இந்து மதம்

periyar 231இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை இந்து மதம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.

இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று கூடச் சொல்லலாம். இஸ்லாமியரையும் கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமூகத்திற்கு எதிறாய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டீஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமான நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்து மதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் “தீண்டாதாரும்” இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும் சுதந்திரமில்லாமலும் நடத்தப்படுகிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும் இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.

இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமானதென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமூக எண்ணிக்கையிலும் பெருக்கம் ஏற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம் கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மத சமூக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அது போலவே வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமூக எண்ணிக்கையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ் விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம் - கிறிஸ்து மதங்களுக்கு லாபமே யாகும் ஆகையால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும் அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும் பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

(குடி அரசு - கட்டுரை - 07.06.1931)

Pin It