சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சசிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலைத் தொகுப்பு மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) என்பன இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் அணு ஆற்றல் வளாகங்களில் ஒன்று.

அணு மின் உற்பத்தி தவிர பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி (அதாவது பயன்பாட்டுக்குத்) தயார் செய்தல் (fuel reprocessing), அணுக்கழிவு நிர்வாகம் (waste management), வேக ஈனுலைகளுக்கான புளுடோனிய எரிபொருள் தயாரிப்பு ஆகிய வசதிகள் ஒரே இடத்தில் அமைந்த மையம் இது. 220 மெகாவாட் திறன் கொண்ட இரு ‘அழுத்தப்பட்ட கனநீர் உலைகள்’ (PHWR) 1983லும் 85லும் செயலுக்கு வந்தன. சிறிய ஆய்வு மற்றும் சோதனை உலைகள், மறு பயன்பாட்டு உலைகள் எனக் கிட்டத்தட்ட தற்போது அய்ந்து உலைகள் கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன.

தயாரிப்பில் உள்ள 500 மெ.வாட் திறனுடைய ‘பாவினி’ எனும் புரொடொ டைப் வேக ஈனுலை (PFBR) இன்னும் இரண்டாண்டுகளில் செயல்பாட்டைத் துவங்கும் எனக்கூறப்படுகிறது. இதே மாதிரியான மேலும் இரு 500 மெ.வாட் பாவினி உலைகள் கட்டப்பட உள்ளன. இது தவிர சென்ற டிசம்பரில் 120 மெ.வாட் திறனுள்ள ‘உலோக நிலை எரிபொருள் சோதனை அணு உலை’ (MFTR) ஒன்றுக்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, இதே தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட உள்ள 1000 மெ.வாட் வேக ஈனுலைகளுக்கான சோதனை உலையாக இருக்குமாம். இது அதிவேகத்தில் உற்பத்தி செய்யும் புளுடோனிய யுரேனிய ஆக்சைட் கலவை (MOX) பாவினி உலைகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யுமாம்.

ஆக, ஒரே இடத்தில் கொத்தாக அமைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அணு உலைத் தோட்டமாக எதிர்காலத்தில் அமையும் என நிர்வாகத்தாலும் அணு ஆற்றல் துறையாலும் பெருமிதமாகப் பேசப்படும் கல்பாக்கத்தில் சென்ற வாரம் நடர்ந்த தொடர் போராட்டத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டு, நானூறுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டு, 147 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். தடியடி நடத்தியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பான உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது:

 1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR),

 2. முனைவர் ப.சிவகுமார், PMANE விஞ்ஞானிகள் குழு உறுப்பினர்,

 3. பேரா. மு, திருமாவளவன், முன்னாள் கல்லூரி முதல்வர்,

 4. திரு, சீனிவாசன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்,

 5. வழக்குரைஞர் கி. நடராஜன், மக்கள் வழக்குரைஞர் சங்கம்,

 6. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,

இக்குழுவினர் மார்ச் 29, ஏப்ரல் 1,2 ஆகிய தேதிகளில் கல்பாக்கம், சட்ராஸ், புதுப்பட்டினம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் சென்று தடியடியால் பாதிக்கப்பட்ட மக்கள், கல்பாக்கத்தில் நீண்ட நாட்களாக மருத்துவ சேவை புரிந்து வருபவரும், இப்பகுதியில் அணுக்கதிர் வீச்சால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருபவரும், PMANE அமைப்பு உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு உறுப்பினருமான டாக்டர் வீ.புகழேந்தி, இப்பகுதியில் மருத்துவப் பணிசெய்யும் ரவி, முன்னாள் அணு உலை ஊழியர் சங்கத் தலைவர் மோகன், கைது செய்யப்பட்டவர்களின் வழக்குரைஞர் வெங்கடேசன், கெம்பு குமார், விடுதலச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஏழுமலை, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் அப்துல் சமது மற்றும் இஸ்மாயில், தடியடியில் காயம்பட்டுச் சிகிச்சையில் உள்ள ஆ.வடிவேல், பி.எம்.நடராஜன் முதலானோரை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினோம்.

அணு உலை நிர்வாகத்தின் சார்பாக ‘பாவினி’ நிர்வாக இயக்குநர் ப்ரபோத் குமாருடனும், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எண்வர் கொண்ட ஒரு குழுவுடனும் சுமார் இரண்டரை மணிநேரம் விரிவாகப் பேசினோம். எங்களது அய்யங்களுக்கு அவர்கள் பொறுமையாகப் பதிலளித்தனர். காவல்துறை சார்பாகக் காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ், மகாபலிபுரம் துணைக் கண்காணிப்பளர் மோகன் ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம்.

போராட்டம், தடியடி மற்றும் கைது நிகழ்வுகள்

தற்போது போராடிக் கொண்டுள்ள அணு உலையச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஐந்தம்சக் கோரிக்கைகள்:

1) அணு உலை அதிகாரிகள் குடியிருப்புக்கு வழங்குவதுபோல சுற்றுப்புற கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அளித்தல்

2) கல்பாக்க உலையில் சுற்றுப்புற மக்களுக்கு வேலை அளித்தல்

3) மேலும் புதிய அணு உலைகளை இங்கு கட்டக் கூடாது, பிற இடங்களிலுள்ள அணு உலைக் கழிவுகளை இங்கே கொணரக் கூடாது

4) அணு சக்தித் துறை நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராமக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளித்தல்.

5) கதிர் வீச்சு தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தக்க சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைத்தல்.

சென்ற 25ம் தேதியன்று சதுரங்கப்பட்டினம் கிராம மக்கள் சுமார் 3000 பேர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து காலை 7 மணி முதல் ரவுண்டானாவில் திரளாகக் கூடி, முன்னதாக அறிவித்திருந்தபடி அணு உலை வளாகத்தின் பொய்கைக்கரை வாசலில் மறியல் செய்யும் போராட்டத்தைத் தொடங்கினர். மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.

மக்கள் பிரதிநிதிகளுடன் அணு உலை நிர்வாகமும் கோட்டாசியரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகத் தந்திரமாக மறுக்கப்பட்டன. தடையில்லா மின்சாரம் வழங்குவது மாநில அரசின் பொறுப்பு என்பதால் இது குறித்து மாநில அரசுக்குப் பரிந்துரைப்பது, வேலை மற்றும் கல்வி ஒதுக்கீட்டைப் பொருத்த மட்டில் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் அரசு விதிகளின்படி செயல்படுவது, கதிர்வீச்சு நோய்களுக்கான பல்நோக்கு மருத்துவ மனையைப் பொருத்த மட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த உதவி செய்வது என்பதாகப் பதிலளிக்கப்பட்டது.

மேற்கொண்டு அணு உலைகளை அமைக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய நிர்வாகம், அணுக் கழிவுகளைப் பொருத்த மட்டில் இதர பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுவதில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டது.

இவ்வாறு கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டடதைத் தொடர்ந்து அடுத்த நாள் (மார்ச் 26) சுற்றுவட்டார கிராம மக்கள் எல்லோரும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்தனர். காலை ஏழு மணிக்கெல்லம் சட்ராஸ் ரவுண்டானா, கொக்கிலிமேடு கேட், புதுப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளனர்.

கொக்கிலிமேட்டில் ம.தி.முக.தலைவர் மல்லை சத்யா தலைமையில் சுமார் 1500 பேரும், புதுப்பட்டினத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் அப்துல்சமது தலைமையில் 3000 பேரும் கூடியிருந்தனர். முஸ்லிம்கள், தலித்கள், மீனவர், வன்னியர் என்கிற சாதி மத வேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும் தாண்டி மக்கள் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- தொடர்ச்சி அடுத்த வாரம்

Pin It