இந்து மத வேத பண்பாட்டின் சடங்குகளின் முக்கியமான நிகழ்வு இறப்பு (இறுதி) சடங்கு. இதற்கு மாறாக அறிவியல் பண்பாட்டிற்கு தன்னை ஆட்படுத்திக்கொண்ட செலக்கரிச்சல் முருகேசனிடம் ஓர் நேர்காணல்.

என்னுடைய பெயர் முருகேசன்.அப்பா பழனிச்சாமி அம்மா காளியம்மாள் அக்கா இராஜம்மாள். நான் கோவை மாவட்டம் சூலூர் அருகில் செலக்கரிச்சலில் வசித்து வருகிறேன். என்னுடைய அம்மா 30.01.2016 அன்று காலமானார். அம்மா இறந்து ஒரு மணி நேரத்தில் சூலூர் அருகில் சமத்துவ மின்மயானத்தில் நானும் எனது தந்தையும் எனது நண்பர்களும் சேர்ந்து உடலை தகனம் செய்தோம். எந்த ஒரு இந்துமத சடங்குகளும் இல்லாமல் செய்தோம்.

எந்த ஒரு சடங்குகளும் இல்லாமல் தகனம் செய்ய காரணம் என்ன?

உயிரோடு இருக்கிறபோது வேண்டிய மருத்துவச் செலவுகளும், உதவிகளும் செய்துவிட்டு அவர்கள் இறந்ததற்குப் பிறகு மூடப்பழக்கவழக்கங்களை நம்பி, எந்த ஒரு சடங்குகளும் செய்யாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். உயிரோடு இருக்கும்போது என்னால் முடிந்த அளவு மருத்துவம் பார்த்தேன். இறந்ததற்குப் பிறகு செய்கின்ற சடங்குகள் எல்லாம் இடைப்பட்ட காலத்தில் புகுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியும்.

அப்படிச் செய்வதினால் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. அப்படிச் செய்வதினால் பொருள் விரயம், காலம் விரயம் செலவாகிறது. ஏற்கனவே நம்மளுடைய மக்கள் பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் சமூகத்தில் கேவலமான நிலைமையில்தான் இருக்கிறார்கள். மேற்கொண்டு நாமும் செலவு செய்து உறவினர்களையும் தேவையில்லாத சீர், சடங்கு, செய்முறை செலவுகள் செய்ய வைத்து அவர்களையும் சிரமப்படுத்த நான் விரும்பவில்லை.

இந்துமதச் சடங்குகளில் முக்கியமான வேதம் கருடபுராணம். $விஷ்ணு என்கிற கடவுளே கூறுகிறார்.ஒரு ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு கருமாதி, திவசம் செய்யவேண்டியது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால் அவர்களுக்கு பிரேத ஜென்மம் வந்துவிடும் என்று கூறுகிறார்கள். இதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

வீட்டில் சிறு காரியங்கள் வந்தால் கூட தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் செலவு செய்துவிடும் பாமரமக்கள் இது போன்ற போலிகளுக்கு கடன் வாங்கிக்கூட காரியம் செய்வதை நாம் பார்க்கின்றோம்.

இந்துமத மூடப்பழக்க வழக்கங்களை நான் நம்பாததற்கு காரணம், என்னுடைய அப்பா (தாசர்குலம்) காரமடைக்கு பந்தசேவை எடுத்துக்கொண்டு போவதும், வருவதுமாக இருப்பார். நானும் அவருடன் சேர்ந்து 12 வயதுவரை கோவிலுக்குப் போவேன். நான் என்னுடைய அப்பாவிடம் சாமி எங்கே என்று கேட்டபோது எங்க அப்பா காரமடையில் இருக்கிறானுன்னு சொன்னார். காரமடையில் போய் எங்கே சாமின்னு கேட்டதற்கு கோவில் கர்ப்பகிரகத்தைக் காட்டினார்.

நம்ம அங்க பக்கத்துல போனாலே நம்மளைத் தள்ளி விட்டுடுவாங்க, அப்படியிருந்தும் எங்க அப்பாவிடம் எங்கே சாமின்னு கேட்டதற்கு அங்க பாருன்னு சொல்லி கற்சிலையைக் காட்டினாங்க. அப்போதுதான் நான் நினைத்தேன். இவர்கள் அனைவரும் ஒரு மாயையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று.

நான் அப்பாவிடம் கேட்டேன் நம்ம கர்ப்பகிரகத்துக்கு உள்ளே போகக்கூடாதான்னு கேட்டேன் அதற்கு அப்பா  புரோகிதர்களைத் தவிர வேற யாரும் உள்ளே போகக்கூடாதுன்னு சொன்னார். இப்பொழுது பார்த்தீர்களானால் காரமடையாகட்டும், பழனியாகட்டும், திருச்செந்தூராகட்டும், மேல்மருவத்தூராகட்டும் எங்கேயும் கடவுள் இல்லை என்பதை உணர்ந்தேன். இது மட்டுமில்லாமல் மற்ற மதங்களிலும் கடவுளை யாரும் பார்த்ததுகூடக் கிடையாது.

நம்முடைய ஜனங்கள் அனுபவிக்கின்ற மூடநம்பிக்கைகள் அதனால் ஏற்படுகின்ற இழப்புகள் இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தெளிவாகத் தெரிந்து கொண்டேன். கடவுள் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. என்னுடைய வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும்,உறவினர்கள் எல்லாருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். அப்படிக் கடவுள் நம்பிக்கையோடு இருப்பதினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. கடவுள் இல்லை என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து அது உண்மையும் கூட.

எப்படியென்றால் கோவிலுக்கு போறவங்களே இறந்துபோவதும்,கோவில்களில் மிதிபட்டு இறந்துபோவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கேவலமான முறையில் கோவில்களில் போய்த் திருடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

கோவில் வாசல்களில் முடவர்களும்,நோய்வாய்ப்பட்டவர்களும்,பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் அதே இடத்திற்கு மிகவும் பெரிய செல்வந்தர்களும் ஏன் மருத்துவர்களும்கூட வருகிறார்கள். இவர்கள் அனைவருமே ஒருவிதமான நம்பிக்கையில்தான் கோவில்களுக்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

உண்மையாகவே கடவுள் இருந்து அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்றால், ஒருவன் பணக்காரனாகவும், ஒருவரை பிச்சைக்காரனாகவும் ஒருவனை ஏழ்மையானவனாகவும் படைத்திருப்பாரா? இல்லை ஒருவனை கீழ்ஜாதியாகவும், ஒருவனை மேல்ஜாதியாகவும், ஒரு சிலரைத் தீண்டத்தகாத சாதியாகவும் படைக்கலாமா? ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை ஏற்றத் தாழ்வுடன் படைத்து வாழ விடலாமா?

இப்படிப் படைப்பது யோக்கியமான படைப்பா? இது சரியானதாக இருக்குமா? இவற்றையெல்லாம் பார்க்கும்போது கடவுள் இருக்கிறாரா என்று கேள்விக்குறியாக இருக்கிறது.

இப்படி இருக்கும்போது விஷ்ணு என்கிற கடவுள் கருடபுராணத்தில் ஆணுக்கோ (அ) பெண்ணுக்கோ கருமாதி, திவசம் செய்யாவிட்டால் பிரேத ஜென்மம் எடுப்பார்கள் என்று சொல்வது எல்லாம் சுத்தப்பொய் இது ஒரு மூடநம்பிக்கையான விஷயம்தான்.

இப்பொழுது 2000 பேர் தேவைப்படுகிற இடத்திற்கு 5 லட்சம்பேர் தேர்வு எழுதுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் இடம் கிடைக்கிறது. தேர்வு எழுதுகின்ற எல்லாருமே அவர்களுடைய மதத்தின் அடிப்படையில்தான் கடவுளை நம்பி, கடவுளிடம் சென்று  பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் போகிறார்கள். இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் எல்லாருமே அப்படித்தான் போகிறார்கள் ஆனாலும் அவர்களில் எல்லோருக்குமே இடம் கிடைப்பது இல்லை.

அப்படி இருக்கும்போது அவர்கள் கேள்வி கேட்கவேண்டும்.இளைஞர்களாக இருக்கிற அவர்கள் கேள்விகளை எழுப்பவேண்டும். எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் மூடத்தனமாக ஆட்டு மந்தைகளைப்போல பின் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். யாராவது ஒருவர் முன்வந்து கேள்விகளை எழுப்பவேண்டும்.மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்கவேண்டும்.

தேவையில்லாத ஒரு விஷயத்தைச் செய்வதால் பொருளும், நேரமும் வீணாகும் என்கிற ஒரே காரணத்தினால்தான் நான் எங்களுடைய பகுதியில் மின்மயானம் என்பதையே நான் தான் முதலில் ஆரம்பித்து வைத்துள்ளேன். இது ஒரு பெரிய புரட்சி எதுவும் இல்லை. இதைப் பார்த்து நாலுபேர் செய்வார்கள் என்கிற நம்பிக்கைதான்.

உங்களுடைய அம்மா இறந்ததற்கு எந்த ஒரு சடங்குகளையும் செய்யவில்லை.கடவுள் நம்பிக்கையும் இல்லையெனில் நீங்கள் ஏதாவது இயக்கத்தில் இருக்கிறீர்களா?

நான் எந்த ஒரு இயக்கத்துலேயும் இல்லை. நான் இப்படிச் செய்ததற்கு காரணம் பெரியாரின் சிந்தனைகள்தான். நான் ஒரு பனிரெண்டு வயதிலிருந்தே நான் உணர்ந்து இருக்கிறேன். பெரியார் என்று தெரியாததற்கு முன்பே இந்த மாதிரியான கேள்விகள் எனக்கு இருந்தது .16 வயதுக்குப் பிறகு நான் இந்தக் கொள்கையில் தீவிரமாக இருக்கிறேன். ஓரளவிற்கு இந்தச் சமூக எதிர்ப்பைத் தாண்டி என் அளவிற்கு நான் கோவிலுக்குப்போவதில்லை. என்னைச் சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சாரமாக செய்து கொண்டு இருக்கிறேன். நான் என்னுடைய வாழ்க்கையை ஒரு பிரச்சாரமாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அப்படித்தான் நடத்திக்கொண்டு இருக்கிறேன். பெரியாரும்,பெரியாரின் சிந்தனைகளும் தான் என்னை வழிநடத்துகின்றன.

என் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் எல்லாம் எப்படியோ, அதே போலத்தான் தந்தை பெரியாரையும் என்னுடைய வீட்டில் ஒருவராக நான் நினைக்கிறேன். இனிமேலும்  பெரியாரின் சிந்தனையில்தான் இயன்ற வரைக்கும் இருப்பேன்.

நான் எந்த ஒரு இயக்கத்திலேயும் இல்லை ஆனாலும் அம்பேத்கார், பெரியாரின் புத்தகங்களைப் படித்து இருக்கிறேன். நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இயக்கத் தோழர்களை நானே தேடிப்போய் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவர்களிடம் கருத்துக்களை கேட்டுக்கொண்டேன். பொதுவாக பெரியாரின் சிந்தனை உள்ளவர்களின் கருத்து ஒரே மாதிரிதான் இருக்கிறது. எந்த இரு இடத்துலேயும் மாறுபடுவது கிடையாது.

எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் ஒரு தீர்க்கமான முடிவாகத்தான் அமைகின்றது. இந்த விஷயங்களை எல்லாம் நான் பார்க்கும்போது நான் கடந்து வருகின்ற பாதை மிகவும் சரியானதாக இருக்கிறது என்று உணர்கிறேன். ஆதாரம் இல்லாமல் சொல்கின்ற எந்த ஒரு விஷயத்தையும் நான் நம்புகிறதே இல்லை.நான் தைரியமாக இருக்கிறேன்.எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

என்னுடைய உடலையும், தானம் செய்யலாம் என்று இருக்கிறேன். நண்பர்களின் உதவியோடு அதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டு அதன்படி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

கருமாதி,திவசம் செய்வதால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து மறுபிறப்பு எடுப்பார்கள் என்று சொல்கிறார்கள் இதுபற்றி உங்களுடைய கருத்து?

இதைப்பற்றி தெளிவாகச் சொல்லவேண்டுமானால் மக்களுக்கு புரியும்படி தந்தைப் பெரியார் அவர்களே ஒரு சிறு கட்டுரையில் கூறுகிறார்.

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி 3 விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

1.இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டுதான் இந்த சரீரத்தை விடுவதாக.

2.இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்த உடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ?

3.இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்ஷத்திலோ,நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்?எதை உத்தேசித்துத் திதி கொடுப்பது?

இது தவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும் சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. சரீரம், உருவம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச்சேரும். அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்? (பகுத்தறிவு, அக்டோபர் - 1935)

தாய் இறந்தால் தலைமகன்,தந்தை இறந்தால் இளையமகனும் மொட்டை அடிக்கிறார்களே இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தாய்தான் உலகத்தின் ஆதாரம். பெருமாளின் மனைவியைக் கூட தாயார், தாயார் என்றுதான் மரியாதையாக அழைப்பவர்கள் நாம். அப்படிப்பட்டவள் தாய். இன்றும் பூமியில் எக்கச்செக்க அழுக்குகள் இருந்தாலும் ஒவ்வொரு தாய் உருவாகும் பொழுதும், மீண்டும், மீண்டும் பூமி புதிதாகிக் கொண்டு வருகிறது. பூமி அப்பேர்ப்பட்ட தாயை இழப்பதே எவ்வளவு பெரிய துன்பம்?அந்தத் துன்பத்தைத் தனித்துக் கொள்வதற்காக அந்தத் தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன். அப்போது புரோகிதன் சமஸ்கிருதத்தில் புரியாத வரிகளில் சொல்கிறான். எங்க அம்மா இராத்திரி வேளைகளில் யாரிடம் படுத்துக்கொண்டு என்னை பெற்றாளோ தெரியாது. ஆனால் நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன்.

அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன் என்பதுதான். அந்த மந்திரத்தின் அர்த்தம். உன் தாயை உன்கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான் அதையும் உன்னை வைத்தே மறுபடியும் உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம். இப்படிப்பட்டதுதான் இறுதிச்சடங்கு.

(பக்கம் 150 இந்துமதம் எங்கே போகிறது (2-ம் பாகம்)சடங்குகளின் கதை. இராமனுஷ தாத்தாச்சாரியார் எழுதிய நூலின் ஆதாரம்)

இப்படி ஒரு இழிவான சடங்குகளை நம் மக்கள் தொடர்ந்து என்ன அர்த்தம் என்று தெரியாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒருவராவது புரோகிதரிடம் மந்திரத்தின் அர்த்தம் என்னவென்று கேட்டு அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேட்டிருப்பார்களா?அப்படிக் கேட்டிருந்தால் இந்த மாதிரியான (மொட்டை) காரியத்தை செய்யமாட்டார்கள். இதனை நான் உணர்ந்தேன்.அதனால் நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை.

இந்த மாதிரியான சடங்குகளைச் செய்யாமல் இருந்தால் பின்வரும் சந்ததிகளின் வாழ்க்கைநிலை பாவம் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்லி பயத்தை பார்ப்பனர்கள் மக்களிடம் புகுத்திவிட்டார்கள். இந்த பயத்தின் காரணமாக மக்கள் மீண்டுவரத் தயங்குகிறார்கள். பணம் செலவானாலும் பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். இது பார்ப்பனர்களுக்கு இலாபமாக அமைகிறது.

Pin It