மாநிலங்கள் அவையில் கடந்த டிசம்பர் 2008 இல் நிறைவேற்றப்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (பதவிகள் மற்றும் பணிகளில் இடஒதுக்கீடு) சட்ட வரைவு, 2008 – சமூக மாற்றத்திற்கும் தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டினை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கட்டுப்படுத்தக் கூடியதாகவும், முடக்கக் கூடியதாகவும், துடைத்தழிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மத்தியில் ஆளும் கூட்டணி அரசு, எவ்வித விவாதமும் இன்றி, இரண்டே நிமிடங்களில் இச்சட்டவரைவை நிறைவேற்றியது. டிசம்பர் 2008 இல் இதே போன்ற ஓர் அணுகுமுறையில் பல சட்ட முன்வரைவுகளை காங்கிரஸ் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றியது.
இந்த சட்டவரைவின் முக்கிய அம்சம் என்னவெனில், அது 47 அரசு நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது. இதில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (அய்.அய்.எம்.), பட்ட மேற்படிப்புக்கான மருத்துவக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 5 மத்தியப் பல்கலைக் கழகங்களும் அடங்கும். இந்த சட்டவரைவின் பிரிவு 4(1)இன்படி, பின்வருவனவற்றிற்கு இடஒதுக்கீடு கிடையாது :
1. 45 நாட்களுக்கு குறைவான பணிகள் தொடர்பான நியமனங்கள்
2. அவசர கால புனரமைப்புக்கான பணிகள்
3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகள்
4. "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில்' உள்ள பணிகள்
5. இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்கள்
இதன் உட்பிரிவுகளின்படி, "க்ரூப் ஏ' பணிகளில் இருப்பதிலேயே கீழ் நிலைப் பதவிகளுக்கு மேற்பட்ட அனைத்துப் பணிகளுக்கும் இந்தப் பிரிவு பொருந்தும் என்கிறது. இந்த சட்டவரைவுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் 47 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அரசின் விருப்பப்படி, நாடாளுமன்ற ஒப்புதல் இன்றியே இந்தப் பட்டியலை விரிவுபடுத்திக் கொள்ளலாம்; மேலும் பல நிறுவனங்களையும் இப்பட்டியலில் இணைக்கலாம். அதோடு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த' நிறுவனங்கள் என்று ஒன்று இன்று கிடையாது. இது, காங்கிரசின் உருவாக்கமே அன்றி வேறில்லை.
இவற்றைவிட மிகவும் ஆட்சேபனைக்குரிய பிரிவு என்னவெனில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப'த் தகுதிகள் தேவைப்படும் பணிகளை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது. இந்த வரையறைக்குள் வரக்கூடிய பணிகள் எவை என்பது குறித்த விளக்கம் என்ன சொல்கிறது எனில், இயற்கை அறிவியல், நேரடி அறிவியல், பயன்பாட்டு அறவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் இந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவு அவசியமாகத் தேவைப்படுகின்ற பணிகள் அனைத்துமே "அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகள்' என்று கூறுகிறது.
ஆக இதன்படி, குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலோ, 54 "மினிரத்னா'க்களிலோ, பிற பொதுத் துறை நிறுவனங்களிலோ, அறவியலில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டமோ, பயன்பாட்டு அறிவியல்களான மைக்ரோ பயாலஜி அல்லது மருத்துவம் அல்லது தொழில்நுட்பத்துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டமோ அல்லது அறிவியல் துறையில் எவ்விதப் பட்டமோ பெற்றிருப்பதை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட எந்தப் பணியிலும் – பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடமே இல்லை.
இவ்வாறு, 47 கல்வி நிறுவனங்களிலும், குறிப்பிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு அனுமதி மறுத்த பிறகு, இந்த சட்டவரைவு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை எந்த வேலைக்கும் "தகுதியற்றவர்களாக' ஆக்குகிறது. இச்சட்ட முன் வரைவின் பிரிவு 9, தேர்வுக் குழுவினருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி அவர்கள் எப்பணிக்கும் மூன்று விதமான தகுதி நிலைகளை முன் வைக்கலாம்.
ஒன்று "அடிப்படைத் தகுதி'. அதாவது, அறிவியல் அல்லது கலை சார்ந்த துறையில் அடிப்படைப் பட்டம். இரண்டாவது "கூடுதல் தகுதி'. முன் அனுபவம் போன்றவை இதில் அடங்கும். மூன்றாவது "பொருத்தப்பாடு'. அடிப்படைத் தகுதி இருக்கும் ஒருவருக்கு பொருத்தப்பாடு என்ற கேள்விக்கு எவ்வித சட்டப் பின்புலமும் இருக்க முடியாது. பிரிவு 9, மேற்குறிப்பிட்ட 3 தகுதிகளையும் உள்ள ஒருவரைக்கூட, அந்தப் பணிக்கு தகுதியற்றவர் என்று அறிவிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. இப்பிரிவு 9 அய் இந்த சட்ட வரைவில் அறிமுகப்படுத்துவதன் மூலம், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டினை சவக்குழியில் இறக்கி, இறுதிப் பிடி மண்ணையும் அள்ளிப் போட்டுவிட்டது.
பிரிவு 18 இன்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்கான அங்கீகாரம் அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கிறது. ஏனெனில், அவ்வாறு மறுப்பதற்கு எதிராக துறை தொடர்பான நடவடிக்கை மட்டுமே எடுக்க இயலும் – அதுவும் அப்படியான மறுப்பு உள்நோக்கம் கொண்டது என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே; வேறு எந்தவித தண்ட னையும் கிடையாது. இன்று வரை, இடஒதுக்கீடு தொடர்பான குறிப்பாணைகளை மீறியதற்காக எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை.
மே 2004 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு "தேசிய குறைந்தபட்ச செயல்திட்டத்தை' ஒப்புக் கொண்டது. அதன்படி தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வித இடஒதுக்கீட்டு முறைகளுக்கும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்குவது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தன. கடந்த 5 ஆண்டுகளில், தனியார் துறையில் இடஒதுக்கீடு குறித்த அனைத்து விவாதங்களையும் காங்கிரஸ் திறமையாக கொன்றிருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதங்களில் வென்ற துணிச்சலில், மன்மோகன் சிங் அரசு இத்தகைய அவசர கதியிலான ஒரு சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தேசிய குறைந்த பட்ச செயல்திட்டத்திற்கு அரசு துரோகம் இழைத்துள்ளது.
தேசிய குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே கடந்த டிசம்பர் 2004 இல் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பதவிகள் மற்றும் பணிகளில் இடஒதுக்கீடு) சட்ட வரைவு, 2004 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; மனித வளத் துறை சார்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் பரிந்துரைக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக் குழு, தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை (3 ஆண்டுகளுக்கு சிறை அல்லது ரூ. 50,000 அல்லது இரண்டும்) வழங்கும் பிரிவு ஒன்றை இணைத்தும், "தகுதியற்றவர்களாக' அறிவிக்கும் அதிகாரம் வழங்கும் பிரிவை நீக்கியும், தனது அறிக்கையை சூன் 2005 இல் அளித்தது. சட்ட வரைவின் பிரிவு 4(1)இல் தற்போது உள்ளது போல், 47 நிறுவனங்களின் பட்டியலையோ அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் உட்பட அனைத்திலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகளுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு வழங்கும் பிரிவோ இல்லை.
ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, சட்ட வரைவை மீண்டும் வடிவமைத்து, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அதன் வரையறைக்குள் இருந்து நீக்கியிருக்கிறது. இதற்கு தொடர்புடைய அமைச்சகங்களைக்கூட அது கலந்தாலோசிக்கவில்லை. இடஒதுக்கீட்டிற்கு எதிரான பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்ட பிறகு 2008இல் அது மாநிலங்களவையில் முன் வைக்கப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தனிச் சட்ட முன்வரைவு என்றைக்கு வரப்போகிறது எனத் தெரியவில்லை. அதுவும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைப்பதாகவே இருக்கப் போகிறது.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் தங்களின் மதிப்பான வாழ்க்கைக்காகப் போராடி வருகின்றனர். தனியார் துறையில் பணிபுரிவதற்கான உரிமைக்காகவும், அரசு செயலாளர் உள்ளிட்ட முதல் தர பதவிகளில் இடஒதுக்கீட்டிற்காகவும் போராடி வருகிறார்கள். 2005 இல் மனித வள மேம்பாட்டுத் துறை, பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும், ரீடர் மற்றும் பேராசிரியர் போன்ற கற்பிக்கும் பதவிகளில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த குறிப்பாணைகளை வழங்கியது. இதை இந்த சட்ட வரைவு இல்லாமல் செய்கிறது. அரசு, மத்திய அரசின் தேர்வாணையக் குழுவை ஒதுக்கி வைத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பதவிகள் குறித்து அதனோடு கலந்தாலோசிப்பதையும் நிறுத்திவிட்டது.
பிரதிநிதித்துவத்தை அடிப்படைக் கொள்கையாக கொண்ட தலித் மற்றும் ஜனநாயக இயக்கங்கள், இந்த 21 ஆம் நூற்றாண்டில், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அனைத்துத் துறைகளிலும், வேலைவாய்ப்பின் அனைத்து நிலைகளிலும் போதுமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் பல கட்டங்கள் முன்னேறி உள்ளன. ஆனால் இந்த சட்ட வரைவு, இந்த அனைத்து முயற்சிகளையும், டாக்டர் அம்பேத்கர் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகளினால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தையும், ஒரே அடியில் இல்லாமல் ஆக்கியிருக்கிறது.
இனி மக்களவையில் இந்த சட்ட வரைவு முன் வைக்கப்படும்போது, இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் பிரிவுகளான 4(1), 9, 18 ஆகியவற்றை நீக்கி, அரசியல் சட்டத்தின் நோக்கத்தையும் அது உருவாக்கப்பட்டதற்கான காரணத்தையும் சிதைக்காதவாறு நிறைவேற்றுவார்களா?
(கட்டுரையாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்)
நன்றி : ‘தி இந்து', தமிழில் : பூங்குழலி