இந்தியாவில் உள்ள வாக்கு வேட்டைக் கட்சிகளுள் காங்கிரசே மிகவும் பழையது. இன்று அது 126 ஆண்டுகளை முடித்திருக்கிறது.

அடுத்த மிகப் பழைய கட்சி தென்னிந்திய நலஉரிமைக்கட்சி (South Indian Liberal Federation -S.I.L.F.) என்ற பெயரிலான நீதிக்கட்சி அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சி - திராவிடர் கட்சி. இன்று அது 95 ஆண்டுகளை முடித்திருக்கிறது.

அதன் நீட்சியே, திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தேர்தல் கட்சிகள். இவையன்னியில் உள்ள திராவிடர் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் முதலானவை தேர்தலில் ஈடுபடாத கட்சிகள்.

இவை தமிழ்நாட்டில் நிலை கொண்டவை.

திராவிடர் இயக்கத்தை அடுத்து, 1925இல் தோற்று விக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.-சின் அரசியல் பிரிவு இன்றைய பாரதிய சனதாக் கட்சி ஆகும். அதே ஆண்டில் கான்பூரில் தொடங்கப்பட்டது, இந்தியப் பொதுவுடை மைக் கட்சி (C.P.I.). அக்கட்சியும், இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் (C.P.I. - M) மற்றும் சில பிரிவுகளும் வாக்குவேட்டைக் கட்சிகள் ஆகும்.

இவை அனைத்திந்தியத் தேர்தல் கட்சிகள்.

இந்தியாவில் 6 இலட்சம் சிற்றூர்கள் உள்ளன. தமிழகத்தில் 57,000 சிற்றூர்கள் இருக்கின்றன.

இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா ஊர்களிலும் - எல்லா மதங்களைச் சார்ந்தவர்களிடமும் - எல்லா உள்சாதிகளைச் சார்ந்தவர்களிடமும் சில வாக்கு களைப் பெறுகிற ஒரே கட்சி இந்திய தேசியக் காங்கிரசே ஆகும். இது காங்கிரசுக்கு உள்ள மூல பலம்

இந்த நிலை, பழைய அனைத்திந்தியக் கட்சிகளான பாரதிய சனதாக் கட்சிக்கு இல்லை; கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு இல்லை.

காங்கிரசுக் கட்சி வெள்ளையனை விரட்டிய கட்சி - காந்தி வளர்த்த கட்சி - நேரு தiமையிலான கட்சி என்பது மட்டுமே எல்லா மக்களுக்கும் தெரியும்.

‘வெள்ளையன் விரட்டப்பட்டவுடனேயே, பார்ப்பன - பனியா - மார்வாரிக் கொள்ளையர்கள் தான் இந்தியா வை ஆளுவார்கள்’ எனப் பெரியார் கரடியாகக் கத்தி னார் - 1938 முதல்.

இதுபற்றி அவரைப் போல் கவலைப்பட்டவர்கள் இருவரே. ஒருவர் முகமது அலி ஜின்னா; இன்னொ ருவர் மேதை டாக்டர் அம்பேத்கர்.

பெரியார் அன்று சொன்னதைவிட அதிகமாகவே பார்ப்பன - பனியா - மார்வாரி ஆதிக்கமே இந்தியா முழுவதையும் இன்று ஆட்சி செய்கிறது; ஆட்டிப்படைக் கிறது. எப்படி?

நேரு பண்டிதர் 1946 முதல் 1964 மே வரை 17 ஆண்டுகள் தலைமை அமைச்சர். அவர் 1932 முதல் சமதர்ம வேடம் பூண்டவர்; சமாதானப் புறா என்று பாராட்டப்பட்டவர்; 1952 முதல் சாகும் வரையில் முடிசூடா மன்னர் எனக் காங்கிரசாரால் போற்றப்பட்டவர்.

இவையெல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, 1955 முதல் தன் குடும்ப ஆட்சியை நிலைக்க வைக்கவே திட்டமிட்டார். அதனால் அவர் தலைமை அமைச்சராக இருந்த போதே, தன் அன்பு மகள் இந்திரா காந்தியை அனைத்திந்தியக் காங்கிரசுக்குத் தலைவராக ஆக்கி னார். அப்போது முதல் - 1964-1965, 1977-1979 என நான்கு ஆண்டுகள் தவிர 31.10.1984 முடிய இந்திராகாந்தியே 16 ஆண்டுக்காலம் தலைமை அமைச்சராக இருந்தார். அத்துடன் மட்டுமா?

பூணூலை வெறுத்த - பகுத்தறிவு பேசிய - சமதர்மம் பேசிய நேரு, 1955 முதல் தன்னை ஒரு பார்ப்பனர் எனவும் அடையாளப்படுத்திக் கொண்டார். அது உண் மையா? ஆம்! எப்படி?

அம்பேத்கரின் வேண்டுகோளின்படி, நேருவால் 1953இல் அமர்த்தப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட் டோர் குழுவின் தலைவர் காகா கலேல்கர் (பார்ப்பனர்), 2999 சாதிகளின் பட்டியலுடன், 1955இல் தம் பரிந்து ரையை நேரில் நேருவிடம் தந்தார்.

“இந்தச் சாதிப்பட்டியலில், ஏழையாக உள்ள பார்ப்பன உள் சாதிகளைச் சேர்த்திருக்கிறீரா?” என்று மட்டுமே நேரு கேட்டார்.

“அதைச் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” எனக் கலேல்கர் கூறியவுடன், “எல்லாம் அபத்தம்” (Non-sense) என்று கூறி, அந்த அறிக்கையைத் தரை யில் வீசினார், நேரு.

அத்துடன் நின்றாரா? இல்லை.

இன்னும் ஒருபடி மேலே போய், 1961 மே திங்களில் இந்திய அமைச்சரவையைக் கூட்டி, “கலேல்கர் தந்த பிற்படுத்தப்பட்டோர் சாதிப்பட்டியலை இந்திய அரசு ஏற்காது” என்று தீர்மானமே நிறைவேற்றினார். அத்துடன் நில்லாமல், 1961 ஆகஸ்டில், எல்லா மாகாண முதலமைச்சர்களுக்கும் கமுக்கமாக மடல்கள் (D.O. Letters) எழுதினார். “உங்கள் உங்கள் மாகா ணத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்குச் சாதி அடிப் படையில் இடஒதுக்கீடு தராதீர்கள்; வேண்டுமானால் பண உதவி (Scholarship) மட்டுமே கொடுங்கள்” என அம்மடலில் எழுதினார்.

மூன்றாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பிற்படுத் தப்பட்டோரின் பொருளாதார முன்னேற்றத்திற்கெனத் தனி நிதி ஒதுக்கிட மறுத்தார்.

இவையெல்லாம் சான்றுகளுடன் கூடிய உண் மைகள். இந்தியப் பிற்படுத்தப்பட்டோரின் முதலாவது எதிரியாக விளங்கினார் நேரு என்பதை இவை காட்டும்.

அவருடைய மறைவை அடுத்தும், லால்பகதூர் சாஸ்திரியின் மறைவை அடுத்தும் பிரதமராக வந்த இந்திரா காந்தி, 16 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்தார்.

1969இல் காமராசரை வீழ்த்தினார்.

1980 தேர்தலில் வெற்றி பெற்றிட, டாடா முதலான இந்திய பார்சி - மார்வாரி முதலாளிகளிடம் நூறு கோடி களில் பணம் திரட்டினார். காஷ்மீரில் தேர்தல் பரப்பு ரையின் போது, “நான் ஒரு காஷ்மீர் பிராமணத்தி என்பதில் பெருமிதம் அடைகிறேன்” என்று கூறி, அங்குப் பார்ப்பன - இந்து மத வெறியைத் தூண்டிவிட் டார். அத்தேர்தலில் வென்றார்.

இந்தியா முழுவதும் முகிழ்ந்தெழுந்த மொழிவழித் தேசிய உணர்வுகளை ஒடுக்கினார். பஞ்சாபில் அகாலிதளக் கட்சியை அழிக்கத் திட்டமிட்டு, அவராலும் கியானி ஜெயில் சிங் அவர்களாலும் வளர்க்கப்பட்ட பிந்தரன் வாலே தமக்கு எதிராக மாறியவுடன், அவரைக் கொல்லுகிற சாக்கில், 3000க்கும் மேற்பட்ட சீக்கிய மக் களை, அமிர்தசரஸ் பொற்கோவிலில் கொன்று குவித்தார். பகவத் சிங் வழியினரான சீக்கியர் - தமிழகத் தமிழ னைப் போல் தற்கொலை செய்து கொண்டு சாகும் கோழிக் குஞ்சுகள் அல்லர், எனவே தம் பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்களாலேயே அவர் சுட்டுக்கொல்லப் பட்டார்.

அது நேரு குடும்பத்தின் ஈகமா? இல்லை.

அவரை அடுத்து அப்பன் சொத்துக்கு மகன் வாரிசாக வருவதுபோல, பார்சி - பார்ப்பனர் இணையருக்குப் பிறந்த இராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.

இராஜீவ் காந்தி பொறுப்பேற்ற அந்த மணித் துளியிலேயே தில்லியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 3000 சீக்கியர்கள் பதைக்கப் பதைக்கப் பட்டப்பகலில் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கான சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்; சீக்கியர்களின் உடை மைகள் சூறையாடப் பட்டன.

 1984இல், மத்தியப்பிரதேசத் தலைநகரான போபால் நகரத்தில் இயங்கும் நச்சுக்காடியின் தொழிற்சாலை யின் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சுக் காற்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் காவு ஆயினர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் உறுப்புக் குறைவு, தோல் நோய்களுடன் அங்கு குழந்தைகள் பிறக்கின் றன. இன்றுவரை அங்கு உள்ள மக்களுக்குப் போதிய இழப்பீடு கிடைக்கவில்லை. ஆலை முதலாளிக்குத் தண்டனையும் இல்லை.

1984 தேர்தலில் தலைதூக்கிய சனதாக் கட்சி, அயோத்தியில் இராமர் கோயில் கட்டிட வேண்டி இந்தியா முழுவதிலுமிருந்து செங்கல் சுமந்துவர அனுமதி வழங்கியவர், இராஜீவ் காந்தி. இது பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்தது.

இந்தக் கொடுமைகள் போதாமல் - எந்த அரசியல் பட்டறிவும் இல்லாமல் - இலங்கை அதிபர் ஜெயவர்த் தனா கேட்டபடி, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என 20,000 பேர்களுக்கு மேல் இலங்கைக்கு அனுப்பி, பணமும் டேங்குகளும், பிற ஆயுதங்களும் தந்து விடுதலைப்புலி வீரர்களைக் கொன்று குவித் தார். அங்குள்ள தமிழ்ப் பெண்களின் கற்பு சூறை யாடப்பட்டது; சொத்துக்கள் களவாடப்பட்டன. இந்தியப் படையினரால் கொத்திக் குதறப்பட்ட வீராங்கனை தாணு - ஓர் உத்தம் சிங் போல, தமிழ் மண்ணில் இராஜீவ் காந்தியைக் குண்டுக்கு இரையாக்கினார்.

இராஜீவ் காந்தி போபர்ஸ் ஆயுத இறக்குமதி ஊழலுக்கு இலக்காகி, பதவியை இழந்தார். அந்த இடைக்காலத்தில் 2.12.1989 முதல் 10.11.1990 வரை பிரதமராக விளங்கியவர், விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங். அவருடைய ஆட்சிக்குத் தலை வலியாக இருந்த தேவிலாலை முடிறியடித்திட அவர் முயன்றார்.

அவருடைய ஆட்சிக்காலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்த (1986-1992) நம் தலை மையிலுள்ள அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேர வையின் தலைவர் இராம் அவதேஷ் சிங் நாள்தோறும் கேள்வி நேரத்தின்போது, “மண்டல் பரிந்துரை அமல் எப்போது?” என வினா எழுப்பினார்.

அன்றைய குடிஅரசுத் தலைவர் ஆர். வெங்கட்ட ராமன் கூட்டுப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, மண்டல் பரிந்துரை பற்றி உரையில் குறிப்பி டாததால் அவரை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து விட்டு, அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

அந்நிகழ்ச்சி ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அது வி.பி. சிங் நெஞ்சில் பதிந்தது.

இராம் அவதேஷ் சிங் இக்கோரிக்கைக்காகப் பேரவைத் தொண்டர்களைத் திரட்டி, தில்லியில், 6.8.1990 இல் தில்லியில் மாபெரும் ஊர்வலம் நடத்தி, காவலர்களால் தாக்கப்பட்டுக், காவலில் வைக்கப்பட்டார்.

அந்த நாளில்தான், “பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசு வேலையிலும், மய்ய அரசுப் பொதுத்துறை களிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு தந்து ஆணை யிடப்படும்” என நாடாளுமன்றத்தில் வி.சி.சிங் அறி வித்தார்.

இந்த அறிவிப்பை முதலில் எதிர்த்தவர் காவிக் கட்சி எனப்படும் பாரதிய சனதாக் கட்சியின் பெருந் தலைவர் லால் கிஷன் அத்வானி என்கிற கத்ரி வகுப்பினர் ஆவார்.

“மண்டலா? கமண்டலா” என முழங்கிக் கொண்டு, அவர் அயோத்தியை நோக்கி, இராம ரதம் செலுத்தி னார். இடையில், லாலு பிரசாத் யாதவினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

21.5.1991இல் இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வுடனே நடைபெற்ற தேர்தலில் ஈடுபட்ட காங்கிரசு, கூட்டணி அமைத்து, ஆட்சிக்கு வந்தது.

பார்ப்பனருக்குப் பிணம் தூக்குகிற மூன்றாந்தரப் பார்ப்பனரான பி.வி. நரசிம்மராவ் 21.6.1991இல் பிரதமர் ஆனார்.

அவர் அர்ஷத் மேத்தாவிடம் கோடிக்கணக்கில் கொள்ளை - ஊறுகாய் வணிகரிடம் கொள்ளை எனப் பணத்தை வாரிக்குவித்தார்.

வி.பி.சிங் 13.8.1990இல் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலையில் 27 விழுக்காடு ஒதுக்கீடு தந்த ஆணை யில் - பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்ற ஒரு திருத்தத்தை 1991 செப்டம்பரில் சேர்த்தவர் பி.வி. நரசிம்மராவ் தான்.

 தம் இளமையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக இருந்த அதே உணர்வுடன் பாரதிய சனதா, பஜ்ரங் தள், விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் ஒன்றிணைந்து - பட்டப் பகலில், வினய் கட்டியாரின் ஏற்பாட்டில், பாபர் மசூதியை 6.12.1992இல் இடித்துத் தள்ளியதைக் கண்டு பூரித்தார்.

அவருடைய ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக விளங்கியவர் தான், இன்றையப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

பி.வி. நரசிம்மராவும், மன்மோகன் சிங்கும் தான் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற கொள்கையை ஏற்றுத் திணித்தவர்கள்.

இவர்களை அடுத்து 16.6.1996க்கும் 22.5.2004க்கும் இடையில் அடல் பிகாரி வாஜ்பாய், தேவகௌடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமராக விளங்கினர்.

பாரதிய ஜனதாக் கட்சிச் சார்பில், பிரதமராக 19.3.1998இல் மீண்டும் வந்த வாஜ்பாய், தொடர்ந்து 22.5.2004 வரை பதவி வகித்தார்.

அந்த ஆட்சிக் காலத்தில்தான் கல்விக் கொள்கை காவிமயமாக்கப்பட்டது; பிராந்திய வரலாறுகள் மறைக் கப்பட்டன; இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாயினர்.

ஆனாலும் இராமர் கோயிலைப் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டியே தீரவேண்டும் என்பதிலும், இந்துத்துவா கொள்கை தொடர்ந்து மக்கள் பேரில் திணிக்கப்பட வேண்டும் என்பதிலும், மத அடிப்படை யில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்பதிலும் பாரதிய சனதாக் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

டாக்டர் மன்மோகன் சிங் 1991 முதல் அமைச் சராக இருந்தாலும் - 1996இலோ, 1998இலோ, 2004இலோ, 2009இலோ மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. இவர் பிறப்பிடமோ, வாழிடமோ அசாமில் இல்லை. ஆனால் ஒரு வாடகை வீட்டின் முகவரியைத் தந்து முதன்முதலாக அசாமிலிருந்து மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். ஒரு பெரிய மக்கள் நாயக நாடு இந்தியநாடு என பீற்றிக்கொண்டு மன்மோகன் சிங் ஒருமுறை கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நாட்டில் முதன்மை அமைச்சராக இருப்பது உண்மை யான மக்கள் நாயகக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்; மக்களுக்கும் நாட்டுக்கும் அவமானம் ஆகும்.

அதேபோல், சோனியா காந்தி இந்தியக் குடியுரி மை பெற்றவர் என்பது உண்மை. 64 வயதினர் என்பதும் உண்மை. அதே நேரத்தில் இந்திய வரலாறு, காங்கிரசு வரலாறு, மக்களின் பண்பாடு, பொருளாதாரக் கோட்பாடு பற்றி அதிகம் தெரிந்திராத ஓர் அந்நிய நாட்டுப் பெண்மணி; நேரு குடும்பப் பெண்மணி. அவருடைய மாற்றாளாக - கையாளாகத் தான் மன்மோகன் சிங் விளங்குகிறார்; பிரதமர் பதவியைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

தேசியப் பழந்தின்று கொட்டை போட்ட 70 வயது, 80 வயதுள்ள காங்கிரசுப் போராட்ட வீரர்கள் நூற்றுக் கணக்கில் இன்றும் உள்ளனர். 126 ஆண்டு வரலாறு படைத்த காங்கிரசுக் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராக விளங்குவது காங்கிரசுக்கு அவமானம்; மக்களுக்குப் பெரிய அவமானம்.

எனவே இந்திய மக்களைப் பராரிகளாக - பஞ்சை களாக ஆக்கிடும் பிற்போக்குக் கொள்கைகளையே காங்கிரசுத் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ரு.ஞ.ஹ.) அரசு நிறைவேற்றுகிறது.

மன்மோகன் சிங் அரசு துணிந்து அந்நிய நாடு களுக்கு இந்திய இயற்கை வளங்களை விற்றுக் கொண் டிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிகக் கனிமவளம் புதைந்து கிடக்கும் நாடு ஜார்க்க்ண்ட். பழங்குடி மக்களும் பட்டியல் வகுப்பினரும் நிரம்ப உள்ள மாநிலங்கள் ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் முதலானவை.

கனிம வளங்களைத் தோண்டுவதற்காக, காலங் காலமாக அப்பகுதி மக்கள் பெற்றுள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்குக் கையகப்படுத்திக் கொண்டு, அவர்களின் பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து அவர் களை வெளியேற்றக் கூடாது என்று கூறிப் போராடும் மக்களையும், மக்களுக்காகப் போராடும் மாவோ இயக்கத்தினரையும் கொன்று குவிப்பதில் இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர் அனைவரும் மூர்க்கமாகச் செயல்படுகின்றனர்.

இந்திய தேசிய வருமானம் 10 விழுக்காடு வேகத்தில் வளருகிறது என்று செங்கோட்டையில் முழங்கிவிட்டு, “7.5 விழுக்காட்டுக்குமேல் ஏறவில்லையே” என்று வெட்கமின்றிக் கூறுகிறது மன்மோகன் சிங் அரசு.

இந்தியாவில் 600 மாவட்டங்கள் உள்ளன. முதன் மையான 100 மாவட்டங்களில் எடுத்த கணக்குப்படி - 100 குழந்தைகள் பிறந்தால் 42 குழந்தைகள் ஒவ்வொன்றும் 2.5 கிலோ எடைக்குக் குறைவாகவே இருக்கிறார்கள்; 59 விழுக்காடு குழந்தைகள் வயதுக் கேற்ற வளர்ச்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள்.

ஏன்?

முதலாவது காரணம் வறுமையும் ஏழ்மையும்.

உலக நாடுகளில் உள்ள மொத்த ஏழைகளில், அதிகமானவர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் ரூபா 50 இலட்சத்துக்கும் அதிகமான நிகரச் சொத்து மதிப்பு உள்ளவர்கள் வெறும் 30 இலட்சம் பேர்தான் என, டி.என்.எஸ். என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.

அடுத்து எல்லோருக்கும் மருத்துவ வசதி செய் வதற்காக, மொத்த இந்திய தேசிய வருமானத்தில் ஒரு விழுக்காடு தொகை மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

எல்லா மக்களுக்கும் இலவசம் தருவது அரசின் வேலை அல்ல - கடமை அல்ல என்று அரசு ஒதுங்கிக் கொண்டது. வைத்திய வசதி முழுவதுமாகத் தனி யாரிடம் தள்ளிவிடப்படுகிறது.

அதனால் உயிர்க்கொல்லி நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

குறிப்பாகத் தென்மாநிலங்களில் 2011-இல் புற்று நோயால் பல்லாயிரக்கணக்கான பேர் இறந்துவிட்டனர். தமிழ்நாட்டில் 39,127 பேர்; ஆந்திரத்தில் 37,144 பேர்; கருநாடகத்தில் 25,531 பேர்; கேரளாவில் 14,805 (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 11.1.2012).

புற்றுநோய் தொடக்க நிலையில் வெளிப்படை யாகத் தெரிவது இல்லை; முற்றிய பிறகே கண்டுபிடிக் கப்படுகிறது. இத்தகைய கொடிய நோய்க்கு இலவச மாக வைத்தியம் செய்ய விரும்பாத அரசு, எதற்காக நம்மை ஆள வேண்டும்? இங்கு மதுக்குடியும், வேசித் தொழிலும், கட்டப் பஞ்சாயத்தும் பெருகிவிட்டன.

இந்தியாவிலுள்ள வேளாண் குடும்பங்களில் 48.6 விழுக்காடு குடும்பங்கள் வேளாண் கடனில் தத்தளிக் கின்றன. தமிழ்நாட்டில் 74.5 விழுக்காடு வேளாண் குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன.

2011ஆம் ஆண்டுக்கான, உலக அளவிலான, மனித வளர்ச்சி பற்றிய அறிக்கையில் (HDR) கண்ட படி, 187 நாடுகளுக்கு உரிய வளர்ச்சி வரிசைப் பட்டிய லில் இந்தியா 134ஆவது இடத்தில் உள்ளது.

அதாவது பிறந்தவுடன் சாகிற குழந்தைகளின் அதிக விகித எண்ணிக்கை, பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களின் விகிதம், போதிய வைத்திய வசதி பெற முடியாமை இந்தியாவில்தான் அதிகம்.

அதேநேரத்தில் இந்தியப் பணக்காரர்களின் கறுப்புப் பணம் ஒரு டிரில்லியன் டாலர் - அதாவது ரூ.53 இலக்கம் கோடி உலக நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்கள் எல்லாம் ஸ்விஸ் வங்கியில் எவ்வளவு பணத்தைப் பதுக்கியிருக்கிறார்களோ அவற்றின் கூட்டுத் தொகையை விட அதிகமான பணம் இந்தியர் களால் அங்கே பதுக்கப்பட்டுள்ளது. இராஜீவ்காந்தி பெற்ற போபர்ஸ் கையூட்டுப் பணமும் அதில் அடக்கம்.

இனி, குடிநீர், பாசன நீர் வழங்குவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்ள முடிவு செய்துவிட்டது.

ஆற்று நீர், நிலத்தடி நீர் இவற்றை மான்சாண்டோ போன்ற தனி முதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு - குடிப்பதற்கான தண்ணீர், குளிப்பதற்கான தண்ணீர், உடைகளைத் துவைப்பதற்கான தண்ணீர், வேளாண் பாசனத்துக்கு வேண்டிய தண்ணீரை எல்லோரும் விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அரசு கூறுகிறது.

ஊராட்சியோ, பேரூராட்சியோ, நகராட்சியோ, மாநில ஆட்சியோ, இந்திய ஆட்சியோ, இனிமேல் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்யாது.

உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (I.M.F.), ஆகிய வற்றின் ஆணையின்படி, தண்ணீர் வணிகம், விதை வணிகம், மருத்துவம் ஒரு வணிகம் என்பதும்; மின்சார உற்பத்தி, எரி எண்ணெய்கள், எரிக்காற்று என வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களும் அரசின் பொது விநியோக முறையிலும், மானிய விலையிலும் விற்கப்படாமல் - தனியார் பொறுப்பில் அரசு ஒப்படைக்கப் போகிறது.

மாநிலங்களுக்கு இருந்த உரிமைகளைப் படிப் படியாகப் பறித்துக்கொண்ட இந்திய அரசு, மாநிலங் களுக்கு இடையே ஆன எல்லைத் தகராறு, ஆற்று நீர்ப்பங்கீட்டுத் தகராறு, மின் பகிர்வுத் தகராறு இவற்றைத் தீர்த்து வைப்பதற்குப் பொறுப்பேற்க வில்லை.

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேறிய மேலைநாடுகள் ஏற்கெனவே அங்கெல்லாம் நிறுவிய அணுமின் உற்பத்தித் தொழிற்சாலைகளை படிப்படி யாக மூட முடிவெடுத்து வருகிறார்கள்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் - அமெரிக்கா, இரஷ்யா, செர்மனி, பிரான்சு நாடுகளின் அணுஉலை தொழில்நுட்பம் விற்பனையாகும் சந்தையாக இந்தியாவை மாற்றியே தீருவது என்று முடிவெடுத்துச் செயல்படுகிறார். கூடங்குளம் அணுஉலையை உடனே இயக்கிட விரும்புகிறார்.

தமிழர்கள் அறிவுடனும் பொறுப்புடனும் ஒன்றுபட்டு இந்தத் தீய முயற்சியைத் தடுத்தே தீரவேண்டும்.

மகாராட்டிரத்தில் ஜைத்தாப்பூரில் 9,900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்திட அணுஉலை அமைக்க வேண்டி, நிலங்களை அரசு கையகப்படுத்துவதை, அங்கே நகர்ப்புறத்தில் வாழும் 46 விழுக்காடு மக்கள் முழு மூச்சாக எதிர்க்கிறார்கள். நாமும் எதிர்ப்போம், வாருங்கள்!

காங்கிரசின் பேரால் நேரு 16 ஆண்டுகள் 9 மாத மும்; இந்திரா காந்தி 16 ஆண்டுகளும்; இராஜீவ் காந்தி 5 ஆண்டுகள் 1 மாதமும் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். அதாவது நேரு குடும்பம் 37 ஆண்டுகள் 10 மாதங்கள் இந்தியாவை ஆண்டு, பார்ப்பன - பனியா - மார்வாரி ஆதிக்கத்தை நிலைக்க வைத்துவிட்டது.

பி.வி. நரசிம்மராவ் அய்ந்து ஆண்டும்; டாக்டர் மன்மோகன் சிங் 22.5.2004 முதல் 30.01.2012 முடிய 7 ஆண்டுகள் 8 மாதங்களும் இந்தியாவின் பிரதமர்களாக இருந்துவிட்டனர்.

மொத்தத்தில் 64 ஆண்டைய சுதந்தரத்திற்கான ஆளுகையில் - ஏறக்குறைய 50 ஆண்டுகள் இந்தி யாவை காங்கிரசே ஆண்டுள்ளது.

இந்திய மக்களை உலக முதலாளிகளுக்கும், இந்திய மேல்சாதி - பணக்காரர்களுக்கும்; உலக வல்லரசுகளின் சுரண்டலுக்கும் இலக்காக - காங்கிரசு, இந்தியாவை ஆக்கிவிட்டது.

பாரதிய சனதாக் கட்சி இவற்றை அப்படியே செய்யும். கூடுதலாக இராம ராஜ்யத்தை - காட்டுமிராண்டி இந்துத்துவா தத்துவத்தை எல்லார் பேரிலும் சுமத்தும்.

காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றுங்கள்! காவிக்கட்சி ஆட்சிக்கு வராமல் தடுத்திடுங்கள்!!

Pin It