“இந்தியாவில் 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் எடை குறைந்தவைகளாக (Under-Weight) உள்ளன என்பது ஒரு தேசிய அவமானம்” என்று 10-01-2012 அன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு டன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையைத் தில்லி யில் மன்மோகன்சிங் வெளியிட்ட போது இக்கருத்தைத் தெரிவித்தார்.

எடை குறைவாக உள்ள 42 விழுக்காடு குழந்தைகளில் பாதிப்பேர் எடை குறைந்தவர்களாக-வளர்ச்சிக் குன்றியவர்களாக இருக்கின்றனர். அதே போன்று 5 அகவைக்குட்பட்டக் குழந்தைகளில் 59% குழந்தைகள் அந்தந்த அகவைக்கு உரிய உயரம் வளராமல் குட்டையாக உள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், முசுலீம்கள் ஆகியோரின் குழந்தை களிடம் இக்குறைபாடுகள் அதிக அளவில் காணப்படு கின்றன என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மன்மோகன் மிகவும் கவலைப்படுவதாகக் கூறு கின்ற (நடிக்கின்ற) ‘இந்தத் தேசிய அவமானம்’ புதிய செய்தி அன்று. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பலராலும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். அய்க்கிய நாடுகள் மன்றம் 2000 ஆம் அண்டு முதல் ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வறிக்கைகளில், கல்வி, மருத்துவம், பொது மக்களுக்கான பிற அடிப்படைக் கட்டமைப்பு ஏந்துகள் ஆகியவற்றை அளிப்பதில் இந்தியா எந்த அளவுக்குப் பின்தங்கி உள்ளது என்பது புள்ளிவிவரங்களுடன் தரப்பட்டள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) 187 நாடுகளில் இந்தியா 134 ஆம் இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆனால் இந்த இழிநிலையை மாற்றுவதற்கு உருப்படியாக எதையும் செய்யாமல், இந்திய ஆளும் வர்க்கம், 2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வல்லரசாகிவிடும் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் சார்பில் ‘தமுக் கடிக்கும் வேலையை’ அப்துல்கலாம் தவறாமல் செய்து வருகிறார்.

பிறக்கும் போது குழந்தையின் எடை, குறைந்த அளவாக 2.5 கிலோ இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 47% குழந்தைகள் 2.5 கிலோ எடைக்கும் குறைவாக இருக்கின்றன. அதனால் இக்குழந்தைகள் முழுமையான உடல் வளர்ச் சியும், ஆற்றலும், திறனும் கொண்ட இளைஞர்களாக உருவாக முடிவதில்லை. இந்த நிலை, இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கும், நாட்டிற்கும் பெருந்தடையாக வும் பேரிழப்பாகவும் அமைகிறது.

எனவே, கருவுற்ற தாய்மார்கள், 5 அகவைக் குட்பட்ட குழந்தைகள் ஆகியோரின் நலனைப் பேணும் பொருட்டு 1975இல் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை நடுவண் அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் கருவுற்றப் பெண்களுக்கும், 5 அக வைக்குட்பட்ட குழந்தைகளுக்கும் சத்துணவு, சத்து மாவு, சத்து மாத்திரை, பால் பவுடர், தடுப்பூசி மருந்து ஆகியவை இலவயமாக வழங்கப்படுகின்றன.

2004 ஆம் ஆண்டுவரை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுக்கான நிதி முழுவதையும் நடுவண் அரசு அளித்துவந்தது. 2005 ஆம் ஆண்டு முதல் 50ரூ நிதியை மாநில அரசுகள் ஏற்று வருகின்றன. ஆனால் பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், ஒரிசா முதலான வடமாநிலங் களில் இத்திட்டம் மிக மோசமான முறையில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல் படுத்துவதற்காகக் கட்டமைப்பு வசதிகளோ, கண்காணிப்பு ஏற்பாடுகளோ முறையாக உருவாக்கப்படவில்லை.

உ.பி.யில் தேசிய கிராமப்புறச் சுகாதாரத் திட்டத் திற்காக, 2005 முதல் 2011 வரை ரூ.8,657 கோடி நிதியை நடுவண் அரசு ஒதுக்கியது. இந்த நிதியில் ரூ.5700 கோடி அளவுக்குமேல் ஊழல் நடந்திருப்பதாக நடுவண் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும் முதலமைச்சர் மாயாவதி மக்கள் நல்வாழ்வு அமைச்சராக இருந்த பாபுசிங் குஷவாகாவை அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார். ஊழலை ஒழிக்கப் போவ தாக உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் பாரதிய சனதா கட்சி, இந்த ஊழல் பெருச்சாளி குஷ்வாகாவை மேளதாளத்துடன் வரவேற்று, தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது. ‘பரிசுத்த ஆவியாக’ உலவி வரும் காங்கிரசுக் கட்சியோ, தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிடச் செய்து, அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் இந்தியாவிலேயே, தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சிறப்பாக நடைபெறுவதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முதன் மையான காரணம் இவ்விரு மாநிலங்களிலும் அங்கன் வாடிகள் முறையாகச் செயல்படுவதேயாகும். தமிழ் நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்களுக்குப் பண உதவு அளிக்கப்படுகிறது. இந்த உதவித் தொகை தி.மு.க. ஆட்சியில் ரூ.6000 என இருந்தது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இத்தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் முழுத் தொகையைத் தாய்மார்கள் அனைவரும் பெற முடியாத வகையில் நடைமுறைத் தடைகள் பல இதில் உள்ளன.

அரசு மருத்துவமனையில் மகப்பேறு நிகழ வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது. “நான் இந்த நாளில்-இந்த நேரத்தில் பிறக்கப் போகிறேன்” என்று தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை, முன்கூட்டியே அறிவித்துவிட்டுப் பிறப்பதில்லை. ஊரகப் பகுதிகளில் செவிலியர் மட்டுமே உள்ள துணை சுகாதார நிலையங்களுக்குச் செல்வதற்குக்கூட இரண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது!

பேறுகாலத்திலும் அதன் பிறகும் தாய்க்கும், சேய்க்கும் தடுப்பூசி மருந்து, சத்து மாத்திரை, சத் துணவு, பண உதவி ஆகியவற்றை அளிப்பதால், தாய்-சேய் நலனும் வளனும் ஓரளவுப் பேணப்படுகிறது-மேம்படுகிறது என்பது உண்மை! ஆனால் இதுவே முழுமையான தீர்வாகாது. குறைந்தபட்ச ஊட்டச்சத்துடனான உணவை மூன்று வேளையும் தேவையான அளவில் உண்ணக்கூடிய வருவாயும், வாழ்நிலையும் 80% மக்களுக்கு இல்லை. இதை அர்ஜீன் சென்குப்தா அறிக்கை உள்ளிட்ட பல ஆய்வறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. எனவே இந்நிலையை மாற்றாதவரை மன்மோகன் கூறுகின்ற ‘தேசிய அவமானம்’ தொடரும்.

ஒரு நாட்டு மக்களின் மனிதவள ஆற்றல் என்பது ஊட்டமான உணவை மட்டுமின்றி, கல்வி, மருத்து வம், குடிநீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து ஏந்து கள், தூய்மையான சுற்றுச்சூழல் முதலானவற்றை எந்த அளவுக்குப் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்த அடிப்படை வசதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டியது குடியாட்சியில் அரசின் தலை யாய கடமையாகும். ஆனால் கடந்த 25 ஆண்டு களாக இவை வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நீர்ப்பாசனமும் தனியாரிடம் போகப்போகிறது.

ஏழைக் குடும்பங்களின் குறைந்த அளவிலான வருவாயைத் தனியார்மயக் கல்வியும் மருத்துவமும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பது ஒரு தேசிய அவமானமில்லையா? இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களில் 1,20,000 கிராமங்களுக்கு மின் இணைப் பே இல்லை-50 கோடி மக்களுக்கு மின்வசதியே இல்லை என்பது மாபெரும் தேசிய அவமானமாகாதா? நாட்டில் 50 விழுக்காடு மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பது தேசிய அவமானமல்லவா? நேரு குடும்பமே இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அய்ம்பது ஆண்டு களுக்கும் மேலாக ஆட்டிப்படைப்பது தேசிய அவமான மல்லவா? அமெரிக்காவின் எடுபிடியான-சோனியா வீட்டின் ஏவலாளான-தேர்தலில் நிற்காமலே இரண்டு தடவை இந்திய நாட்டின் தலை அமைச்சராக மன் மோகன் சிங் இருப்பது தேசிய அவமானம் அல்லவா?

Pin It