அயோத்தியில் பாபர் மசூதி - இராமஜென்ம பூமி சிக்கல் குறித்த வழக்கின் மீதான தீர்ப்பை 30.9.2010 அன்று அலகாபாத்து உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையின் நீதிபதிகள் உல்லா கான், சுதிர் அகர்வால், தரம்வீர் சர்மா ஆகியோர் வழங்கினர். பாபர் மசூதி அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதே வழக்காகும். 60 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.77 ஏக்கர் நிலத்தை சம பங்காகப் பிரித்து இராம்வல்லா (குழந்தை இராமர்) வின் நண்பனாக (சகா) வழக்கில் பிரதிநிதியாக விளங்கிய திரிலோக் நாத் பாண்டே, நிர்மோகி அகாரா என்கிற வைணவ பைராகிகள் அமைப்பு, மத்திய சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பாருக்கும் அளிக்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகளும் தனித்தனியாக அளித்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நாட்டில் சாதிப் பஞ்சாயத்துகளும், கட்டப் பஞ்சாயத்துகளும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று கண்டனம் செய்து வருகிறது நீதித்துறை. ஆனால் பாபர் மசுதி - இராமஜன்ம பூமி வழக்கில் கடைந் தெடுத்த கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

பாபர் மசூதியின் வளாகத்திற்குள் ஏதோ ஒரு இடத்தில் “ஜென்மஸ்தான்” (இராமன் பிறந்த இடம்) இருப்பதாக இந்துக்களால் நம்பப்பட்டு வந்தது என்று நீதிபதி கான் கூறுகிறார். மசூதியின் மூன்று கூம்புகளில் நடுவில் உள்ள கூம்பின்கீழே தான் இராமன் பிறந்ததாக இந்துக்களால் நம்பப் படுகிறது என்று நீதிபதி சுதிர் அகர்வால் கூறுகிறார். ஆனால், பச்சைப் பாப்பனரான நீதிபதி சர்மாவோ தற்போது இராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் இராமன் பிறந்தான் என்று தன்னுடைய 5000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் சத்தியம் செய்கிறார். அதற்கான பிறப்புச் சான்று வழங்கியுள்ளார். 17 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் கிருதாயுகத்தில் இராமன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மூன்று நீதிபதிகளும் மசூதி இருந்த இடத்தில்தான், இராமன் பிறந்தான் என்று தீர்ப்பில் கூறியுள்ளனர். இதற்கு இவர்கள் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். அரசமைப்புச் சட்டவிதி 25இன்படி இந்துக்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக மூன்று நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

1528 முதல் 1992 திசம்பர் 6 வரைஅந்த இடத்தில் மசூதி இருந்தது. 1949 திசம்பர் 22 அன்று நள்ளிரவில் திருட்டுத்தனமாக இராமன் சிலையை வைக்கப்படும்வரையில் மசூதியில் தொழுகை நடத்தினர் என்பதற்குத் திட்டவட்டமான சான்றுகள் உள்ளன. ஆனால் இச் சான்றுகளைப் புறக்கணித்து விட்டு, இந்துக்களின் மத நம்பிக்கை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு இந்துப் பொரும்பான்மையின் பாசிசப் போக்கு அல்லவா? உலகில் இந்தோனேசியா நாட்டிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் -15 கோடி மக்களாக வாழும் முசுலிம்களை இந்நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த வேண்டுமென்று கொக்கரித்து வரும் இந்துத்துவ சக்திகளுக்கு இந்தத் தீர்ப்புத் தீனி போடுவதாக அமையாதா?

பாபர் காலத்தில் அயோத்தியும் பைசாபாத்தும் அமைந்துள்ள அவந்திப் பகுதியின் ஆளுநராக இருந்த மீர்பாகி என்ற தளபதி, பாபரின் ஆணையின்பேரில், 1528இல் அயோத்தியில் இருந்த இராமன் கோயிலை இடித்துவிட்டுப் பாபர் மசூதி கட்டினான் என்று சங்பரிவாரங்கள் கூறிவருகின்றன. துளசிதாசர் இந்தி மொழியில் ‘இராமசரிதமனஸ்’ என்னும் பெயரில் இராமாயணத்தை எழுதிய பிறகே வட இந்தியாவில் இராமபக்தி பரவியது. துளசிதாசர் ஒரு பார்ப்பனர். தீவிர இராம பக்தர்; அயோத்தியில் வாழ்ந்தாவர். 1575இல் இராமசரிதமனசை எழுதினார். அயோத்தியில் இராமன் கோயிலை இடித்துவிட்டுப் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தால் அதைப்பற்றி துளசிதாசர் குறிப்பிடாமல் இருந்திருப்பாரா? இராமன் இந்த இடத்தில்தான் பிறந்தான் என்று துளசிதாசர் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, இது மிகவும் பிற்காலத்தில் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் கட்டிவிடப்பட்ட கதையாகும்.

1800க்குமுன் பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருந்தது என்பதற்கு எழுத்து வடிவிலான எந்தச் சான்றும் இல்லை. 1800க்குப்பின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் வரலாற்று ஆசிரியர்களாகவும் இருந்த ஆங்கிலேயர் சிலர், அயோத்தியில் இராமன் கோயிலை இடித்துவிட்டு, பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற நம்பிக்கை இந்துக்களில் சிலரிடம் இருந்துவருகிறது என்று எழுத்துவடிவில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆங்கிலேயர் எழுதியதற்குக் காரணம் இந்துக்களும் முசுலிம்களும் ஒத்துப்போக முடியாத பிரிவினர் என்று அவர்கள் நம்பியதேயாகும்.

 1857இல் முதல் சுதந்தரப்போர் எனப்படும் சிப்பாய்க் கலகம் நடந்த குழப்பமான சூழ்நிலையில் ஒரு புரோகிதனின் முயற்சியால் பாபர் மசூதிக்கு 300 தப்படித் தொலைவில் 17 அடி ஒ 21 அடி கொண்ட ஒரு மேடை என்று கூறப்பட்டது. இந்த மேடையை இந்துக்களும், மசூதிக்குள் முசுலிம்களும் வழிபட்டு வந்தனர். 1859இல் சபுத்ரா எனப்பட்ட மேடைக்கும் மசூதிக்கும் இடையில் இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

மசூதிக்கு அருகிலுள்ள அனுமார் கோயிலில் (நிர்மோகி அகாரா) பூசாரி இரகுவர்தாசு என்பவர் 1885 சனவரி 29 அன்று இராமன் பிறந்த மேடைமீது கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 1885 திசம்பர் 24 அன்று நீதிபதி பண்டிட் அரி கிருஷ்ணசிங் “கோயில் கட்ட அனுமதித்தால் எதிர்காலத்தில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கு மிடையே மோதல் ஏற்படும்; அதனால் பல ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும்” என்று இராமன் கோயில் கட்ட அனுமதி மறுத்துவிட்டார். இவ்வழக்கு மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி கர்னல் சமியேர் 1886 மார்ச்சு 18 அன்று “356 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இராமன் கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்ட வேண்டுமென்பது சரியான தீர்வாகாது. எனவே, இப்போது உள்ளது போலவே, சபுத்ரா என்கிற இராமன் பிறந்த மேடையை இந்துக்கள் வழிபடுவது என்ற நிலையும் மசூதிக்குள் முசுலிம்கள் தொழும் நிலையும் அப்படியே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அதன்பின் 1949 திசம்பர் 22வரை பாபர் மசூதி இராமஜென்ம பூமி குறித்து இந்துக்கள் - இசுலாமியர்களுக்கிடையே எந்தச் சிக்கலோ மோதலோ ஏற்படவில்லை. 1949 திசம்பர் 22 முடிய 9 நாள்கள் அகில பாரதிய மகாசபை பாபர் மசூதிக்கு வெளியில் இராமாயணச் சொற்பொழிவை நடத்தியது. அப்போது பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமன் கோயில் கட்டப்பட வேண்டுமென்று வெறியூட்டப்பட்டது. அதன் விளைவாக 1949 திசம்பர் 22 நள்ளிரவில் 50-60 பேர் கொண்ட இந்துத்துவக் கும்பலொன்று மசூதியின் சுவரைத் தாண்டிச் சென்று மசூதியின் கூம்பின்கீழ் இராமன் சீதை சிலைகளை வைத்தது.

திசம்பர் 23 அன்று காலை முதல் ஒலிபெருக்கி மூலமும் துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கியும் இராமர் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார் என்ற செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தனர். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவுக்கு இச்செய்தி எட்டியது. உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்துக்கு மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுமாறு நேரு மடல் எழுதினார். மாவட்ட ஆட்சியராக இருந்த கே.கே. நாயர் என்கிற இந்து வெறியர் சிலைகளை அகற்ற மறுத்துவிட்டார். இவர் பின்னாளில் ஜனசங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரானார். காங்கிரசுக் கட்சியும் ஆட்சியும் பார்ப்பனிய ஆதிக்கத்தின்கீழ் இருந்ததால் முசுலிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதி மார்க்கண்டேய சிங் 1949 திசம்பர் 29 அன்று பிறப்பித்த ஆணையின்படி மசூதி இருந்த இடம் முழுவதையும் அரசு ஏற்றுக்கொண்டது. மசூதிக்குள் முசுலிம்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மசூதியின் முதன்மை நுழைவாயில் பூட்டப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி நியமிக்கும் நான்கு பூசாரிகள் மூலமாக, மசூதியின் பக்கவாட்டிலுள்ள வாயிலிலிருந்து மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகளை இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறாக ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் சுதந்தர இந்தியாவில் தங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டினர். வெள்ளையன் ஆட்சிக் காலத்தில் கிடைத்த நீதிகூட சுதந்தர இந்தியா பிறந்ததும் இசுலாமியர்களுக்கு மறுக்கப்பட்டது.

இந்துமகா சபையைச் சேர்ந்த கோபால்சிங் விசாரத் என்பவர் 1950 சனவரி 16 அன்று பைசாபாத்து உரிமையியல் நீதிமன்றத்தில், பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டுள்ள கடவுள் சிலைகளை அகற்றக் கூடாது என்று நிலையான தடை ஆணை வழங்க வேண்டுமென்று வழக்குத் தொடுத்தார். இக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 1955 ஏப்பிரல் 26 அன்று உயர்நீதிமன்றம் இதை உறுதி செய்தது. 1961 திசம்பர் 18 அன்று மத்திய சன்னி வக்பு வாரியம் சிலைகளை அகற்றிவிட்டு மசூதியைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.

அதன்பின், 1984 மார்ச்சு மாதம் வரை ஆர்.எஸ்.எஸ்., சனசங்கம், விசுவ இந்து பரிஷத், பா.ச.க. முதலான சங்பரிவார அமைப்புகள் எதுவும் அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பவில்லை.

1984 ஏப்பிரல் 7 மற்றும் 8 ஆகிய நாள்களில் தில்லியில் விசுவ இந்து பரிசத் கூட்டிய சாமியார்கள் கூட்டத்தில்தான், முதன்முதலாக, அயோத்தியில் இராமன் கோயிலையும், மதுராவில் கிருட்டிணன் கோயிலையும், காசியில் சிவன் கோயிலையும் முசுலீம்கள் இடித்துவிட்டுக் கட்டியுள்ள மசூதிகளைத் தகர்ப்பதே இந்து தர்மமாகும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

1985 ஏப்பிரலில் ஷாபானு வழக்கில் உச்சநீதி மன்றம் பொதுக் குற்றவியல் சட்டத்தின்படி ஷாபானுவுக்கு அவரது கணவர் வாழ்வூதியம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது இசுலாமியரின் ஹீரியத் சட்டப்படியல்லாமல், பொதுச் சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டது. இசுலாமியருக்கு எதிரானது என்று என்று முசுலீம்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். பிரதமராக இருந்த இராசீவ் காந்தி, இசுலாமியரின் வாக்குகள் பறிபோய்விடுமோ எனக்கருதி, இசுலாமிய தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சட்டத்தைத் திருத்தினார்.

உடனே சங்பரிவாரங்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பைத் தணிப்பதற்காக 1986 பிப்பிரவரி முதல் நாள் பாபர் மசூதியின் பூட்டு உடைக்கப்பட்டு, இந்துக்கள் எத்தகைய தடையுமின்றி இராமனை வழிபட அனுமதித்தார். இதைப்போலவே 1989 நவம்பர் இறுதியில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற விருந்ததைக் கருத்தில்கொண்டு விசுவ இந்து பரிசத் நவம்பர் 7 அன்று அயோத்தியில் பாபர் மசூதிக்கு அருகில் உள்ள இடத்தில் இராமன் கோயில் கட்டுவதற்கான செங்கல் பூசை (சிலன்யா பூசை) நடத்துவதற்கு இராசிவ்காந்தி அனுமதித்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சங்பரிவாரங்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்து ‘ஸ்ரீராம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கல்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இவற்றின் மூலம் இந்துத்துவ வெறி ஊட்டப்பட்டது.

1989 ஆகத்து மாதம் பிரதமர் வி.பி.சிங் நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27ரூ இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையைப் பிறப்பித்தார். பார்ப்பன - மேல்சாதி ஆதிக்க வர்க்கம் இதைக் கடுமையாக எதிர்த்தது. மேல் சாதி, மாணவர்களைத் தூண்டிவிட்டு வட இந்தியாவில் கலவரம் செய்தது. பார்ப்பன மேல்சாதியினரின் மனக்கொதிப்பை தனக்கு ஆக்கம் தரும் தன்மையில் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் அப்போது பா.ச.க.வின் தலைவராக இருந்த அத்வானி. 1990 செப்டம்பர் 25 அன்று சோமநாத புரத்திலிருந்து இரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்டவேண்டும்; முசுலீம்கள் இராமனை இந்தியாவின் அவதாரப் புருஷனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இரத யாத்திரையில் முழங்கப்பட்டது. அத்வானி இரத யாத்திரை சென்ற இடங்களில் இந்து - முசுலீம் மோதல்கள் நடந்தன. நூற்றுக்கணக்கானவர் கொல்லப்பட்டனர்.

1980 வரையில் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்த பாரதிய சனதா கட்சி பத்தாண்டுகளில் பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி பிரச்சனையை முன்வைத்து இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றான ஒரு பெரும் அரசியல் கட்சியாக வளர்ந்தது. மசூதியின் பூட்டைத் திறக்கச் செய்ததும், சிலன்யா பூசை நடத்த அனுமதித்ததும் பிரதமர் இராசிவ் செய்த மாபெரும் தவறுகளாகும்.

1990இல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இராசிவ் காந்தி, ‘இராம இராஜ்ஜியத்தை அமைப்போம்’ என்ற முழக்கத்துடன் அயோத்தியில் தொடங்கினார். காங்கிரசுக்கட்சி மதச்சார்பற்ற கட்சி என்று பெயரளவில் சொல்லிக் கொண்டு, நடப்பில் ஓர் இந்துத்துவக் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

1991இல் உ.பி.யில் கல்யாண்சிங் தலைமையில் பா.ச.க. ஆட்சி அமைந்தது. 1992 அக்டோபரில், விசுவ இந்து பரிசத், 1992 திசம்பர் 6 அன்று அயோத்தியில் கரசேவை நடத்தப்படும் என்று அறிவித்தது. 1992 ஆகத்து 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றிய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் பாபர் மசூதியை இந்த அரசு பாதுகாக்கும் என்று உறுதி மொழி கூறினார். உ.பி.யின் முதலமைச்சர் கல்யாண்சிங் பாபர் மசூதியை உ.பி. அரசு பாதுகாக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி கூறினார்.

ஆனால், சங்பரிவாரங்கள் பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆயுதங்களுடன் அயோத்தியை நோக்கிச் சென்றன. இரண்டு இலட்சம் பேர் திரண்டனர். திசம்பர் 5 இரவு பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் வீட்டில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் கூடி மசூதியை இடிப்பது என்று முடிவு செய்தனர்.

அயோத்தியில் இராணுவம் குவிக்கப்பட்டது. ஆனால், திசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அதே இடத்தில் தற்காலிகக் கோயில் எழுப்பி இராமன் சிலையை வைத்து வழிபடத் தொடங்கினர். பிரதமர் நரசிம்மராவ் முசுலீம்கள் புனிதமாகக் கருதிய - 450 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நடுவண் அரசின் உள்துறைச் செயலாளர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமன் சிலையை வைக்காமல் தடுக்குமாறு பிரதமரிடம் கூறினார். இடித்துவைத்த புளிபோல் இருந்தார் நரசிம்மராவ். 1993 சனவரியில் பாபர் மசூதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

1998 வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

2002 மார்ச்சு மாதம் முதல் கிழமையில் அயோத்தியில் கரசேவை நடத்தப்போவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித்தது. இச் சூழலில் அயோத்தியில் கரசேவை செய்துவிட்டு திரும்பிய சங்பரிவாரங்கள் பயணம் செய்த இரயில்பெட்டி 27-2-2002 அன்று குசராத் மாநிலத்தில் கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் தீப்பிடித்து எரிந்ததால் அதில் இருந்தவர்கள் இறக்க நேரிட்டது. இது முசுலீம்களின் சதிச்செயல் என்று கூறி குசராத் மாநிலத்தில் முசுலீம்கள் மூவாயிரம் பேர் இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா முழுவதுதிலும் - உலக அளவிலும் இக்கொடுஞ்செயல் பேரதிர்ச்சியூட்டியது. அதன்பின் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த போதிலும் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளில் சங்பரிவாரங்கள் ஈடுபடவில்லை.

இப்போது, 30-9-2010 இல் அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பால் அயோத்தியில் இராமன் பிறந்த இடத்தில் இராமனுக்கு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டுவோம் என்று அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கூறத் தொடங்கி உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “பாபர் மசூதி இருந்த இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. எனவே, முசுலீம்கள் தங்களுக்குரிய இடத்தை நாட்டின் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் கருதி இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். முசுலீம்கள் உண்மையில் இந்த நாட்டின்மீது பற்றுடையவர்கள் என்பதை எண்பிப்பதற்கான நல்ல வாய்ப்பு இது” என்று கூறி முசுலீம்களை மறைமுகமாக மிரட்டி உள்ளார். பாபர் மசூதியைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை அரசு இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று பல இந்துத்துவத் தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவ குரு, கோல்வால்கர், இந்தியாவில் முசுலீம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படாமலிருக்க வேண்டுமானால், இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இப்போது இந்துத்துவ வாதிகள் மட்டுமின்றி நீதிபதிகளும் இதையே கூறுகின்றனர். எனவேதான் உச்சநீதிமன்றம், இந்துத்துவம் என்பது இந்து மதத்தைக் குறிப்பதன்று; இந்திய மக்களின் வாழ்க்கை நெறியைக் குறிப்பதாகும் என்று முன்பே விளக்கமளித்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில், மசூதியின் கூம்புகள் உள்ளிட்ட கட்டடப்பகுதி முழுவதும் பகவான் ஸ்ரீராம விராஜ்மன் (மூலவராக வீற்றிருக்கும் இராமன்) அதாவது இராமனுக்குத் தரப்படவேண்டும். சுபுத்ரா எனப்படும் மேடைப் பகுதியும் சீதையின் சமையலறை எனப்படும் பகுதியும் நிர்மோகி அகராவுக்கு அளிக்கவேண்டும். எஞ்சியுள்ள பகுதியை முசுலீம்களுக்கு அளிக்கவேண்டும். தேவைப்படின் அரசின் பொறுப்பில் உள்ள 67 ஏக்கர் நிலத்திலிருந்து ஒரு பகுதியை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

‘இந்து கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை. ஆனால், முன்பே இடிந்துபோன கோயில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து போன கோயிலின் சில பகுதிகள் மசூதியைக் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று நீதிபதி கான் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறார். நீதிபதி சுதிர் அகர்வால், 2003ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியின் ஆணையின் பேரில் இந்தியத் தொல்லியல் துறை பாபர் மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அகழாய்வில் பாபர் மசூதியின் கீழே இந்துக்கோயிலின் தூண்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டி பாபர் மசூதி, இந்து கோயில் மீது கட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நீதிபதி சர்மாவோ இராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபரின் தளபதி மீர்பாகி மசூதியைக் கட்டினார் என்று கூறியிருக்கிறார். 2003ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு மிகவும் பிழையானது என்று வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் அப்போதே கண்டனம் தெரிவித்தனர்.

மூன்று நீதிபதிகளும் தம் தீர்ப்பில் இராமன் சிலை 1949 திசம்பர் 22-23இல் இந்துக்கள் சிலரால் மசூதியினுள் வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். முசுலீம்களின் தொழுகை இடமான மசூதிக்குள் சட்டவிரோதமாக இராமன் சிலை வைக்கப்பட்டதற்கு மூன்று நீதிபதிகளும் இத்தீர்ப்பின் மூலம் ஏற்பிசைவு வழங்கியுள்ளனர். அதேபோன்று மிகவும் கெட்டிக் காரத்தனமாக 1992 திசம்பர் 6 அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட கொடிய செயல் குறித்தும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கு ஒதுக்கியிருப்பதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். நீதிபதிகள் சுதிர் அகர்வாலும், சர்மாவும், இராமன் இந்த இடத்தில்தான் பிறந்தான் என்று நீண்டகாலமாக நம்புகின்ற காரணத்தினாலேயே அந்த இடம் புனிதத்தன்மை பெற்று விடுகின்றது. அந்த இடம் இராமனுக்குச் சொந்தமாகிவிடுகிறது. அந்த இடத்தில் இராமன் சிலை இல்லாவிட்டாலும் அந்த இடம் இராமனுக்குரியதாகும் என்று கூறியுள்ளனர். 1980 முதல் சங்பரிவாரங்கள் என்ன சொல்லி வந்தார்களோ அதையே நீதிபதிகள் தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் இந்தியா ஒரு சனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச, குடியரசு என்று எழுதப்பட்டுள்ளது. இந்தியா ஒரு சோசலிச நாடல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்கள் உட்பட பெரும்பாலோர் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பான - குறிப்பாக இந்துமதச் சார்பான அரசமைப்புச் சட்டமாக இருப்பதால்தான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். 15 கோடி மக்களாக உள்ள முசுலீம் மக்களின் மத உணர்வுகளை - உரிமைகளை பெரும்பான்மை என்கிற குண்டாந்தடியால் அடித்து நொறுக்கி வருவது சனநாயக பயங்கர வாதமாகும்.

இந்துக்களும் இசுலாமியரும் கலந்து பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்பது அரசியல் பயங்கரவாதமாகும். பாபர் மசூதியைத் தகர்த்து விட்டு அதே இடத்தில் ஒரு கோயிலை அமைத்து இராமன் சிலையை நாட்டி எவ்விதத் தடையுமின்றி இந்துக்கள் வழிபட வழியமைத்திருப்பது அரச பயங்கரவாதமாகும். இச் செயல்களுக்கெல்லாம் துணைநிற்க நீதித்துறை பயங்கரவாதம் எப்போதும் அணியமாக இருக்கிறது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவில் பார்ப்பன - பனியா - பணக்கார - முதலாளியக் கும்பலே ஆளும் ஆதிக்க வர்க்கமாக இருக்கிறது. இவர்களின் பிரதிநிதிகளாக இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதாக் கட்சியும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளையும் ஒழிக்காத வரையில், ‘இந்தியா - ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்கிற பாசிச ஏகாதிபத்தியக் கொள்கையை வீழ்த்த முடியாது.

Pin It