மார்கழித் திங்களில் மயிலையில் பாட்டுக் கச்சேரிகள், இசையுடன் கலந்த சமயச் சொற்பொழிவுகள், நடனங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. கலை என்ற பெயரால், இசை என்ற வடிவத்தால் மதபோதை ஊட்டப்படுகிறது. இராமன், கிருஷ்ணன் புகழ் பாடாத இசைக் கச்சேரிகளோ, நடனங்களோ கிடையாது. அவ்வப்போது கணபதியும், சுப்பிரமணியனும் மேடையில் வந்து போவார்கள். முருகன் என்று பாடினால் தமிழிசையாக மாறிவிடுமே என்ற கவலை இந்த இசைப்பாடகர்களுக்கு உள்ளது. இந்தக் கச்சேரிகளுக்குப் பெரிய விளம்பரங்களும் விழா மண்டபத்தில் பல்வகை உணவுப் பண்டங்கள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டன. இசைப் பாடகர்களிடம் அவ்வப் போது கேள்வி கேட்கப்படுகிறது. பாதி ஆங்கிலம், மீதி தமிழில் பதிலளிப்பார்கள். தெலுங்குக் கீர்த்தனைகள் வடமொழியின் கஜல்கள் என்று பாடி, இசையில் புதுமையைக் கலப்பதாகக் கூறி வருகிறார்கள்.

சீன நாட்டின் புரட்சியாளர் மாசேதுங் “விவசாயி களின் மூளையை உறைய வைப்பதற்காக முதலாளிகள் மதம் என்னும் மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள்” (Religion is a drug, capitalists use to freeze the brains of peasants) என்று ஒரு முறை குறிப்பிட்டார். இந்த இசைக் கச்சேரிகளில், சொற்பொழிவுகளில், நடனங்களில் இந்து மதம் என்னும் போதைப் பொருள் கலந்து “கலை” என்ற பெயரில் அளிக்கப்படுகிறது. இவ்விதமான மதம், மூடநம்பிக்கைகளைப் பரப்பிடும் மார்கழித் திங்களில் மயிலையில் 29.12.2011இல் பாரதிய வித்யா பவன் அரங்கில் எதிர்பாராத ஒரு அதிசய நிகழ்வு நடந்தேறியுள்ளது. மயிலைக் கூட்டம் அதிர்ச்சியில் ஆழ்ந்தாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியவில்லை. காரணம், அழைக்கப்பட்டவர் வேறு யாரும் அல்லர்; நம்ம ஊர்க்காரரான நோபல் பரிசு பெற்ற வெங்கடராமன் இராமகிருஷ்ணன் ஆவார்.

இவரின் பெயரில் இரண்டு இராமன்கள் கூடவே ஒரு கிருஷ்ணனும் உள்ளனர். “எஸ்.வி. நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவிற்கு” இவரை அழைத்து வந்தவர்கள், அறிவியல் வீச்சால் பழமை வாதத்தைத் தகர்த்துவிடு வார் என்று புராண, இதிகாச நம்பிகளும், பஞ்சாங்க அம்பிகளும் சிறிதளவும் எண்ணியிருக்கமாட்டார்கள். வெங்கடராமன் வைத்தார் ஒரு வேட்டு. இந்த அறிவியல் வேட்டுச் சத்தத்தில் மயிலாப்பூர் மட்டும் கலங்கவில்லை; பழமையைப் போற்றும் ஊடகங் களும் அதிர்ந்து போயின.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் எந்த நாளே டும் அவரின் பொருள் பொதிந்த உரையை முழுமையாக வெளியிடவில்லை. பக்கத்திற்குப் பக்கம் நடிகைகளின் படங்களை, தனிமனிதர் களின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தும் ஆபாச கிசுகிசுக்களை, நாள் நட்சத்திரச் சோதிடக் கணிப்புகளைப் பெரும் அளவில் வெளியிடுவதுதான் கருத்துச் சுதந்திரமாக, ஊடக அறமாகப் போற்றும் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் வெங்கடராமனின் அறிவியல் உணர்வைத் தூண்டும் அரிய உரையைக் கண்டுகொள்ளவே இல்லை. சில ஏடுகள் சில பத்திகளிலேயே இவரின் உரையை வெளி யிட்டு முடித்துக் கொண்டன. “அறிவியல் நெறிகளுக்கு உட்படாத சோதிடமும், ஓமியோபதி மருத்துவ முறையும் போலியானவை” என்று, முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டதை “தி இந்து” நாளேடு முழுமையாக மறைத்து விட்டது.

ஆனால், வெங்கடராமனின் உரையில் குறிப்பிட்டுள்ள கீழ்க்காணும் பகுதியை மட்டும் இந்நாளேடு வெளியிட்டது. “அறிவியலில் முதன்மையான கூறு என்னவெனில், அறிவியல் தன் இயல்பால் தானே திருத்திக் கொள்ளும் பாங்கினைப் பெற்றுள்ளது. புதிய, புதிய தரவுகள் வெளிவந்தவுடன் அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய கோட்பாடுகளையும், கருதுகோள் களையும் செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வகையான தன்னைத்தானே திருத்திக் கொள்ளும் இயல்பைக் கொண்டதனால், நம்பிக்கையை மட்டும் அடிப்படை யாகக் கொண்ட மற்ற அமைப்புகளில் இருந்து அறி வியல் தன்னைத் தனித்து அடையாளம் காட்டிக் கொள் கிறது” (The important thing, however, was that science by its nature, was self correcting - as the new evidence emerged, scientists refined their hypotheses and theories. It is this built-in self correction that distinguishes from other system of beliefs) என்று அறிவியலின் உண்மைக் கூறுகளை வெங்கடராமன் கூறியதை “தி இந்து” நாளேட்டால் மறைக்க முடியவில்லை.

பன்னாட்டுக் குழுமத்தின் ஆங்கில நாளேடான “டைம்ஸ் ஆப் இந்தியா”, ‘சோதிடம் போலியானது’ என்று தலைப்பிட்டு மூன்று பத்திகளில் அவரின் உரையைச் சுருக்கிவிட்டது. அவரின் சீரிய உரையில், 16ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மறுமலர்ச்சி இயக்கத் தால் ஏற்பட்ட சீர்த்திருத்த மனப்பான்மையே அய்ரோப் பிய நாடுகளில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று குறிப்பிட்டார். அறிவியல் இயக்கத்தினுடைய தாக்கத்தால்தான் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் உடைந்து, ஜனநாயகம் தழைத்தோங்கியது. அறிவியலில் ஆக்கப் பூர்வமான போட்டிகள் உருவாயின. புதிய புதிய கண்டு பிடிப்புகள் தோன்றின.

வானியல் அறிஞர்களான கோப்பர் நிக்கசும், கலிலியோவும் தரவுகளின் அடிப் படையில் அறிவியல் உண்மையை ஆய்ந்து வெளி யிட்டனர். இதற்காக அவர்கள் மதவாதிகளால் துன் புறுத்தப்பட்டனர். அவர்கள்தான் அறிவியல் வளர்ச் சிக்கு உரமிட்டனர். அதனால் கற்பனையாகப் போற் றப்பட்ட மூடநம்பிக்கைகள், மதப்பிடிப்புகள் தளர்ந்து போயின என்று வெங்கடராமன் குறிப்பிட்டார். வெங்கடராமனின் உரை அன்றோடு முடிந்துவிட வேண்டும் என்று எண்ணிய “தி இந்து” ஏடு, தனது இணையதளப் பதிப்பில் இவரின் உரையை வெளி யிடவே இல்லை.

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் வலியுறுத்திய அறிவியல் சார்ந்த உண்மைகளையும், பகுத்தறிவு நெறிகளையும் மயிலையில் நேருக்கு நேராக வெங்கடராமன் வழிமொழிகிறாரே என்ற எரிச்சல்தான் இந்த இருட்டடிப்பிற்குக் காரணமாகும்.

1943இல் ‘யார் சூத்திரர்கள்’ (Who were Shudras?) என்ற அரிய நூலை அண்ணல் அம்பேத்கர் வெளியிட்டார். மும்பையில் இயங்கி வந்த ஒரு புகழ்மிக்க பதிப்பகம் இந்நூலை வெளியிட்டு இந்தியாவின் முதன் மையான தலைநகரங்களில் விற்பனை செய்தது. அறிஞர் அம்பேத்கரின் ஆணித்தரமான வாதங்களைக் கண்டு எரிச்சலடைந்த மைலாப்பூர்வாசிகள் கடும் சொற்களால் அவரை ஏசினர்; மடல்கள் தீட்டினர். இரண்டாம் பதிப்பில் அம்பேத்கர் தனது முன்னுரை யில் இதைக் குறிப்பிட்டு, ஈனத்தனமான, அச்சிட முடியாத சொற்களால் எதிரிகள் மடல்கள் தீட்டினர் (Filthy and unprintable language) என்று குறிப்பிட்டிருந்தார். கூடவே, “மயிலாப்பூர்வாசிகள் தங்களின் அறிவுத் திறனை மூளை விபச்சாரம் செய்வதற்குப் பயன் படுத்தக் கூடாது” என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்று காலம் மாறிவிட்டது. அறிவியல் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இணையதளங்களை வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்றுவிட்டது. மறைக்கப்படுகிற உண்மைகள் வெளிக் கொணரப்படுகின்றன.

வெங்கடராமனின் உரை பகுத்தறிவின் உரைக் கல்லாகவே அமைந்திருக்கிறது. “நம்மிடம் காணப் படும் ஒரு சார்பான எண்ணங்கள், பகுத்தறிவற்ற மனப்பான்மை ஆகியவற்றில் இருந்து அறிவியல் முன்னேற்றம் நம்மைப் பாதுகாக்கிறது. தவறான நம்பிக்கையால் ஏற்படும் ஆபத்திலிருந்து அறிவியல் நெறிமுறைகள் நம்மைப் பாதுகாக்கின்றன. எந்த அமைப்பு தன்னை வளர்ந்து வரும் அறிவியல் ஆய் விற்கும், சோதனைகளுக்கும் உட்படுத்த மறுக்கின்றதோ அவைகளை ஏற்க முடியாது என்று வெங்கடராமன் முகத்தில் அறைந்தாற் போல் தனது கருத்தைக் குறிப்பிட்டார்.

மக்களின் மூடநம்பிக்கைகளை நாள்தோறும் வளர்த்து, ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் கூட்டம் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஊடுருவியுள் ளது. இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை இவ்விதப் பிற்போக்குச் சக்திகள் முற்போக்கு வேடம் போட்டு ஆடும் ஆட்டத் திற்குக் குறைவே இல்லை எனலாம். அண்மைக் காலமாகப் புதுதில்லியில் இருந்து வெளிவரும் ‘அதிகார வர்க்கம்’ (Bureaucracy) என்ற இதழ் இதற்குச் சான்றாக, அடையாளமாக உள்ளது. இந்த இதழின் முகப்பு அட்டையில் - அச்சமற்ற இதழியல் - எங்கள் மரபு, எங்கள் வரலாறு என்ற வீர முழக்கங்கள் தென்படுகின்றன.

புதுதில்லியில் கப்பியுள்ள ஊழலின் பரிமாணங்களைப் பக்கத்திற்குப் பக்கம் விரித்துரைக் கின்றனர். ஆனால், இதழின் இறுதிப் பக்கத்தில் 2012 ஆம் ஆண்டிற்கான சோதிடக் குறிப்புகள், பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி யாளர்களுக்காகவே குறிக்கப்பட்டுள்ளன. அவர்களின் எதிர்காலம், பதவி உயர்வு, உடல்நலம், செல்வக் குவிப்பு ஆகியவை பற்றிய கணிப்புகளை அனில்குமார் என்கிற சோதிடர் குறித்துள்ளார். “அச்சமின்றிப் பணி செய்வதே எங்கள் மரபு, பணி” என்று முழக்கமிடும் இவ்வேட்டின் இறுதிப் பக்கம் சோதிடம் என்னும் மடமையை, அச்சத்தின் அடிப்படையைப் போற்றிப் பாதுகாக்கிறது. இதுதான் இன்றைய நாட்டு நடப்பாகவும் உள்ளது.

அரசியல் தலைவர்கள், ஊழல் செய்பவர்கள், உயர் அலுவலர்கள், முதலாளிகள் என நாட்டைச் சுரண்டும் கொள்கையற்ற கூட்டம் ஒருவித அச்சத்தால் சோதிடத்தை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஏற்றுக்கொள்கிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பயன்களை உறிஞ்சிக் கொண்டே இருக்கும் இக் கூட்டம்தான், சோதிடத்தைப் போற்றி வளர்க்கிறது. இவர்களுடைய எண்ண அரிப்புகளைச் சொறிந்து கொள்வதற்கு அனைத்து ஊடகங்களும் சோதிடர்களின் கணிப்புகளை அன்றாடம் வெளியிடுகின்றன. இவ்வகைப் பொய்யையும், இந்தச் சோதிடப் புரட்டையும் நம்புகிற படித்த கூட்டத்தின் முகத்திரையைத்தான் வெங்கடராமன் தனது உரை வழியாகக் கிழித்துள்ளார்.

இதற்கு முன்பும் பல அறிவியல் அறிஞர்கள் இந்தியாவில் போற்றப்படும் சோதிட மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியல் விளக்கங்களை அளித்து, மக்கள் விழிப்புற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளனர். 2000ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் போது தலைநகர் டெல்லியில் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் மத்திய அமைச்சர்கள், பேராசிரியர்கள் நிறைந்திருந்த அரங்கில், “சோதிடப் புரட்டை இன்னுமா நம்புவது?” என்று வினா தொடுத் தார். விடையும் கண்டார். “சோதிடம், என்பது சோத னைக்கு உட்படுத்தக் கூடிய அறிவியல் கோட்பாடு களுக்கு முரணாக உள்ளது. சோதிடம், சாதாரண அறி வியல் சோதனைக்குகூட உட்படுத்த இயலாதது. சோதிடம் நம்ப முடியாத அறிவுக்குப் பொருந்தாத பொய்த் தளங்களின் மீது கட்டப்பட்டது. உண்மையில் பார்க்கப் போனால் கண்ணால் காணக்கூடிய எந்தச் சோதனை யிலும் கூட தோற்கக் கூடியதுதான் சோதிடம்” என்று அறிவியல் அறிஞர் ஹாகிங் கூறிய கருத்துகளை அன்றும் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தன.

நோபல் பரிசுபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு அறிவியில் அறிஞரான மறைந்த சுப்ரமணியம் சந்திரசேகரின் உயரிய அறிவியல் உணர்வுகளும், கருத்துகளும் இவ்வழியிலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அறிவியல் அறிஞர் சந்திரசேகருக்கு நூற்றாண்டு விழா சென்ற ஆண்டில் முடிவுற்றது. ஆனால், இவ்விழா திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்களால் நடத்தப்பட்டுப் பெரிய விளம்பரம் இல்லாமல் முடிவுற்றது. இதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

1983இல் வான் இயற்பியலில் (Astrophysics) நேபால் பரிசு பெற்ற போது, ஸ்பேன் (Span) என்ற அமெரிக்க இதழில் சந்திரசேகரின் நேர்முக உரையாடல் வெளியிடப் பட்டது. அவ்வுரையாடலில், உங்கள் மதம் இந்து மதம்தானே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “நான் ஒரு மனிதன்; மதத்தை ஏற்றுக்கொள்ளா தவன்; நான் ஒரு நாத்திகன்” என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார். அப்போதும் இந்த உயரிய கருத்துகள் இங்கே வெளியிடப்படவில்லை.

1995ஆம் ஆண்டில் சந்திரசேகர் மறைந்தார். அவர் மறைவிற்கு முன்பு அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. “அறிவியல் அணுகுமுறையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தாண்டி, வாழ்க்கையில் நிறைவைத் தரக்கூடிய ஒரு கருத்து அல்லது நம்பிக்கை ஏதாவது உள்ளதா?” என்ற கேள்விக்கு, சந்திரசேகர், ‘இல்லை’ என்றுதான் உறுதியாகத் தெரிவித்தார். “எனக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. நான் ஒரு நாத்திகன். நான் இளைஞனாக இருக்கும் போது நீங்கள் குறிப்பிடுவது போன்ற பழைய நம்பிக்கையைப் பெற்றிருந்தேன். இப்பொழுது இல்லை. ஒரு சிறுதுளி கவனம் கூட மற்றப் பக்கம் செல்லாமல் நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக விடாமுயற்சியுடன் அறிவியலில் ஊறித் திளைத்திருக்கிறேன்.... எனக்கு மரணத்தைப் பற்றி எவ்வித அச்சமுமில்லை.

சிலர் என்னிடம் வந்து மூன்று மாதத்தில் புற்றுநோயினால் இறக்கப் போகி றாய் என்று கூறினாலும் என் கருத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது” (Was there then some sort of faith - a simple system of beliefs that transcent rational thinking and scientific approach that is necessary to acquire a sense of fulfillment and contentment? Chandra’s response was in the negative. He said emphatically, “No, I don’t have the faith. I am an atheist.... I have perserved in science for five decades and more, devoting minuscule amount of attention to other endeavours... I don’t have any fear or foreboding of death, If some one were to tell me I have cancer and will die in three months, I don’t think it would make much difference to me) என்று நாத்திக நெறியை அறிவியலின் உச்சத் திற்கு கொண்டு சென்று நிலைநாட்டினார். மேலும், தனது நண்பர் ராபர்ட் வால்டு (Robert Wald) அவர் களிடம் மூடிய உறையில் வைக்கப்பட்ட ஒரு மடலை சந்திரசேகர் கொடுத்து, தனது இறப்பிற்குப் பிறகு அம் மடலைத் திறந்துப் பார்க்க வேண்டும் என்று கூறி யிருந்தார். அம்மடலில், “தன் மரணத்திற்குப் பிறகு தனக்கு மரபுப்படியோ, வழக்கப்படியோ எவ்விதச் சடங் கையும் நிறைவேற்றக் கூடாது, ஒரு நினைவுச் சின்னத் தைக்கூட உருவாக்கக் கூடாது” என்று குறித்திருந்தார்.

உலக அளவில் பகுத்தறிவுச் சிந்தனை வளர்த் தெடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுக் காகப் பல அறிவியல் அறிஞர்கள் இணைந்து வேண்டு கோள் விடுத்துள்ளனர். இன்றளவும் பல அறிவியல் அறிஞர்கள் இக்கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஊடகங்களும், புத்தகப் பதிப்பாளர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு, 1975ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற 19 அறிஞர்கள் உட்பட உலகின் தலைசிறந்த 186 அறிவியல் அறிஞர்கள், குறிப்பிட்ட கருத்து என்றும் நினைவில் போற்றக் கூடியதாகும். “கல்வியும், அறிவுத் தெளிவும் பெருகி வரும் இந்நாளில் சோதிடம், தந்திரங்கள் அடிப்படையில் கட்டப்படும் நம்பிக்கைகளை அம்பலப் படுத்துவது தேவையற்றது என்று சிலர் நினைக்கலாம்.

இருப்பினும், சோதிடத்தை ஏற்றுக்கொள்ளும் போக்கு இப்புதிய சமூகத்திலும் புரையோடியுள்ளது. புத்தகப் பதிப்பாளர்களும், புகழ் மிக்க ஏடுகள் நடத்துபவர்களும், ஊடகங்களும் சோதிட வரைபடங்களையும் கணிப்புகளையும் ஜாதகத் திணிப்பு களையும் எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தப்படாம லேயே அக்கருத்துகளைப் பரப்ப முயற்சிப்பது நமக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வகை செயல்பாடு குருட்டுத்தனத்தையும், பகுத்தறிவற்ற தன்மையையும் வளர்க்கிறது. போலித்தனமான சோதிடர்களின் பாசாங்கு களை நேருக்கு நேராக வன்மையுடன் எதிர்த்து அறைகூவல் விடுக்கின்ற காலம் நெருங்கிவிட்டது” (One would imagine, in this day of widespread enlightenment and education, that it would be necessary to debunk beliefs based on magic and superstition. Yet acceptance of astrology pervades modern society. We are especially disturbed by the continued uncritical dissemination of astrological charts, forecasts and horoscopes by media and by otherwise reputable newspapers, magazines and book publishers. This can only contribute to the growth of irrationalism and obscurantism. We believe that the time has come to challenge directly and forcefully, the pretentious claims of astrological charlatans” - Statement issued by 186 leading scientists including 19 Nobel Laureates).

மக்கள் விழிப்புணர்ச்சி பெறக்கூடாது, மதமாயை களிலும், மயக்கத்திலும் மக்கள் மூழ்கி இருந்தால்தான் தங்களின் சுயநலச் சுரண்டலும், ஆதிக்கமும் நிலை பெறும் என்பதற்காகவே ஆளும் வர்க்கமும் அதற்குத் துணைபோகும் பிற்போக்குக் கூட்டத்தாரும் திட்டமிட்டே பகுத்தறிவுக் கருத்துகளை மறைத்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக அறிவியல் உணர்வு ஊட்டப்பட வேண்டும் என்று சுட்டப்படுகிறது. 51-ஏ பிரிவில், குடிமக்களின் அடிப்படைக் கடமை கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 51-ஏ(எச்) பிரிவில், “சீர்திருத்தம், ஆய்வு, மனிதநேயம், அறிவியல் உணர்வு ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டும்” என்று சுட்டப்படுகிறது (To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform).

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகத்தான் ஆட்சியில் இருப்பவர்களும், ஊடகத் துறையினரும் செயல்பட்டு மக்களை அறிவியல் உணர்விற்கு எதிராகத் திசை திருப்பி வருகிறார்கள். இவ்விதப் புல்லர்களை, புரட்டர்களைத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் 1930ஆம் ஆண்டுகளி லேயே அடையாளம் கண்டது. பகுத்தறிவை ஒரு இயக்கமாக நடத்திய பீடும், பெருமையும் தந்தை பெரியாரையே சாரும்.

குழந்தைகளின் உள்ளத்திலேயே பகுத்தறிவு உணர்வை ஊட்ட வேண்டும் என்ற நோக்கோடு 1938இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வடித்த ‘பெண் தாலாட்டுக்’ கவிதை வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.

“வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே!

 என்று மூடநம்பிக்கை வளர்ப்பவர்களை - “சதிக் கிடங்குகள்” என்று அடையாளம் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர்.

இவ்வகைப் பகுத்தறிவு நெறி இன்றைய வளர்ந்து வரும் உலகிற்குத் தேவை என்பதையே மயிலாப் பூரில் திரு. வெங்கடராமன் குறிப்பிட்டுள்ளார். திராவிடர் இயக்கம் வளர்ந்த காலத்தில், வ.ரா. என்கிற தமிழறிஞர், பெரியாரின் புரட்சிகரக் கருத்துகளைப் போற்றி நூல் கள், கட்டுரைகள் தீட்டினார். இதைக் கண்ட அறிஞர் அண்ணா, “அக்ரகாரத்து அதிசய மனிதர்” என்று கூறிப் பாராட்டினார்.

இவ்வகையில் மூடநம்பிக்கை என்னும் சதிக்கிடங் கை உடைத்த சுப்ரமணியம் சந்திரசேகரும், வெங்கட ராமன் இராமகிருஷ்ணனும் அறிவியல் துறையின் அக்ரகாரத்து அதிசய மனிதர்களே என்று போற்றப்பட வேண்டியவர் ஆவார்.

Pin It