கீற்றில் தேட...

இந்தியா விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. ஆனாலும் நடந்த சம்பவங்கள் தலைகுனிய வைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சந்தை நிலவரம் கிடுகிடுவென ஏறிக் கொண்டே போய் விலை பேசப்பட்டார்கள். நாட்டை விலை பேசிக் கொண்டிருக்கும் தொழிற் குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம் - இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஆயுளைத் தீர்மானிக்ககளம் இறங்கியிருப்பதை பத்திரிகைகள் எல்லாம் பகிரங்கமாகவே எழுதி வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவன அதிபர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு அவரது பிள்ளைகள் அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும் வியாபாரப் போட்டியில் இரு துருவங்களாக மாறி ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு வருகிறார்கள்.

அரசுக்கு ஆதரவாக உறுப்பினர்களைவிலைக்கு வாங்கும் பொறுப்பில் களமிறங்கினார் தம்பி அனில் அம்பானி. ஆட்சியைக் கவிழ்க்க எம்.பி.க்களுக்கு விலை பேசினார் அண்ணன் முகேஷ் அம்பானி. காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக இதுவரை எதிர்த்து வந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, அனில் அம்பானியின் சட்டைப் பைக்குள் அடக்கம். இப்போது அணில் அம்பானி முயற்சியால் சமாஜ்வாதி கட்சி காங்கிரசை ஆதரிக்கிறது. டெல்லி வந்திறங்கிய அனில் அம்பானி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக சந்தித்து விட்டு களம் இறங்கிவிட்டார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருக்கும் பார்ப்பனர் முரளி தியோரா - முகேஷ் அம்பானியின் ‘கையாள்’.

அனில் அம்பானி, காங்கிரஸ் தலைமையிடம் இதை சுட்டிக்காட்டியவுடன், ஓட்டெடுப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஒரு சமரசம் நடந்தது. பெட்ரோலியத் துறையின் செயலாளராக இருந்த பார்ப்பன அதிகாரி, அவசரமாக விடுவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக, வேறு ஒரு பார்ப்பனர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். தியோராவை மாற்ற வேண்டும் என்ற அனில் அம்பானியின் கோரிக்கையை உடனடியாக அமுல்படுத்த முடியாது என்பதால், அடையாள பூர்வமாக அவரது துறையின் செயலாளரை மாற்றி, அனில் அம்பானியை குளிரச் செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

சர்வதேசப் பிரச்சினை ஒன்றை முன் வைத்து இந்தியாவின் நாடாளுமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பை இப்போது கோருகிறது. ஆட்சியே கவிழ்ந்தாலும், அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தை விடமாட்டோம் என்று, காங்கிரஸ் கட்சி தோள் தட்டி தொடை தட்டி நிற்கிறது.

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அணுசக்தி தேவை; அதுவும் அணுசக்தி மின்சாரம் தேவை என்று, நாட்டின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, கசிந்துருகி நிற்கிறது ஆளும் காங்கிரஸ் கூட்டணி. அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு தருவதை திரும்பப் பெற்ற இடதுசாரி கட்சிகள், அடுத்த கட்டத்துக்கும் போய் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் அதீத ஆர்வம் காட்டியது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை - அதாவது, இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க, இடதுசாரி கட்சிகள், ‘இந்துத்துவா’ சக்திகளோடு சேர்ந்து ஓட்டளிக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை!

அப்படியே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகிவிடுமா என்றால், இல்லை என்பதுதான் பதில். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அணுசக்தி ஒப்பந்தத்தைப் போடுவோம் என்று நம்பிக்கைகோரும் தீர்மானத்தில் பேசும்போதே அத்வானி அறிவித்துவிட்டார். நெருக்கடியில் சிக்கிக்கொண்ட அகில இந்திய கட்சிகளான இடதுசாரிகள் - உ.பி. முதல்வர் மாயாவதி தலைமையில், மூன்றாவது அணியை ஆட்சியில் அமர்த்துவோம் என்றார்கள்.

மாயாவதி உ.பி.யில் நடத்தும் தலித்திய அரசியலில் பார்ப்பனர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பார்ப்பனர்கள் பலரை சட்டமன்ற உறுப்பினர்களாக்கி, அமைச்சர்களாக்கி, உயர் அதிகாரப் பதவிகளில் பார்ப்பனர்களை அமர வைத்து, தலித்தியத்தை பார்ப்பனியத்தை நோக்கி மடை திருப்பிவிட்டவர் மாயாவதி. அவரை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அடையாளம் காண்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்க ஆதரவு - அமெரிக்க எதிர்ப்பு என்ற கொள்கைப் பார்வையிலோ அல்லது அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தேவையா? இல்லையா? என்ற கருத்துத் தளத்திலோ, இப்போது, நாடாளுமன்றத்தில் கட்சிகள் அணி பிரிந்து நிற்கவில்லை! சந்தர்ப்பவாத அரசியல் சதுரங்கத்தில்தான் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

இடதுசாரிகளின் தீவிர நிலைப்பாட்டில் அக்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற தலைவர் சோமநாத் சட்டர்ஜியும், மூத்த தலைவர் ஜோதிபாசுவுமே வேறுபட்டநிலை எடுத்துவிட்டனர். பா.ஜ.கவும், இடதுசாரிகளும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கும் முடிவை பார்ப்பன மதவெறி சக்திகளின் மக்கள் விரோத கொடூரத்தைப் புரிந்து கொள்ளும் எவராலும் எப்படி சீரணிக்க முடியும்? அமெரிக்கவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்து என்பதும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, அமெரிக்காவின் பிடிக்குப் போய்விட்டது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது.

மறுக்க முடியாது. ஆனால் அதே ஆபத்தான கொள்கையைத்தான் தாங்களும் அமுல்படுத்துவோம் என்று கூறும் பார்ப்பன பா.ஜ.க.வுடன் சேர்ந்து கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கும் போது ஏற்படப்போகும் விளைவுகளில் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கும்.

காங்கிரசு பெயரளவுக்காவது மதச்சார்பின்மை பேசி அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. பார்ப்பன - இந்துத்துவா - பா.ஜ.க.வோ, அமெரிக்காவின் பக்கம் நின்று கொண்டு, பார்ப்பன மேலாண்மையையும், மதவெறியையும் தூக்கிப் பிடித்து நிற்கிறது.

மாயாவதியே இந்துத்துவப் பார்ப்பனியம் என்பதற்கு பதிலாக, தலித்தியப் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடித்து அமெரிக்காவின் வாசலில் போய் நிற்கும் சக்தியாகவே இருக்கும். இந்த நிலையில் தனித்து விடப்பட்டவர்களாக நிற்கப் போகிறவர்கள், உண்மையான மதச்சார்பின்மைவாதிகளும், சமூக நீதி சக்திகளும், இடது சாரிகளும் தான்! இதில் கேவலமாக முகம் கிழிந்து தொங்குவது, இந்திய ஒருமைப்பாடுதான். ‘இந்திய தேசியம்’ என்பதாக இங்கே ஒன்றும் இல்லை என்ற உண்மையை இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் கட்சிகள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

“நான் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டேன். ஆனால், ஒரு இந்தியனைக்கூட பார்க்கவில்லை. நீங்கள் யாராவது ஒரு இந்தியரை பார்த்தது உண்டா?” - என்று இந்தியா முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு, தாம் எழுதிய ‘இந்தியாவுக்கான தீர்ப்பு’ என்ற நூலில் பெசாலி நிக்கலஸ் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டிருந்தார்.

1942 இல் வெளிவந்தநூல் இது. 2008 இல் நிலைமை இதைவிட மோசம் தான்! இந்தியாவின் நாடாளுமன்றத்தை தேசியக் கட்சிகளே ஆட்சி செய்யும் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது. மாநிலக் கட்சிகள் தான் நாடாளுமன்றத்தையே நிர்ணயிக்கின்றன. அதனால் தான் மாயாவதியும், முலாயம்சிங்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பின் நட்சத்திரங்களாகியுள்ளனர்.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா என்ற மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அதிகாரத்தைப் பிடிக்க இயலாத தேசிய கட்சிகளான இடதுசாரிகள் உண்மையில் மாநிலக் கட்சிகள் தான்! இந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை நம்பியே செயல்படுகிறார்கள். பிரிட்டிஷாரின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட இந்தியா ஒரு தேசமல்ல; பல்வேறு கலாச்சாரம், மொழி, இனங்களைக் கொண்ட ஒரு உபகண்டம். தேசிய கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இந்த எதார்த்தத்தைப் புறக்கணித்துவிட்டு, ஒருமைப்பாடு, தேசியம் என்ற முழக்கங்களுக்குள் முடங்கிக் கிடப்பதில் அர்த்தமில்லை.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற அரசியல் முழக்கத்தை கடந்த காலங்களில் பேசி வந்த தி.மு.க. போன்ற கட்சிகள் கூட, அதற்கான காலம் கனிந்துள்ள நிலையில் கொள்கைகளைப் பேசவே தயங்கி நிற்கிறது.

ஆக, நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்று விட்டது; ஆனால், ‘இந்தியா’ என்ற அமைப்பின் மீதான நம்பிக்கை தீர்மானகரமாக தோல்வி அடைந்து வருகிறது என்பது மட்டும் உண்மை. மாநிலங்களின் முழுமையான தன்னாட்சி நோக்கிய அரசியல் விவாதங்கள் தொடர வேண்டிய நேரம் வந்துவிட்டது!