ஆய்வாளர் தாரா. கிருஷ்ணசாமி, தென் மாநிலங்கள் இணைந்து கோரிக்கைகள் வைத்தால் தில்லியில் அக்கோரிக்கைகள் ஏற்கப்படுமா? என்ற கேள்வியை எழுப்பி ஐக்கிய தென்னிந்திய மாநிலங்கள் (United States of South India) என்ற தலைப்பில், 2016 ஜூலை 14 அன்று எழுதிய கட்டுரை தற்போது சமூக வலைத் தளங்களில் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகிறது.

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முதன்மையான கருத்துகளை, 24.12.2016 நாளிட்ட “முரசொலி” நாளிதழ் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 20 விழுக்காடு உள்ள தென்னிந்திய மாநிலங்கள் இந்தியா வின் மொத்த வரிவருவாயில் 30 விழுக்காட்டினை அளிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை இந்த ஐந்து மாநிலங்கள் அளிக் கின்றன. இந்தி பேசுகின்ற மாநிலங்களைவிட இரட்டிப் பான தொழில் வளர்ச்சியும் தனிநபர் வருமானமும் (Per Capita), குறைந்த அளவில் வேலையின்மையும் இருந்து வருகிறது. மேலும் சமூக வளர்ச்சியிலும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளிலும் தென் மாநிலங்கள் மேலோங்கி உள்ளன.

இருப்பினும் நடுவண் அரசின் வரிவருவாய் பகிர்விலும், நிதிப்பகிர்விலும் தென்னக மாநிலங்கள் மிகக் குறைந்த அளவே நிதியைப் பெறுகின்றன. இந்த மாநிலங்கள் நடுவண் அரசின் மொத்த வரிவருவாயில் 18 விழுக்காடு நிதியையே பெறுகின்றன. சான்றாக, தமிழ்நாடு இந்திய அரசிற்கு அளிக்கும் ஒவ்வொரு ரூபாய் வரிவருவாயிலும் 40 காசு மட்டுமே நிதிப்பகிர்வாகப் பெறு கிறது. ஆனால் உத்தரபிரதேசத் திற்கு ஒரு ரூபாய்க்கு, 80 காசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவ்வாறு தென்னக மாநிலங்கள் தங்களது பொருளாதார நடவடிக்கைகளால் தொழில்-பணித்துறை முன்னேற்றங் களால் ஏற்படுத்திக் கொள்ளும் வளர்ச்சியையும் பெருக்கி, வரும் வரி நிதியா தாரங்களையும் வட மாநிலங்கள் எடுத்துச் செல்கின்றன என்றும் இந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

தென்னக மாநிலங்களுக்கிடையே இயற்கையாக அமைந்த அடையாளமும் பொதுவான மொழிக் குடும்ப மும் பண்பாட்டுக் கூறுகளும் சமூகத் தொடர்புகளும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஒன்றியங்களில் வர்த்தக எல்லை, சந்தை ஒப்பந்தங்கள் உள்ளது போன்று தென்னிந்திய மாநிலங்கள் இந்தியாவோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு இருந்திருந்தால், முறையற்ற நெறியற்ற வகையிலும் வெளிப்படையாகவும் அதிக மக்கள் தொகையுள்ள வட மாநிலங்களுக்குத் தென் மாநிலங்களின் நிதி சென்றி ருக்காது என்று இக்கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட தாரா, கிருஷ்ணசாமியின் கருத்துக் கள் கூட்டாட்சியியல் அறிஞர்களால் சுட்டப்பட்டுள்ளன. அதிகாரப் பரவலுக்கான அரசியல் விவாதம் என்பது ஒரு நாட்டின் பலதரப்பட்ட வேற்றுமைகளையும் அளவையும் பொறுத்தே அமைகின்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை இழந்திடாமல் பல பகுதிகளில் காணப்படுகிற பண்பாட்டு, சமூக, பொருளாதார, இன சமய வேற்றுமைகளைப் பாதுகாத்து, அவற்றின் விளைவாக எழுந்திடும் அரசியல் விளைவுகளைச் சந்திப்பதற்குக் கூட்டாட்சி முறை அரசே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதிக அதிகாரமும் உரிமைகளும் வேண்டும் எனப் பல இனப்பிரிவுகள் அவ்வப்போது எழுப்பிடும் கோரிக்கைகள் அதாவது தன்னாட்சி கோரும் இயக்கங்களின் கோரிக்கைகள் (Self

Determination Demands) பல பண்பாட்டுக் கூறுகள் நிறைந்த சனநாயக அமைப்புகளில்-அதிலும் குறிப்பாக வளரும் சனநாயக நாடுகளில் எழுவது இயற்கையான தாகும். ஓரிடத்தில் அதிகாரக் குவிப்பு ஏற்படும்போது கோரிக்கைகளை முன்னிறுத்தும் அமைப்புகள் மேலும் மோதல்களை விரிவுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டரசுக் கூறுகளை விரிவுப் படுத்தி மக்களின் நலன்களை- உரிமைகளைப் போற்றித் தன்னாட்சி உரிமைக் கோரிக்கை தீவிரமடையாமல் இருப்பதற்கு உரிய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிஞர் கோலி (1998) குறிப்பிட் டுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாகிற காலத்தில் அண்ணல் அம்பேத்கர் இராஜாஜியைச் சந்தித்தார். அப்போது தென் மாநிலங்கள் இணைந்த தட்சணப் பிரதேசம் உருவானால் மிகச் சிறப்பான முறையில் இயங்கும் என இராஜாஜி கூறியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் வியந்து போனார். மொழிவழி மாநிலங்கள் குறித்து அம்பேத்கர் பேசும்போது-வடக்கு பிற்போக்கா னாது தெற்கு முற்போக்கானது (The North is Reactionary and the South is Progressive)) எனக் குறிப்பிட்டார்.

மொழிவழி மாநிலங்கள் அமைக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்த போது, வட்டார மன்றங்கள் (Zonal Council) அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஐந்து வட்டார மன்றங் களில், தென்னக வட்டார மன்றமும் (The Southern Zonal Council) ஒன்றாகும். தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச் சர்கள் 1957 ஆம் ஆண்டு முதல் 26 முறைகள் கூடி யுள்ளனர். 1984க்குப் பிறகு மாநிலங்களிடையேயான முதன்மையான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரை யாடப்படவில்லை. ஒரு வேளை நடுவண் அரசு மாநிலங்களிடையேயான சுமூகமான நல்லுறவுகள் பேணப்படுவதை விரும்பவில்லையோ எனக் கருதப் படுகிறது. காலப் போக்கில் இந்த அமைப்பு இன்று நடுவண் அரசின் துறையாகவே இயங்கி வருவதால், பல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முழுமை யான முறையில் தவறிவிட்டது.        

இந்தியத் துணைக்கண்டத்தில் 1950க்குப் பிறகு பிரிவினை கோரும் இயக்கங்கள் வடகிழக்கு மாநி லங்களிலும், சில நேரங்களில் தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளன. தமிழ் நாட்டில் ஓர் அரசியல் கட்சி என்கிற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1962 வரை பிரிவினையைக் கோரியே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. 1957இல் 15 சட்டமன்றத் தொகுதிகளையும், 1962இல் 50 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்ற பிறகு, தில்லிப் பேரரசு சட்டமன்றங்களில் போட்டியிடும் கட்சிகள் பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தால், அவை தேர்தல்களில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றன என்ற சட்டத்திருத்தத்தை 1963இல் கொண்டு வந்தது. இதன் பிறகு திமுக பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது.

இருப்பினும் 1967இல் ஆட்சியமைத்த போது, சட்டமன்றத்தில் பேசுகிற போது அறிஞர் அண்ணா, பிரிவினையைக் வைவிட்டுவிட்டேனே தவிர பிரிவி னைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று சுட்டினார். மாநிலங்களுக்குத் தன்னுரிமை அளிப்பதன் வாயிலாகவே இந்தியாவின் ஒற்றுமை வலிமை பெறும் என்று அறிஞர் அண்ணா வலியுறுத்தினார். 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரி பிந்தரன் வாலே தலைமையில் இளைஞர்கள் போராட முற்பட்டனர். முதன்முதலாக பஞ்சாப் மாநிலப் பொற் கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு, பிந்தரன் வாலே கொல்லப்பட்டார். தற்போது சில ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள் தங்களின் கட்டு ரைகளில் மூத்த இராணுவ அதிகாரிகள் பொற்கோயிலுக் குள் இராணுவத்தை அனுப்பக்கூடாது என்று பிரதமர் இந்திராகாந்தியிடம் குறிப்பிட்டனர். இக்கருத்தை வலியுறுத்தியதனால் ஓர் இராணுவ தளபதிக்குத் தலைமைப் பதவி தரப்படவில்லை என்றும், இராணுவத் தளபதி வைத்யா தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டார் என்றும், இராணுவத்தில் பின்பற்றப்பட்ட மரபுகள் இந்திரா காந்தியால் தூக்கியடிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்திரா காந்தியின் இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்த தளபதி வைத்யா தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்ற நிலைதான் மணிப்புரிலும் தொடர்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சிறப்பு இராணுவச் சட்டம் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கிறது என்று இரோன் சர்மிளா பல ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது அதனை முடித்து, அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆட்சி அமையப் பெற்றால் இராணுவச் சட்டத்தைத் திரும்பப் பெறுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சனநாயக் கூட்டணியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அமைச்சரவையில் இடம் பெற்ற உமர் அப்துல்லா தற்போது காஷ்மீரில் மற்ற மாநிலத்தவர்கள் தொழில் தொடங்கப் போகிறோம் என்ற காரணத்தைக் கூறிச் சொத்துகளை வாங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். நடுவண் அரசின் இத்தகையப் போக்கு இந்திய ஒற்றுமைக்குப் பெரும் பின்னடைவையும் பிரிவினை கோருகின்ற இளைஞர் இயக்கங்கள் வலிமை பெறுவதற்கு வழிவகுக்கும் என்று குறித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி 2016 டிசம்பர் திங்களில் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே இராணுவம் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலகத் திலும் மற்ற பகுதிகளிலும் நடமாடியதைக் கண்டித்துத் தலைமைச் செயலகத்திலேயே 12 மணிநேரம் உள்ளி ருப்புப் போராட்டத்தை நடத்தினார். இது இராணுவம் செய்கின்ற அன்றாட நடவடிக்கை என்று நடுவண் அரசு விளக்கமளித்தாலும், ஒளி ஊடகங்கள் இராணுவத்தினர் சுங்கச்சாவடிகளில் நின்று கொண்டு வரிவசூல் நடவடிக் கைகளை மேற்கொண்டதைப் படம் பிடித்துக் காட்டின. தமிழ்நாடு அரசின் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இராம மோகன ராவ் அறைக்கே சென்று, நடுவண் அரசின் புலனாய்வுத் துறை சோதனை யிட்ட போது துணை இராணுவம் குவிக்கப்பட்டதைத் தற்செயலாக நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருபுறம் நடுவண் அரசின் அதிகாரக் குவிப்பும் தனி மனிதப் பேராதிக்கமும் வலிமை பெற்று வரும் இக் காலத்தில் தாரா. கிருஷ்ணசாமியின் கட்டுரையைச் சமூக வலைத்தளங்களில் பல இளைஞர்கள் வரவேற்றுத் தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

1983இல் நடுவண் அரசு எட்டாம் நிதிக்குழுவை அமைத்த போது தென்னக மாநிலங்கள் போதிய நிதியாதாரங்களை நடுவண் அரசிற்கு அளித்தாலும் இம்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்று அன்றைய கர்நாடக முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.

தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆந்திர முதல்வர் என்.டி.இராமராவ் பாண்டிச்சேரி முதல்வர் தெ.இராமசந்திரன ஆகியோர் கர்நாடக முதலமைச்சர் கூட்டிய தென்னக மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது மத்திய-மாநில உறவுகளை முழுமையான அளவில் சீரமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வழிமொழிந்தனர். இன்றைய ஆய்வாளர் தாரா. கிருஷ்ணசாமி குறிப்பிடுகிற பல கருத்துகளைத் தீர்மான வடிவில் நடுவண் அரசிற்கு அளித்தனர். இதன் காரணமாகத்தான் மத்திய-மாநில உறவுகளைச் சீராய்வதற்கு 1983இல் நடுவண்அரசு நீதிபதி சர்க்காரியா தலைமையில் குழு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்து ரைகள் பயனற்ற முறையில் இன்றும் நடுவண் அரசிடம் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் இக்கட்டுரையாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை தனது மாமனார் விடுதலைப் போராட்ட வீரர் க.ரா.ஜமதக்னியுடன் சென்று சந்தித்த போது, இந்தியாவில் கூட்டாட்சி முறையை வலிமைப்படுத்தவில்லை என்றால் சனநாயகத்திற்கு இன்று போல் எதிர்காலத்திலும் பேராபத்து ஏற்படும் என்று காமராசர் வலியுறுத்தினார். தென்னக மாநிலங்கள் ஒன்றிணைந்து தங்களுடைய நீர்வள ஆதாரங்களையும் மின்சாரத்தையும் அரிசியை யும் பங்கிட்டுக் கொண்டு தங்களுக்குள் மேற்கூறிய துறைகளில் ஏற்படுகின்ற பற்றாக்குறையைப் போக்கிக் கொள்ளலாம். இவ்வித முயற்சியால் தென்னக மாநிலங் களுக்கு இடையே ஒரு புதிய கூட்டாட்சி முறைமை உருவாகும். இந்தியக் கூட்டாட்சியலுக்கு இது பெரும் உதவி யாக இருக்கும் (இந்தியக் கூட்டாட்சியியல்-அதிகாரக் குவிப்பா? பகிர்வா?.பக்284) என்று பெருந்தலைவர் காமராசர் நுண்மாண் நுழைபுலத்தோடு குறிப்பிட்டார்.

இன்றைய நடுவண் அரசு ஒரு தனிநபரின் செயலுக்குத் துணை போய் மக்களுக்கும், மக்களாட்சிக் கும் கூட்டாட்சி இயலுக்கும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. உயர் மதிப்பு ரூ.1000 ரூ.500 பணத்தாளைச் செல்லாது என்று அறிவித்ததுகூட, நடுவண் அரசின் அமைச்சர்கள் பெரும்பான்மை யோருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடந்த 50 நாட்களாக உழைத்துச் சேமித்த பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டு, திரும்பப் பெற முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஊரகப் பொருளாதாரமும் சிறுகுறு தொழில்களும் நொறுங்கி வருகின்றன. இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட, இது மோசமானது என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் நாள்தோறும் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நிற்கும் நிகழ்வுகள் உலகின் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. இது அதிகாரக் குவியலால் ஏற்பட்ட மமதையின் விளை வேயாகும் என்று பல ஏட்டாளர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன.

மேலும் மாநிலங்களின் உரிமைகளில் நாள்தோறும் நடுவண் அரசு குறுக்கிட்டு மாநில அதிகாரங்களைப் பறித்துக்கொள்ளும் போக்குகள் வெளிப்படையாகத் தென்படுகின்றன. தென் மாநிலங்களின் நிதியாதாரங் களைச் சுரண்டும் போக்கு ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மற்றொருபுறம் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் நடத்த முற்படும் வேளையில் நடுவண் அரசு நடத்தும் கல்வி நிலையங்களுக்கு இது பொருந்தாது என்றும் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுவது கூட்டாட்சியியலையும் மக்களாட்சி முறையையும காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.

“ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, இராஜபாளையம் கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களின் இனப் பெருக்க மையத்தை மூடவேண்டும், மூன்றாவது பாட மொழி என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிப்பது போன்ற மக்கள் விரோதச் செயல்களும் நடவடிக்கைகளும் மாநிலங்களின் மீது திணிக்கப்பட்ட அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு போராகவே கருத வேண்டி யுள்ளது. பாஜக-குறிப்பாக பிரதமர் மோடியின் எதேச் சதிகாரமான செயல்பாடுகள் இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

இச்சூழலில் வடஇந்தியா, தென்னிந்தியாவைச் சுரண்டுகிறது என்று தாரா கிருஷ்ணசாமியின் குரல் திராவிட நாடு கோரிக்கையை மீண்டும் நினைவூட்டு கிறது. இதுபோன்ற போக்குகளைத் தடுக்க வேண்டு மென்றால், மாநிலங்கள் முழு உரிமை பெற்றுத் தங்கள் மொழி, இன, பண்பாட்டு, கல்வி உரிமைகளைப் பெறும் வண்ணம் இந்திய அரசமைப்புச்சட்டத்தை மாற்றிய மைத்திடல் அவசியமாகிறது.

Pin It