பிரதமர் மன்மோகன் சிங் வழக்கமான புன்னகையுடனும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கத்துக்கும் அதிகமான உற்சாகத்துடனும், கையில் கோப்பைகளை (வெறும் பழரசம்தான்) ஏந்தியபடி நிற்கின்றனர். அவர்கள் அருகில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அந்நாட்டு அமைச்சர்களில் ஒருவரான டக்ளஸ் தேவனாந்தாவும், பெருமிதம் ததும்பி நின்று, அந்த ராஜ உபசரிப்பை ஏற்று மகிழ்கின்றனர்.
இலங்கையில் அந்த வரலாற்றுப் பெருங்கொடுமை அரங்கேறி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் நடந்த பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி குறித்து, ஊடகங்கள் வெளியிட்ட காட்சிகள்தான் இவை.
அணிசேரா நாடுகளில் முக்கிய உறுப்பினராகவும், சமாதானத்தை விரும்புகின்ற அமைதிப்புறாவாகவும் இருந்த இந்தியாவின் பழைய அடையாளங்களில், எஞ்சி இருந்த மிச்ச சொச்ச சுவடுகளும், இந்த ராஜவிருந்தின்போது பிள்ளைக்கறியாக சமைக்கப்பட்டு, ராஜபக்சேவுக்கு பரிமாறப்பட்டு விட்டன என்றே தோன்றுகிறது.
இந்திய அரசு கௌரவித்த அந்த இரண்டு ராஜ விருந்தாளிகளும் யார்?
உலகில் தடைசெய்யப்பட்டுள்ள அத்தனை பயங்கர ஆயுதங்களையும் கொண்டு, தன் சொந்த நாட்டு அப்பாவி மக்களையே கொன்று குவித்த, கொடுஞ்செயலை, சர்வதேச சமூகத்தின் அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி அரங்கேற்றிய போர்க் குற்றவாளி ராஜபக்சே ஒருவர். ஓர் இன அழிப்புப் போரை, எந்தச் சங்கடமும் இல்லாமல் ரத்தவெறி கொப்பளிக்க நடத்தி முடித்த இந்த 21 ஆம் நூற்றாண்டு ஹிட்லரின் அடையாளம் வெளிப்படையானது.
இவருடன் வந்திருந்த இன்னொருவரின் பின்னணிதான் இந்த ராஜவிருந்தின் மிக மோசமான அருவருக்கத்தக்க அம்சம்.
இலங்கையில் இனப்படுகொலை உச்சத்தை எட்டியிருந்த 80களின் தொடக்கத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த பல்வேறு போராளிக் குழுக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற தமிழ் ஈழ புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பும் ஒன்று.
இந்த அமைப்பைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, அப்போது சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்தார். 1986 ஆம் ஆண்டு இலங்கை போராளிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, தெருவில் நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் திருநாவுக்கரசு என்ற அப்பாவி, தேவானந்தாவின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே மரணமடைந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்தோடு நின்றுவிடவில்லை டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்டம். 1988ஆம் ஆண்டு அண்ணா நகரைச் சேர்ந்த பத்து வயது சிறுவனைக் கடத்திச் சென்று 7 லட்சம் ரூபாய் தரும்படி மிரட்டியுள்ளார். இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தேவானந்தா, பின்னர் பிணையில் வெளிவந்து இலங்கை தப்பிச் சென்றார்.
இவ்வாறாக அவர் மீது சென்னை காவல் துறை 3 வழக்குகள் பதிவு செய்தது. 1996 ஆம் ஆண்டு சென்னை காவல் துறை டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இத்தகைய டக்ளஸ் தேவானந்தாதான். இப்போது இலங்கையின் பாரம்பரிய மற்றும் சிறுதொழில் அமைச்சராகப் பரிணாமம் பெற்று, அரசு முறைப் பயணமாக(!) அதிபர் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்திருந்தார்.
மிகவும் கீழ்த்தரமான சமூகக் குற்றங்களைப் புரிந்த தேவனாந்தாவோடுதான், மூன்றாம் உலக நாடுகளின் முக்கிய சக்தியாகக் கருதப்படும் இந்தியாவின் பிரதமரும், அதன் அரசியல் மையப் புள்ளியான ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியாவும் கை குலுக்கி, விருந்துண்டு மகிழ்ந்தனர்.
இந்திய இறையாண்மைக்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு போலும்!
இதனிடையே, தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய உதவும்படி, டெல்லி போலிசாருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமரோடு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை கைது செய்யும் துணிச்சல், டெல்லி காவல் துறைக்கு வந்துவிடுமா என்ன? கடிதமும், அது குறித்த தகவலும் கற்பூரமாய் கரைந்து காணாமல் போயின.
இதற்கிடையே, வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
டக்ளஸ் தேவானந்தாவின் குற்றப் பின்னணி குறித்து அந்த மனுவில் விளக்கி இருந்த அவர், அவரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், தேவானந்தா கைது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் பதிலளிக்குமாறு, மத்திய மாநில அரசுகளின் கருத்தறிய காத்திருப்பதாக கூறி இருந்தார். ஆனால், நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளின் கருத்தறிய காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அது ஒருபுறம் இருக்க, இந்த பிரச்சனை குறித்து, டெல்லி ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, தேவானந்தா அளித்திருந்த பதில்கள் சுவாரஸ்யமானவை.
இந்திய இலங்கை ஒப்பந்தப்படி மன்னிக்கப்பட்ட பல அரசியல் தலைவர்களில் (!) தாமும் ஒருவர் என கூறி இருந்தார். கொலை, குழந்தை கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை, அரசியல் தலைவராக அங்கீகரித்து, பொது மன்னிப்பும் அளிக்க உலகில் எத்தனை நாடுகள் தயாராக இருக்கின்றன என்பது தெரியவில்லை.
இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு, இன்னொரு நாட்டுக்கும் தப்பி ஓடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான ஒப்பந்தத்தில், இலங்கையும் கையொப்பம் இட்டிருப்பதை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டி இருப்பது கவனத்திற்குரியது.
இதே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அமெரிக்காவைச் சேரந்தவரும், போபால் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியுமான வாரன் ஆண்டர்ஸனைத் தப்பிக்க வைக்க, அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் உதவி இருப்பதாக வெளிவரும் தகவல்கள், தற்போது நினைவுக்கு வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
அப்போது ஆண்டர்ஸனைக் காப்பாற்றி அனுப்பி வைத்தது போலவே, தற்போது தேவானந்தாவையும், அரச மரியாதையோடு காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.
அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போர்க் குற்றவாளியானாலும் சரி, குழந்தைக் கடத்தல் போன்ற கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளியானாலும் சரி, இருவரையும் ஒரே மாதிரியாக பாவித்து, விருந்தளித்து விடை கொடுத்தனுப்பிய நமது இந்திய பண்பாட்டின் சிறப்பை எண்ணும்போது நமக்கு புல்லரிக்கிறது! எப்படியோ, இரண்டு குற்றவாளிகளுக்கு விருந்தும் அளித்து, 5000 கோடி ரூபாய் வெகுமதியும் கொடுத்து அனுப்பியாகி விட்டது.
அதுசரி... குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் ஏன் இத்தனை ஆர்வம் என்பதுதான் நமக்குப் புரியவில்லை!
– மேனா உலகநாதன்/ நன்றி : 'அரங்கம் நெட்'
***
உலகமே பார்த்துக்கொண்டிருக்க, இலங்கை அரசானது வேண்டுமென்றே வெளிப்படையாக வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. ஆனால், ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு நாடு கூட அவர்களைப் பாதுகாக்கவோ அவர்களுக்காக வாதாடவோ அவர்களுக்கு உதவவோ முன்வரவில்லை.
– பிரான்சிஸ் பாய்ல்