நூற்றாண்டு நினைவுக் கட்டுரை
தமிழ்ப் புதின இலக்கிய உலகில் சமுதாய உணர்வோடு எழுதுபவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு எழுதும் புதின ஆசிரியர்களில் ராஜம் கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க ஒருவர்.
தமிழ் நாவல் உலகில் சுமார் 60 ஆண்டு காலம் தன் எழுத்துக்களால் பலரது கவனத்தைக் கவர்ந்தவர். திருமதி.ராஜம் கிருஷ்ணன். நாவல்-சிறுகதை-கட்டுரை வானொலி, நாடகம் என்று பரந்துபட்ட படைப்புகள் அவருடையவை.
சாகித்ய அகாடமி விருது, சோவியத் நாடு நேரு விருது, சரஸ்வதி நஞ்சங்கோடு திருமலாம்பாள் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது போன்ற பல தேசிய விருதுகளைப் பெற்றவர் அவர்.
இடதுசாரிப் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவராகவும் செயல்பட்டவர் ராஜம் கிருஷ்ணன்.
தன் ஒவ்வொரு படைப்பையும் திட்டமிட்டு ராஜம் கிருஷ்ணன் உருவாக்கினார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் கள ஆய்வுகள் செய்து படைப்புள் உருவாக்கியவர் அவர். பெண் உரிமைக்கான மாநாடுகள் - பேரணிகள்- ஆய்வுக் கட்டுரைகள் - பயணங்கள் எனப் பரபரப்பாக இயங்கியவர் ராஜம் கிருஷ்ணன்
தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகமாகப் பெண்களைப் பற்றிச் சித்தித்தவர் ராஜம் கிருஷ்ணன். சுருக்கமாகக் கூறினால் பெண் விடுதலை பற்றி எல்லா நாவல்களிலும் அவர் பேசுகிறார். அவர் படைத்துள்ள பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவர்கள். பெண் விடுதலை பற்றிய அவரது கருத்துகள் தெளிவானவை; துணிச்சல் மிகுந்தவை.
அவரின் பெரும்பாலான படைப்புகள் மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கப் பட்டவர்களாகவும் விலகியவர்களாகவும் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுடன் அவர்களின் அவல வாழ்க்கையையும் பேசின.
சிறுகதைகள் மூலமே அவரின் எழுத்துப்பயணம் தொடங்கியது. பின்னால் நாவல் எழுத்தாளராக மாறினார் அவர். கள ஆய்வு முறையிலான எழுத்து வடிவத்தைத் தமிழில் தொடங்கி வெற்றி பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். ஆனால் இம்முறையை அப்போதைய எழுத்தாளர்கள் பலரும் கடும் விமர்சனத்துக்கு உள்படுத்தினார்கள்.
ராஜம் கிருஷ்ணன் எழுத்துலகில் அடியெடுத்துவைத்த காலம், இந்தியா விடுதலை பெற்றிருந்த காலமாகும். தேச பக்தி உணர்வு மேலோங்கி நின்ற காலம் அது. அந்த உணர்வுகள் காரணமாக சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த பல முரண்பாடுகள் அதிகம் வெளியில் தெரியாமல் இருந்தன. அதில் நாட்டு விடுதலை, பிறகு சமுதாய விடுதலை என்ற லட்சியத்தில் காங்கிரஸ் இயக்கமும், பொது உடைமை இயக்கமும் ஒன்றுபட்டு உழைத்த நேரம் அது.
அதே சமயத்தில் திராவிட இயக்கம் தமிழ் இன வாதத்தினைப் பற்றி பேசத் தொடங்கியிருந்தது. வர்க்க முரண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்தன. இவற்றின் விளைவாக தொழிற்சங்க இயக்கமும் தமிழ் நாட்டில் வளர்ந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் போராட்டமும், விவசாயிகள் போராட்டமும் வேகமாக நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. சாதி ஒழிப்பு - மூட நம்பிக்கை ஒழிப்பு - பெண் விடுதலை போன்ற கருத்துகள் பற்றிப் பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த இயக்கங்களின் தாக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றன.
ராஜம் கிருஷ்ணன் எழுதத் தொடங்கியது இக்காலம். இக்காலத்தில் பல பெண் எழுத்தாளர்களும் பிரபலமாயிருந்தனர். இவர்களில் வை.மு.கோதை நாயகி அம்மாள் - அனுத்தமா - சரோஜா ராமமூர்த்தி - கி.சாவித்திரி அம்மாள் போன்றவர்கள் பிரபலமானவர்கள். இவர்களது படைப்புகள் பெண்களை மையமாகக் கொண்டிருந்தன.
ஆனால் அறிவுப் பூர்வமாக அதனை வெளிப்படுத்தும் கருத்தியல் நோக்கு இவர்களிடம் இல்லை. இது அவர்களுக்குள்ள குறையல்ல. இவர்கள் பெண் பற்றிய சிந்தனையை வளர்த்ததே ஒரு முற்போக்கான செயலாகும்.
இவர்கள் எழுதி பிரபலமாக இருந்த காலத்தில் ராஜம் கிருஷ்ணன் எழுத்து உலகில் அடியெடுத்து வைத்தார்.
மேலே குறிப்பிட்ட படைப்பாளிகள் எவரும் இலக்கியம் பற்றி சமுதாயம் பற்றி ஒரு திட்டவட்டமான கொள்கை இல்லாதவர்கள். எனவே,இவர்கள் படைப்பு என்பதை கற்பனை மூலமே உருவாக்க முடியும் என்ற நோக்கு உள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் படைப்புகளை செண்டிமெண்டல் படைப்புகள் என்று வகைப்படுத்துவர்.
ராஜம் கிருஷ்ணன் ஒரு எதார்த்தப் படைப்பாளர். பிரச்சினைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டு உணர்ந்து எழுதிய முதல் எழுத்தாளர் இவர். பல போராட்டங்களுக்கும் போய் கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டு எழுத்தாக்கிய முதல் பெண் எழுத்தாளர் இவர். இந்த வகையில் இவர் ஒரு யதார்த்த இலக்கிய முன்னோடி. அவர் படைப்புகள் அழுத்தமானவை காலத்தால் அழியாதவை.