இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம்களும், தமிழர்களும் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இதில் கிழக்கில் முஸ்லிம்களும், வடக்கில் தமிழர்களும் பெரும்பான்மை சமூகங்களாக உள்ளனர்.
இலங்கையைப் பொருத்தவரை முஸ்லிம்கள் - தமிழர்கள் என்று இருசமூகமுமே தங்களை தனித்து அடையாளப்படுத்தியே வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்கள் என்று இன-மொழி ரீதியாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த இன அடையாளத்தை இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம்கள் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பண்பாட்டு ரீதியான இந்த அடையாள பேதங்களும் இலங்கையின் சிறுபான்மையினரான இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட இடைவெளிக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது.
ஆயினும் இதுபோன்ற தனித்த அடையாளப்படுத்தல்கள் இருந்தபோதிலும், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனநாயக அரசியலில் வேகமும் ஆர்வமும் காட்டி வருகின்ற ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் துணையோடுதான் அரசியல் களமாட வேண்டும் என்கிற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதாலும், முஸ்லிம் கட்சிகளும் கடந்த கால காழ்ப்புணர்வுகளை மறந்து அதிகாரப் பகிர்வுதான் வடகிழக்கின் அமைதிக்கு நிரந்தரத் தீர்வு, அதற்கு தமிழ் கட்சிகளோடு இணைந்து பயணிப்பதுதான் உகர்ந்தது என்று புரிந்து கொண்டதாலும் இன்று சிறுபான்மைச் சமூகம் இரண்டும் அங்கே அரசியல் களத்தில் கை கோர்த்திருக்கின்றன.
இலங்கை முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்கான வேலைகளை துவங்கி விட்ட நிலையில், இக்கூட்டணியை உடைக்க சிங்கள அரசு திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒரு புறமிருந்தாலும், சிறுபாமை சமூகம் தமது லட்சியத்தில் உறுதியுடன் இருப்பதை இலங்கை ஏடுகளில் வெளியாகும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது
இலங்கையின் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி,
"வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் தமிழ்-முஸ்லிம் என்று பிளவுபட்டு நிற்பதனாலேயே பெரும்பான்மை (சிங்கள) சமூகம் தீர்வுகளை வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். பேசுவதன் மூலமே இரு சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படும்.
வடகிழக்கில் இரு சமூகமும் சேர்ந்து வாழ்வதற்கு ஒருவருக்கொருவரின் உதவிகள் தேவை. எங்களுக்கிடையே பிளவுகளை சிங்களச் சமூகம் சேர்ந்து வாழ்வதற்கு ஒருவருக்கொருவர் உதவிகள் தேவை. எங்களுக்கிடையேயான பிளவுகளை சிங்களச் சமூகம் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
இலங்கைப் பிரச்சினையில் முஸ்லிம் காங்கிரசின் நிலைபாடு என்ன என்பதை இந்தியா போன்ற நாடுகளுக்கு நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். சர்வ கட்சி மாநாடுகளிலும் எங்களது கோரிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.'' எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் தனியாக அடையாளம் காணப்பட்டு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள கடற்கரையோரப் பகுதி தமிழ் பேசும் மக்களுக்கென ஒரு தனி மாவட்டம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது.
புலிகளுடனான இலங்கை அரசின் பேச்சுவார்த்தைகளின்போது கூட, மேற்கண்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் மூன்றாம் தரப்பாக முஸ்லிம்களையும் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை அலசிப் பார்த்து முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்திருப்பது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் நகர்வுகளுக்கு தமிழ் தேதியக் கூட்டமைப்பும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறது என்பதை கூட்டமைப்பின் தலைவர்களின் பேச்சுகள் உறுதிப்படுத்துகின்றன.
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். இருதரப்பும் கலந்து பேசி பொதுவான நிலைப்பாட்டிற்கு வர வேண்டும். பொதுவான நிலைப்பாட்டை எட்ட நாங்கள் பல விஷயங்களில் ஒன்றுபட வேண்டியுள்ளது'' என்று தமிழ் தேதியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் அண்மையில் பேசியிருந்ததை இலங்கை ஏடுகள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டிருந்தன.
சிறுபான்மையினமான தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கும், அமைதியான வாழ்க்கைக்கும் தமிழ் முஸ்லிம் என்ற பிளவு இடைஞ்சலாக இருக்கும் என்றால் அதைத் தூக்கி தூர எறிந்து விட்டு தமிழர்களாக ஒன்றுபடுவோம் என்ற செய்தியை இலங்கை தமிழ்ச் சமூகம் உலகத்திற்கு உரத்துச் சொல்லியிருக்கிறது.
- ஃபைஸ்