நாடு முழுவதும் ஆயுதபூசையும் சரசுவதி பூசையும் அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளன. தொடக்கப்பள்ளி தொடங்கி, சாதாரணப்பெட்டிக்கடை முதல் விண்வெளிக்கு ஏவுகணைகளை எறியும் அரிகரிகோட்டா அறிவியல் ஆய்வகம் வரை எல்லா இடங்களிலும் பூசைகள் நடத்திப் பொரிகடலை கொடுத்து முடித்திருப்பார்கள். ஆளும் மத்திய-மாநில அரசுகளில் உள்ள துறைவாரி அமைச்சர்கள் போலவே, ஆண்டவர்களின் பரமண்டலத்திலும் துறை வாரி அமைச்சர்கள் உண்டு. அந்த ஒதுக்கீட்டின்படி உலகு தோன்றிய நாள்முதல் கலைமகள்தான் நமக்குக் கல்வித்துறை அமைச்சர். இப்போதுள்ள அமைச்சர்களின் ஒழுக்கம் நேர்மைபற்றி எப்படி நம்மால் கேள்வி கேட்க முடியாதோ, அப்படித்தான் நமக்கு வாய்த்த ஆண்டவர்கள் நிலையும் ‘சரசுவதி பூசை’ என்ற தலைப்பில் பெரியார் எழுதும்போது,

“சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதை யைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதை களின்படி மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரசுவதி என்கிற பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக் கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவெடுத்து ஓடவும்; பிரம்மன் தானும் ஓர் ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின்தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரசுவதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித் ததாகச் சரசுவதி உற்பவக் கதை சொல்கிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் சரசுவதி என்றாகிறது” -(பெரியார் சிந்தனைகள் தொகுதி 4; பகுதி 1, பக்.2142)

ஆயுதபூசை குறித்துப் பெரியார் எழுதும்போது அரசன் தன் ஆயுதங்களையும், வணிகன் தன் கணக்குப் புத்தகங் களையும் தராசு, எடைக்கல் உள்ளிட்டவற்றையும், தொழி லாளிகள் தம் தொழில் ஆயுதங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், இசைக் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளையும் வைத்து வணங்கும்போது, தாசிகள் தங்கள் ரவிக்கை, சேலை, நகைகளை வைத்து வணங்கு வார்களா என்பார்.

கல்விக்குக் கடவுளாகச் சரசுவதி உள்ள இந்த நாட்டில் தான் காலங்காலமாகச் சாதியின் கடைநிலை மனிதர்களான அடித்தட்டு மக்களுக்கு இங்கே கல்வி மறுக்கப்பட்டது. ‘வேதத்தைப் படித்தால் அவன் நாக்கை அறு; பக்கம் நின்று கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று’ என்றுரைத்த சனாதன இந்து தருமத்தின் தத்துவங்களை நிலைநிறுத்தத்தான் நடுவத்தை ஆளும் நரேந்திரமோடி அரசு நாலுகால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டுள்ளது.

வடநாட்டிலுள்ள குசராத்தில் சேட்டு, மார்வாடிகள் காட்டில்தான் இப்போது அடைமழை. பெருவணிகம் முழு வதும் அந்தப் பெருச்சாளிகளிடம்தான். பருப்பு விலைகள் விண்ணைத்தாண்டிப் பறக்கின்றன. வேளை தவறாமல் முந்திரி, பாதாமுமாய் விழுங்கும் அந்த வெட்கங்கெட்ட மார் வாடிகளையோ, இங்கே கள்ளக் கணக்கெழுதி அரசையும் மக்களையும் ஏமாற்றும் வணிகக் கயவர்களையோ துர்கா தேவியின் பத்து, இருபது கைகளில் உள்ள ஆயுதங்கள் என்றேனும் பதம்பார்த்தது உண்டா? பாவம், அவள் என்ன செய்வாள்? அவளுக்கும் ஒரு சோகக் கதை உண்டு! கீழே படியுங்கள்!

துர்காதேவிக்கு நேர்ந்த துயரம்

உலக நாடுகளிடம் இந்தியாவையே விற்க, ஓயாமல் வெளிநாடுகளுக்குப் பறக்கும் மோடியை, இங்கேயே சந்தித்து ஒப்பந்தம் போட ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அண்மையில் புதுதில்லி வந்தார். அப்போது இருநாடுகளுக் கும் இடையே 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாயின. இறுதியில் ஏஞ்சலா மோடியின் கையில் ஒரு துர்க்கை அம்மன் சிலையை ஒப்படைத்தார். அச்சிலை இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டது. ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் அருங் காட்சியகத்தில் மகிஷாசுர மர்த்தினி வடிவத்தில் உள்ள இந்தச் சிலை பற்றிய செய்தி 2012 ஆம் ஆண்டில்தான் இந்திய அரசின் தொல்பொருள் துறைக்கே தெரிந்தது.

காஷ்மீரின் புல்வாமா நகரிலிருந்து இந்தச் சிலை 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டிருந்தாலும் பன்னிரண்டு ஆண்டு களுக்குப் பிறகு இப்போதுதான் தொல்பொருள் துறையே தூக்கத்திலிருந்து கண்விழித்தது. சிலையைத் திருப்பிக் கொடுத்த ஏஞ்சலாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றிகூறி மோடி உதிர்த்த முத்துக்கள்தாம் மிகவும் முகாமையானவை: “காணாமற்போன இந்தச் சிலை தீயசக்திகளை வெற்றி கொண்டதன் நினைவுச் சின்னமாகும்”. உண்மையிலேயே அந்தச் சிலைக்கு உயிர் இருந்தால் மோடியின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டிருக்கும்.

இப்படித்தான், மோடி ஆட்சிக்குவந்த தொடக்கக் காலத் திலேயே, தமிழ்நாட்டின் சிதம்பரத்தை அடுத்துத் திருடு போன ஒரு நடராசர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்கிறார்கள் ஆன்மீக பக்தர்கள். ஆனால் அந்த ஆண்டவன் கண்முன்னால்தான் அடுக்கடுக்கான அட்டூழியங்கள் நடந்து கொண்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மயிர் திருட்டு

ஆண்டவன் சிலைகள், அவன் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் போன்றவை திருடுபோவது வாடிக்கை. ஆனால் அந்த ஆண்டவனுக்கு முடிகாணிக்கை செலுத்தப் போகும் பக்தர்களின் மயிர்களே மர்மமான முறையில் காணாமற் போவதும் திருப்பதி ஏழுமலையானின் திருவிளையாட்டோ?

திருப்பதி ஏழுமலையானுக்கு ஓர் அரசாங்கத்தைப் போலவே ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) தயாரிக்கப்படுகிறது. திருப்பதிக்கு முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் மூலமாகவே கோடிக்கணக்கான முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். கடந்த பதினைந்து நாள் களுக்கு முன் அந்தத் தலைமுடியின் எடையிலிருந்து 2 கிலோ தலைமயிர் காணாமற் போயுள்ளது. ஆண்டவனின் கண்முன்னாலேயே இந்த அட்டூழியம் நடக்கலாமா? அடப்போங்கடா! மயிர்தானே போனது என்று ஆண்டவன் அமைதியாய் இருந்துவிட்டாரா? அந்த ஊர் சந்திரபாபு (நாயுடு)வும் நம்ம ஊர் இராமகோபாலன், எச்.இராசா, இல.கணேசன் கும்பலும்தான் இதற்கு விடை சொல்ல வேண்டும்!