இயல்பான பேறுக்கு மருத்துவர் தடையாம்

இனிக்கின்ற தாய்ப்பாலும் இல்லாத் தடையாம்

சிந்திக்கும் கல்விக்கு ஆங்கிலம் தடையாம்

சேர்ந்திங்கு விளையாட கணினி தடையாம்

படிக்கையிலே பல்வேறு சூழ்நிலை தடையாம்

படித்தவுடன் வேலையற்ற வெறுமைத் தடையாம்

இடையினிலே போதையுடன் காதல் தடையாம்

இல்லையெனில் நடிகையுடன் நடிகன் தடையாம்

அதைவிட்டால் இருக்கிறது டாஸ்மாக் தடையாம்

அதைவிடவும் கீழான கோயில் தடையாம்

கருத்தான பெண்ணுக்குக் கணவன் தடையாம்

கருஞ்சட்டை வீரனுக்கு மனைவி தடையாம்

தெளிவான கொள்கைக்குக் கட்சி தடையாம்

தேறாத படிதொலைக் காட்சி தடையாம்

வளமான வாழ்க்கைக்கு வறுமை தடையாம்

வழிபாட்டு மரபுக்கு மதங்கள் தடையாம்

எங்கிருக்கும் தமிழருக்கும் இந்தியம் தடையாம்

எழுதிவைத்த சட்டமெனும் மந்திகள் தடையாம்

அறமுரைத்த பதிணென்கீழ்க் கணக்கிற் கெதிராய்

அணிவகுக்கும் தடைகளிங்கே ஆயிர மாகும்!

வளர்ச்சிக்குத் தடையாக இருப்ப வற்றை

வாய்விட்டுச் சொல்லமனம் பதைக்கு தம்மா!

கிளர்ச்சியுடன் அவற்றைநாம் அடித்து வீழ்த்தி

கீழ்வரும்நம் தலைமுறையைக் காப்போம் வாரீர்!

- பாவலர் வையவன்
Pin It