கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 80 விழுக்காடு பணத்தை மதிப்பழிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் செல்லாதவையாக்கப்பட்டன. புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது சாமானியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம். சாதாரண மளிகைச் செலவுகளுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நாள் கணக்காக நிற்க வேண்டியிருந்தது.

bank of india bank queueசிறு தொழில்கள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப் பட்டது. சிறு தொழில்களால் நிரம்பி வழியும் கோவையும், திருப்பூரும் கடும் பாதிப்புக்குள்ளானது. இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலர் தொழிலை விட்டு வெளியேறி தினக்கூலிகளாக மாறினர். ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தவர்கள் உயிரிழந்த பரிதாபத்தையும் கண்டோம். விவசாயத் துறை பணமில்லாமல் தடுமாறியது. விற்ற பொருட்களுக்குப் பணத்தை பெற முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காசோலைகளை வங்கிகளில் செலுத்திப் பணமாகப் பெற மாதக்கணக்கில் ஆனது.

அந்தச் சமயத்தில் மக்கள் கண்ட அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மோடி அளித்த ஒரு பதில், “இந்தத் துன்பங்களை மக்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்கிறார்கள். மக்கள் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான். மேலும், “வரி செலுத்தாமல் தவறான வழியில் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் கொழுத்த தொழிலதிபர்கள், நேர்மையற்ற அரசியல்வாதிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் போன்றோரிடமிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

மக்கள் தியாகம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தியாகத்தால் என்ன பயன் விளைந்தது? பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைப் பற்றி இது வரையில் மோடி வாய் திறக்கவேயில்லை. ஆனால் நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று ‘பண மதிப்பழிப்பு’ எனப் பெருமையோடு பேசி வந்தார். இது சீர்திருத்தமா அல்லது சீரழிவா என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளே வெளிப்படுத்தி யுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.15.31 லட்சம் கோடி வங்கி களுக்கு திரும்ப வந்துவிட்டது. இது அப்போது புழக்கத் தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களின் மதிப்பில் 99.3 விழுக்காடாகும்’ என்று தெரிவித் துள்ளது.

எஞ்சியது வெறும் 0.7 விழுக்காடுதான். ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி திரும்ப வராமல் உள்ள பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி. பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் வங்கிகளில் நிலவிய நெருக்கடிகளாலும், புதிய ரூபாய் தாள்கள் விநியோகத்தில் காணப்பட்ட மந்த நிலையாலும் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் எத்தனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களால் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள இயலாமல் போனது என்பதையும் அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் ஆராய்ந்து கணக்கிட்டால், எஞ்சிய 0.7 விழுக்காடு என்பது இன்னமும் கூட குறையும் அல்லது முழுமையாகப் பூர்த்தியாகலாம்.

ரொக்கப் பரிவர்த்தனைகளின் மூலம்தான் பெரும் பகுதி வர்த்தகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி 15 லட்சம் வேலையிழப்புகளை உண்டாக்கிவிட்டது என்று டெல்லியைச் சேர்ந்த இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு; வேலையிழப்புகள் இதைவிட அதிகமாக இருக்குமென்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

மக்களின் தியாகம் என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.

கறுப்புப் பண ஒழிப்புக்காகவா?

கறுப்புப் பணம் என்பது பெட்டிகளிலும், சாக்குப் பைகளிலும், கண்டெயினர்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளப்படுவது அல்ல. நேர்மைக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட வருவாயை நிலம், பங்களா, தோட்டம், நகை, வியாபார நிறுவனங்கள் என வழிகளில் அப்பணம் முதலீடாக மாற்றப்பட்டுவிடுகிறது. கருப்புப் பணம் என்பது பணமாக இருக்காது. அதனால்தான் மோடியால் மதிப்பழிப்பு செய்யப்பட்ட பணம் எங்கும் மறைந்துவிடாமல் கிட்டத்தட்ட முழுமையாக வங்கிகளுக்கு வந்துவிட்டது. பணத்தைச் செல்லாமல் ஆக்கிவிட்டால் அந்தச் சொத்துகள் எதுவும் முடங்கிவிடாது. கொழுத்த தொழிலதிபர்களும், நேர்மையற்ற அரசியல்வாதிகளும் கறுப்புப் பணத்தை சேர்த்திருப்பார்கள் என்று மோடி கூறும் எந்தச் சொத்திற்கும் எள்ளளவிலும் பாதிப்பு ஏற்பட் டிருக்காது. எனவே பணமதிப்பழிப்பின் நோக்கம் கறுப்புப் பண ஒழிப்பு என்பது மிகப் பெரிய பொய்.மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கவா?

கறுப்புப் பணம் ஒழிப்பு தோல்வியடைந்துவிட்டது என்பதால் பணமதிப்பழிப்புக்கு பல்வேறு காரணங்களைக் கூறி நியாயம் கற்பித்தார்கள். அதில் ஒன்றுதான் மின்னணு பரிவர்த்தனை. ரொக்கப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரொக்கப் பணத்தின் தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம். “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணப் பரிவர்த்தனை குறைந்துள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் குறித்து மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. இது பண மதிப்பழிப்பின் வெற்றி அல்லவா?” என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.

இதுவும் எவ்வளவு பெரிய பொய் என்பதைக் காட்ட, ரிசர்வ் வங்கியின் அறிக்கையே போதுமானது. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ’ஜூன் 1ஆம் தேதி கணக்குப்படி நாட்டில் ரூ.19.3 லட்சம் கோடி ரொக்கப் பணம் புழக்கத்தில் உள்ளது. இது பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்திற்கு முந்தைய ரொக்கப் பணத்தை விட மிக அதிகமாகும். 2016ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ரூ.17.9 லட்சம் கோடி ரொக்கப் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது’ என்று கூறியிருந்தது.

ரொக்கப் பண புழக்கம் குறையால் மின்னணு பரிவர்த்தனை மட்டும் உயர்ந்தால் அது எப்படி வெற்றியாகும்? அரசின் நோக்கம் ரொக்கப் பணத்தின் தேவையை குறைப்பதுதானே? அது நடக்கவில்லையே? இன்றளவிலும் நாட்டின் 98 விழுக்காடு வர்த்தகம் ரொக்கப் பணத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. அதனால்தான் ரொக்கப் பணப் புழக்கம் முன்பைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. எனவே ரொக்கப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதை சொல்லாமல், மின்னணு பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது; அதனால் பணமதிப்பழிப்பு வெற்றிபெற்றிருக்கிறது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவா?

ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிக்கைகளுக்குப் பிறகும் பணமதிப்பழிப்பின் தோல்வியை ஒப்புக் கொள்ள மோடியின் மத்திய அரசு தயாராக இல்லை. “பணமதிப்பழிப்பின் முக்கிய நோக்கமே வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். இது இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தி யுள்ளது. 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் முடிவில் அந்த எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பழிப்பின் விளைவாக வருமான வரி ரிட்டன் தாக்கல்கள் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன” என்று அருண் ஜேட்லி வேறொரு நியாயம் கற்பிக்க முயன்றார்.

2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 17.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதைக் கொண்டே இந்த வாதத்தை அருண் ஜேட்லி முன்வைக்கிறார். அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சற்றே ஒப்பிட வேண்டியுள்ளது. பாஜக ஆட்சியில் 2016-17இல் நேரடி வரி வசூல் 14.6 விழுக்காடும், 2015-16இல் 8.9 விழுக்காடும், 2014-15இல் 6.9 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலமான 2013-14இல் நேரடி வரி வசூல் 14.3 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு முந்தைய 2010-11இல் 18 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எந்தவிதமான பணமதிப்பழிப்பும் செய்யவில்லை என்பதை நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தக் கூடியவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த மக்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல.

தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தவா?

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் தீவிரவாதி களின் கைகளில் உள்ள உள்ள கறுப்புப் பணத்தை யெல்லாம் ஒழித்துவிட்டோம், இனிமேல் இந்த நாட்டில் தீவிரவாதத் தாக்குதலே இருக்காது என்று கூறி வந்தார். அப்படியானால் பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டு 40 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்தது எப்படி? யார் அவர்களுக்கு பணம் கொடுத்தது? எனவே மோடி கூறுவது அனைத்தும் கட்டுக்கதைகள்தான். பணமதிப்பழிப்பு சீர்திருத்தம் அல்ல, மோடி அரசின் மிகப் பெரிய சீரழிவு.