பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, நால் வருண வேறுபாடு எல்லாம் இன்றும் செல்லுபடியாகும்!

அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்ட அதே இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 25இன்படி இன்றும் செல்லுபடியாகும் என்பது தான், 30.09.2010 இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் இலக்னோ கிளை நீதிபதிகள் மூவர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின் முதன்மையான பகுதியாகும்.

இந்த வழக்கு 1950 இல் தொடுக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 60 ஆண்டுக்காலத்தில் இதை மய்யமாக வைத்து நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் ஆய்வு செய்த பின்னரே 8000 பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

28.09.2010 அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பின் விளைவாக இந்தியாவின் பலபகுதிகளில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே கலவரம் வெடிக்கும் என்று கருதி ஆங்காங்கே நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் காவலர்களும் ஆயுதம் தாங்கிய காவலர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் எந்த மூலையிலும் எவ்விதக் கலவரமும் வெடிக்கவில்லை. ஏன்?

விவகாரத்துக்கு உரிய 2.77 ஏக்கர் பரப்புள்ள நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இந்து மனுதாரர்களுக்கு இரண்டு பங்கும், முஸ்லீம் மனுதாரர்களுக்கு ஒரு பங்கும் என வழங்கப்பட்டுவிட்டது. அதே வேளையில் பாபர் மசூதியின் கூம்புக்கு நேர் கீழே, தற்காலிகமாக, இராமர் பொம்மை அல்லது சிலை வைக்கப்பட்ட இடம்தான் இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகின்றனர்; அது சரியானது தான்; எனவே அந்த இடம் இந்துக்களுக்கு உரியது எனக் கூறப்பட்டுவிட்டது. அதாவது இந்துக்களும், இந்துத்துவ வாதிகளும், ஆர்.எஸ்.எஸ்., பாரதிய சனதா, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் முதலான அமைப்புகளும் இந்து பக்தர்களும் பரப்பிய நம்பிக்கை அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்து - இஸ்லாம் தரப்பினர் இருவர்க்கும் பங்கு கிடைத்திட என்ன ஆவணச் சான்றுகள் உயர்நீதி மன்றத்தின் முன் வைக்கப்பட்டன?

சொத்துத் தகராறு, சொத்துப் பிரிவினைத் தகராறு என்றாலே, அதைத்தீர்த்து வைக்க, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், நீண்டகால நம்பிக்கை என்கிற சூழ்நிலைச் சான்றுகள் மட்டும் போதமாட்டா; அவை செல்லுபடியாகமாட்டா. சொத்தின் பேரிலான உரிமையை நிலை நாட்டிட ஆவணம் தான் வேண்டும். இப்போது - “நம்பிக்கையும், நீண்ட காலப் பழக்கமும் இன்றும் செல்லும்” என்று இந்திய அரசமைப்புச் சட்ட விதி 25 கூறுவதே ஆவணச் சான்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

மூவருள் ஒருவரான நீதிபதி சுதிர் அகர்வால் இதுபற்றி என்ன எழுதியுள்ளார்?

“அயோத்தியில் தகராறுக்கு உள்ளாகியிருக்கிற அதே இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அப்படி அவர்கள் நம்புவது அவர்களுடைய மதத்தின் பிரிக்க முடியாத இயல்பான கூறு ஆகும். அது அரசமைப்புச் சட்ட விதி 25 இன்படி பாதுகாக்கப்பட்டுள்ளது”.

மேற்படி நீதிபதிகள் மூவரும் கூட்டாக இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் இன்னும் ஒருபடி மேலே சென்று, “இராமர் சிலை இருக்க வேண்டும் என்பது கூட வேண்டியது இல்லை. இராமர் பிறந்த இடம் என்பதே போதும்; சிலை இருக்க வேண்டியதில்லை. தகராறுக்கு உள்ளான இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்; அப்படி நம்பித் தொடர்ந்து அங்கே வந்து இராமரை வணங்குகிறார்கள். எனவே அந்த இடமே இராமராக இந்துக்களால் நம்பப்படுகிறது. இதுவே சான்று.” என்றும் கூறியுள்ளது.

இப்படிப்பட்ட தீர்ப்புப் பற்றி, வரலாறு, தொல்லியல் ஆய்வுத்துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் ரொமிலா தாபர், கே.எம்.சிறீமாலி, கே.என்.பணிக்கர், இர்ஃபான் ஹபீப், அமியா குமார் பாக்ஷி, சு.விரா ஜெய்ஸ்வால், எம்.கே. ரெய்னா, விவன் சுந்தரம், உத்சா பட்நாய்க், சி.பி. சந்திர சேகர், ஜெயதிகோஷ், கீதா கபூர் மற்றும் 47 பேர் என்ன கூறுகிறார்கள்?

“மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் இராமர் பிறந்தார் என இந்துக்கள் நம்புவதை எண்பிக்கக் கூடிய சான்று எதையும் - அண்மைக்காலம் வரையில் கூட இருந்ததாக, இந்துக்கள் காட்டவில்லை. அப்புறம் காலங்காலமாக நம்புகிறார்கள் என்பது ஏற்கப்படக்கூடிய தன்று” எனக் கூறுகிறார்கள்.

மேலே கண்ட செய்திகளிலிருந்து ஒன்றை நாம் உணர வேண்டும்.

காலங்காலமாக நம்புவது; சிலை என்பது சொத்தை வைத்துக் கொள்வது என்பதைப் பொறுத்த வரையில் சட்டப்படி ஒரு மனிதனாக ஆகிவிடுகிறது என்கிற நம்பிக்கைகளுடன்..

“சிலை இல்லாவிட்டாலும் சிலைக்கு உரியவர் பிறந்த இடமே - அந்த நிலமே - அந்த மனையே சிலையாகக் கருதப்பட வேண்டும்” என்கிற ஒரு கருத்தை அலகாபாத் உயர்நீதி மன்றம் 30.09.2010 அன்று கூறியுள்ளது.

இந்தியாவில் இந்துக்கள் அதிகம் பேர்.

இவர்களுக்கு என்று திட்டவட்டமான ஓர் உரிமை இயல் சட்டம் 1860 வரையில் உருவாக்கப்படவில்லை.

1.     1860 வரையில் மாவட்ட நீதிமன்றங்களில் பண்டிதர்கள் சாஸ்திர அடிப்படையில் சொன்ன விளக்கங்கள்.

2.     இந்திய பெடரல் நீதிமன்றம் தந்த விளக்கங்கள்;

3.     அதற்கும் மேலானதான இங்கிலாந்தில் உள்ள பிரீவி கவுன்சில் அளித்த இறுதித் தீர்ப்புகள்;

4.     வங்காளத்து வட மொழிப் பண்டிதர்கள் தொகுத்து அளித்த இந்துச் சட்டங்கள் இவற்றை வைத்துத்தான் “இந்துச் சட்டம்” என்பது 1860 இல் உருவாக்கப்பட்டு நடப்புக்கு வந்தது.

அச்சட்டத்தின் பல கூறுகள், இன்று நம்மைக் கட்டி ஆளுகிற இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்த 2010ஆம் ஆண்டிலும் செல்லுபடியாகும். “வழக்கச் சட்டம் எழுதப்பட்ட சட்டத்தை விட வலிமையானதாகும்” - என்பதே அது. இது மனுநீதி, யக்ஞ வல்க்கிய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி இவற்றில் உள்ள தத்துவத்தை உயிராகக் கொண்டது. இம்மூன்று நூல்களும் இன்றும் உயர் அதிகாரம் வாய்ந்தவை. இந்த இருப்பு நிலையை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், காஞ்சி மடத்துப் பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஆகியோரே ஆவர்.

இம் மூவருள் - வழக்கச் சட்டத்துக்கு உரிய பாதுகாப்பு - இந்திய அரசமைப்புச் சட்ட விதி 25இல் நுழைக்கப்பட வழி அமைத்தவர் காஞ்சி மடத்துப் பெரியவரே. இதில் அவர் வென்றார். எப்படி?

வெள்ளையன் 15.08.1947இல் தான் வெளியேறினான். ஆனால் சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுகிற அவை 09.12.1946 அன்றே தன் பணியைத் தொடங்கிவிட்டது. இதை அப்போது முதலே பெரியார் எதிர்த்தார். ஆயினும் 1080 நாள்கள் விவாதத்துக்குப் பிறகு 26.11.1949 இல் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் 13 குழுக்களால் எழுதப்பட்டது; அவற்றுள் சட்ட வரைவுக்குழு ஒன்று. அதன் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அவர் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான மேலை நாடுகளில் உயர்கல்வி பெற்றவர். பிரதமர் பண்டிதநேரு இங்கிலாந்தில் பயின்றவர். மற்றும் சில உறுப்பினர்கள் மேல் நாட்டில் பயின்றவர்கள். இவர்கள் உருவாக்குகிற அரசமைப்புச் சட்டத்தில் மேலை நாட்டு மதச்சார்பற்ற தன்மை என்பதைப் புகுத்திவிடுவார்களோ எனக் காஞ்சி மடத்துப் பெரியவர் அஞ்சினார்; அதைத் தடுக்க விரும்பினார். அவர் என்ன செய்தார்? அண்மையில் 102 வயதில் மறைந்த அக்னி ஹோத்திரம் இராமானுஜதாத்தாச்சாரி என்பவரைத் தில்லிக்கு அனுப்பி, அரசமைப்புச்சட்டக்குழு உறுப்பினர்கள் பலரையும் கண்டு பேசச் செய்தார். அவர் அதைத் திறம்படச் செய்தார்.

அரசமைப்பு அவையில் விதி 25 சேர்க்கப்படுவது பற்றிய விவாதத்தின்போது, மேலை நாட்டு மதச்சார்பின்மை, இந்திய மதச் சார்பின்மை பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. இந்திய மதச்சார்பின்மை பற்றி அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள் கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் மற்றும் பலர் வலிமையாக வாதாடினர்.

அதன் படியே அரசமைப்புச் சட்ட விதி 25 வடிவமைக்கப்பட்டது. விதி 25இல் காணப்படுவது என்ன?

“மதம் பற்றிச் சிந்திக்கவும், மதக்கருத்தை நம்பவும் செயற்படுத்தவும், பரப்புரை செய்யவும் உரிய சுதந்தரம்:

1.     சமூகத்தில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும், மக்கள் நலத்தையும் இந்தப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள மற்றவற்றையும் காப்பாற்றுகிற தன்மையில், மதம் பற்றிச் சிந்திக்கவும், மதம் பற்றிய கருத்தை நம்பவும், செயற்படுத்தவும், பரப்புரை செய்யவும் எல்லோருக்கும் உரிமை உண்டு;

2.     இந்த விதியில் உள்ள எந்தப் பகுதியும், இப்போது நடப்பில் உள்ள எந்தச் சட்டத்தின் அமலாக்கத்தையும் தடுக்காது; அல்லது அத்துடன் பின் கண்டவற்றைக் குறித்துச் சட்டங்கள் இயற்றுவதையும் தடுக்காது.

(அ)   பொருளாதாரம், நிதி, அரசியல் மற்றும் மதநடப்புத் தொடர்பான மதச்சார்பற்ற தன்மை பற்றி ஒழுங்குபடுத்துவதற்கான - வரையறைப்படுத்துவதற்கான சட்டம் செய்தல்; (ஆ) சமூகநலன், சமூகச் சீர்திருத்தம் செய்தல்; அல்லது பொதுவாக உள்ள இந்து மத நிறுவனங்களில் எல்லா வகுப்பு எல்லாப்பிரிவு இந்துக்களையும் அனுமதிப்பதற்கான சட்டம் செய்தல்.

விளக்கம் I : சீக்கியர்கள் கிர்பான் முதலான அவர்களுக்கானவற்றைச் சுமந்து செல்லல்.

விளக்கம் II : மேலே உள்பிரிவு 2 இல் (ஆ) பகுதியில் சொல்லப்பட்டுள்ள இந்துக்களுக்கான எல்லாம் சீக்கிய, சமண, பவுத்த மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

மேலே விதி 25 (2) இல் உள்ள, “இந்த விதியில் உள்ள எந்தவிதியும், இப்போது நடப்பில் உள்ள எந்தச் சட்டத்தின் அமலாக்கத்தையும் தடுக்காது” என்பதை வைத்துத்தான், “நீண்ட காலமாக நம்பப்படுவது இன்றும் செல்லும் - எனவே மசூதியின் கூம்பு இருந்ததற்கு நேரே கீழே தரையில் உள்ள இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்று இன்றும் இந்துக்கள் நம்புவதால் - அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம்” என்பதுதான், அலகாபாத் உயர் நீதிமன்ற இலக்னோ கிளையின் தீர்ப்பு ஆகும்.

இன்றும் இந்துமதப் பார்ப்பன ஸ்மிருதிகளும், சுருதிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் கெட்டியாகக் காப்பாற்றப்படுகின்றன. விதி 25 என்பது - பழக்க வழக்கச் சட்டத்தையும், நம்பிக்கையையும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நால்வருண ஏற்பாட்டையும் பாதுகாக்கின்றது.

“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பழைய சட்டங்கள் செல்லுபடியாகமாட்டா” என, டாக்டர் அம்பேத்கர் 1948இல் முன் மொழிந்த இந்துச் சட்டத்திருத்த மசோதாவின் வரைவு தூக்கி எறியப்பட்டது.

மேலை நாட்டு மதச்சார்பற்ற தன்மை என்பதன்படி, பொதுக் கல்வித் திட்டத்திலிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்; அரசின் நடப்புகளிலிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்; ஒழுக்கம் என்பதிலிருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும் என 1928இல் ஈ.வெ.ரா., கூறினார். 1952 வரையில் அதையே அவர் திரும்பத் திரும்பக் கூறியது எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

இன்று நமக்கு ஏற்பட்டுள்ள இந்த ஈன நிலை பற்றிப் பெரியார் தொண்டர்களும், அம்பேத்கர் அன்பர்களும், மானிட உரிமைப் போராளிகளும், பகுத்தறிவாளர்களும் ஆர அமரச் சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

- வே.ஆனைமுத்து

Pin It