chandru judge52 ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நடந்ததென்ன?

நேத்து வரை கொடுத்ததை வாங்கிகிட்டு போன பயலுவஇன்னிக்கு குதிக்கிறானுவோ!

”சாணிப்பால் கொடுக்காதே,  சவுக்கால் அடிக்காதே” என்று சங்கம் அமைத்துக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செங்கொடிச் சங்கத்திற்கு முடிவு கட்டித் தங்களது ஆதிக்கத்தை நிரந்தரமாக்க முயன்ற பண்ணையார்களின் புலம்பல்தான் இவ்வரிகள்.

கீழ்வெண்மணிப் படுகொலைகள் பற்றி உலகம் முழுவதுமுள்ள சமூகவியலாளர்கள் கட்டுரைகள் பல எழுதி விட்டனர். கவிஞர்களின் குமுறல்கள் கவிதைகளாக வெளிப்பட்டன. சில நாவல்களும் வெளிவந்துள்ளன.

உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடுவித்து விட்டன என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு பெறப்பட்டது? அதிலிருந்த முரண்பாடுகள் என்ன? உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன? என்பது பற்றி இதுவரை பதியப்படவில்லை.

அதற்கு முன்னால் சிறிய பின்னோட்டம் 

15 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் இறுதி முடிவு 1967 தேர்தல்களில் எழுதப்படுகிறது. அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்று 6.3.1967ல் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

புதிய சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 இடங்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவராக சங்கரய்யா அமர்த்தப்படுகிறார்.  கிழக்குத் தஞ்சையிலிருந்து கே.ஆர். ஞானசம்பந்தமும்,  பி.ஆர். தனுஷ்கோடியும் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கிழக்குத் தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கூலி உயர்வு கேட்டு இயக்கம் தொடங்குகிறது. அது வரை கலம் நெல் அறுவடைக்கு நாலரை படி கூலி கேட்ட தொழிலாளர்கள், கூலியை உயர்த்தித் தரும்படியும், பல்வேறு பிடித்தங்களை நிறுத்தும்படியும் கோரிக்கை வைக்கிறார்கள்.

அக்டோபர் 1967இல் தோழர்கள் சங்கரய்யாவும், ஏ.பாலசுப்பிரமணியமும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பாக முதலமைச்சர் அண்ணாவைச் சந்தித்து முறையிடுகிறார்கள். குறுவை அறுவடை நேரத்தில் கிழக்குத் தஞ்சை கொதிக்கிறது. மாநில அரசு தலையிட்டுப் பேச்சுவார்த்தை மூலம் கூலிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி கோரிக்கை வைக்கப்படுகிறது.

மிராசுதார்கள் போராட்டங்களை முறியடிப்பதற்கு புதிய உத்திகளைக் கையாளுகிறார்கள். நில உரிமையாளர் சங்கம் என்ற பெயரை மாற்றி விட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நியமிக்கப்படுகிறார்.

தஞ்சை மாவட்டத்திற்குச் சிறப்புக் காவல்படை அனுப்பப்படுகிறது. பூந்தாழங்குடி கிராமத்தில் ஏற்றிய சிகப்புக் கொடியை அகற்றுவதைத் தடுக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒரு விவசாயத் தொழிலாளியின் உயிர் பறிக்கப்படுகிறது.

இன்னும் அதிகமான உணர்ச்சிக் கொந்தளிப்பினால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரங்கபாஷ்யம் முத்தரப்பு மாநாடு கூட்டுகிறார். இடைக்கால ஏற்பாடாக அரை லிட்டர் கூலிஉயர்வும், ஆறு லிட்டர் கொடுக்கப்படும் இடங்களில் அதைத் தொடரவும், மாநில அரசு ஆணையத்தை உருவாக்கி, எதிர்வரும் காலங்களில் கூலிஉயர்வை முடிவு செய்யவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.

மிராசுகளும், அரசு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள். சில இடங்களில் கூலி உயர்வு தர மறுத்த நிலச்சுவான்தார்களின் நிலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கட்டாய அறுவடை செய்து தங்களுக்கு உரிய கூலியை எடுத்துக் கொண்டு அறுவடைக்கான தானியங்களை களத்துமேட்டில் விட்டுச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றன. அச்சமயத்தில் விவசாயத் தொழிலாளர் கிளைச் சங்கத் தலைவர் சின்னப் பிள்ளையைக் கடத்திச்சென்று கொலை செய்து விடுகின்றனர். விவசாயத் தொழிலாளர் கூலிப் பிரச்சனைக்கான மாநாட்டை அரசு கூட்ட மறுக்கிறது.

பேச்சுவார்த்தைகள் மூலம் கூலிப் பிரச்சினையைத் தீர்க்காமல், காவல்படையை அனுப்பும் முயற்சியை அரசு மேற்கொள்கிறது. எதிர்ப்புப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கீவளுர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம்தான் கீழ்வெண்மணி. அங்கு மட்டும் 12 லாரிகளில் காவல்படை இறக்கப்படுகிறது.

தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பற்ற தன்மையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி அறிக்கை விடுகிறார். ”எங்கள் ஊழியர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க மறுத்தால் நாங்களே தொண்டர் படையை உருவாக்கிப் பாதுகாப்பு அளிப்போம்” என்று எச்சரிக்கிறார். 15.11.1968 தேதியன்று சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த தோழர் பக்கிரியின் கொலையைக் கண்டித்து தேவூர், திருவாரூர், இலுப்பூர், கருவேலி, ஆவூரணி, சிக்கல், புதுச்சேரி, மஞ்சக்கொல்லை இங்கெல்லாம் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

நெல் உற்பத்தியாளர் சங்கமும் அதன் தலைவர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்குக் குறிவைத்து டிசம்பர் 25, 1968 தினத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமும் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது அகில இந்திய மாநாடு கொச்சியில் (கேரளா) 23 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. கீழத் தஞ்சையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்கள் உட்பட அனைத்து விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் மாநாட்டுப் பிரதிநிதிகளாகக் கொச்சிக்குச் சென்று விடவே, மிராசுதார்களின் சூழ்ச்சி தடையின்றி செயல்படுத்தப்பட்டது.

25ஆம் தேதி இரவு 10 மணிக்குக் கீழ்வெண்மணியிலுள்ள 30 குடிசைகளுக்கு சட்டவிரோதக் கும்பலால் தீ வைக்கப்பட்டது. ராமய்யாவின் குடிசையில் வன்முறைப் பயத்தினால் ஒளிந்திருந்த 44 பேர் (பெண்கள், முதியவர்கள் உட்பட) குடிசைக்குள் கருகி உயிரிழந்தனர். எதிர்பட்ட ஆண் தொழிலாளர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

சிலருக்கு அரிவாள் வெட்டும், சுளுக்கி மற்றும் தடியினால் பலத்தக் காயங்களும் ஏற்பட்டன. குண்டடி பட்ட முனியன் (முதல் சாட்சி) தனது புகாரில் தாக்கவந்த கூட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் இருந்ததைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். இந்தக் கலவரத்தில் வெளியூரிலிருந்து அறுவடைக்காகக் கூட்டிவரப்பட்ட கூலித்தொழிலாளர் பக்கிரிசாமியும் கொல்லப்பட்டார்.

அதிர்ச்சித் தகவலைக் கேள்விப்பட்ட முதலமைச்சர், ஐ.ஜி., டி.ஐ.ஜி, மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர் அனைவரையும் கீழ்வெண்மணிக்கு அடுத்த நாளே அனுப்பி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த தஞ்சை விவசாயத் தொழிலாளர் தலைவர்கள் உடனடியாகத் திரும்பிவர இயலவில்லை. விரைவில் திரும்பி வந்த மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி கீழ்வெண்மணியைப் பார்வையிட்டு, பலத்த கண்டன அறிக்கையை வெளியிட்டார். உள்ளுர்க் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்ததனால் வழக்கு விசாரணை (முதல் தகவல் அறிக்கை எண்.327 / 1968) மத்தியக் குற்றக் காவல் பிரிவிற்கு 1.1.69இல் மாற்றப்பட்டது.

முதல் குற்றவாளியாக நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு மீதும் மற்றும் 22 பேர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கீழத்தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவின் மீதும், அவரது நெருங்கிய உறவினர்கள் மீதும் கொலை செய்ததற்காக இ.பி.கோ 302இன் கீழும், ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டது.

அதேசமயத்தில் கலவரத்தில் இறந்துபோன பக்கிரிசாமி மரணத்தைக் கொலை வழக்காக கீவளுர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை 328/1968ஆகப் பதிவு செய்தது.

தஞ்சை விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு:

செஷன்ஸ் நீதிபதி சி.எம்.குப்பண்ணன் முன்னால் இரண்டு வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன. முதல் வழக்கு பக்கிரிசாமி கொலை சம்பந்தமாக கோபால் (A1) மற்றும் 22 பேர் மீது போடப்பட்ட வழக்கு. கோபால் (A1) மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி ராமய்யனுக்கு 5 வருடமும் மற்ற 4 பேர்களுக்கு 2 வருடமும் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. 8 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வழக்கில் மொத்தம் 79 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த அன்றே (30.11.1970) கீழ்வெண்மணியில் 44 பேரைக் குடிசையில் வைத்து எரித்த வழக்குக்கும் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்த வழக்கிலும் 23 குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுகிறார்கள்.

கீழ்வெண்மணி வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் மற்றும் 8 பேர்களுக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாகக் கூடி சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்ததாகவும், தீயிட்டு அழித்ததற்காகவும் அந்தத் தண்டனை அளிக்கப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அதில் 5 பேருக்கு 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதேயொழிய கொலைக் குற்றத்திலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்விரு செஷன்ஸ் வழக்குகளிலும் ஒரே மாவட்ட நீதிபதி முன்னால் விசாரணை நடைபெற்றாலும் இவை தனித்தனி வழக்காக விசாரிக்கப்பட்டன. முதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் இரண்டாம் வழக்கில் சாட்சிகளாகவும், இரண்டாம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் முதல் வழக்கில் சாட்சிகளாகவும் இருந்தனர். குறிப்பாக கீழ்வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடு பக்கிரிசாமி கொலைவழக்கில் முதல் சாட்சியாக இருந்தார்.

கோபால் செய்த மேல்முறையீடுகளை உயர் நீதிமன்றமும்உச்ச நீதிமன்றமும் நிராகரிப்பு:

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபாலும் 5 வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ராமய்யனும் மேல்முறையீடு செய்தனர் (Crl.A.No.23/1971). கீழ்வெண்மணி கொலை வழக்கில் குற்றவாளிகள் செய்த மேல்முறையீடு (Crl.A.No.1208/ 1970) கோபால் வழக்கிற்கு முன்னாலேயே தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அவ்வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை தரும்படி அரசுத்தரப்பில் போடப்பட்ட மேல்முறையீடும் கோபால் வழக்கிற்கு முந்தையதே. ஆனால் என்ன காரணமோ முன்னர் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் பட்டியலிடப்படவில்லை.

மாறாக, கோபாலின் மேல்முறையீடு பட்டியலிடப்படுகிறது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி திரு.கே.என்.முதலியார் கண்டிப்புக்குப் பெயர் போனவர். ஒருவேளை அக்காரணத்தினால்தான் கீழ்வெண்மணி மேல்முறையீடுகள் பட்டியலில் ஏற்றப்படவில்லையோ, யாருக்குத் தெரியும்?

நீதிபதிகள் செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து கோபாலுக்கு ஆயுள் தண்டனையையும், ராமய்யனுக்கு 5 வருட கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்கிறார்கள் (4.8.1972).

அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இடதுசாரி வழக்கறிஞரான ஆர்.கே.கர்க் ஆஜராகிறார். அம்மேல்முறையீடு 13 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டு 30.1.1986இல் தள்ளுபடி செய்யப்படுகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கையும் இதர கிரிமினல் குற்றச்சாட்டுகள் போல் விசாரித்து விசாரணையிலுள்ள ஓட்டைகளுக்கெல்லாம் சமாதானம் சொல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்கள். ஏற்கேனவே தண்டனை அனுபவித்து வந்த கோபாலையும்,  ராமய்யனையும் முன்கூட்டியே விடுதலை செய்யவும் மறுக்கிறார்கள்.

கீழ்வெண்மணி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசித்திரங்கள்:

கீழ்வெண்மணி கொலை வழக்கை உயர் நீதிமன்றம் அணுகிய விதம் உணர்ச்சியுள்ள எவரையும் கொதிக்க வைக்கும். வழக்கு சென்னை மத்தியக் குற்றவியல் காவல்துறையினால் விசாரிக்கப்பட்ட போதும் நீதிபதிகள் காவல்துறையின் துப்புத்துலக்கைக் குறை கூறியதுடன், மாவட்ட செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பையும் குறை கூறினர்.

கீழ்வெண்மணி மேல்முறையீடுகள் வேறு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளப்பட்டதைப் பார்த்த அரசுத்தரப்பு ப்ராசிக்யூடர் நீதிபதிகளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். பக்கிரிசாமி கொலைவழக்கும், கீழ்வெண்மணியில் 44 பேர் கொல்லப்பட்ட வழக்கும் ஒரே செஷன்ஸ் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

சாட்சிகளும் குற்றவாளிகள் பலரும் இவ்விரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். எனவே கீழ்வெண்மணி கொலை மேல்முறையீட்டு வழக்கு, பக்கிரிசாமி வழக்கை விசாரித்த அதே நீதிபதிகள் அமர்வு விசாரிப்பது உசிதமாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளுக்கு நீதிபதிகள் செவிசாய்க்காமல் விசித்திரமான காரணத்தைத் தங்களது தீர்ப்பில் பதிவுசெய்தனர்:

”தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிசான்களில் பெரும்பாலோர், மிராசுதார்களுக்கான இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு சாட்சியங்களாக இடம்பெற்றுள்ளனர். ஒரே அமர்வு நீதிபதி இந்த இரண்டு வகையான வழக்குகளையும் தனித்தனியாக விசாரித்து இரு வழக்குகளிலும் ஒரே நாளில் தீர்ப்பளித்தது அவருக்கு அனுகூலமாக இருந்தது.

இந்த இருவகை வழக்குகளின் தீர்ப்புகளுக்கும் எதிரான குற்றவியல் மேல்முறையீடுகளை ஒரே ’பெஞ்ச்’ விசாரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய தொடர்ச்சியால், பல்வேறு சம்பவங்களைக் கொண்ட பல்வேறு நிகழ்வுகளுக்கான முழுத்தன்மையை நீதிமன்றம் எளிதாக அறிந்திருக்க முடியும்.

இருப்பினும் மிகப் பெரும் சிரத்தை எடுத்து இந்த நீதிமன்றத்திற்கு சம்பவங்கள் நடந்தது பற்றியும் இவை நடந்த காலம் பற்றியும் மிகச்சரியாக முழு விவரத்தையும் அளித்த மதிப்புக்குரிய அரசு வழக்கறிஞருக்கும் எதிர்த்தரப்பு வழக்கறிஞருக்கும் நாங்கள் மிகுந்த நன்றியுடையவர்களாவோம்.” 

முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக 11.4.1968ம் தேதி மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் முழுவதையும் தங்கள் தீர்ப்பில் மேற்கோள் காட்டினர். 95 பக்கம் தட்டச்சு செய்த அத்தீர்ப்பில் இக்கடிதம் மட்டும் மூன்று பக்கங்களை ஆக்கரமித்துக் கொண்டது. அதைப் பற்றி தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

”இதுவே ”மாவோயிஸத்தின் விளை நிலைமாகும்” என்பது முதல் எதிரியின் கருத்தாகும். சென்னை மாகாண முதலமைச்சருக்கு 11.4.1968 அன்று முதல் குற்றவாளியால் அனுப்பப்பட்ட மனுவில் (தட்டச்சு செய்யப்பட்ட தொகுப்பு பக்கம் 64 பார்க்க) இது முதல் எதிரி கூறியுள்ள புகார்”

கடிதத்தை முழுவதுமாக பதிவு செய்த நீதிபதிகள்,  அது குறித்த தங்களது கருத்தையும் இவ்வாறு பதிவு செய்தனர்:

”மனுதாரர் தனது பாதுகாப்பு மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து ஐயுற்று அச்சம் கொண்டிருக்கிறார். அவர் இப்போதெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். மனுதாரருக்கு எதிரான, திட்டமிடப்பட்டுள்ள, அலைவீசும் வன்முறையை சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் படையினர் எதிர்கொண்டு தடுத்து நிறுத்தா விட்டால் மனுதாரர் ஒரு நடைபிணமாகத்தான் இருப்பார்.”

நெல் உற்பத்தியாளர் சங்கம் முதலமைச்சருக்கு எழுதியதாக சொல்லப்பட்ட இக்கடிதம் விசாரணை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு ஆவணமாகவோ அல்லது  எதிர் தரப்பு ஆவணமாகவோ பதிவு செய்யப்படாத ஒன்று. குற்றவியல் மேல்முறையீட்டில் கீழமை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது பதிவு செய்யப்படாத ஆவணங்களை மேற்கோள் கூட காட்ட முடியாது.

இந்த ஆவணத்தை நீதிபதிகள் தீர்ப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் குறிப்பிட்டதோடு, அவர் மீது பொய்க்குற்றம் சாட்டுவதற்கு இடது கம்யூனிஸ்டு விவசாய சங்கத்திற்குத் தேவை இருந்தது என்று தீர்ப்பின் ஒரு பகுதியில் கூறியுள்ளனர்:

”முதல் குற்றவாளியான நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவருக்கும் இடது கம்யூனிஸ்ட் கிசான்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதான சந்தேகத்தையுமு் இடதுகம்யூனிஸ்டுகள் தம்மை குற்றவழக்குகளில் வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி செய்வதையும் குறிப்பிட்டு இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் முதல் குற்றவாளி சென்னை மாகாண முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்ததையும் கூட நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம்.

இவ்வாறு பரஸ்பரம் சந்தேகமும் பகைமையும் கொண்ட மனநிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியைச் சிக்கவைக்கும் எண்ணத்திற்குத் தடைபோடுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 42 அப்பாவிகளின் சோகமான கொலைப் பழியையும், அதேபோல் துப்பாக்கிக் குண்டுகள், அரிவாள்கள், சுளுக்கிகள், தடிக்கம்புகள் ஆகியவற்றால் மற்றப் பலர் காயப்படுத்தப்பட்ட குற்றத்தையும் அவர் மீது சுமத்தாமல் இருப்பதும் கிசான்களுக்கு சிரமமாகவே இருந்திருக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பாக பல முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் பக்கத்து கிராமத்திற்கு வந்துள்ளனர். கீழ்வெண்மணியில் நிகழ்ந்த சோக சம்பவம் பற்றி மிகுதியாக அவர்கள் விவாதித்திருக்க வேண்டும்.”

முதல் எதிரியான கோபாலகிருஷ்ண நாயுடு மீதும், அவர் சார்ந்தவர்கள் மீதும் விவசாய சங்கத்திற்கு பகை இருந்தது என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் கலவரத்தில் நேரில் ஈடுபட்டு, குடிசைகளுக்குத் தீ வைத்துத் துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தபோதும் அதிர்ச்சி அடையும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டனர்:-

”மேலும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதார்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள்.  முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. 

இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்து வந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது.

தங்களுக்கென்று ஏராளமான நிலங்களைக் கொண்டுள்ள மிராசுதாரர்கள். மூர்க்கமான மற்றும் பட்டினி கிடக்கிற தொழிலாளர்களை விட அதிகம் பாதுகாப்புடனே இருப்பார்கள். மிராசுதாரர்கள் பின்னால் இருந்து கொண்டு கூலிக்கு அமர்த்திய தங்களின் கையாட்களைக் கொண்டே பல குற்றங்களைச் செய்வார்கள் என்றே எவரும் எதிர்பார்ப்பார்கள்.”

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதல் எதிரியான கோபாலகிருஷ்ண நாயுடு  குடிசைகளுக்குத் தீ வைக்கவும் இல்லை, துப்பாக்கியால் சுடவுமில்லை என்ற முடிவுக்கு வந்ததுடன், அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்பதற்கான ’அலிபி’யையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். விவசாய சங்கத் தோழர்களின் சாட்சிகள் இடது கம்யூனிஸ்ட் தலைவர்களின் தூண்டுதலின் பேரில் தயார் செய்யப்பட்டதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

உண்மையில் டிசம்பர் கடைசி வாரத்தில் கொச்சியில் நடைபெற்ற கட்சி மாநாட்டிற்கு அனைத்து உள்ளுர் தலைவர்களும் பிரதிநிதிகளாக சென்றிருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் விசாரணை நடத்தி 46 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும், குறுக்கு விசாரணையையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, கோபாலகிருஷ்ணனின் ’அலிபி’யை நிராகரித்ததுடன் (பத்தி: 177) , அவர் ஒவ்வொரு சம்பவத்திலும் இருந்ததை, சாட்சியங்களுடன் இருந்ததைக் கூறியதுடன், அவருக்கும், இதர பண்ணையார்களுக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தற்கு இவ்வாறு காரணம் கூறியிருக்கிறார்:

”இந்தக் குற்றவாளிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வீடுகளுக்கு திட்டமிட்டே தீ வைத்திருக்கிறார்கள்; தீயிடல் மூலம் மூன்று தெருக்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டு இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாயிகளைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள்; மேலும் கொடுங்காயமும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

இந்தக் குற்றவாளிகள் தீ வைத்தது தொடர்பான சம்பவத்தில் 42 அப்பாவி மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் அச்சம் தரும் தண்டனை தேவை என்பது என் கருத்தாக உள்ளது.”

44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டது தவிர, சில முன்னணி ஊழியர்களுக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் பட்டிருந்ததை யாரும் மறுக்கவில்லை. சம்பவம் நடந்ததற்கு ஒரு மாதம் முன்னராகவே அக்கிராமங்களைச் சுற்றி சிறப்புக் காவல்படை நிறுத்தப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்னரே விவசாய சங்கத் தலைவர்கள் 500 கி.மீ தொலைவிலுள்ள கொச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று விட்டனர்.

சம்பவம் நடந்த பிறகு அடுத்த நாளே காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.மற்றும் டி.ஐ.ஜி, எஸ்.பி.) இவர்களெல்லாம் அங்கு முகாமிட்டுள்ளனர். கிராமத்திற்குள் எவரையும் அனுமதிக்கவில்லை.

இச்சூழ்நிலையில் முக்கியமான சாட்சிகளை விவசாய சங்கத் தலைவர்கள் தூண்டிப் பொய் வாக்குமூலம் கொடுத்திருப்பார்கள் என்றும், கோபாலகிருஷ்ண நாயுடுவை வேண்டுமென்றே வழக்கில் மாட்டவைப்பதற்காகக் காவல்துறை வழக்கில் வாக்குமூலங்கள் பதிவு செய்து காலதாமதமாகச் செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ள தீர்ப்பு ஆதாரமின்றியே வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை ஆய்வாளர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு நடக்கும்போது வழக்கு ஆவணங்களுடன் உயர்நீதிமன்ற பப்ளிக் ப்ராசிகியூட்டருக்கு உதவும் வண்ணம் நேரில் ஆஜராகி இருந்தார். அவரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விட்டுவைக்கவில்லை. வழக்கு விசாரணையின் போதே அவரைக் கூப்பிட்டு கேள்விகளைத் தொடுத்துள்ளனர். அவர் கொடுத்த பதில்கள் நம்பக்கூடியதாக இல்லையென்றும் தங்கள் தீர்ப்பில் இவ்வாறு பதிவு செய்தனர் :

”விசாரணை நீதிமன்றத்தில் இந்தத் தாமதம் பற்றிக் குறிப்பாக விசாரணை செய்த ஆய்வாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மைதான். விசாரணை செய்த ஆய்வாளர் மேல் முறையீடு தொடர்பான விவாதம் முழுமைக்கும் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

மிக அதிகமான தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தைக் கேட்டுச் சொல்லுமாறு மதிப்பிற்குரிய அரசு வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது....அ.சா.ஆ.1ஐ உடனடியாக சப் - மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்புவதற்கு அந்த கிராமத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை தடையாக இருந்தது என்பது விசாரணை அதிகாரி அளித்துள்ள இரண்டாவது விளக்கமாகும்.... அ.சா.ஆ.1 பெறப்பட்டதாகக் கூறப்படும் இரவு 11 மணிக்குப் பிறகு ஒரு சிறப்புத் தகவலாளர் மூலம் உடனடியாக அனுப்பியிருந்தால் அவர் பேருந்து மூலம் அல்லது நடந்தே நாகப்பட்டினத்திற்குச் சென்று 26.12.198 அன்று அதிகாலையில் அந்த அறிக்கையை உதவிக் குற்றவியல் நடுவரிடம் அளித்திருக்க முடியும்.

காவல்துறையின் மூத்த அதிகாரிகள் 26.12.1968 அன்று காலை 9.30 மணிக்கு அந்த கிராமத்திற்கு வந்து விட்டார்கள் என்பது வெளிப்படையானது. கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பது வெளிப்படையானது. எனவே,  இதன் பிறகாவது அந்த கிராமத்தின் சட்டம் ஒழுங்கு சிக்கலிலிருந்து விடுபட்டதாக விசாரணை அதிகாரி கருதி, விரைவு அறிக்கையை குற்றவியல் நடுவருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.” 

இது போன்ற மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது    விசாரணை அதிகாரியை முக்கியமான சம்பவம் பற்றி விளக்கம் கேட்டு அதை நிராகரிப்பதும், விசாரணையின் போது பதிவு செய்யப்படாத ஆவணத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதும் உரிய நடைமுறைகள் அல்ல.

எந்தக் காவல் துறையின் விசாரணையை நீதிபதிகள் குறை கூறினார்களோ, அதே காவல் அதிகாரிகளின் விசாரணை நடைமுறையை சந்தேகிக்கும் வகையில் கோபால் வழக்கில் வாதாடப்பட்டது.

சாட்சியங்களின் வாக்குமூலங்களை காவல்நிலைய டைரியில் பதிவு செய்யாமல் தனித்தனி தாள்களில் எழுதி வாங்கியுள்ளதை் காட்டி வாக்குமூலங்கள் காவல்துறையால் மாற்றப்பட்டுள்ளன என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் கோபால் மேல்முறையீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.

கீழ்வெண்மணி கொலைவழக்கு மேல்முறையீட்டை 1973ல் விசாரித்த நீதிபதிகள் (வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் மற்றும் மகராஜன்)  கோபாலகிருஷ்ண நாயுடுவும் மற்ற குற்றவாளிகளும் போட்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவர்களது தண்டனையை ரத்து செய்தனர் (6.4.1973).  அதேசமயத்தில் அரசுத்தரப்பில் விடுதலையான குற்றவாளிகளுக்கு எதிராகப் போடப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

கீழ்வெண்மணி வழக்கில் மூன்று வருடம் கழித்து அரசு அப்பீல்:

நாட்டையே உலுக்கிய 44 பட்டியலின மக்களின் கொலைவழக்கு இந்த கதியில் முடிவுற்றும் அன்றைய அரசு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய சங்கங்களும் கொடுத்த நிர்ப்பந்தத்தினால் தி.மு.க அரசின் கடைசிக்காலத்தில் மூன்று வருடங்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கோபாலகிருஷ்ண நாயுடு கொலை:

கோபாலகிருஷ்ண நாயுடு, அவரது கூட்டாளிகள் போட்ட வழக்கில் மட்டுமே மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது 14.12.1980 தேதி கோபாலகிருஷ்ண நாயுடு இரிஞ்சூர் கிராமத்தில் கொலை செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மேல்முறையீடு செய்து 14 வருடங்கள் கழித்து வழக்கு 31.10.1990 அன்று இறுதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி எஸ்.ரங்கநாதன் தன்னுடைய பெரும்பான்மையான சர்வீசை வருமானவரித் தீர்ப்பாயத்தில் கழித்தவர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் நியமனம் செய்யப்பட்ட போது கூட அவர் குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்த வழக்குகள் வெகு சொற்பமே. அதே அமர்விலிருந்த நீதிபதி கே. ராமசாமி தனது சமூகநீதித் தீர்ப்புகளுக்காகப் பெயர்பெற்றவராகவிருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் பதவி உயர்வு பெற்று ஒரு வருடமே ஆனதனால் அமர்வில் அவர் இளையராக இருந்தார்.

தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் லலித் அன்று ஆஜராகவில்லை. பதிலாக தமிழக அரசின் வழக்கறிஞர் அன்று மாலை 45 நிமிடம் வாதிட்டதாக உச்சநீதிமன்றப் பதிவேடு கூறுகிறது. மறுநாள் மீண்டும் அவ்வழக்கு பிற்பகல் 12 மணிக்கு வந்தபோது மூத்த வக்கீல் 15 நிமிடம் பேசியதாகவும், குற்றவாளிகளின் வக்கீல்  முற்பகலில் 45 நிமிடமும், மதிய உணவு இடைவேளைக்குப் பின் 15 நிமிடமும் வாதிட்டதாகவும் பதிவேடுகள் காட்டுகின்றன.

ஆக தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் மொத்தத்தில் இரண்டு மணி நேரம் இருதரப்பையும் கேட்டு நீதிமன்றத்திலேயே தங்களுடைய மூன்று பக்க தீர்ப்பைக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அவ்வழக்கின் தீர்ப்பில் அரசு மேல்முறையீட்டு வக்கீலின் வாதம் 10 வரிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் வாதாடிய வக்கீல் தான் என்ன வழக்குக்காக வாதாடினோம் என்பது கூட தெரியாமல் வாதாடி இருக்கிறார். அதேபோல் குற்றவாளிகள் தரப்பில் எதிர்வாதம் 14 வரிகளில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஒருமித்த கருத்து கூறியிருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மேல்முறையீட்டு அதிகாரத்தின் கீழ் இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

உண்மை என்னவென்றால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகளை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்து புதிய காரணங்களைக் கூறிக் குற்றவாளிகளை விடுதலை செய்தது என்பதுதான். அது எப்படி இரு நீதிமன்றங்களின் ஒத்த கருத்தொற்றுமையாகும்? இப்படியாக 1968ஆம் வருடக் கடைசியில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரும் படுகொலைகள் 22 ஆண்டுகள் கழித்து 1990ஆம் வருடக் கடைசியில், குற்றவாளிகளைத் தண்டனையின்றி தப்ப விட்ட சோகமான நிகழ்வு நடந்தேறியது.

தீர்ப்பு கண்டனத்துக்குள்ளாகியது:

தோழர் ஜி.வீரய்யன் ”நின்று கெடுத்த நீதி” என்ற நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

”இந்தத் தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம்தான் சாயும் என்பது உறுதியாகியுள்ளது.

முன்பே குறிப்பிட்டது போல் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள் 23 வீடுகளைத் தீக்கிரையாக்கியவர்கள், துப்பாக்கியால் சுட்டு 33 குண்டுகளுடன் 14 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியவர்கள் யார்? இவ்வளவு பாதிப்புக்கும் ஆளானவர்கள் ஏழைகள்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று நமது நாட்டுச் சட்டங்களால் நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் இவர்கள் இதைச் செய்தார்கள் என்று நீதிமன்றங்கள் ஏற்காது”                                                                       

இதைத்தான் மனுசங்கடா என்ற தனது கவிதையில் இன்குலாப்      

சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயில் வேகுது

ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணெய ஊத்துது

என்று எழுதினார்.

வரலாற்றுப் பிழைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதே முறை:

வரலாற்றில் பிழைகள் பல நடந்ததுண்டு. அவற்றில் சிலவற்றிற்காவது தவறு செய்த நாடுகள் / அரசுகள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டிஷ் அரசு பல வருடங்கள் கழித்து வருத்தம் தெரிவித்தது.

நீதிமன்றங்கள் மனித உரிமைகளைப் பறிக்கும் படியான தங்களது தீர்ப்புகளுக்கு வருத்தம் தெரிவித்ததில்லை. நெருக்கடி நிலையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டாலும் நீதிமன்றங்களை அணுக முடியாது, அடிப்படை உரிமைகள் தாற்காலிகமாக ரத்து செ்யயப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் அளித்த .டி.எம். ஜபல்பூர் என்ற வழக்குத் தீர்ப்பு சட்ட நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு ஒரு முறை உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி அதற்காக பகிரங்க மன்னிப்பு கூடக் கேட்டார். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதார் அட்டையின் சட்டப்பூர்வத் தன்மையை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏ.டி.எம். ஜபல்பூர் தீர்ப்பு தவறு என்று அறிவித்தது (புட்டசாமி, 2018).

சமீபத்தில் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்ததே தவறென்றும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் அறிவிக்கக் கோரி 44 ஆண்டுகளுக்குப் பின் போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சமூகக் கொடுமைகளின் வரலாற்றில் உலகம் முழுவதும் பதிவாகி விட்ட கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கின் அநீதியை நீதிமன்றங்கள் இன்று வரை களையவில்லை.

அடித்தள மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் கீழ்வெண்மணி வழக்கில் அளித்த தீர்ப்பு தவறு என்பதை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவிப்பதே அம்மக்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். செய்வார்களா?

- கே.சந்துரு

Pin It