தமிழ்க் கவிதையின் தளம் பெண் கவிஞர்களின் வருகைக்குப் பிறகு முற்றிலும் புதிய தளத்திற்கு நகர்ந்திருக்கிறது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்தப் பெண்மொழி, தேவையற்ற ஒன்றா? பெண் மொழி என்பதுதான் என்ன? உங்கள் கவிதைகள் குறித்துதான் நிறைய சர்ச்சைகள் - அதுவும் இதை வரவேற்கக்கூடிய பெண்கவிஞர்கள் மத்தியிலேயே - விமர்சனங்கள் எழுந்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கவிதையின் பெண் மொழி நுட்பம் குறித்துச் சொல்லுங்கள்.

இப்போதும் பெண், தந்தையாதிக்க நிறுவனங்களில் செருகி வைக்கப்பட்டு குறிப்பிட்ட மார்க்கத்தில் மட்டும் செயல்படும்படி நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். அவளின் விருப்பங்களைப் புறந்தள்ளிவிட்டு எதிராகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்தில் அவளுடைய தகுதிநிலையும், வாழ்க்கையில் பணிப்பகிர்வும் வரையறுக்கப்ப பட்டிருக்கின்றன. இத்தகைய நிறுவனங்களிலும் சமூக நிலை நிறுத்தல்களிலும் அவள் சுற்றிக் கொண்டிருக்கும் வரை அவளுக்கான விடுதலை என்பது கனவே. எனவே கற்பிதங்களாலும் ஆணாதிக்கக் கருத்துருக்களாலும் ஆன விலங்கை ஒடித்தெறிந்துவிட்டு அவள் தனித்துச் செயல்படும்போதுதான் பெண்களுக்கான விடுதலை சாத்தியம்.

சமூகத் தளத்திலும் குடும்ப அமைப்பிலும் ஆணதிகாரம் மற்றும் ஆண் ஆளுகையிலிருந்து விடுபட்டு தனித்துச் செயல்பட அவள் துணிச்சலுடன் முன்வர வேண்டும். நீர்த்த மரபுகளிலிருந்து மேலெழும்பி வரும் பெண்களை,சமூகம் மோசமான பிரதிமைகளாக முன்வைக்கிறது. பெண்களைக் கலாச்சார பிம்பங்களாகவே வைத்திருக்க பிரயத்னப்படுகிறது. ஏனெனில் அங்கு பால்சார்ந்த அவளுடல் காரணமாக அமைந்து விடுகிறது. பெண் எந்த நிலையிலும் தனித்துச் செயல்பட இயலாத சூழலுக்கு அவளது உடலே அவளைத் தள்ளிவிடுகிறது. அதுவே ஆணின் அதிகாரம் ஆளுமை சார்ந்ததாகவும் மாறிவிடுகிறது. எனவே அவள் அதிலிருந்து மீறி வெளிப்படவேண்டுமானால் பெண்ணின் உடலரசியல், உடலதிகாரம் அவளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உடலதிகாரம் என்பதை முன்வைக்கும் போது அவளது உடலும் பாலியல் உறவும் கவனம் பெறுகின்றன.

பாலியல் விடுதலை சாத்தியமாகும் போது, பெண் மறுஉற்பத்தியைக்கூட உள்ளடக்கிய தேர்வுரிமை பெறுபவளாகிறாள். நம் இயற்கைப் பிரிவுச் சூழலில் கலாச்சாரப் போர்வைக்கும் பெண் சுற்றி வைக்கப்பட்டிருந்தாலும் கூட ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் அந்தரங்கம் அவர்களின் சுயம், அவர்களுக்கான வெளி அனுபவம் அவற்றை உணர்த்த வேண்டிய காலச்சூழல் தகுந்த காலநேரம் ஆகியவற்றை பெண்கள் உணர்ந்து கொண்டதாலும், பற்றிக் கொண்டதாலும் மிகச்சமீப காலத்தில் பெண்ணியம் வேறுதளத்திற்கு நகர்ந்திருக்கிறது என்றே சொல்லாம். அரசியல் சார்ந்த பிரிவுகள் இயற்கைப் பிரிவுகளாக விரியும்போது அதன் பரப்பு கூடுவதைப் போல தன்னுடலைக் குடும்பக் கட்டமைப்பிலிருந்து மீட்டு திரிந்தச் சமூகத் தளத்திலும் பின்னர் தனக்கான வெளியிலும் பயணிக்கச் செய்யும் போது பெண்கள் எழுதுவதற்கான தேவையும் வீரியமும் அதிகரிக்கின்றன. அந்தரங்க வலியிலிருந்து அது தொடங்கும்போது லிங்கமையவாத கருத்தாக்கம் அடிபட்டுப் போவதைக் காணச்சகியாத ஆணாதிக்க வாதிகளுக்கு பெண் எழுத்து காமஇச்சையாக ஆபாசக் காட்சியாகத் தெரிவதும் பெண்களை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு பெண்கள் மீதான ஆண்களின் கலாச்சார மதிப்பீடும், அதையே வணிகமாக்கி காசுபார்க்கும் பத்திரிகைகளும் இலக்கியத்தின் சாபக்கேடுகள்.

பெண்மொழி என்பது கட்டமைக்கப்படுவதன்று. கட்டுடைக்கப்படுவது. ஆணியப்பார்வைக்கு எதிராக பெண்களால் மட்டுமல்ல ஆண்களாலும் கிள்ளிப் போடப்படுகின்ற ஒவ்வொரு எழுத்தும் பெண்மொழிதான். பெண்மொழியை இதுதான் என்று குறுக்கிவிடாமல், அதன் விரிவுக்கு இடம்தருதல் ஆரேக்கியமானது.

பெண்ணுடலை அதற்கான வெளிக்கோ, இன்னொரு உலகுக்கோ மீளாய்வு மதீப்பிட்டிற்கோ கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் கூட, உடல்விடுதலை அடைதல் அடிப்படை. எனவே என்னுடைய எழுத்துகள் உடலிலிருந்து பாலியல் உறவிலிருந்து பெண்ணுடலை ஆணுக்கு வழங்கும் வலியிலிருந்து மறுஉற்பத்தியை தேர்வுசெய்யும் உரிமையிலிருந்து பயணித்து தனக்கான வெளியில் உலவுவதை ஊடாட்டமாக கொண்டிருக்கின்றன.

பெண்ணுடலை ஆணிடமிருந்து மீட்டுக் கொண்டு வரும் பட்சத்தில், அவ்வுடல் அங்கு என்னவாக இருந்தது, எப்படி பயன்படுத்தப் பட்டுள்ளது, அவ்வுடலின் தற்போதைய தேடல் எதுவாக இருக்க வேண்டும், எதை நோக்கிய பயணம் என்றெல்லாம் பார்க்கும்போது எழுத்தில் பாலியலும் முக்கிய அம்சம் பெறுகிறது. இதைக் குறித்து சர்ச்சையும் விமர்சனமும் சக பெண்கவிகளிடையே ஏற்படுகிறதென்றால் புனைவாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆணாதிக்க மரபுகளை உடைக்க மனமின்றி உடன்பட்டு ஆண்மூளையோடு உலாவரும் அவர்களைக் கணக்கில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

Pin It