படுத்தப்பட்டோர் பட் டியலில் இருக்கும் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு என்று மத்திய அரசு வழங்கியது அரசியல்தனமானது. உத்திரப் பிரதேச தேர்தலை மனதில் வைத்து தான் இந்த அறிவிப்பைச் செய்தது. மத அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது நிலையானதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில் காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு என்று கூறி தேசத்தை, குறிப்பாக முஸ்லிம்களை தவறாக வழி நடத்துகிறது. இட ஒதுக்கீடு என்ற பெயரில் முஸ்லிம்களை முட்டாளாக்குகிறது காங்கிரஸ் கட்சி...” என்கிறார் பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நிர்மலா சீத்தாராமன்.

தேசிய சமூக நீதி முன்னணி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளரான மிர்ஸô ஃபாரூக், “சுதந்திரத்திற்கு முன் இந்திய முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை மிகவும் நல்ல நிலையில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின் இன்றுவரை அனைத்து துறைகளிலுமான முஸ்லிம்கள் மீதான மாற்றாந்தாய் மனோபாவத்தின் விளைவாக இன்று முஸ்லிம்கள் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

37 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இட ஒதுக்கீடு என்ற பெயரில் முஸ்லிம்களை பிரித்துப் பார்க்க காங்கிரஸ் நினைப்பது வருந்தத்தக்கது...” என்கிறார்.

“முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி ஒதுக்கீடு என்பது ஏற்கெனவே இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கை ஆகும்...” என்று கூறும் முன்னாள் மாநிலங்களவைத் துணைத் தலைவரான ரஹ்மான் கான்,

“ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பின் தங்கிய நிலை சச்சார் கமிட்டியின் ஆய்வின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இந்திய அளவில் வீடு வீடாகச் சென்று முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார பின் தங்கிய நிலை குறித்து தனி சர்வே ஒன்றை மேற்கொண்டு, முஸ்லிம்களின் பின் தங்கிய நிலையை வெளிக் கொணராத இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமாகாது.

அரசின் (இட ஒதுக்கீடு) முடிவுக்கு எதிர்ப்பு வருமானால் இதனை அரசு சட்ட ரீதியாக நிலை நாட்ட வேண்டும். ஏனெனில், ஏற்கெனவே கணக்கெடுப்பு நடத்தி பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய பின் தங்கிய நிலை அரசியலமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சச்சார் கமிட்டியின் ஆய்வு மட்டுமே ஒட்டுமொத்த சமூகத் திற்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அடிப்படை ஆதாரமாக இருக்க முடியாது. கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயனை கணிசமாக வழங்க எங்களுக்கு சாத்தியமானது. ஏனெனில் நாங்கள் வீடு வீடாகச் சென்று முஸ்லிம்களின் பின் தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டோம்...” என்கிறார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு 4.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும், நியாயங்களையும் முன் வைக்க வேண்டும்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு என்பது சமூகப் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில்தான் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

இதையும் மீறி, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருப்பது மத அடிப்படையில்தான் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தைப் போன்றே உச்ச நீதிமன்றம் சொல்லுமானால் இட ஒதுக்கீடு என்ற பெயரில் முஸ்லிம்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பது உறுதியாகிவிடும்.

- அபு

Pin It