அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இன்றைய தினம் இந்த பொதுக் கூட்டத்தில் தற்கால நிலைமையைப் பற்றி நானும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று இத்தாலூகா பிரபல மிராசுதாரர்களானவர்களால் அழைக்கப்பட்டு பேசக் கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றியுடையவனாகயிருக்கின்றேன்.
இதற்கு முன் இந்தக் கூட்டத்தில் பேசிய கனவான்களின் பேச்சை நீங்கள் கேட்டீர்கள். நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி அவர்கள் பேசியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் மனிதன் சட்ட மறுப்பு செய்யக் கூடாதென்பதையும், சட்டத்திற்கடங்க வேண்டியதென்பதையும் இராஜாவுக்கு பக்தியாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ளமுடியவில்லை.
இவ்விஷயத்தில் எனது கொள்கை உங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்தேயிருக்கலாம். சுயமரியாதை மகாநாட்டிலும் தீர்மானித்திருக்கின்றோம். அதாவது மனிதனுக்கு இராஜ பக்தியும், கடவுள் பக்தியும் கற்பிக்கப்படுவதானது மனிதனை அடிமைத்தனத்திலாழ்த்தும் அறிகுறியேயாகும் என்பதாக வெகுநாளாகவே நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.
ஆனால் இதிலிருந்து துரோகியாகவோ, துவேஷியாகவோ இருக்க வேண்டுமென்பதான பொருள் அதிலில்லையென்பதை நான் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே மனிதன் கடவுளுக்கே பக்தி காட்ட வேண்டிய அவசியமில்லையானால், பிறகு இராஜாவுக்கு எதற்காக பக்தி காட்ட வேண்டுமென்பதை யோசித்துப் பாருங்கள்.
இராஜா என்பவர் பிரஜைகளாகிய நம்மிடமிருந்து ஒரு வேலையை ஒப்புக் கொண்டவராகிறாரேயொழிய வேறில்லை. ஆகவே அவ்வேலையில் அவர் கடமையை அவர் செய்ய வேண்டியதும், நம் கடமையை நாம் செய்ய வேண்டியதும்தான் முறையாகும்.
ஒருவருக்கொருவர் தன் தன் கடமையைச் செய்வதில் ஒருவரிடம் ஒருவர் பக்தி காட்ட வேண்டிய அவசியமெங்கேயேற்படுகின்றது என்று கேட்கின்றேன்.
அப்படி காட்டுவதானால் அது வெறும் வேஷமேயாகும் கடவுள் பக்தி என்பதும் அப்படித்தான். கடவுள் என்பதாக நீங்கள் கருதுகி படி ஒன்றிருந்தால் அதன் கடமையை அது செய்ய வேண்டியதுதான். அது போலவே மனிதன் தனது கடமையைத் தான் செய்ய வேண்டியதுதான்.
நமது பக்தியை எதிர்ப்பார்த்து நமக்கு நன்மை செய்யும் கடவுளும் நமக்கும் வேண்டாம் அம்மாதிரி ராஜாவும் நமக்கு வேண்டாம். பக்தி என்பதே அடிமையை விட மோசமான வார்த்தை என்று எண்ணுகின்றேன். அடிமையென்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான்.
பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டியதுடன் மனத்தினாலுஞ் செய்ய வேண்டும். இதனால் மனதை சுவாதீனமற்றதாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்கமுடியாது, யாரையும் பக்தியாயிருக்கச் சொல்லவு முடியாது
அதுபோலவே சட்டமறுப்பென்பதும் தப்பிதமென்பதாக நான் ஒப்புக் கொள்ள முடியாது - சட்டமறுப்பு மனிதனுடைய இயற்கைக் குணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங்களை மீற வேண்டியவனாகவேயிருக்கிறான்.
சாதாரணமாக ஒருவனையொருவன் அடித்தால், வைதால், திருப்பியடிப்பதும் வைவதும் பெரும்பான்மையான மனித சுபாவமாயிருப்பதை நாம் காண்கின்றோம். ஒருவனையொருவன் அடித்தால் சர்க்காரில் பிராது செய்து தண்டிக்க வேண்டியது சட்டமுறை. மற்றபடி திருப்பியடிப்பது அச்சட்ட முறையை மீறின தாகுமல்லவா?
ஆனால், மனித சுபாவம் எல்லாவற்றிற்கும் சட்டத்திற்கும் அடங்கி நடக்க வேண்டுமென்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. தன்னால் சாத்தியப்பட்டதற்கும், தனக்கு இழிவில்லாததற்கும் தான் நேரான மனிதன் அடங்கி நடக்க முடியும். மற்றவைகளை மீறத்தான் நேரிடும்.
இழிவை உத்தேசித்து சட்டத்தை மீறுகின்றவர்கள் அதனால் வரும் பலாபலனை அடைய தயாராயிருக்க வேண்டும் - சட்டத்தை மீறி விட்டு பலன் அனுபவ விஷயத்தில் ஒளியப் பார்ப்பவனும், பயப்படுகிறவனும் உண்மையான சட்ட மறுப்புக்காரனாக மாட்டான்.
நாளை நான் தெருவில் நடக்க மறுக்கப்படுவது எனது சுயமரியாதைக்கு ஈனமென்று கண்டால் அதுசம்பந்தமான சட்டத்தை மறுக்கத்தான் செய்வேன். ஆனால் அதனால் வரும் பலனையடையத் தயாராயிருந்து கொண்டுதான் மறுப்பேன். நான் சட்ட மறுப்புக்குச் சிறிதும் பயந்தவனல்ல.
நான் 4, 5 தடவை சட்டங்களை மறுத்துமிருக்கின்றேன். அதற்காகப் பல தடவை தண்டனையுமனுபவித்திருக்கின்றேன் என்றாலும் மீறப்படும் விஷயங்கட்கு தராதரம் தெரிய வேண்டும். எது மீற வேண்டியது, எது மீற வேண்டாதது என்பது போன்ற விஷயங்கள் மிகவும் கவனிக்கப்படத்தக்கதாகும். பிரஸ்தாப சட்டமறுப்பு என்பதை நான் அவ்வளவு அவசியமாய் மீற வேண்டியவைகளில் ஒன்று என்பதாகக் கருதவில்லை.
சிலர் அவசியமானதென்று கருதியிருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில் என் அபிப்பிராயத்தை நான் சொல்லுகிறேன். உப்புச் சட்ட மறுப்புக்கு அனுகூலமாகச் சொல்லப்படுங்காரணமெல்லாம் சமுத்திரத்துத் தண்ணீர் பொதுவென்றும், அதையெடுத்துக் காய்ச்சுபவர்களிடம் வரி கேட்கக் கூடாதென்றும் சொல்லப்படுகின்றது. இந்த வாதம் ஞானமற்றதென்றே தான் சொல்லுவேன். அரசனே நமக்கு வேண்டியதில்லையென்று சொல்லுவதானால் சமுத்திரத்துத் தண்ணீர் பொதுவாகும்.
அரசன் ஒருவன் வேண்டுமென்று ஒப்புக் கொண்டால் அரசாங்கத்திற்கு எப்படியாவது வரியைக் கொடுக்கத்தான் வேண்டும். அந்த வரி எப்படி வேண்டுமானாலும் விதிக்கலாம். ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பொருளின் மீதும், ஒவ்வொரு தொழிலின் மீதும் விதிக்கப்படும்.
குடிகளிடமிருந்து வரி வசூலிக்க ஏற்படுத்தும் வழிகளில் நமக்கு அதிகச் சண்டையில்லை. வேண்டுமானால் எவ்வளவு வரி வேண்டுமென்பதில் சண்டை போடலாம். சமுத்திரத்துத் தண்ணீர் பொதுவென்று கருதுகிறவர்கள் தென்னை மரத்துப் பாளைத் தண்ணீர் சமுத்திரத்துத் தண்ணீரை விட நமக்கே சொந்தமானதல்லவா? அது பொதுவானது கூட அல்லவே.
அதற்கு ஏன் வரிகொடுக்கின்றோம்? சர்க்கார் தயவில்லாமல் நாமே காய்ச்சுகின்ற சாராயத்திற்கு ஏன் வரி கொடுக்கின்றோம்? நாம் கஷ்டப்பட்டு நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு ஏன் வருமானவரி கொடுக்கின்றோம்? இதுபோல் எத்தனை வரிகள் கொடுக்கின்றோம். இந்த வரிகளைவிட உப்புவரி எந்தவிதத்தில் அநியாயமானதென்பது நமக்கு விளங்கவில்லை.
தவிர தாங்கமுடியாத வரியென்று சொல்லப்படுகின்றது. இது புரட்டுப் பிரசாரமேயாகும். நமது அரசியல்வாதிகள் தங்கள் யோக்கியதைக்கு மீறின சம்பளத்தையும் உதவித் துகையையும் செலவுத் துகையையும் பெறுகின்றார்கள். இன்னமும் அதிகமாய்ப் பெற ஆசைப்படுகின்றார்கள்.
அதனாலேயேதான் நமது யோக்கியதைக்கு மீறின வரியைக் கொடுக்க நேரிடுகின்றது. நமது வரி குறைய வேண்டுமானால் நமது மக்கள் தினம் ஒன்றரையணா வரும்படி கூட யில்லாமல் திண்டாடும் போது நமது மக்களே அந்த அரசாங்கத்தில் மாதம் 100, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 6000 என்பதாக அளவுக்கு மீறி சம்பளம் கொள்ளையடிக்கின்றார்களே, இதைப் பற்றி யாராவது கவனிக்கின்றீர்களா?
நமக்குக் கல்விக்கு சர்க்காரிடம் பணம் போதாதற்குக் காரணம் கல்விக்கு ஒதுக்கப்படும் பணங்களெல்லாம் கல்வி அதிகாரிகளும், உபாத்தியாருமே கொள்ளை கொள்ளையாய் சாப்பிட்டு விடுகிறார்கள். சுகாதாரப் பணமெல்லாம் டாக்டர்களும், சிப்பந்திகளும் சாப்பிட்டு விடுகிறார்கள்.
உபாத்தியாயர்கட்கும், அதிகாரிகட்கும், டாக்டர்களுக்கும், தொழிலாளர்கட்கும் என்ன வித்தியாசம்? தொழிலாளி சாதாரணமாக தினம் 8 அணாவுக்குக் கஷ்டப்படுகிறான். உபாத்தியாயரானால், டாக்டரானால், உத்தியோகஸ்தரானால் தினம் 8ரூ. 80ரூபாய் என்பதாக அனுபவிக்கிறார்கள். பிரஜைகளால் தாங்கமுடியாத சம்பளம் வாங்கும் பிரதிநிதிகளுடைய, பிரதிநிதி ஸ்தாபனங்களுடைய பிரஜைகள் தாங்கமுடியாத வரியைக் கொடுத்துத்தானாக வேண்டும்.
நமது பிரதிநிதிகள் செய்யும் அக்கிரமத்திற்கு அறிவில்லாமல் சர்க்கார் மீது பாய்கின்றோம். இதுவரை நாம் பெற்ற சுதந்தரத்தையும், சுயராஜியத்தையும், சுயேச்சையையும் பார்க்கும் போது இனியும் வருகின்ற சுயராஜியம் நூற்றுக்கு 90 மக்களான ஏழைகளையும், குடியானவர்களையும் அடியோடு அழித்து விடுமென்றே நான் உறுதியாய்ச் சொல்லுவேன். சுயராஜியமென்பதே சிலரின் சுயநலமே தவிர வேறில்லை.
எல்லாவற்றையும் விட “பூரண சுயேச்சை”யென்பது சுத்த ஹம்பக்கென்பதே என் அபிப்பிராயம். யாரோ சிலருக்கு உத்தியோகங் கிடைக்கவும் யாரோ சிலருடைய கீர்த்திக்கும் சத்தியாகிரகம் செய்தால் நானும் அதில் சேர வேண்டுமா? இதை ஆரம்ப முதலே நான் ஆக்ஷபித்து வந்திருக்கிறேன்.
சைமன் கமிஷன் வந்த காலமுதலே ஏன் 1927 - ´ முதலே இந்த காங்கிரஸ் கொள்கைக்கும், பூரண சுயேச்சைக் கொள்கை என்பதற்கும் நான் விரோதமாகயிருந்திருக்கிறேன். முன்னையை விட இப்போது பின்னும் உறுதியாயிருக்கிறேன்.
இன்றைய தினம் இந்தச் சட்ட மறுப்பு முட்டாள்தனமானது, தேசத்துக்குக் கேடு சூழ்வது, ஏழைகளைக் கெடுப்பது என்று நான் மாத்திரம் சொல்லவில்லை. சாதாரணமாக இந்தியர்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகவே சொல்லுகின்றார்கள் என்பதே எனது அபிப்பிராயம். உதாரணமாக இந்தியாவிலுள்ள 30 கோடி மக்களில் மகமதிய சமூகமாகிய 4ல் ஒருபாகம் ஏழரைக் கோடி மக்களின் சமுதாய மகாநாடுகள் சட்ட மறுப்பைக் கண்டிக்கின்றன. 5 கோடி மக்களாகிய தீண்டாதார் என்பவர்கள் சட்ட மறுப்பைக் கண்டிக்கின்றார்கள்.
ஒரு கோடி கிறிஸ்துவர்கள் சட்ட மறுப்பைக் கண்டிக்கின்றார்கள். மீதியுள்ளவர்களில் அரசியல் ஸ்தாபனங்களிலேயே மிதவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசீயவாதிகளாகியவர்கள் எல்லோருமே சட்ட மறுப்பை ஒப்புக் கொள்ளவில்லை.
நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் சட்ட மறுப்பை ஆதரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். சென்னையில் உள்ள “தேசீய பத்திரிகைகள்” இந்து பத்திரிகை ஒப்புக்கொள்ளவில்லை; தமிழ்நாடு ஒப்புக் கொள்ளவில்லை; சுதேசமித்திரன் ஒப்புக் கொள்ளவில்லை. அதன் ஆசிரியர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஆதியிலேயே இராஜினாமாக் கொடுத்து தப்பித்துக் கொண்டார்கள்.
சட்டமறுப்புக்கு விரோதமாகவே ஜாமீன் கட்டி நடத்துகிறதுடன் தாங்கள் அதில் சேரவில்லையென்று விளம்பரமும் செய்துவிட்டார்கள். மற்றபடி பார்ப்பனச் சங்கங்கள், பார்ப்பனரல்லாதார் சங்கங்கள், பார்ப்பனரல்லாதார்களில் உள்ள பல வகுப்புச் சங்கங்கள் ஆகிய எல்லா ஸ்தாபனங்களும் சட்ட மறுப்பை ஒப்புக் கொள்ளாததுடன் கண்டித்துமிருக்கின்றன.
மிராசுதாரர்கள், வியாபாரிகள், ஜமீன்தார்கள் எல்லோரும் எதிர்க்கிறார்கள், இனி தனித்தனி தலைவர்கள் என்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யார் ஆதரிக்கின்றார்கள் என்று பாருங்கள்.
திரு. சீனிவாஸையங்கார், திரு. சத்தியமூர்த்தி, திரு சர். சி.பி. இராம சாமி ஐயர், திரு. சர். சிவசாமி, திரு. சீனிவாச சாஸ்திரி, திரு. எம்.கே.ஆச்சாரி இவர்களெல்லாம் ஒரு காலத்தில் தலைவர்கள், தேச பக்தர்கள், தேசீய வாதிகள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பார்ப்பனர்கள் அல்லவா? இவர்களில் யாராவது ஆதரிக்கின்றார்களா? வெளி மாகாணங்களிலும் திருவாளர்கள் ஜயகார், ஜின்னா, சிந்தாமணி, கேல்கார், சாப்ரூ ஆகியவர்கள் ஆதரிக்கின்றார்களா? ஆகவே ஏதாவது ஒரு கூட்டத்தார், ஜாதியார், ஸ்தாபனத்தார் என்று சொல்லும்படியாக யாராவது ஆதரிக்கின்றார்களா? ஏதோ “திரு. காந்தி ஆரம்பித்தார்.
அவர் நல்லவர்; அவர் அவதார புருஷர்; அவர் மகாத்மா; அவரிடம் நமக்கு அதிக பக்தியுண்டு; அவர் எங்கள் ஜாதி” என்று சொல்லிக் கொள்வோரும், அவர் செல்வாக்கின் பலனாய் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களையும் மறைத்துக் கொண்டிருப்பவர்களும் மற்றும் அவரிடம் தனிப்பட்ட சிநேகமோ, விசுவாசமோ உள்ளவர்களும் தவிர வேறு யார் இச்சட்ட மறுப்பில் கலந்துள்ளார்களென்று யோசித்துப் பாருங்கள். அவருடைய ஆதிக்கத்தில் பல லட்ச ரூபாய்கள் இருக்கின்றன.
யாராவது இரண்டொரு உண்மையாளரிருந்தாலும் இருக்கலாம். அதற்காக எல்லோருமே யோக்கியவர்களென்று ஒப்புக் கொள்ளவேண்டுமா? தவிர நமது தமிழ் நாட்டிலுள்ள சமூக சீர்திருத்த வேலையின் பயனாய் அநேக சீர்திருத்த விரோதிகள் காங்கிரஸ் பெயரையும் சட்ட மறுப்புப் பெயரையும் சொல்லிக் கொண்டு சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட அவைகளை உபயோகித்துக் கொள்ள நினைப்பதன் மூலம் அப்படி ஒரு கூட்டம் அத்துடன் சேர்ந்திருக்கின்றது.
ஆகவே உப்புச் சட்ட மறுப்பை நான் மாத்திரமோ அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சியார் மாத்திரமோ ஆதரிக்கவில்லை யென்பதாகவும், கண்டிக்கின்றேன் யென்பதாகவும் நினைப்பது சுத்த முட்டாள்தனமென்றே சொல்லுவேன். இதுவரை சுமார் 5000, 6000 பேர்களே சட்டத்தை மறுத்திருக்கிறார்கள் என்று கணக்கு வெளியாயிருக்கின்றது.
அடிபட்டவர்கள் அநேகர்களை நாமே நிரபராதிகளே ஒழிய சட்டமறுப்பில் சேர்ந்தவர்களல்ல என்று சொல்லி விட்டோம். கடைசியாக இந்த நாட்டிலுள்ள எவரையும் விட எனக்கு இந்த நாட்டு விடுதலையிலாவது, மக்கள் விடுதலையிலாவது கவலை குறைவென்று யாராவது கருதினால் அவர்கள் ஏமாந்து போவார்கள் என்றே உறுதியாய்ச் சொல்லுவேன்.
ஆனால் உப்புச் சட்ட மறுப்பும், போலி அரசியற் கிளர்ச்சியும் நாட்டின் விடுதலைக்கும், மக்கள் விடுதலைக்கும் கேடு சூழ்வதென்றே சொல்லுவேன். நாட்டு விடுதலைக்குச் செய்ய வேண்டிய வேலையும், மக்கள் விடுதலைக்குச் செய்ய வேண்டிய வேலையும் வேறு இருக்கின்றது. அதையே தான் நான் செய்து கொண்டுவருகிறேன். அதற்காக இன்னமும் செய்யத்தயாராயிருக்கிறேன். அந்த வேலை சர்க்காரை “ஒழிப்பதாலோ” அவர்களை “ஸ்தம்பிக்கச்” செய்வதாலோ ஆகின்ற காரியமல்ல.
எனது தொண்டிற்கு எதிரிகள் அரசாங்கமேயல்ல. அரசாங்கத்தைவிட மோசமானவர்கள், எதிரியானவர்கள் நம் நாட்டவர்களிலேயே இருக்கின்றார்கள். மக்களுக்கு அறிவை வளர்த்து மனிதத்தன்மையை அடையச் செய்தால் தான் அவர்கள் விடுதலைக்கு லாயக்காவார்கள்.
நமது மக்களுக்குப் பெரும்பாலும் பகுத்தறிவே பூஜியம். அடிமைத்தனத்தில் அவர்களுக்குச் சிறிது கூட வெறுப்புமில்லை. இந்த நிலையிலுள்ளவர்கள் பேரால் யாரோ சிலர் பூரண சுயேச்சையும் சுயராஜ்யமும் கேட்பது முழுப் புரட்டேயாகும். அதில் சிறிதும் நாணயமில்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். உண்மையான தேசியவாதிக்கு இப்போது அரசாங்கத்தோடு போர் கிடையாது.
இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே தேசீயவாதிகள் கிடையாது. இந்த தேசம் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக சுயராஜ்யத்துடனாவது பூரண சுயேச்சையுடனாவது இருந்ததென்று யாராலாவது சொல்ல முடியுமா? ஏன் அப்படியிருக்க முடியவில்லை யென்பதற்குண்டான குறைகளை கண்டுபிடித்து அவைகளை நீக்க வேண்டாமா? ஒருவனையொருவன் தாழ்த்தியடக்கிச், சுயேச்சையில்லாமல் செய்வதே இந்த நாட்டு மத தர்மமாகவும், நீதி தர்மமாகவுமிருக்கின்றது.
இந்த முறையொழிந்தாலல்லது நாடு உருப்படாது. அதைக் கவனிக்காமல் நாம் ஒரே தவறுதலை 2000 வருஷமாகச் செய்து வருகின்றோம். இப்போதும் அதையே செய்கின்றோம்.
இந்தியாவில் வருடமொன்றுக்குப் பதினாயிரக்கணக்கான பட்டதாரிகள் புதிது புதிதாகப் பெருகுகிறார்கள். இவர்கள் எல்லோருக்குமே உத்தியோகம் தான் வேண்டியிருக்கிறது. அதற்கெல்லாம் அரசாங்கத்தைத் தவிர வேறு மார்க்கமில்லாமல் செய்து கொண்டார்கள். ஆகவே அரசாங்க உத்தியோகம் அதிகப்படுத்த வேண்டுமானாலும், அரசாங்கப் பெரும் பதவி யாருக்காவது வேண்டுமானாலும் பாழும் தேசியத்தைத் தவிர வேறு வழியில்லை.
கைத்தொழில் செய்வதென்றால் சில வகுப்புக்கு பழக்கமுமில்லை, உரிமையுமில்லை. ஆகவே பெரும்பாலும் உடலினால் பாடுபட முடியாத சோம்பேரிகளாலேயே உத்தியோகங்களை எதிர்பார்த்து இன்றைய “தேசியம்” தலைவிரித்தாடுகின்றது. இதற்கும் இது போன்றவைகளுக்குமிடம் கொடுத்துக் கொண்டே வந்தால், ஆட்சியின் இன்றைய முறை இன்னும் பலப்படத்தான் உதவுமே தவிர அதை முழுதும் நமது நன்மைக்கே அனுகூலமான ஆட்சியாக மாற்ற முடியாததாகிவிடும்.
சர்க்காரின் அடிமைகளாயிருந்து அவர்களுக்கு அனுகூலமானபடியெல்லாம் ஆட்சியை நடத்திக் கொடுப்பது முதலில் ஒழிய வேண்டும். அதை யாரும் கவனிப்பதேயில்லை. ஆகையால் தேசாபிமானிகள் என்பவர்கள் சர்க்காரை எதிர்ப்பதை விட அதை கண்டிப்பதை விட அதை நடத்திக் கொடுப்பவர்களை எதிர்க்கவும் கண்டிக்கவும் செய்ய வேண்டும்.
தப்பிதத்தின் அஸ்திவாரத்தைக் கவனியாமல் படும்பாடு வீணான பாடாகத்தான் முடியும் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆகவே, சகோதரர்களே! நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்யுங்கள்.
குறிப்பு : 27-07-1930 ஆம் நாள் மாயவரம் ஆனந்த தாண்டவ ஹாலில் ஆற்றிய சொற்பொழிவு.
(குடி அரசு - சொற்பொழிவு - 03.08.1930)