தூக்கு மேடைத் தோழரைக் காக்க
போர்குணத் தோடு பொங்கி யெழுந்த
தமிழக மக்களின் தாள்பணி கின்றோம்
கண்ணீர் மல்கக் கைகுவிக் கின்றோம்
அமைதிப் படையின் அட்டூழி யத்தால்
வெடித்த வெஞ்சினம் வெடிகுண் டாக
செத்துப் போன இராசிவ் வுக்காய்
எத்தனைக் காலம் இவர்கள் அழுவது?
மொத்த இனமும் முள்ளிவாய்க் காலில்
கொத்துக் கொத்தாய் மடிந்ததைப் பார்த்தும்
பொத்திக் கிடந்த போக்கிலித் தில்லியை
எத்தனைக் காலம் இவர்கள் தொழுவது?
கண்ணெதிர் மக்களைச் சாகக் கொடுத்ததில்
புண்ணாய்ப் போனது தமிழர் பூமனம்
இனக்கொலை செய்த இராசபக் சேவாம்
பொறுக்கிக்கு இங்கே சிவப்புக் கம்பள
விரிப்பா? என்றே வெதும்பிக் கிடந்தாள்
நெருப்பாய் உருகி நெஞ்சம் உடைந்தனர்
கூனிக் குறுகிக் கிடந்த தமிழரைக்
கொதித்தெழச் செய்தது தில்லியின் கொடுமை!
மூன்று தமிழரைத் தூக்கில் ஏற்றிட
முனைந்தது கண்டு சினந்தது தாய்மண்
செந்தீப் பிழம்பில் உடல்திரி கொளுத்திச்
செங்கொடிப் பெண், தன் உயிர்க்கொடை ஈந்தாள்
பெட்டிப் பாம்பாய், ‘ஜெ’ பணிவார் என
மொட்டைய னாம்சோ கட்டிய கோட்டைகள்
இடிந்து தகர்ந்தன இமைப்பொழு திற்குள்
படிந்தது கவலை ‘பாரதர்’ முகங்களில்!
தப்பியும் இனிமேல் இராசிவ் சாவிற்கு
ஒப்பாரி வைக்கத் தமிழகம் ஒப்பாது
சொரணை கெட்ட சுப்பிரமணிய சாமி
உச்சிக் குடுமியும் மிச்சம் இராது
இளங்கோ வன்களாம் எலிக்கும்பல் இனிப்
புலிப்பீதி யூட்டிப் பொறுக்க வராது
இராசபக் சேவின் சிங்களப் படையும்
இராசிவ் ஏவிய அமைதிப் படையும்
தரத்தில் ஒன்றே! தரங்கெட்ட இருவரை
நிறுத்துக குற்றக் கூண்டில் என்றே
இந்நாள் எழுந்துள எழுச்சியை இங்குளப்
பதவித் திருடர்கள் பறிக்க விடாமல்
காத்தல் தமிழர் கடனே! கசப்புகள்
நீத்தல் வேண்டும் நம்முள் உடனே!

- தமிழேந்தி

Pin It