(தமிழ்நெட் வெப்டுனியா இணையதளம் அண்மையில் பிரணாப் முகர்ஜி, ஈரானில் வெளியிட்ட கருத்தை முன் வைத்து வெளியிட்டுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)

ஈரான் தலைநகர் டெஹரானில், ‘இந்தியா ஸ்ரீஈரான்; தொன்மையான நாகரிகங்களும், நவீன தேசங்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இது மட்டுமல்ல, “பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்று வரை நிலைநிறுத்தப்படவில்லை என்கின்ற நிலை இந்தியாவிற்கு முக்கியமான கவலையாக உள்ளது. அது நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

1974 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ.) முதலில் அங்கீகரித்து பாலஸ்தீன மக்களின் உரிமைக் குரலுக்கு பலம் சேர்த்த நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து, அதன் தூதரகம் டெல்லியில் அமைக்க ஆதரவளித்த நாடு இந்தியா. ஒரு பக்கம், பாலஸ்தீனத்தை அழித்து விடுவதே தங்களுக்கு உறுதியான, பாதுகாப்பான நிலைத் தன்மையை உருவாக்கும் என்று இராணுவ, விமானப்படைத் தாக்குதலை நினைத்த போதெல்லாம் தொடுத்து வரும் இஸ்ரேலுடன் உறவை (வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது) ஏற்படுத்திக் கொண்ட போதிலும், பாலஸ்தீனம் தொடர்பான தனது நிலைப்பாட்டில் இந்தியா எள்ளளவும் பிசகாமல் ஆதரவு நிலையில் உறுதியாகவுள்ளது.

பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து அதனை ஏற்றுக் கொண்டு அதனுடனான தனது சிக்கலிற்கு இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்று தான் இந்தியா கூறி வருகிறது. இந்தியாவின் இந்த நிலைபாட்டிற்கு சர்வதேச அளவில் மரியாதை உள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் மண்ணிலேயே ஒடுக்கப்பட்ட நிலையில், மேற்குக் கரை, காசா, கோலன் மலைப்பகுதி என்று பிரிந்து கிடந்தாலும் அவர்களின் வரலாற்று ரீதியான உரிமையை எதிர்க்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எதிர்த்தே வந்துள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் எப்படியெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரோ அதே நிலைதான் இலங்கையிலும் நிலவுகிறது. இன்றல்ல, நேற்றல்ல, சற்றேறக்குறைய அரை நூற்றாண்டுக்காலமாக, அங்கு வாழும் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளது. அதனைப் பெறுவதற்கு நடந்த போராட்டங்களின் விளைவாக ஆளும் சிங்கள அரசு தமிழர் தலைவர்களுடன் போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டன.

ஆனால், இப்பிரச்சினையை வேறொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை யாகவே மத்திய அரசு பார்க்கிறது. தனது நாட்டு மக்களின் மீதே ஈவிரக்கமின்றி விமானத்தின் மூலம் குண்டு வீசிக் கொல்லும் (இலங்கை) அரசின் இறை யாண்மையைப் பற்றி இந்தியா அக்கரையுடன் பேசுகிறது. அரை நூற்றாண்டுக் காலமாக சிங்கள இனவாத அரசியலால் அம்மக்கள் இன ரீதியாக மிதிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல், அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அந்நாடு சொல்வதையே நியாயமாக எடுத்துக் கொண்டு, அதற்கு ஆதரவும் அளிக்கிறது. அந்நாட்டின் பாதுகாப்பிற்கு உதவியும் செய்கிறது. அதில் நமது நாட்டின் பாதுகாப்பு உள்ளது என்றும் கூறுகிறார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி!

இஸ்ரேலிற்கு எதிராக போராடி வரும் பாலஸ்தன விடுதலை இயக்கங்கள் பலவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாத இயக்கங்கள் என்றே முத்திரை குத்தியுள்ளன. ஆயினும் அவற்றிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. கண்டித்து வந்துள்ளது. அது மட்டுமின்றி, அம்மக்களின் நியாயமான உரிமைகள் பாலஸ்தீன விடுதலையின் மூலம் மட்டும்தான் நிலைநிறுத்தப்படும் என்பதை ஆணித்தரமாகவும் எடுத்துரைத்துள்ளது.

அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சு மிக வலிமையானது. ஆனால், பாலஸ்தீன மக்களைவிட கடுமையான ஒடுக்குதலிற்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு அந்த வாழ்வுரிமையும், சுதந்திரமும் பெற்றுத்தர நடைபெறும் போராட்டத்தை ஏன் ஆதரிக்க மறுக்கிறது? என்பதே இவ்விரண்டு பிரச்சினைகளையும் ஒப்பிட்டு நோக்கும் எவர் மனதிலும் எழக் கூடிய கேள்வி.

Pin It