கடவுள் மத மறுப்புக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையையும் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் சேர்க்கும்போதுதான்  அரசியல் சட்டம் கூறும் அனைவருக்குமான உரிமை - அர்த்தம் பெறும்.

இந்தியாவில் 13 சதவீதம் பேர் மத நம்பிக்கையில்லாதவர்கள்; 3 சதவீதம் பேர் நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டிருப்பவர்கள். இது 2012ஆம் ஆண்டு ஒருநிறுவனம் தந்துள்ள புள்ளி விவரம் (WIN GALLUP REPORT - 2012) உண்மையில் மதவாதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர் களானாலும் சரி; கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருப் பவர்களானாலும் சரி; அந்த நம்பிக்கைகளிலிருந்து முற்றாக விலகிய வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறியீடு மற்றும் சடங்குகளில்தான் இந்த நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாத்திகர் என்போர் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல; வேதத்தை மறுப்போர்தான் என்று காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி கூறியிருக்கிறார். வேதங்கள் தோன்றிய காலத்திலேயே வேத மறுப்பும் - கடவுள் மறுப்பும் தோன்றிவிட்டன. சார்வாகம், மீமாம்சம், புத்தம் போன்ற தத்துவங்கள் - வேதங்களையும் கடவுள் களையும் மறுப்பவை தான். ஆனால் இந்திய அரசியல் சட்டம் - கடவுள் - மத நம்பிக்கைகளுக்கு பாதுகாப்புகள் வழங்கியிருக்கிறதே தவிர, கடவுள் மத மறுப்பாளர்கள் குறித்து மவுனம் சாதிக்கிறது. அவர்களுக்கான உரிமைகள், பாதுகாப்புகள் ஏதும் அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை. சமூக விடுதலைக்காக உழைத்த பல தலைவர்கள், நாத்திக - வேத மறுப்பு சிந்தனைகளைப் பரப்பியவர்கள். பெரியார் - பகத்சிங் - ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் - கடவுள் - மத மறுப்பு சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள்.

நாத்திகர் என்று ஒருவர் தன்னைப் பிரகடனப்படுத்தினாலும் சட்டப்படி ‘இந்து’ வாகவே வாழ வேண்டியிருக்கிறது. இந்து என்றால் வர்ணாஸ்ரம கட்டமைப்புக்குள் ‘பிராமணர்களை’த் தவிர, ஏனைய அனைவருமே ‘சூத்திரர்’களாகி விடுகிறார்கள். சூத்திர இழிவிலிருந்து ஒரு சமூகம் தன்னை விடுவித்துக் கொள்ள இந்து மதத்துக்குள்ளேயே போரிட வேண்டியிருக்கிறது. நாத்திக சிந்தனைகளைப் பரப்பிய பெரியார் அனைத்து ஜாதியினரும் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்து அர்ச்சகராக வேண்டும் என்று  போராடியதற்குக் காரணமே - ‘சூத்திர’ இழிவை ஒழிப்பதற்குத்தான். ‘நாத்திகரை’யும் இந்து வாக்கி ‘சூத்திரராக்கி’ விடுகிறது வேதமதமான இந்து மதம். இது மிகக் கொடூரமான கலாச்சார வன்முறை; கலாச்சார பயங்கரவாதம்.

இதுகுறித்து அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் நடந்தன. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரை ‘இந்தியாவின் மக்களாகிய நாம்’ என்ற சொற்றொடருடன் தொடங்குகிறது. இந்த சொற்றொடரை நீக்கி, ‘கடவுளின் பெயரால்’ (In the name of God) என்ற சொற்றொடருடன் அரசியல் சட்டம் தொடங்க வேண்டும் என்று 1949, அக். 17இல் எச்.வி. காமத் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். சபை உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை புறந்தள்ளினர். இந்தத் திருத்தம், நம்பிக்கையை கட்டாயமாக்கித் திணிக்கிறது என்று சபை உறுப்பினர் பட்டம் தாணுப்பிள்ளை குறிப்பிட்டார். மேலும், “ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்; அது அடிப்படை  உரிமை; நாத்திகர்களுக்கான உரிமை என குறிப்பாக சட்டம் பேசாவிட்டாலும் மனச் சாட்சிக்கான சுதந்திரத்தில் அதுவும் அடங்கிவிடுகிறது. அரசியல் சட்டம்  - இரண்டு உரிமைகளையும் வழங்க வேண்டும்” என்று அவர் வாதிட்டார். கடவுள் நம்பிக்கையைத் திணிப்பது ஒரு பிரிவினரை மட்டுமே அங்கீகரிக்கும் குறுகிய உணர்வுக்கு வழி வகுக்கும்; இது அரசியல் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்துக்கே எதிரானது” என்று கூறினார், பண்டிட் ஹிருதயநாத் குன்சுரு (Hriday Nath Kunzru). ஆக அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான 25ஆவது பிரிவு வழங்கியுள்ள “மனசாட்சிக்கான சுதந்திரம்” (Freedom of Conscience) பிரிவு கடவுள் - மத மறுப்பாளர்களின் உரிமைகளையும் உள்ளடக்கி யதே ஆகும். அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.

ஆனால் நீதிமன்றங்கள் வழங்கிய பல தீர்ப்புகள் இந்த அடிப்படையைப் புறந்தள்ளி யிருக்கின்றன. கடவுள் - மத மறுப்பு சிந்தனை களுக்கும் - மதச் சாயம் பூசும் முயற்சிகளே நடந்துள்ளன. 1954ஆம் ஆண்டு ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் வந்தது. சென்னை இந்து அறநிலையத் துறை ஆணையருக்கும் சிறீஷிப்பூர் லட்சுமீர்த்த சாமியாருக்கும் இடையே நடந்த வழக்கு. நாத்திகர்களுக்கான உரிமை என்று குறிப்பாக சட்டம் பேசாவிட்டாலும் மனசாட்சிக்கான சுதந்திரத்தில் அதுவும் அடங்கி விடுகிறது. என்றாலும் கடவுள் மத மறுப்பையும் மதத்துக்குள் திணித்தே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே ஆண்டில் மற்றொரு வழக்கில் (ராட்டிலால் பங்சந்த் காந்தி எதிர் பம்பாய் அரசு) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘மதம்’ என்பதற்கு எந்த தெளிவான வரையறையையும் இந்திய அரசியல் சட்டம் வழங்கவில்லை என்றும்; எனவே அனைத்துப் பிரிவினருக்கும் பொருத்தக் கூடிய மதம் எது என்பதை வரையறுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது. 1992ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசுக்கும் ஆந்திர நாத்திகர் கழகத்துக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பளித்த ஆந்திர உயர்நீதிமன்றம் ஒரு மதம் அல்லது கடவுள் மீது நம்பிக்கையை மறுப்பதும்கூட ஒரு குறிப்பிட்ட மதம் தான் என்று வெளிப்படையாகவே கூறியது. கடவுள் - மத மறுப்பையும் மதமாகவே கருதும் இந்தத் தீர்ப்புகள் - அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே முரண்பாடான உச்சநீதிமன்றத் தின் பார்வையையே வெளிப்படுத்துவன.

மேலே சுட்டிக்காட்டிய தீர்ப்புகளிலிருந்து மாறுபட்ட ஒரு தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றம் 2014இல் வழங்கியது. (ரஞ்சித் சூர்யகாந்த் மொகைத் எதிர் இந்தி ஒன்றியம்) அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைப் பிரிவு 25 கூறும் ‘மனசாட்சி சுதந்திரம்’ என்ற பிரிவுக் குள்ளேயே ஒரு தனி நபர் மதத்தை மறுக்கும் உரிமையும் அடங்கியிருக்கிறது என்றது, அத்தீர்ப்பு. ஒருவர் நாத்திகராக இருக்கும் உரிமையையும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற மறுக்கும் உரிமையையும் இப்பிரிவு உள்ளடக்கி இருக்கிறது என்று தெளிவுபடுத்தியது இத்தீர்ப்பு. எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவேண்டும் என்று எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அத்தீர்ப்பு கூறியது.

அண்மைக்கால உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் சில - ஒருவர் நாத்திகராக இருக்கும் உரிமையை உறுதி செய்திருக்கின்றன. அது தனி மனித சுதந்திரத்தின் பாற்பட்டது என்று 2007ஆம் ஆண்டு 9 நீதிபதிகளடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது (கே.எஸ். புட்டுசாமி, எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு). தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்யும் பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அண்மைக் காலங்களில் தொடர்ந்து வழங்கி வருகிறது. மதங்களின் விதிகளையும் தாண்டி தனிமனித உரிமையே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை உச்சநீதிமன்றங்கள் தீர்ப்பில் வலியுறுத்தி வருகின்றன. அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் (1948, நவம்பர் 4) அம்பேத்கர் வெளியிட்ட தனி மனித சுதந்திரம் என்ற கருத்தின் நீட்சியாகவே இத்தீர்ப்புகள் அமைந் துள்ளன. எனவே நாத்திகராக இருப்பதோ, கடவுள் மதங்களை நம்ப மறுப்பவராக இருப்பதோ, ஒரு தனித்த அடையாளம் (மதம் அல்ல) என்பதை அரசியல் சட்டம் அங்கீகரிக் கிறது.

அதே  நேரத்தில், அரசியல் சட்டத்தின் 25(1)ஆவது பிரிவு மதத்தைப் பின்பற்ற - பரப்ப உரிமை வழங்குகிறது. இந்த உரிமை - வேறு நபரின் மத உரிமையில் குறுக்கிடக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது. உச்சநீதிமன்றம் 2000ஆம் ஆண்டில் ‘தில்லிதாமஸ் எதிர் இந்திய யூனியன்’ வழக்கில் இதே கருத்தை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் ‘நாத்திகம்’ தனித்துவமானது; மதத்திலிருந்து வேறுபட்டது; நாத்திகத்தில் மதத்துக்கு இடமில்லை என்று நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும்போது - நாத்திகர் உரிமைகளை அரசியல் சட்டம் 25ஆவது பிரிவை மீறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. மீறவில்லை என்பதே இதற்கான பதில். இதற்கு நான்கு சான்றுகளை முன் வைக்க முடியும்.

முதலாவதாக அரசியல் ‘சட்டம் மதச் சார்பின்மை’யைப் பேசுவதால் அதுவே நாத்திகத்தின் உரிமையை அங்கீகரிப்பதாகும். புனித சேவியர் கல்லூரி எதிர் குஜராத் அரசு வழக்கில் (1974), “மதச்சார்பின்மைக்கான அர்த்தம் கடவுள் ஆதரவோ கடவுள் எதிர்ப்போ அல்ல; மத நம்பிக்கையாளர்களானாலும் அது குறித்து கவலைப்படாதவர்களானாலும் - மத கடவுள் மறுப்பாளர்களானாலும் அனைவரை யும் ஒரு தன்மைiயாகக் கருதுவதே - மதச் சார்பின்மை” என்று நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

இரண்டாவதாக - இந்தியாவுக்கு நீண்ட நாத்திக பாரம்பர்யம் உண்டு; நாட்டின் போற்றத் தக்க பல தலைவர்கள், புரட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாத்திகர்களாக இருக் கிறார்கள். நாத்திகப் பரப்புரை செய்திருக் கிறார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக்கூட வளாகத்தில் நாத்திகத் தலைவர் பெரியார் சிலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (பி.டி.சுந்தரேசன் எதிர் தமிழக அரசு தலைமைச் செயலாளர்) சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.  எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ‘பள்ளிக் குழந்தைகள் பெரியார் வரலாற்றையும், இலட்சியத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்’ என்று கூறியது, அத்தீர்ப்பு.

“அரசியல் சட்டத்தில் 51ஏ(எச்) பிரிவு, அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்துதல்; சீர்திருத்தம் ஆகியவற்றை குடிமகனின் அடிப்படைக் கடமையாக வலியுறுத்துகிறது. பெரியார் தத்துவங்களைப் பள்ளிக் குழந்தைகள் புரிந்து கொண்டால் மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கு  அவர்களை தயார் செய்ய முடியும்” என்றும் உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

மூன்றாவதாக, சஞ்சய் ஆனந்தசால்வே எதிர் மகராஷ்டிரா அரசு (2015); ரஞ்சித் சூர்ய காந்த் மொகைத் எதிர் இந்திய ஒன்றியம் (2015) ஆகிய வழக்குகளிலும் மனசாட்சி சுதந்திரம் - நம்பிக்கைகள் - தனி மனித உரிமை; அது கருத்துரிமை பேச்சுரிமையை வலியுறுத்தும் 19(1)(ஏ) பிரிவுக்கு உட்பட்டவையே என்று தீர்ப்பளித்துள்ளது.

நான்காவதாக - நால்சா (NALSA) எதிர் இந்திய யூனியன் வழக்கிலும், கே.எஸ். புட்டசாமி மற்றும் நவ்தேஜ்சிங் ஜோகர் வழக்கிலும் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒருவரின் அடையாளம் என்பது என்ன என்று அத்தீர்ப்புகள் விளக்க மளித்தன. அவரிடம் உள்ள தனித்துவமான ஆற்றலைப் புரிந்து கொள்ளுதலும், வெளியி லிருந்து திணிக்கப்படும் கருத்தை அப்படியே ஏற்கலாமல் மறுக்கும் உரிமைகளும் தனிமனித அடையாளங்கள் என்று அத்தீர்ப்புகள் விளக்கின. ஒரு நாத்திகருக்கான அடையாளம், - மத நம்பிக்கைகளை சமூகம் கட்டமைத்த நம்பிக்கைகளை மறுப்பதாகும் என்பதை இத் தீர்ப்புகள் உறுதி செய்திருக்கின்றன.

எனவே, நாத்திக சிந்தனைகளைப் பரப்புரை செய்வது அடிப்படை உரிமை. என்றாலும், அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, பேச்சுரிமைக்கு சட்டப் பிரிவு 19(2) சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அங்கேதான் பிரச்சினையே உருவாகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 295(ஏ) பிரிவு, “திட்டமிட்ட உள்நோக்கத்தோடு ஒரு குடிமகனின் மத உணர்வைப் புண்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று கூறுகிறது. இந்தியாவில் மத நிந்தனைச் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட தண்டனைச் சட்டப் பிரிவு அமுலில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாத்தி கர்கள் நடத்திய ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தனர். உள்ளூர் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி நாத்திகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தடை செய்தது.  

இப்போது எழும் கேள்வி எந்த எல்லைக்குட்பட்டு நாத்திகப் பிரச்சாரம் செய்ய முடியும் என்பது தான்.

பொது ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துரிமைக்கு நேர்மையான கட்டுப்பாடுகளை விதிக்கும் 295(ஏ) பிரிவு செல்லத்தக்கதே என்று உச்சநீதிமன்றம் 1957ஆம் ஆண்டு ‘ராம்ஜிலால் மோடி எதிர் உ.பி. அரசு’ வழக்கில் தீர்ப்பளித்தது. ‘பொது ஒழுங்கு காப்பாற்றப்படும் நோக்கத் துக்காக’ என்ற சொற்றொடருக்கு உச்சநீதி மன்றம் அளித்த விளக்கம் என்ன? அதாவது, “நேரடியாக பொது ஒழுங்கை நிலைநாட்டு வதற்காக மட்டும் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்பது உண்மை. ஆனால் பொது ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது” என்றது அந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று 2016இல் வாதிட்ட சட்ட அறிஞர் கவுதம் பாட்டியா, கருத் துரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றார். கண்மூடித் தனமாக ‘பொது ஒழுங்கை சீர்குலைக்கிறது’ என்று கருத்துரிமைக்கு தடை போடலாமா என்ற கேள்விகள் எழுந்தன. 1960ஆம் ஆண்டு ராம்ஜிலால் மோடி வழக்கில் உச்சநீதிமன்றம் வேறு ஒரு வழக்கில் விளக்கங்களைத் தந்தது (பெத்தேகார் மத்திய சிறைக் கண்காணிப்பு அதிகாரி எதிர் ராம் மனோகர் லோகியா வழக்கு). கருத்துரிமைக்கான கட்டுப்பாடுகளையும் பொது ஒழுங்கையும் அப்படியே ரிமோட் கண்ட்ரோல் போல் தொடர்புபடுத்தி ராம்ஜிலால் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று விளக்கிய நீதிமன்றம், அப்படி விதிக்கப்பட்ட ‘நேர்மையான கட்டுப்பாடு’ பொது ஒழுங்கு நலனைக் காப்பாற்றும் இலக்கை எட்டக் கூடியதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பனையாக பொது ஒழுங்கு நலனைக் காரணம் காட்டி கருத்துரிமையை கட்டுப்படுத்தக் கூடாது என்பதே ராம்ஜிலால் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தந்த விளக்கம்.

ஒரு பேச்சுக்கும் பொது ஒழுங்கு சீர்குலைவுக்கும் நேரடியான தொடர்பு இருந்தால் மட்டுமே கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று 1989இல் நடந்த எஸ். ரெங்கராஜன் எதிர் பி. ஜெகவீ வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வு மேலும் தெளிவுபடுத்தியது. இதே தீர்ப்பை மேலும் கடுமையாக்கி 2011இல் உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு உடனடியாக சட்டம் ஒழுங்கைப் பாதிக்காத பேச்சுகளுக்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது (அரூப்புயான் எதிர் அசாம் அரசு வழக்கு). (சட்டம் ஒழுங்கு (Law and Order) என்பது வேறு; பொது ஒழுங்கு (Public Order) என்பது வேறு. பொது ஒழுங்கு என்பது ஒரு நாட்டின் நிர்வாக அமைப்பே சீர்குலைப்பது; கலவரத்துக்கு உள்ளாக்குவது என்பதாகும். ஆனால் சட்டம் ஒழுங்கையும் பொது ஒழுங்கையும் ஒன்றாக சேர்த்து காவல்துறையும்  அரசும் குழப்பி வருகின்றன.)

கருத்துரிமைக்காக உச்சநீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்புகளின் பின்னணியில் நாத்திகப் பிரச்சாரத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அண்மையில் பஞ்சாப் மாநில ஆட்சி தண்டனைச் சட்டத்தைத் திருத்தி, மத நூல்களான குருகிராந்த் சாகிப், கீதை, குர்ரான் மற்றும் பைபிளை புண்படும்படி பேசினால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத நூல்களின் கருத்துகளை ஏற்க மறுக்கும் நாத்திகர்களின் கருத்துரிமையை பறிக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.

பஞ்சாப் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் ‘தலித்’ சமூகத்தினர். சமூக ரீதியாக தங்களை ஒடுக்கி வரும் மதம் - மதச் சட்டங்களை அவர்கள் கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்கள். அம்பேத்கரே ‘மனுசாஸ்திரத்தை’ தீயிட்டுக் கொளுத்தினார். சமத்துவத்துக்காக மதங் களையும் மத நூல்களின் ஒடுக்குமுறை கருத்து களையும் எதிர்த்துப் போராடுகிற மக்களின் உரிமைகளை பறிக்கிறது இந்த சட்டத் திருத்தம். இதை எதிர்த்து வழக்கு வந்தால் இந்த சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் ஏற்காது; மட்டுமின்றி ஏற்கனவே ராம்ஜிலால் வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் மேலும் பல புதிய வெளிச்சங்களைத் தரும் வாய்ப்புகளும் உண்டு.

திருமணங்கள் மதங்களுக்கு தொடர் பில்லாதவைகளாக நடத்தப்பட வேண்டும் என்றும் மதச்சடங்குகளின்படி நடக்கும் திருமணங்களை ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது; அதற்குக் கூறிய காரணம் குடும்ப உறுப்பினர்களின் வாரிசு உரிமைகளில் சட்டப்படியான குழப்பங்களை இது உருவாக்கி விடும் என்பதுதான். ஆனாலும் 1954ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘சிறப்பு திருமணச் சட்டம்’ மதச் சடங்குகளை முற்றாக விலக்கும் திருமணங்களை அங்கீகரிக்கிறது.

அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டம் - கடவுள், மத நம்பிக்கைகளை மறுக்கும் நாத்திக கருத்துகளை பரப்புவதையும் நாத்திகரான ஒரு குடிமகனின் / குடிமகளின் உரிமையை எப்படி மறுக்க முடியும்? நாத்திகப் பிரச்சாரத்துக்கான உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். எந்தவொரு படிவத்திலும் ‘மதமற்றவர்’ என்று குறிப்பிடும் உரிமை குடிமக்களுக்கு உண்டு. பஞ்சாப் அரசு கொண்டு வந்துள்ள சட்டதிருத்தத்தை மட்டுமல்ல; 295(ஏ) தண்டனைச் சட்டப் பிரிவையும் சேர்த்து நீக்கப்பட வேண்டும். இந்த பிரிவு முறை கேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார், அம்பேத்கர், பகத்சிங், லோகியா போன்ற தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற மத - மறுப்பு மரபை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

(‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ செப்.28, 2018 இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். தமிழில் : இரா)

Pin It