உலகின் புதிய நாடாக மலர்ந்திருக்கிறது தெற்கு சூடான். புதிய தேசத்தின் தலைநகரான ஜீபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருக்கின்றனர். புதிய சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட்டுள்ளது.

புதிய தேசத்தின் முதலாவது அதிபராக சல்வாகிர் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். 50 வருட காலங்களாக தொடர்ந்த சிவில் யுத்தம் முடிவுக்கு வந்து வெடிமுழக்கங்கள் ஓய்ந்திருக்கின்றன. ஜனநாயகம் என்கிற புதிய அத்தியாயத்தை துவக்கி இருக்கிறது தெற்கு சூடான்.

வடக்கு சூடான் பகுதியில் அரேபிய வழித் தோன்றல்களும் - தெற்கு சூடானில் கருப்பர் இன மக்களும் வசித்து வருகின்றனர். வடக்கே இஸ்லாமும் தெற்கே கிறிஸ்தவமும் ஆளுமை கொண்டுள்ளன. வடக்குக்கும் - தெற்குக்கும் இடையே மூண்ட யுத்தங்களால் 1956 முதல் 1972 வரை உள்நாட்டுப் போரும், 1983ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டு பல உயிர்களைப் பலி வாங்கியுள்ளன.

1989ல் திடீர்ப் புரட்சியை மேற்கொண்ட இராணுவ அதிகாரி உமர் அல் பஷீர் தன்னை குடியரசுத் தலைவராக அறிவித்துக் கொண்டார். தெற்கு சூடானில் எண்ணெய் வளம் மிகுந்து காணப்படுவதால் இதை குறி வைத்துத்தான் இந்த யுத்தங்கள்; உயிர்ப் பலிகள்.

இந்நிலையில் தெற்கு சூடானின் எண்ணெய் வயல் மீது பார்வையைப் பதித்த அமெரிக்கா - கிறிஸ்தவ மக்களின் ஆதிக்கம் கொண்ட தெற்குச் சூடானை தனி நாடாக்க திட்டமிட்டது. அதன் விளைவாக - சூடான் அரசு மீது பொருளாதாரத் தடை போன்ற அழுத்தங்களை ஏற்படுத்தியது.

இன்னொருபுறம் சீனாவும், ரஷ்யாவும் சூடானுக்கு ஆயுதங்களைத் தந்து உதவின. இந்நாடுகளின் திட்டமும் எண்ணெய் வயலை குறி வைத்துத்தான் இருந்தது. தெற்குப் பகுதி சூடான் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் அங்கே எண்ணெய் வயலில் தமது ஆதிக்கத்தை செலுத்தலாம் என அவை கணக்குப் போட்டன.

இதற்கிடையில் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நய்வாசா அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. சூடான் அரசும் - தெற்கு சூடான் விடுதலை முன்னணியும் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கையில் முக்கிய ஷரத்தாக, தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதா? சூடான் குடியரசிலேயே நீடிப்பதா என்பதை பொது வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யலாம் என்பது முன் வைக்கப்பட் டது.

இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்திட ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

இந்த வேண்டுகோள் என்பது கண் துடைப்புதான். தான் ஜனநாயக சக்தி என்பதை காட்டிக் கொள்ள ஒபாமா செய்த முயற்சிதான். உண்மையில் பார்க்கப் போனால் பொது வாக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் சூடான் நாட்டின் மீது பொருளாதாரத் தடையை தீவிரப்படுத்துவோம்; சூடானை பயங்கரவாத நாடு என்ற பட்டியலிலேயே வைத்திருப்போம். வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என்கிற பட்டியலிலிருந்து நீக்குவோம் என்றும் மறைமுகமாக மிரட்டியிருந்தார் ஒபாமா.

தெற்குச் சூடானில் 80 சதவீத எண்ணெய் வயல் இருந்தாலும் வடக்குச் சூடானின் துறைமுகங்கள் வழியேதான் வாணிகம் நடத்த வேண்டும். தங்கள் துணையில்லாமல் தனி நாடாக தெற்கு சூடான் இயங்க முடியாது என்று எண்ணியிருந்த அதிபர் உசேன் அல் பஷீரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அன்பான மிரட்டல் பணிய வைத்திருக்கிறது.

வடக்கு சூடானுக்கும் - தெற்கு சூடானுக்கும் இடையில் அமைந்துள்ள அபெய எனும் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதுவும் வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், சூடான் அதிபர் அல் பஷீர் இராணுவத் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் பஷீரை இனப்படுகொலைக் குற்றவாளி என்றே அறிவித்து விட்டது. இந்த அறிவிப்புகளெல்லாம் அமெரிக்காவின் கைங்கர்யம் தான். பெரியண்ணனின் சொற்படி கேட்டு நடந்த பஷீரின் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படலாம்.

எப்படியிருப்பினும் தெற்கு சூடான் மலர்ந்து விட்டது. இதற்காக அப்பாவி மக்களின் ரத்தமும், உயிரும் இலட்சக்கணக்கில் ஓட்டப்பட்டுள்ளன. நீண்ட கால யுத்தம் மக்ளை வறுமையிலும், மன இறுக்கத்திலும் வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் போக்கி இணக்கத்தோடு வாழ இரு சூடான் அரசுகளும் பரஸ்பரம் சகோதர வாஞ்சையோடு முன்னேற வேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் சில கேள்விகளும் இங்கே நியாயமாக எழுவதை தவிர்க்க முடியாது.

50 ஆண்டுகால போராட்டத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்வு கண்ட அமெரிக்காவும், ஐ.நா.வும் - அதேபோல 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணத் தயங்குகின்றன. காஷ்மீர் விவகாரத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற உறுதிமொழி ஐ.நா.வின் மேசைகளில் கிடக்கின்றது. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு மட்டும் இன்னும் விடிவு காலம் ஏற்படவில்லை.

காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்கா தீவிரமாக மூக்கை நுழைப்பதில்லை. காஷ்மீரிலும் பல்லாயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனால் காஷ்மீர் விஷயத்தில் மட்டும் ஐ.நா.வின் பாரபட்ச போக்கு தொடர்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும் - பாகிஸ்தானும் அவ்வப்போது பேச்சுவார்த்தை என்றே காலம் கடத்தியே வந்துள்ளன. ஆனால் காஷ்மீர் மக்களோ வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவது அமெரிக்கா மற்றும் ஐ.நா. வின் காதுகளில் விழவில்லை.

காஷ்மீரைப் போலவே பாலஸ்தீன மக்கள் நூற்றாண்டுகளாக சொந்த நாட்டை இழந்து விட்டு - சொந்த தேசம் கேட்டு போராடி வருகின்றனர். அங்கே இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை போன்ற அழுத்தங்களைக் கொடுக்க அமெரிக்கா தயாராக இல்லை.

இலங்கையில் ஈழ மக்களின் நிலையும் பாலஸ்தீன், காஷ்மீர் மக்களைப் போன்றதுதான். பேரினவாதத்தால் ஏறக்குறைய நாற்பதாண்டு காலமாக தங்களுக்கென்று ஒரு சுதந்திர பூமி வேண்டும்; சுய அதிகாரம் வேண்டும் என தமிழர்கள் உரிமைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தெற்கு சூடான் மீது காட்டிய அக்கறை பாலஸ்தீன் மீதோ, காஷ்மீர் மீதோ, ஈழத்தின் மீதோ அமெரிக்கா காட்டாததற்கு என்ன காரணம். இங்கெல்லாம் எண்ணெய் வயல்கள் இல்லை என்பதாலோ!

- அபு

Pin It