இந்தியாவில் இன்று 130 கோடி மக்கள் இருக் கிறார்கள்.

இவர்கள் பேசும் மொழிகள் 1620க்கு மேல் உள்ளன.

இவர்கள் பேசும் மொழிகளில் பலவும் 3,000 ஆண்டுகளாகப் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றில் 3000 ஆண்டுக்கால இலக்கியங்களைப் பெற்றுள்ள மொழிகள் சில.

இம் மொழிகளுள் சமற்கிருதமும் ஒன்று. அது “செப்பம் செய்யப்பட்ட” பழைய மொழி. அதைவிடப் பழைய மொழி தமிழ்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பங்களா, அசாமி முதலான மொழிகளைத் தனித்தனியே கோடிக் கணக்கான மக்கள் பேசுகிறார்கள்.

ஆனால் சமற்கிருதம் இலட்சக்கணக்கான பார்ப்பனர்களால் மட்டுமே பேசப்படுகிறது. அது தேவமொழி எனப் பார்ப்பனர்களால் கொள்ளப் படுகிறது.

எல்லாப் பார்ப்பனர்களும் தமிழை நீச மொழி - இழிந்த மொழி என்றே எழுத்திலும் பழக்கத்திலும் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளுள் தமிழும் மற்றும் 21 மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஒரு செம்மொழி என அண்மைக்காலத்தில் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும், 15-8-2015 அன்று இந்தியா விடுதலை பெற்ற 69ஆம் ஆண்டைய விழாவை இந்திய அரசினர் கொண்டாடிய போது - வெறும் இலட்சக் கணக்கானோர் பேசும் சமற்கிருத மொழியின் நலனுக்குப் பங்களிப்புச் செய்த 16 அறிஞர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் அளிக்கப் பெற்றனர். பாரசீக மொழி அறிஞர்கள் 3 பேர், அரபி மொழி அறிஞர்கள் 2 பேர், பாலி மொழி அறிஞர் ஒருவர், ஆக மொத்தம் 22 அறிஞர்களுக்குக் குடிஅரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கியுள்ளார்.

இவர்களைத் தேர்வு செய்த குழுவினர் இந்தியர் களா? வெள்ளைக்காரர்களா? பார்ப்பனர்களா? அல்லது பாரதிய சனதாக் கட்சிக்காரர்களா? அல்லது இராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தினரா? அல்லது எந்த இந்திய மொழியிலும் புலமை பெற்றிராத மூடர்களா?

தமிழ், திராவிடமொழிக் குடும்பத்தின் தாய். திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த 4 மொழிகளைக் கோடிக்கணக்கான மக்கள் பேசுகிறார்கள். ஒவ்வொரு திராவிட மொழியின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய் தோர் தனித்தனியே நூற்றுக்கணக்கில் திகழ்கிறார்கள்.

இவர்கள் பாரதிய சனதாக் கட்சியினராக - ஆர்.எஸ்.எஸ்.காரராக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், பாராட்டுக்கு உரிய அறிஞர்களைத் தேர்ந் தெடுத்த குழுவினருக்கு மற்ற இந்திய மொழிகளைப் பற்றிய அறிவே இல்லையா? அந்தப் பட்டியலை ஒப்புக்கொண்ட மய்ய அரசுக் கல்வி அமைச்சருக்கு இதில் பொறுப்பு இல்லையா? இதை நம்பிப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய குடிஅரசுத் தலைவருக்குக் கிஞ்சிற்றும் நேர்மை உணர்வு இல்லையா? இந்தியா, அவருடைய முடிஅரசா? அல்லது 130 கோடி மக்களுக் கான குடிஅரசா?

தமிழகத் தமிழர் எல்லோரும் சிந்தியுங்கள்!

இந்திய அரசின் இத்தகைய பொறுப்பற்ற போக்குக்குக் கண்டனம் தெரிவியுங்கள்!

01.09.2015           - ஆசிரியர் குழு

“சிந்தனையாளன்”