தமிழில் கவிதையின் வீச்சு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் எழுந்திருக்கிறது. பெண்கள் தங்கள் பெண்மொழியைக் கவிதையாக மாற்றியதால்தான் தமிழ்க் கவிதையின் வீச்சு முன்னேறியதா? பெண் கவிஞர்கள் பாலியல் விழைவுகளைக் கவிதையாக்கும் போது கத்திமேல் நடப்பதுபோல் சற்றே பிசகினாலும் வணிக ஊடகங்கள் பிரச்சாரம் செய்வதுபோல மோசமான தளத்துக்குச் சரிந்து போகும் அபாயம் நேர்கிறது. பெண் மொழியின் நுட்பம் குறித்துச் சொல்லுங்கள்.

பெண்மொழி என்பதை பெண்களின் பாலியல் விளைவுகளை மொழிப்படுத்தும் செயலாக குறுக்கப்பட்டுவிடும் அபாயம் இன்று நேர்ந்து கொண்டிருக்கிறது. பெண் இருப்பு சார்ந்த சமூக வாழ்வியல் நெருக்கடிகளையும் அவள் மீது திணிக்கப்பட்ட மதிப்பீடுகளையும் பற்றிப் பேசுவது. அதற்கான மாற்று மதிப்பீடுகளை உருவாக்குவது. தனக்கென வெளியையும் காலத்தையும் சமூக மதிப்பீட்டு வரையறைகளை மீறி மொழிக்குள் கட்டமைப்பதுதான் பெண் மொழி. அதில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை மதிப்பீடுகளையும் சுமத்தப்பட்ட கடமைகளையும் மொழிக்குள் குலைக்கத் தொடங்குகிறீர்கள். இது நிகழும் போது நீங்கள் இந்த ஆணாதிக்க சமூகத்துக்கு எதிரானவராக உங்கள் எழுத்தால் நிறுத்தப்படுவீர்கள். இவ்வரசியல் மொழி பெண் மொழியாக உருவாக முடியும்.

1995 க்கு பிறகு வெளியான பெண் கவிஞர்கள் கவிதைகள், பெண்களின் இருப்புச் சார்ந்த வெளியையும் காலத்தையும் பேசத்துவங்கியதியதால் உருவான எழுச்சி இது. அதிகமாக பெண் இருத்தலின் நசிவு குறித்தும் பெண் மீது திணிக்கப்படும் தாம்பத்திய உறவின் வன்முறை குறித்தும் அப்போது எழுதத் தொடங்கினார்கள். குடும்பத்திற்குள் நிகழும் ஆண் பெண் உறவில் எழும் முரண் முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழில் பதிவாகத் தொடங்கியதும் ஒரு காரணம். பெண் தன் காதலைக் குறித்து சமூகத் தடைகளை மீறி பேச முடிந்தது. இது ஒரு கட்டம். இந்த முதல் கட்டத்தை மீறி அடுத்த கட்ட அரசியலை நோக்கி பெண்மொழி நகரத்துவங்க ஆரம்பித்துள்ளது. பெண் தன் உடலை ஆணுக்குக் கொடுப்பதற்கான பாலியலி சொல்லாடல்களை கவிதைக்குள் கட்டமைப்பதும் ஆண்மொழிதான்.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் எந்த ஆணும் சமூக மதிப்பீடுகளிலிருந்து முற்றாக வெளியேறியவன் அல்ல.

பெண் கவிதைக்குள் ஒரு கனவுக் காதலனைத் தருவிக்கும்போது, அவனுடன் சேர்ந்து சமூக நிறுவனங்களின் மொத்த வன்முறையும் கவிதைக்குள் உங்கள் அனுமதி கோராமலே அத்துமீறி உள் நுழைந்து விடுகிறது. ஆண் உடல் சுதந்திரமாகப் பெண் உடலை ஆலிங்கனம் செய்ய கவிதைக்குள் உலவவிடுவது பெண்ணின் இருப்பையும் ஆளுமையையும் விடுதலையையும் இழிவு படுத்தும் செயலாகும். இதை நான சொல்வதால் சக பெண்கவிகளே என்னை எதிரியாகப் பாவிக்கிறார்கள். என் எழுத்துக்களின் மூலம் பெண்ணை இந்த சமூக வெளியிலிருந்து மீட்டெடுத்து கடத்திக் கொண்டு போகிறேன் மாற்றுலகுக்கு.

அப்பெண் தான் கடக்கும் வெளியையும் காலத்தையும் எனது கவிதைக்குள் பேசுகிறாள். உடல், மன துய்ப்பு இன்பம் என்பது ஆணை மட்டுமே மையப்படுத்தியது என்பதை என் கவிதைக்குள் மறுக்கிறேன். கவிதை என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கு பெண்ணிருப்பு என்பது பிரபஞ்சத்தின் மூலமாகத் தன்னை நிறுவி பரிபூரணியாக விகசிக்க வேண்டும்.

இதுவரை பெண் எழுத்தைப் பற்றி எவ்வித கவனப்படுத்தல்களும் அக்கறையும் கொள்ளாத வெகுசன ஊடகங்கள் பாலியல் என்பதை விற்பனைச் சரக்காகத்தான் பார்க்கின்றன. அதனால் இவ்வெழுத்தைப் பற்றிய தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இது கத்தி மேலேயோ கயிறு மேலேயோ நடக்கின்ற விசயம் இல்லை. உலகில் பேசப்படாத, எழுதப்படாத எந்த விசயத்தையும் இன்று பெண்கள் எழுதிவிடவில்லை. வெகுசன ஊடகங்களின் சர்ச்சை குறித்தெல்லாம் எழுத்தாளர்கள் கவலையடையத் தேவையில்லை. கவிதைக்குள் கட்டமையும் மதிப்பீடுகளை ஆராய்ந்து விமர்சிப்பதுதான் விமர்சனமாக முடியும். அதைத் தவிர்த்து எழுதும் பெண்ணின் அந்தரங்கமாக அக்கவிதையை வாசித்து அர்த்தம் கொள்வதென்பது வக்கிரத்தின் வரைமுறையற்ற ஆணாதிக்க வன்முறையைத்தான் வெளிப்படுத்துகிறது.

Pin It

தமிழ் மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்கள், மக்களின் கலாச்சார நிகழ்வுகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் இரண்டறக் கலந்திருக்கும் நிகழ்வை காலங்காலமாக கண்முன்னே விரித்துக் கொண்டேயிருக்கிறது வரலாறு.

கதைப்பாடல்களும், கதைச்சொல்களும் மக்களிடையே இறைமைக் கூறுகளைக் கட்டமைக்கிற அதே சமயத்தில், அதன் இன்னொரு பரிமாணம் அவர்களுக்குள் பேதத்தை உருவாக்கிவிடுகிற நிழ்வையும் ஒரு சில கதைப்பாடல்களில் உணரலாம். அது போன்ற ஒரு கதைப்பாடல்தான் பொன்னர் சங்கர் கதை என்னும் அண்ணமார் சாமி கதைப்பாடல்.

கொங்குநாட்டின் செழுமையான கிராமிய மரபில் காலூன்றி விசுவரூபம் கொண்டு எழுந்திருக்கும் இதன் கதைப்போக்கும், கதை சொல்லும் நுட்பத்தில் பொதிந்திருக்கும் கதை கேட்கவைக்கும் அபரிதமான ஆர்வமும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக்காட்சிகளும் மிகமிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டு, பாத்திரங்களாக வலம் வரும் பாங்கில் இந்த நாட்டுப்புறச் சொல்கதை, படிப்படியாக விரிவடைந்து பெருங்கதையாடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு கதைப்பாடல்கள் கிடைத்திருந்தாலும், கொங்கு நாட்டுப்பகுதியில் இந்த கதைப்பாடல் தவிற வேறெதுவும் கிடைத்ததற்கான சான்று இல்லை. இதன் கதைப்பின்னலில் மக்களின் கலாச்சார வாழ்வியல் கதையும்-வழிபாடுமாக பிணைந்து நிற்பதை, போன மாசி மாதத்தில் வீரப்பூரில் நடந்த பெரிய காண்டியம்மன் தேரோட்டத்தில் காணலாம்.

திருச்சி-கரூர் பக்கம் மணப்பாறை பகுதியான வீரப்பூர் காட்டில் இந்தத் திருவிழாநடக்கிறது. அந்த இடம் பொன்னி வளநாடு என்று அன்று அழைக்கப்பட்ட பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசிப்பௌர்ணமியன்று நடக்கும் இந்தத் திருவிழாவில் சாதிபேதமற்று எல்லா இனத்தவரும் பல்லாயிரக்கணக்கில் கூடிக் கொண்டாடுகின்றனர். எட்டுநாள் நடக்கும் இவ்விழாவில்,பரிவேட்டை, கிளிவேட்டை, அம்பு போடுதல் போன்ற நிகழ்வுகள் அரங்கேறும். இறைமையும் கதைமையும் இணைந்து இணைந்து தரிசனம் காட்டும் இவ்விழாவில் மக்கள் அணி அணியாய்த் திரளுவர். ஆனால், வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த விழாவில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. மீறிக் கலந்து கொண்டால் ரத்தம் கக்கி செத்துப் போவார்கள் என்பது அய்தீகம். மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் குடியிருக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தத் திருவிழா நடக்கும் தருணத்தில் முற்றிலும் வேறு ஊர்களுக்கு வெளியேறிவிடுவார்கள். இந்தச் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமல் அங்கேயே இருப்பவர்கள் செத்துப் போய்விடுவார்கள் என்பதும் அய்தீகம்.

மேலும் விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான ‘அம்புபோடும் நிகழ்வு’ நடைபெறும். அதில் பொன்னர் குதிரை மீது அம்பு ஏந்திக்கொண்டு ஆக்ரோஷமாகப் புறப்பட்டு அணியாப்பூர் என்னுமிடத்திற்குச் சென்று அன்பு போடுவார் (வேட்டுவபடை மீது அம்பு போடுவதாக அய்தீகம் அந்த அம்பாகப்பட்டது பாய்ந்து, ஏதாவது ஒரு இடத்திலுள்ள ஒரு வேட்டுவர் இறந்து போவார் என்பதும் அய்தீகம்) இந்த அய்தீகத்தை முன்வைத்து இந்த சமூகத்தவர்கள் யாரும் இந்த விழாவிலோ அல்லது வேறு செயல்பாடுகளிலோ கலந்து கொள்வதில்லை. அவர்களுக்குள் ஒரு அவலம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

மக்களின் கலாச்சார வாழ்வில் பிணைந்து உருவாகியுள்ள இந்த கதைப்பாடல், மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலமும் அதன் பல்வேறு பரிமாணங்களை ஆராய்வதன் மூலமும் இந்த அம்சத்தை கேள்விக்கு உட்படுத்தலாம்.

திருவிழாவிலும், அச்சுவடிவிலும், உடுக்கடிப்பாடல் வடிவிலும் சொல்லப்படும் அண்ணமார் கதைப் பாடலை முதலில் பார்க்கலாம்.

கொங்குவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த குன்னுடையாக் கவுண்டன் தனது பங்காளிகளால் ஏற்பட்ட சண்டையில் பொன்னி வளநாட்டுக்குக் குடிபெயர்கிறார். தெய்வ அருளால் அவருக்கு பொன்னர், சங்கர் என்று இரு ஆண்குழந்தைகளும், அருக்காணித்தங்காள் என்கிற பெண் குழந்தையும் பிறக்கிறது. பங்காளிகள் மறுபடி சூழ்ச்சி செய்து குழந்தைகளை கொல்லப் பார்க்கின்றனர். தெய்வ அருளால் தப்பிய குழந்தைகள் தலித்தான சாம்புகன் வீட்டில் மறைந்து வாழ்கின்றனர். அண்ணன்மார் பெரியவர்களானதும் அவர்களுடைய குலவரலாற்றைச் சொல்லி தாய் தந்தையிடம் சேர்ப்பிக்கிறான் சாம்புகன். பங்காளிகளின் சூழ்ச்சிகளை ஒழித்து பெற்றோருடன் சேர்ந்து செல்வாக்குடன் வாழ்கின்றனர் அண்ணன்மார்.

தலையூர்க் காளி என்கிற வேடுவ சிற்றரசன் அண்ணன்மாரின் அருக்காணித்தங்கத்தை பெண்டாளன் முயற்சிக்கிறான். தொடர்ந்து கொடுமைகள் செய்து கொண்டேயிருக்கிறான். அவனது காட்டுப்பன்றி அண்ணன் மாரின் வெள்ளாமைக் காட்டை அழிமாட்டம் செய்கிறது.

பெரியண்ணன் சின்னண்ணனிடம் அருக்காணித் தங்கம் முறையிட்டு தீமைகளைச் சொல்லியழ, அண்ணன்மார் போருக்குப் புறப்படுதல். அழிக்க முடியாத காட்டுப் பன்றியை அழித்தொழிக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த அரசன் போருக்கு ஆயத்தமாக, போர் நடக்கிறது. வேடுவர் படையை அழித்தொழிக்கிறார்கள் அண்ணன்மார். ஆனால், தலையூர்க் காளியின் சூழ்ச்சியால் பொன்னர் சங்கருக்கு மரணம் நேர்கிறது.
அருக்காணித் தங்கம் தங்களது குலதெய்வமான பெரியக் காண்டியம்மனை வேண்டி அண்ணன்மாரை உயிர்ப்பிக்க, அவர்களும் உயிர் பெற்றெழுந்து வந்து தங்காளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். பிறகு ‘மாண்டவர் மீண்டால் நாடு தாங்காது’ என்று சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார்கள். பத்தினியான தங்காள் சாபமிடுகிறாள்.

இந்தக் கதைப்பாடலின் பின்பகுதியை முற்றாக மறுக்கிறது, அச்சு வடிவம் பெறாத ஒரு சொல்கதை.
காட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேடுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்கப் பொங்க ஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான் அண்ணன்மார். வேடுவர்களின் குடியிருப்பான காட்டை அழித்து நிர்மூலமாக்கி வெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால், காட்டில் சுதந்தரமாகத் திரிந்த அவர்களது பன்றிகளும், விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்ன? தலையூர்க்காளிக்கும் அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண் இச்சையால் வந்த பகை அல்ல. மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
அண்ணன்மார் வேடுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டு, காளியிடம் போய்க்கதறி வேண்டுகிறான்.
உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்ட வெட்டத் தழையும் உன் குலம்’ என்று வரம் கொடுக்கிறாள். ஒரு வஞ்சகனை, பெண்பித்தனை கடவுள் எப்படி ஏற்றுக் கொண்டு வரம் கொடுக்கும்?
அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான் காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்து அவர்களை அடித்துப்போட்டு விட்டது.

அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, ‘காட்டைச் சீர்திருத்தி வெள்ளாமை செய்து பிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்... இதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டாள். காட்டுத்தெய்வமும் மனமிரங்கி ‘காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் என்ற அவச்சொல்லுக்கு ஆளானீர்கள். முழுக்க காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும், காட்டில் வசிக்கும் வேடர்களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக...’ என்று அண்ணன்மாரை உயிர்ப்பித்துவிட்டது.

இந்த இருபார்வைகளையும் முன் வைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதுவரை நிறைய ஆய்வுகள் வந்து கொண்டிருந்தாலும் காத்திரமான தளத்தை நோக்கி நகரவில்லை. ஆய்வியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பிரெண்டாபெக், சக்திக் கனல் போன்றோரின் கதைப்பிரதிகள் இவ்வாய்வு தளத்திலேயே செயல்படுகின்றன. இதுவரை அச்சு வடிவம் பெறாத மாற்றுக் கதைச் சொல்களையும், அச்சு வடிவமாக்கி ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்தச் செழுமை மிக்க கதைப்பாடல், மனித மனங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். உலக அளவிலான இலக்கியத் தளங்களில் தனது சுவடுகளைப் பதிக்கும்.

Pin It

நாவலிலிருந்து ஒரு பகுதி

இருளடையும் கரிய நாவுகளின் சுழட்டலில் சிலுசிலுப்பான கூதல் காற்று சிலும்பியது. எள்ளுச் செடியின் எண்ணெய்ப் பிசுக்கை உடலெங்கும் அப்பியிருந்தான் முனிசாமி. இரவின் ஒலி ஊளைகள் கசிந்து கொண்டிருந்தன. கண்களைத் துழாவிச் சுற்றிலுமாக நோட்டம் பார்த்தவன், அலையும் எண்ண ஓட்டங்களை ஒருங்கு குவித்து மேற்கு முகமாய்த் திரும்பி கருத்த இருளில் முகம் புதைத்துக் கும்பிட்டான். நடுச்சாமத்தின் தெய்வமான கருப்பராயனுக்கு தனது வலதுகையைக் கீறி குருதித் துளிகளைச் சிந்தியவாறே மனமொப்பி வேண்டினான். சற்றைக்கெல்லாம் கையின் காந்திய எரிச்சல் இரவின் மஞ்சு பட்டு மங்கியது. மெதுவாகக் கைகளை நீவிவிட்டுக் கொண்டு கனத்த காலடிகளை வீசிப்போட்டு நடக்க ஆரம்பித்தான்.

காலடியில் அலைவுறும் சருகுகளின் சரசரப்பு போர்த்தியிருந்த இருட்டை விலக்கிக் காட்டியது. கருநாவற்பழத்தின் வாகான திரேகம் அவனுக்கு. மையிருட்டோடு பொருந்தியிருந்த அவனது மத்தகத்திலும் மார்பிலும் அடைந்திருந்த வெம்மை துலங்கி, கண்கள் நின்றெரியும் சுளுந்துகளாய் மினுக்க, நைச்சியமான இருளினூடே அவனது காலின் ஒற்றைத் தண்டை மினுக்கிட்டாம் பூச்சியாய் வெளிச்சம் போட, கப்பியிருத்த கறுப்பைத் துளைத்து நடுச்சாமத்தின் வாடையை நுகர்ந்த வாறே நீண்டது அவனது காலடித்தடம்.

தூரத்தே ஒலித்த நாய்களின் குறைப்பில் அவனது கால்களின் விசை மட்டுப்பட்டது. மெதுவாக நடந்துபோய் அருகிலிருந்த சுமைதாங்கிக் கல்லின் மீது ஏறி உட்கார்ந்தான். நாய்களின் குறைப்பொலியில் கோம்பையின் வாடையடித்தது. உடலெங்கும் செங்குளவிகள் கொட்டும் வலி சொடுக்கியெடுக்க, கால்களை ஆட்டிக்கொண்டே இடுப்பிலிருந்த சிலும்பியை எடுத்து சுத்தம் செய்தான். காய்ந்த கஞ்சா இலைகளை உள்ளங்கையில் பரப்பி கட்டைவிரலில் பதமாக நிமிண்டி சிலும்பியில் கெட்டித்துப் பதமாகப் பற்றவைத்தான். கைகளைக் குவித்து ஆழமாய்ப் புகையை இழுத்ததில் கண்கள் ஜிவ்வென்று ஏறின.
நாய்களிலேயே போக்கிரியானது கோம்பை நாய்தான். இரவுக்கான ஆளுகையை தனதுபின்னங்கால் இடுக்குகளில் வைத்திருப்பதிலும், எதிராளியை நுட்பமாக மோப்பம் பிடிப்பதிலும், தருணம் பார்த்துப் பாய்ந்து கடித்துக் குதறுவதிலும் அபாரமான திறமைசாலி. ஓய்வு ஒழிச்சலின்றி சதா உறுமிக்கொண்டும், அலைந்து திரிந்து கொண்டும் இருக்கும் அது, குட்டியாயிருக்கும் போதே கோதும்பிகளை அரைத்துப் பாலோடு புகட்டி வளர்த்தும் முறையினால் கோதும்பிகளைப் போலவே ரீங்காரத்துடன் உறுமிக்கொண்டு எதிரிகளைத் துவம்சம் செய்யும். எங்கு போனாலும் விடாது துரத்தித் துரத்திக் கொட்டும் கோதும்பியின் மோப்பம் கோம்பையின் நீண்ட நாக்கில் எச்சியாய் ஒழுகும். ‘கோம்பையிடம் மாட்டினால் சூம்பைதான்’ என்ற சொலவம் ஞாபகத்தைக் கவ்வியது.

அந்தக் கோம்பை நாய்க்கும் தனக்கும் ஏதோ ஒரு புள்ளியில் ஒற்றுமை இழையோடுவதாகப் புலப்பட்டது அவனுக்கு. தன்னுடைய வளர்ப்பு முறையும் தாய்ப்பாலோடு அரைத்துப் புகட்டப்பட்ட கள்ளத்தனம் தானே... ஆழ்ந்து புகையை உள்ளிழுக்கும்போது சிலும்பியின் தீக்கங்கு கனன்றுதிர்ந்தது.

எல்லா மனிதருக்கும் ஆரவாரமாக பகலின் வெளிச்சத்தில் விடியும் வாழ்வியல் தனக்கும் கோம்பைக்கும் கருத்த வெளியில் இருண்மையாகிப் போன ஊழ்வினையின் சூத்திரத்தை ஒப்பிட்டுப்பார்த்தான். தனது நுகர்ச்சி பகலின் வெண்ணிறமேனியைவிடவும், இரவின் கறுத்த திரேகத்தையே மோப்பம் பிடிக்கிறது.

கால்களை ஆட்டிக் கொண்டே கடைசி இழுப்பை வழித்து சிலும்பியை வீசியெறிந்தான். எங்கோ தொலைந்த சத்தத்தில் முகம் புதைத்தவாறே கால்களை முன்னும் பின்னும் அசைத்தான். அந்தரத்தில் அசைகின்றன கால்கள். பாழ்வெளியின் அழகு அவனைத் தாவுகிறது. அது ஒரு மந்திரத்தன்மை கொண்ட தாலாட்டு. காலுக்குக் கீழே விலகிப் போகிறது நிலம். அந்தரவெளியில் அசைகிறது உடல். நிச்சலனத்தை உடைத்துக் கொண்டு அவனைச் சுற்றி உயரே எழும்புகிறது சூறை. ஆகாசமும் பூமியும் மாறிமாறிக் கண்களில் நிறைகின்றன. இரவும் பகலும் அசைந்து அசைந்து காட்சிகள் மறைந்து காலத்தின் நடுவே அவன் வீற்றிருக்கிற மாயாஜாலம் ஆடிக் கொண்டிருக்கிறது.

பகலில் ஒரு தோற்றத்துடன் தரிசனம் காட்டும் வெளி, இரவில் எதிர்தரிசனமாய் வேறு ஒரு தோற்றம் கொள்ளும் உருவாக்கத்தில் அதுவரையிலான பார்வைகள் அடியோடு மாற்றம் பெறும். பகலின் தூலத்தன்மை முற்றிலுமாக மறைந்து இரவில் சூக்குமம் கொள்ளும் அதே கணத்தில் சூக்குமமடைந்திருந்த புதிர்கள் தூலமாய் உயிர் பெறும். ஆன்மதிருட்டியில் உருமாறியிருக்கும் அபூர்வ தரிசனத்தை அவனால் அழகாக இனங்காண முடியும்.

மனிதத் தோற்றத்தில் படர்ந்த வெயிலின் வெம்மை மறைந்து போக, இருளின் மந்தாரத்தில் செந்நாய்களின் வாடையடிக்கிறது. மனித ஆகிருதியோடு கூடிய கிழநரியின் ஊளைகள் இருளில் சுழல்கின்றன. வாலிப நரம்புகளின் வெளிச்சம், திமிலைச் சிலுப்பிக் கொண்டேகும் பாய்ச்சலாக விடைக்கிறது இருளில். தூலமான மனித முகம் சிதைந்து சூக்குமமாய் கூம்பி நிற்க, முனையைக் கிழித்து நெட்டுக்குத்தாய் நிற்கும் இரண்டு பற்களின் வெண்மையில் வெயிலும், கருத்த இனுகிய சதையில் இருளும், தரிசனம் காட்டும் பாங்கில் அவனது கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.

இரண்டாவது சாமம் நெருங்கிக் கொண்டிருந்ததை சில்லிட்டுப்போன குளிரின் விசுவிசுப்பு உணர்த்தியது. காட்சிகளை மெதுவாக உதறி சுமைதாங்கிக் கல்லிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். சூறைக்காற்று இன்னும் சுழன்றாடியபடி அவனது கால்களைக் கவ்வி சருகுகளைக் கொண்டு வந்து கப்பிய அதே கணத்தில், அவனது இடதுகாலில் அணிந்திருந்த ஒற்றைத் தண்டை, அனாயசமாய் விலக்கிக் காலெட்டிப் போட்டது.
காத்துக் கருப்பு அண்டாமல் பாதுகாக்க அவன் உடலோடு கூடிய உறுப்பாகவே மாறிப்போயிருந்த அந்தக் கங்கணத்தின் விடைப்பு கெண்டைக்காலின் தசைகளில் விம்ம, அது ஒரு மந்திரக்காப்பு.

சூனியத்தால் கட்டப்பட்டு விட்ட வழித்தடம் புரண்டு கொடுத்ததில் சாலடித்துப்போகின்றன அவனது கால்க்குறடுகள். ஈரமண்ணைக் கீறியெடுத்துப் போடும் வாகாக, அவனது நடையில் துள்ளும் செம்மண் புழுதியில் சுழலுகிறது பாதுகாப்பு வளையம்.

செய்வினையின் சூன்ய வித்தைகள் கருவேலங் காற்றாய்ப் பிளறியெழுந்து வெளி முழுவதும் சுழன்றோடி அவனைச் சூழ்ந்து உள்ளிழுத்து விஷக் கொடுக்காய் வளைந்திருந்த இலந்தை முட்களின் கூரிய நாவுகள் நாக்கைச் சப்புக் கொட்டி நெளிந்தன. நாசியைத்தாக்கி தலை முழுவதும் கும்மென்றேகிய தாழையின் நெரி கால்க் கவசத்தைக் குடைந்தது.

சட்டென அவனிடமிருந்து அரவத்தின் நீண்ட இரைச்சல் வெளிப்பட, தாழை மடல்களுக்குள் நுழைந்து இலந்தை முட்களின் கூர்மையில் பில்லியின் மந்திரச் சொல்லை மாட்டிக் குருதி கிழித்து கருவேலங்காயை நிமிண்டிச் சாறெடுத்து தனது நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டான்.

எல்லாமே மறைகிறது. நீண்ட இருளில் நிச்சலனமாய்ப் படுத்திருந்தது செம்மண் பாதை. ஆசுவாசத்துடன் சுற்றிலும் பார்வையால் துழாவிக் கொண்டு, தண்டை குலுங்க நடையை வைத்தான்.

முதுகில் தொங்கிக் கொண்டிருந்த கன்னக்கோல் மெதுவாக ஒரு கூட்டாளியின் இதத்துடன் அசைந்து கொடுத்ததில் உற்சாகம் அலையடித்தது. அவனது கைகள் அதை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தன. அந்தத்தொடு உணர்வில் உயிருள்ள ஜீவனின் வெதுவெதுப்பு அவன் உள்ளங்கையில் ஓடிப்பரவியது.

அது அவன் அய்யா அவனுக்கு விட்டுச்சென்ற பங்காளி. தனது பிண்டத்திலிருந்து உயிர் பெற்றதைப் போன்ற அந்தக் கருத்த வஸ்துவை உயிரற்ற ஜடம் என்று அவன் ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை.
வருசத்திற்கொரு பூசை, மாசத்திற்கொரு வெண்ணைத் தேப்பு என்று, அவனது அய்யா அதை ராஜாவின் செங்கோல் போலப் பேணிவந்தார்.

அவர் வேட்டைக்கு புறப்படும்போது அதற்குத் தூபம் காட்டி வெகுநேரம் வரை வழிபடுவார். அதன் தேகத்தில் கையை வைத்து ‘சம்மதம்’ கேட்பார். கருத்த நெகுநெகுப்பான அந்த மரக்கோலில் சற்றைக்கெல்லாம் ரத்தநாளங்கள் புடைத்தெழும்ப, வெதுவெதுப்புடன் இசைவாக அவரது உள்ளங்கையில் சம்மதம் சொல்லிய பிறகே எடுத்துச் செல்வார். சேகுபாய்ந்த கருவேல மரத்தின் அடிநாதமாய்ப் பிளறியெழும் ஆற்றலும், பிறந்ததிலிருந்து பெண் வாசமே சேராத கருமான் அடித்துக் கொடுத்த கூரான உளியின் கூச்சும் இணைந்த அதன் உடல் வலிமையை, உறுதிமிக்க வானுயர்ந்த அரண்களில் லாவகமாய் கிடுக்கிப் போட்டு நசுக்கும் சுளுவில் சத்தமேயில்லாமல் சிதறிவிழும் சுவர்களின் பலம் சொக்கிப் போய்.

தசைநார்கள் திமிர்த்த அந்த உடலை உயிருள்ள ஜீவனாகவே அவனிடம் ஒப்படைத்த அவனது அய்யா, அவனது இளம்பிராயத்திலிருந்தே பில்லி சூனியத்தின் புதிர் முடையப்பட்டிருந்த மந்திரச்சொல்லை அவனது குருதி ஓட்டத்தில் உடையாத குமிழியாக மிதக்கவைத்தார். மந்திர உச்சாடனங்களின் வினோதத்தில் எழும்பும் அற்புத தரிசனங்களின் சுழிப்பில் சுழன்றோடிப் பிரியும் பின்னற்பிரிகளால் தனது உடல் தசைகளை முறுக்கேற்றினான். மாயலிபியின் நெளிக்கோடுகளை ஞாபக அடுக்குகளில் வெட்டி வைத்தான்.

நடுச்சாமத்தில் அலறும் கோட்டான்களின் கூவல் அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சமநிலைப்பட்டவனாய் பார்வையைக் கூராக்கி ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டான். தூரத்தில் அசைந்த வெளிச்சக் கங்குகள் பெரிதாகியிருக்க ஊர் சமீபித்திருந்தது என்பதை உணர்ந்த போது அவனையுமறியாமல் இன்னதென்று உணர முடியாத ஒருவித உணர்வு உடலெங்கும் கவ்வியது.

Pin It

சுமாராக மத்தியகாலத்திலிருந்து துவங்கும் பக்தி இலக்கியத்தைத் தேடிப்படிக்க வேண்டிய அவசியம் ஆன்மீகம் என்ற அளவில் இல்லாமல் ‘அன்பு’ என்ற ஒருசொல் குறிக்கும் பன்மொழியை அதன் நிஜமான அர்த்தத்தை அறிந்துவிடும் ஆவலில்தான் துவங்கியது. பதின்ம வயதில் துவங்கும் வர்ணஜாலங்கள், மருட்டும் உறவு, பீதிக்கனவாய் படிந்த கல்வி எங்கும் ஒரு மாயவிலங்கு நம்மைக் கட்டி வைத்திருக்கிறது. கற்றுக் கொடுக்கக் காத்திருக்கும் பூத நிழல்களிலிருந்து நிராதரவாக அன்பைத் தேடி நிலைகொள்ளாமல் துரத்தித் தேடுகிறேன். தேடுங்கள் கிடைக்கும் என்கிறான் கிறிஸ்து. தேடாதே தொலைந்து போவாய் என்கிறது ஜென்.

வாழும் காலத்தில் நன்றியுணர்ச்சியைப் பரிமாறிக் கொள்வதும் மனம் என்று சொல்லும் சுயநீட்சியை சாந்தப்படுத்தி இன்பந்துய்க்கச் செய்வதும் அன்பாகிவிடுமா? நமதுகல்வியும் உறவும் போட்டி போட்டு வளர்த்துவிடும் மனப்பிம்பத்தை அறிவு என்று சொல்வதும் அறிவு சுயஉடல் மீது நிகழ்த்தும் வாதையை மொழியின் அலகுகளில் பகிரங்கமாய்ப் பேசுகிறோமா? வலியுறுத்தப்படும் அறமும் ஒழுங்கு செய்யப்பட்ட தர்க்கமும் முடிச்சிட்டு இதுதான் வாழ்வு என்று பொதுச் சொல்லில் சொல்லிவிட நம்மைப் பழக்கியது பக்தி அல்லவா.

சொல்லப்பட்ட சொல்லின் அர்த்தம் ‘இறந்த காலத்தில் மட்டுமே அதன் இருத்தல்’ இருக்கும்போது சொல்லுக்குப் பின்னால் அலைபவன் தனது முழுமையைக் கண்டு மறைப்பதும், சொற்கவர்ச்சியை தெரிவு செய்வதையும்தான் பக்தி இலக்கியம் முழுதும் காணமுடிகிறது. கவர்ச்சியில் மழுப்பப்பட்ட விகாரம் நம்மிடம் சரணாகதியைப் பரிந்துரைக்கிறது. சரணாகதி எல்லாப் பிரச்சனைக்கும் எளிய தீர்வு. கடவுளின் புரோக்கர்களான இவர்கள் வெகுமக்கள் மீடியாவாக மாறும் முக்கியப் புள்ளியும் இது. லௌகீகர்களுக்காக பொறுப்பெடுத்து கடவுளிடம் கையேந்தும் முக்கியமான பணியை தாமே மனமுவந்த ஏற்கின்றனர். சரணாகதி தப்பித்தல் மட்டுமே.

பக்திக்கும் அன்புக்குமான தொடர்பு உண்மையின் மீது இல்லை, அல்லது பொய்களின் வாயிலாக வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் இல்லை. அன்பு, கருணை என்பதெல்லாம் இணக்கமான சொற்கள் அனைத்து வெகுமக்களிடமும் லகுவாகப் புழங்க. ஆனால் பக்தி இலக்கியவாதிகளின் எண்ணங்களை மட்டுமே வழிகொண்டு செல்கின்றனர். இதில் அனுபவம் துளியாவது இருக்கிறதா, அனுபவமில்லாத எண்ணங்களுக்கு நம்பகத் தன்மையை தரமுடியாது போகும்போது, அதற்கு பக்கத் துணையாக சுத்தமும் ஞானமும் கை கொடுத்து உதவுகின்றன. அன்பையே வெளிப்படையாகப் பேசமுடியாத இவர்கள் உடலிலிருந்து விடுதலை என்பது வெறும் பாவனை. இவர்களது உடலுக்கான விடுதலையும் சுத்தமும் காமத்தை அடக்குவதுமே. காமம் என்று சொல்வது தவறு. குறிவழியே விந்து வருவதே அழுக்கு, குறிவிறைப்பதும் அழுக்கு, குறியை அடக்கத்தான் யோகம்.

அறிதலின்றி ஒப்புக்கொண்டு பின்தொடர மனிதரை மூடராக்கி அழைக்கும் சைவ வழியே வரும் கொலைத்தத்துவன் ஞானசம்பந்தன், மனதிற்கு குடமுழுக்கு நடத்தும் வாதவூரார், இருமைக்கும் மறுமைக்கும் இடையே அல்லாடும் சுந்தரர், பௌத்தத்திற்கும் சைவத்திற்கும் மாறிமாறிக் குழம்பிய நாவுக்கரசர், உடலை விஞ்ஞான களமாக்கும் திருமூலர், அவர்களை மலினமாகத் தொடரும் குமரகுருபரர், சிவப்பிரகாசர், தாயுமானவர், சிதம்பரம் இராமலிங்கர், இவர்களைப் பின்பற்றும் நமக்கு இவர்கள் தரும் அனுபவம் ‘ஒன்றுமில்லை’. அதனை சூன்யமாக அர்த்தப்படுத்த முடியாது. நம்பிக்கை என்று எதிர் அர்த்தம் கொள்ளவும் முடியாது. பன்னிரு திருமுறை மற்றுமான சைவப் பாடலாசிரியர்களில் காரைக்காலம்மையார் மட்டுமே வாசக அனுக்கத்தையும், சொல்லின் வழியே முன்னகரவும் உதவுகிறார். அவரிடம் அன்புகுறித்த நிஜமான கேள்வி இருக்கிறது.

நமக்குத் தெளிவாக வரலாறு தெரியும். சிதம்பரம் இராமலிங்கர் என்ற அருட்பிரகாச வள்ளலார் இந்தப் பெரும்பாடற் கூட்டத்தில் என்னதான் சொல்லுகிறார் என்று பார்க்கலாம். அவரது ஆரம்பகாலப் பாடலொன்று சிறுவர்கள் படிப்பதற்காக எழுதப்பட்ட ‘மனுமுறை கண்ட வாசகம்’. அதில், நாற்பத்திநான்கு விதமான பாவங்களைப் பட்டியலிடுகிறார். சிறுவர்களுக்கு மனுமுறையை முன்வைத்துச் சொல்வது,
.........
வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ
ஆசை காட்டி மோசம் செய்தேனா
கற்பழித்தவளைக் கலந்திருந்தேனா
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனா
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனா
கருப்ப மழித்துக் களித்திருந்தேனா

சுத்த சன்மார்க்கம் பேசுகிறவர் சிறுவர்களுக்கு எழுதும் எழுத்து இது. சுத்தத்தைப் பேசுபவரும் பேணுபவரும் அன்புக்கு வெகுதூரமான ஆட்கள், இராமலிங்கரும்கூட. ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார், ‘ஆண்டவரது அருட்பெருஞ்சித்தி வெளிப்படும்வரை தகரக் கண்ணாடி விளக்கை ஏற்றவும், தூசு துடைக்க தேகசுத்தி கரண சுத்தியுள்ளவரும், பன்னிரண்டு வயதுக்கு மிகாதவராயும், எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவராயும், பொருள், இடம், போகம் முதலியவற்றில் சிறிதும் ஆசை இல்லாதவராயும், தேகசுத்தஞ் செய்து கொண்டு காலில் வத்திரம் சுத்தி முட்டிக் காலிட்டவாறு காரியம் செய்யவேண்டும்’ என்கிறார். மேலும் ஞானசபைத் திறவுகோலை ஒருவர் கையிலும் வெளிப்படையாயிருக்கக் கூடாது, அத்திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியை பொற்சபைக்குள் வைத்துப் பூட்டி அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தானக் காவல் உத்தரவாகியிருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும் என்கிறார். (இந்தக் கடிதம் 18.7.1872ல்அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது)

இரட்சகரின் ஆசையைப் பாருங்கள், ஞானமென்ன கொள்ளையடிக்கும் பொருளா, அல்லது சமாதியிலிருப்பவரை யாரேனும் ஏதேனும் செய்து விடுவார்கள் என்ற பயமா? பயம் கொள்பவன் ஞானத்தையடையவோ, போதிக்கவோ முடியுமா என்ன? இவரிடம் அன்பை எதிர்பார்க்க ஏலுமா? இராமலிங்கரின் நசிந்த சுயத்திற்கு அவதூறு வழக்கு மிகச்சரியான உதாரணம்.

அந்தணர்க் கூட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் வசைபொழிந்தபின், அது அவதூறு வழக்காக மாறியதும், தீர்ப்புக்கு முந்தின தினமே சென்று நீதிபதியை நலம் விசாரித்தும் அருளாசி வழங்கியதும், நீதிமன்றத்தில் உண்மைக்கு முரணாக பொய்ச்சத்தியம் செய்ததும், நாவலர் மனமுவந்து வழக்கை வாபஸ் பெற்றும் கூட தனவந்தரின் துணையோடு தஸ்தாவேஜிகளைச் சிதைத்ததும் அவரது தனிப்பெருங்கருணை.

ஒருபுறம் தனவந்தரின் உறவு, மறுபுறம் விட்டேத்தியான பேச்சு. தனது புத்தகம் அச்சிடுவதில் தனக்கு விருப்பமில்லாதது போன்று சேலத்து தனவானுக்குக் கடிதம் எழுதுவது. அதேநேரம் புத்தகம் அச்சிலிருக்கும் போதே மேலும் நூற்றுக்கணக்கான பாடல்களை அச்சுக்குச் சேர்க்க அனுப்புவது நசிந்த சுயத்தின் அருட்பெருஞ்ஜோதி.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” ஆமாம் வாயில்லாத ஜீவனிடம் அன்பு பாராட்டலாம். பசித்த சிங்கத்தைக் கண்ட போதெல்லாம் வருந்தினேன் என்று சொல்ல முடியுமா, கிட்டேபோய்த் தடவிக் கொடுக்க முடியுமா? எளிய சித்துகளால் வெகுமக்களை வளைத்துவிடுவது சுலபம்தான். தண்ணீரில் விளக்கெரிக்கலாம். அந்தரத்தில் நடக்கலாம். நசிந்த சுயத்தால், அன்பை போதிக்க அன்பைக் கற்றுத்தர யாரால் ஆகும்?

சைவ இலக்கியவாதிகள் அனைவருமே அன்புக்கு வெகுதூரமாகவே நிற்கிறார்கள். இவர்களது கடவுளும் ஒருவகை மோஸ்தர்தான். ஒருவகையில் வெற்றுப்புகழ்ச்சியால் கடவுளுக்கும் அருளாசி வழங்கும் கடவுளின் கடவுள்கள்.

Pin It

கன்னட நாட்டுப்புறக் கதை

வீட்டுக்காரிக்கு ஒரு கதை தெரியும்; கூடவே ஒருபாடலும் தெரியும். ஆனால் அக்கதையை அவள் யாருக்கும் கூறியதில்லை. பாடலைப் பாடிக் காட்டியதில்லை. அவைகளை அவள் தனக்குள் வைத்திருந்தாள்.

அவளுக்குள் சிறை வைக்கப்பட்ட கதையும் பாடலும் மூச்சுத் திணறின. விடுதலை பெற விரும்பின. வெளியே தப்பியோடப் பார்த்தன.

ஒருநாள் அவள் வாயைத்திறந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது கதை தப்பித்தது. அவளுக்கு வெளியே குதித்தது. காலணிகள் வடிவத்தை எடுத்து வீட்டின் கதவுக்கு வெளியே காத்திருந்தது. பாடலும் தப்பித்தது. மேலே போடும் சட்டை வடிவெடுத்தது. கொக்கியில் சென்று தொங்கியது.

பெண்ணின் கணவன் வீடு திரும்பினான். மேல் சட்டையையும் காலணிகளையும் பார்த்தான். ‘யார் வந்திருக்கிறார்கள்’ என்று அவளைக் கேட்டான்.

‘யாருமில்லையே’ என்றாள் அவள்.

‘இந்த கோட்டும் செருப்பும் யாருடையவை?’

‘எனக்குத் தெரியாதே’ என்ற பதிலளித்தாள் அவள். அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை. அவனுக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே அவர்களது பேச்சில் அப்புறம் சந்தோசம் இல்லாமல் போயிற்று. அந்தச் சந்தோசமின்மை சண்டைக்கு இட்டுச் சென்றது. கணவன் கோபத்தால் துடித்தான். போர்வையைத் தூக்கிக் கொண்டு தூங்குவதற்காக ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றான்.

என்ன நடந்தது என்று அந்தப் பெண்ணால் அறிய முடியவில்லை. இரவு முழுதும் தனியாகப் படுத்தே கிடந்தாள். ‘யாருடைய கோட்டும் செருப்பும் இவை?’ என்ற அதே கேள்வியை அவள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாள். சோர்ந்து போய், சந்தோசமற்று, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள். அந்த ஊரில், விளக்குகள் அணைக்கப்பட்டவுடன் எல்லாத் தீபச்சுடர்களும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து கூடுவது வழக்கம். வம்புகள் பேசி இரவை அங்கே அவை கழிக்கும்.

இந்தக் குறிப்பிட்டநாளில் எல்லா வீடுகளைச் சேர்ந்த எல்லாத் தீபச்சுடர்களும் அங்கே வந்து சொலித்துக் கொண்டிருந்தன - ஒன்றைத் தவிற. அது நேரம் கழித்தே வந்தது. அது தாமதமாக வந்ததைப் பற்றி மற்றவை கேள்வி கேட்டன: ‘இன்றைக்கு நீ ஏன் இவ்வளவு தாமதம்?’

‘எனது வீட்டுத் தம்பதிகள், இரவு வெகு நேரம் சண்டையிட்டுக் கொண்டார்கள்’ என்றது சுடர்.

‘எதற்காகச் சண்டை?’

‘கணவன் வீட்டில் இல்லாதபோது செருப்புகள் வராந்தாவில் விடப்பட்டிருந்தன. கோட்டொன்று எப்படியோ வந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அவை யாருடையவை என்று கணவன் கேட்டான். தனக்குத் தெரியாது என்று வீட்டுக்காரி சொன்னாள். எனவே அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டார்கள்’.

‘எங்கிருந்து அந்தக் கோட்டும் செருப்புகளும் வந்தன?’

‘எனது வீட்டுப் பெண்ணுக்கு ஒரு கதையும் ஒரு பாட்டும் தெரியும். அவள் யாருக்கும் அந்தக் கதையைச் சொன்னதில்லை. பாட்டைப் பாடிக் காட்டியதில்லை. கதையும் பாட்டும் உள்ளுக்குள்ளேயே புழுங்கி மூச்சுத் திணறின. எனவே அவை தப்பித்து வெளியேறின. செருப்புகளாகவும் கோட்டாகவும் மாறின. இவ்வாறு அவை பழி தீர்த்துக் கொண்டன. அந்தப் பெண்ணுக்கு இன்னும் இது தெரியாது.’

கோபித்துக் கொண்டு கோயிலுக்குப் போய் போர்வைக்குள் முடங்கிக் கிடந்த கணவன், தீபச்சுடரின் விளக்கத்தைக் கேட்டான். அவனது சந்தேகம் தொலைந்தது. அவன் தனது வீட்டுக்குத் திரும்பியபோது விடிந்துவிட்டது. தனது மனைவியிடம் அந்தக் கதை பற்றியும் பாடல் பற்றியும் கேட்டான். ஆனால் அவள் அந்த இரண்டையும் மறந்து போயிருந்தாள்: ‘எந்தக் கதை? என்ன பாட்டு’ என்று கேட்டாள்.

Pin It