மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு இந்தி மொழியை வளர்ப்பதற்கும் சமற்கிருத மொழியை வளர்ப்பதற்கும் ஆண்டுதோறும் பல நூறு கோடிகளைச் செலவழித்து வருகின்றது.
இந்திய அரசின் சுதந்திர நாள் பவழ விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வை ஒன்றிய அரசு ஏற்பாடு செய்தது. சென்னையில் இயங்கி வரும் ஐ.ஐ.டி.யும், வாரணாசியில் இயங்கி வரும் பனாரஸ் பல்கலைக்கழகமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தன.
2022 நவம்பர் 17 தொடங்கி திசம்பர் 16 வரை ஒரு மாத காலம் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ் நாட்டில் இருந்து 13 தொடர் வண்டிகளில் 2,592 பேர் இந்தக் காசித் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று வந்தனர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்குச் சென்று வந்தவர்களுக்குத் தொடர் வண்டிப் பயணம், உணவு, தங்குமிடம் ஆகியவை அனைத்தும் இலவயமாக வழங்கப்பட்டன. ஆளுநர் இரவி கொடி அசைத்து முதல் தொடர் வண்டியை அனுப்பி வைத்தார். இந்த பயணத்திற்கு ஆன செலவு முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்றது.தலைமை அமைச்சர் மோடி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில், பண்டையக் காலந்தொட்டே தமிழ்நாட்டிற்கும் (இராமேசுவரம்) காசிக்கும் தொடர்பு உண்டு; தமிழகத்திற்கும் காசிக்கும் இணைப்பு எப்போதும் இருந்து வந்துள்ளது என்று கூறினார். பா.ச.க. அரசு கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கை, அந்த இணைப்பை மேலும் வலிமைப்படுத்தும் என்று கூறினார். தமிழ் மிகப் பழமையான மொழி.தமிழ் மொழியை 130 கோடி இந்தியர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
இறுதி நாளில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்துறை அமைச்சர் அமித்சா உரையாற்றினார். இந்திய ஒருமைப்பாட்டை மிகவும் வலியுறுத்திப் பேசினார். இந்த நிகழ்வு அதற்கு வலிமைச் சேர்க்கும் என்றும் பேசினார். இதிலிருந்தே இவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் நடத்தப்படுவதாக சி.பி.ஐ.(எம்) கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தினர் காசி தமிழ்ச் சங்கத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற தொடர் வண்டிகளை மறித்துப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டு அரசையோ, உண்மையான, உணர்வுள்ள தமிழ் அமைப்புகளையோ இவர்கள் அழைத்து இதை நடத்தவில்லை. பா.ச.க. ஆதரவு அமைப்பினர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
இந்திய ஒன்றிய அரசு உண்மையிலேயே தமிழ் மொழியின் மீது அக்கறை காட்டுகிறதா? சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படுவதில்லை. ஒன்றிய அரசின் ‘கேந்திரிய வித்தியாலயா’ பள்ளிகளில் தமிழ் ஒரு பாட மொழியாகக் கூட இடம்பெறவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டரசின் கோரிக்கையை இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒன்றிய அரசு அறிவிக்கின்ற புதியப் புதியத் திட்டங்களுக்கு இந்தி (அ) சமற்கிருதப் பெயர்களையே சூட்டுகின்றனர்.
பெரும்பாலான ஒன்றிய அமைச்சர்கள் இந்தியில் விடை அளிக்கின்றனர். செம்மொழியான தமிழ் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் சோதிமணி அவர்களின் கேள்விக்கு ஒன்றியக் கல்வி அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவர்களின் கபட நாடகம் தெரியவருகிறது. மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழுக்கு 74.04 கோடியும் சமற்கிருதத்திற்கு 1487.81 கோடியும் செலவழித்துள்ளது. ஆண்டுவாரியாக அதன் விவரம் வருமாறு:
தொகை ரூ. கோடிகளில்...
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 20.12.2022)
ஒன்றிய அமைச்சரின் மேற்கண்ட அறிக்கை ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே பேசுவதாகக் கூறப்படுகிற செத்த மொழியான சமற்கிருதத்தை உயிர்பிக்க ஆயிரங் கோடிகளைச் செலவு செய்து உள்ளதைக் காட்டுகிறது. உலகில் 8 கோடி மக்கள் பேசுகின்ற தமிழுக்குக் கடந்த 8 ஆண்டுகளில் 74.04 கோடி மட்டுமே செலவு செய்து உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஒரு அலுவல் மொழியாகப் பயன்படுத்த பல நூறு கோடிகளைச் செலவழிக்கிறது இன்றைய பா.ச.க. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்தியா என்றால் இந்தி மொழி மட்டுமே பேசப்படுகின்ற நாடு என்று வெளி உலகிற்கு காட்டுவதற்காகப் படாதபாடு படுகிறார்கள். இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற பல மொழித் தேசிய இன மக்களின் தாய்மொழிகளை அழித்து வருகின்றனர். இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணிக்கவும் சமற்கிருத மொழியில் இருந்துதான் தமிழ்மொழி தோன்றியது என்று நம்ப வைப்பதற்காகவும் தான் காசித் தமிழ்ச் சங்கமம் என்ற காவிகளின் சங்கமம் என்கிற நாடகம் நடந்தேறி முடிந்துள்ளது.
- வாலாசா வல்லவன்