தேடுகின்றேன் தேடுகின்றேன்
 தமிழைநான் தேடுகின்றேன்
தமிழனாய்ப் பிறந்தும்
 தமிழைநான் தேடுகின்றேன்
தமிழ்நாட்டில் பிறந்தும்நான்
 தமிழர்களைத் தேடுகின்றேன்
‘மம்மி’ ‘டாடி’ ஆகிவிட்ட
 மாத்தமிழைத் தேடுகின்றேன்.

‘ஹேப்பி நியு இயர்’ஆன
 புத்தாண்டைத் தேடுகின்றேன்
‘ஹேப்பி பொங்கலி’ல் புதைந்த
 என்மொழியைத் தேடுகின்றேன்
தொலைக்காட்சி வானொலியில்
 சொற்பொழிவில் தேடுகின்றேன்
செய்தித்தாள் விளம்பரத்தில்
 செந்தமிழைத் தேடுகின்றேன்

எந்தமொழிக்கும் நான்
 எதிரியல்ல என்றாலும்
சொந்தமொழி அடையாளம்
 சுற்றிசுற்றித் தேடுகின்றேன்
என்தன் மொழியடைந்த
 இழிநிலைக்கு வாடுகின்றேன்
இந்தநிலை மாற்ற, எல்லார்
 ஒத்துழைப்பும் நாடுகின்றேன்.

Pin It