சிலி. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று. தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் பசிபிக் கடற்கரையை ஒட்டிய ரிப்பன் போன்ற புவியமைப்பைக் கொண்டது. 2010 ஆகஸ்டு 5ஆம் நாள் நண்பகலில் எதிர்பாராத விதத்தில் அந்நாட்டில் ஒரு சுரங்க விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தின் மேல்தட்டு மலைப்பகுதியிலிருந்து 7.50 இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் உருண்டோடி சுரங்கப் பாதையை மூடிவிட்டன. அப்போதுதான் மதிய உணவருந்த 33 தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில் மேலாளர் லூயிஸ் உருசா உடனடியாக முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். நல்ல வேளையாக சுரங்கத்தின் உட்பகுதியில் இருந்த கட்டுமானங்கள் உடையாமல் இருந்தன. மின்தடை ஏற்படும் என்று எதிர்பார்த்து மின்விளக்குகளுக்கு பாட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. உடனடியாக அந்தப் பாட்டடரிகளை எடுத்துக்கொண்டு ஓரிரு மின்விளக்குகளை மட்டும் எரிய வைத்தார்.

நீர் மேலாண்மையில் தேர்ச்சி பெற்ற ரால் பஸ்டாஸ் என்ற பொறியாளர் சுரங்கத்திற்குள் தண்ணீருக்காகப் பள்ளம் தோண்டும் முயற்சிமேற்கொண்டார். எதிர்பார்த்தவாறு நீரூற்றுகள் தென்பட்டன. சில நீரூற்றுகளின் நீரைக் குடிப்பதற்கும் பிறவற்றை இதரப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தார். 48மணி நேரத்திற்கு மட்டுமே உணவுப் பொருள்கள் கைவசம் இருந்தன. 33 தொழிலாளர்களுக்கும் மிகக் குறைந்த அளவில் ஒன்றுகூடி உணவைப் பகிர்ந்து கொண்டு உயிர்வாழ வேண்டுமென்று முடிவெடுத்தனர். மற்றொருவர் மதபோதகர். அவர் தனது தாயாருக்கு நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதில் உதவிகள் செய்து மருத்துவத் துறையில் பயிற்சி பெற்றிருந்தார். இவர் உள்ளே சிக்கிய தொழிலாளர்களுக்கு மன உறுதியையும் மருத்துவச் சேவையையும் வழங்கினார்.

2000 அடிகளுக்கு மேலே எவ்வாறு செல்ல முடியும் என்பதை ஜிம்மி என்ற 19 வயதான இளைஞர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். ஏதாவது வழிகள் கிடைக்குமா? என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்து நடந்தவுடன் சுரங்கத்திற்குக் கீழே தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அனைத்து மீட்பு முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு அரசு உதவி புரியும் என்று கூறி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை அரசின் சார்பாக மேற்கொண்டார். 100 கோடி ரூபாய் செலவில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

5 அங்குல விட்ட அளவுள்ள மின்தூக்கி போன்ற ஒரு கருவியை சுரங்கத்திற்குள் சோதனையாக நுழைத்துப் பார்த்தார்கள். நல்ல வேளை எதிர்பார்த்த இடத்திற்கே சென்றது. கருவியின் முனையைக் கண்டவுடன் ஒரு துண்டுச்சீட்டில், “நாங்கள் உயிருடன் இருக்கிறோம் உடனடியாக எங்களுக்கு உணவு, மருந்துகள் தேவை” என எழுதி அந்தக் கருவியில் ஒட்டி மேல் பகுதிக்கு அனுப்பினர். இந்தச் செய்தி கிட்டியவுடன் புதிய தொழில்நுட்பக் கருவிகள் வழியாகச் சுரங்கத்தின் அடியில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொருவருக்கும் 2200 கலோரி அளவுக்கு உணவுப் பொருள்கள் நாள்தோறும் அனுப்பப்பட்டன. சிலி நாட்டின் அரசாங்கம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துடன் தொடர்புகொண்டு இந்த மீட்புப் பணிகளை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தது. விண்ணுக்கு மேலே விண்கலம் செலுத்துவதுபோல மண்ணுக்குள்ளும் ஒரு கலத்தை அனுப்பலாம் என்று நாசா முடிவெடுத்தது.

நாசா அமைப்பின் 20 தொழில்நுட்பப் பொறியாளர்கள் இரவு பகல் என்று பாராமல் உழைத்து 14 அடி உயரமுள்ள ஒரு சிறிய அறை போன்ற கலத்தை உருவாக்கினர். மலையைத் துளைத்து 66 செ.மீ. அகலமான ஒரு துளையைக் குடைந்தனர். அதில் 54 செ.மீ. அகலமுள்ள இந்த அறை வடிவிலான கலத்தைச் செலுத்தினார்கள். விண்கலத்தை ஒத்த இந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்குத் தேவையான உயிர்வளி, தகவல் தொடர்புக் கருவிகள் பொருத்தப்பட்டன. இக்கலம் குடைந்த பகுதியில் உள்ளே இறங்கியது. 77 நாள்களுக்குப் பிறகு 15 நிமிட இடைவெளியில் 33 தொழிலாளர்களை ஒவ்வொருவராக இக்கலம் மீட்டது. உலகமே வியக்கும் அளவிற்குச் சாதனை படைத்த இந்த மானுட மீட்பு நடவடிக்கைக்கு ஃபினிக்ஸ் பறவையின் பெயரை இட்டனர். உயிரியல் அறிஞர்கள் கூற்றுப்படி ஃபினிக்ஸ் பறவை என்ற ஒன்று இருந்ததே கிடையாது. இந்தப் பறவை சுட்டெரித்தால்கூட மீண்டும் உயிர்த்தெழும் என்று சுட்டப்படுகிற ஒரு கற்பனையான பறவையின் வடிவமாகும். தொழில்நுட்பம் ஃபினிக்ஸ் பறவைக்கு ஓர் உயிர்வடிவத்தையே கொடுத்தது. மாண்டுவிடுவர் என்று அஞ்சிய 33 மனித உயிர்களை மீண்டும் உயிர்ப்பித்தது. மானுடம் வென்றது. உலகமே மகிழ்ந்தது. இந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள், கேட்டவர்கள் கண்ணீர்மல்கி நெகிழ்ச்சியுற்றனர்.

சிலி நாட்டில் நடந்த இந்நிகழ்வு நம் உணர்வுகளைத் தட்டியெழுப்புகிறது. தமிழ்நாட்டிற்கு அருகே இந்தியத் துணைக்கண்டத்தின் காலடியில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நாடான இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழர்கள் குண்டு மழையால் 2009ஆம் ஆண்டில் துளைத்தெடுக்கப்பட்டனர். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொத்துக்குண்டுகளால் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டனர். இந்திய இராணுவமும் இந்தியத் தொழில் நுட்பமும் இந்தக் கொலை பாதகச் செயலுக்கு உறுதுணை புரிந்தன. மானுடக் கொடுமை நடந்தேறி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள்ளேயே சாகாமல் செத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் மூத்த இனம் முதல் இனம் தமிழினம் என்று பெருமை பேசுகிறோம். மானுடத்தின் மூத்த குடியினர் கொன்று குவிக்கப்பட்டபோது உலகத்தோடு நாமும் சேர்ந்து வேடிக்கை பார்த்தோம். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது இதுதானோ?

தொப்புள்கொடி உறவு கொண்ட தாழ்ந்த தமிழகமும் எல்லாவற்றையும் அரசியலாக்கி, இரத்தக் குளியலில் ஓட்டுகளை எண்ணிப்பார்த்தது. புத்தன், காந்தி பிறந்த மண் மண்ணாய்ப் போனது. வானுயர்ந்த வள்ளுவர் சிலைகூட இலங்கைப் பக்கம் பார்க்க மறுக்கிறது.

சிலி நாட்டில் மானுடம் தவழ்ந்தது. இலங்கையில் மானுடம் கொலைபீடத்தில் நிற்கிறது. இதுதான் மானுட நீதியா?

Pin It