ambedkar 600இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானபோது இருந்த மக்கள் தொகை அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழல் இன்று முற்றிலும் மாறுபட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான பின்பு 1956-இல் மொழி வழி மாநிலங்கள் அமைந்தன. தற்போது இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களும் உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒரு நாட்டினுடைய பிரதமர் நாடாளுமன்றத்தின் வழியாக முடக்கி வைக்க முடியும் என்பதை 1975-இல் இந்திராகாந்தி அம்மையாரால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை மெய்ப்பித்தது. மீண்டும் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா ஆட்சி நெருக்கடி காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களைத் திருத்தி மீண்டும் ஒரு நெருக்கடிகாலச் சூழல் இந்தியாவிற்கு ஏற்படக்கூடாது என்ற நிலையை உருவாக்கியது.

இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பல கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சியே, புது தில்லியின் நிருவாகத்திலிருந்த உயர் சாதியினரால் நெருக்கடி காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு எடுத்துவரவில்லை.

அண்ணல் அம்பேத்கர், “இந்திய அரசமைப்புச் சட்டமானது காலத்தின் சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப ஒற்றையாட்சி முறையாகவும் கூட்டாட்சி முறையாகவும் இருக்கும்” என்றும், “சாதாரண காலங்களில் கூட்டாட்சி முறையாகவும் போர்க்காலங்களில் ஒற்றையாட்சி முறை யாகவும் இயங்கிடும் வண்ணம் அரசமைப்புச் சட்டமானது வடிவமைக்கப் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் ஓர் ஆணையைப் பிறப்பித்தால் மறுகணமே மொத்த சூழ்நிலையும் மாறி நாடே மத்திய ஆட்சி முறைக்கு மாறிவிடும்” என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், 1990-களுக்குப் பிறகு பொருளாதாரம் நிருவாகம், நீதி போன்ற துறைகளில் ஏற்பட்ட அடிப்படை யான தலைகீழ் மாற்றங்களை அரசமைப்புச் சட்ட அவையில் பங்குபெற்றோர் கணிக்கக்கூட வாய்ப்பில் லாமல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

நிருவாகத் துறையைப் பற்றி அரசமைப்புச் சட்ட அவையில் பேசிய உறுப்பினர் மகபுப் அலி பெய்க் அவர்கள், “மத்தியில் ஒரேயடியாக அதிகாரங்கள் குவிக்கப்படுவதால் கூட்டாட்சி முறை மத்திய ஆட்சி முறையாக மாற்றப்படும். இதன் விளைவாக சர்வாதிகார ஆட்சி ஏற்படும்” எனக் கடுமையாக எதிர்த்தார்.

இவரின் கணிப்பு தற்போதைய மோடி ஆட்சியில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் முழுமையாக மெய்ப்பித்து விட்டது. அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு 1951-லேயே தள்ளப்பட்டார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வை மேற்கொண்ட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர் திருபுர்தமன் சிங் எழுதிய, ‘அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின்போது புயலைக் கிளப்பிய 16 நாட்கள்’ ( Sixteen Stormy Days - The Story of the First Amendment to the Constitution of India by Tripurdaman Singh, Penguin Random House, India, 2020) என்ற நூல் இதுவரை வெளி வராப் பல உண்மைகளை வைக்கிறது.

அந் நூலில் 1920-களில் இருந்து பின்பற்றப்பட்ட சமூகநீதி எவ்வாறு குலைக்கப்பட்டது என்பதைப் பல புள்ளி விவரங்களோடு சிங் விளக்கியுள்ளார். சென்னை மாகாணத்தில் 1920-லிருந்து 1930 வரை பின்பற்றப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கை அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்களைப் புறந்தள்ளியது என்று குறிப்பிடுகிறார்.

குறிப்பாக “இடஒதுக்கீடு என்கிற ஒரு கருவி பின் தங்கியோருக்கும் புறந்தள்ளப்பட்ட வகுப்பினருக்கும் மாநில நிருவாகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப் பிலும் அதிக எண்ணிக்கையைப் பெற்றுத்தந்த ஒரு முற்போக் கான அரசியல்” (Reservation as an administrative tool and radical politics based on securing great representation for backward class and marginalized group in the state appratus, as well as great push for De-brahminizatinon, thus formed an enduring legacy in Tamil politics, p.44) எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், இட ஒதுக்கீடு கொள்கையை முழு அளவில் ஏற்றுக்கொள்ள மறுத்த காங்கிரசுத் தலைமையும் அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திற்கு ஆதரவாகத் தமிழ் மாகாணத்திலிருந்து செயல்பட வேண்டிய அரசியல் அழுத்தம் ஏற்பட்டது.

சான்றாக, சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்ட போது, மொத்த இடங்களில் 77 பார்ப்பனர்களுக்கும், 224 பார்ப்பனர் அல்லாதவருக்கும், 51 கிறித்தவர்களுக்கும், 26 இசுலாமியர்களுக்கும், 26 இடங்கள் தாழ்த்தப்பட்ட பிரி வினருக்கும் அளிக்கப்பட்டன.

இந்த இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்படாத சூழலில் மொத்த இடங்களில் 249 பார்ப்பனர்களுக்கும், 112 பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும், 22 கிறித்தவர்களுக்கும், 3 இசுலாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டப் பிரிவினருக்கு ஒரு இடம் கூட இல்லாத நிலையில் இருந்தது.

எனவே, இடஒதுக்கீடு முறையை நீதிமன்றம் எவ்வித இடையுறுகளின்றி நடைமுறைபடுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என அன்றைய தமிழ்நாடு அரசு வாதிட்டது.

“1950-இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மாதங்களிலேயே பீகார் உத்திரபிரதேச நிலச்சீர்த்தச் சட்டங்கள் செல்லுபடியாகவும், சென்னை மாகாணத்தில் இடஒதுக்கீடு ஆணை மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்காகவும் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்” என நேருவின் அமைச்சரவையில் இருந்த பின்னாளில் ஜனசங்கத்தை உருவாக்கிய ஷியாமா பிரசாத் முகர்ஜி உட்பட பலர் கடுமையான முறையில் எதிர்த் தார்கள்.

இந்த இட ஒதுக்கீடு ஆணை பின்பற்றபட வேண்டும் என அன்றைய சென்னை மாகாண காங்கிரசுக் கட்சியின் முதலமைச்சரான குமாரசாமி ராஜா பிரதமர் நேருவிற்கு ஒரு மடல் எழுதினார்.

அம் மடலில் இட ஒதுக்கீடு ஆணையைப் பின்பற்ற வேண்டிய சூழல் சென்னை மாகாணத்தில் இருக்கிறது என்பதையும் வலியுறுத்தி குறிப்பிட்டிருந்தார். அச் சூழலில் நேரு அந்த மடலைப் புறக்கணித்தார். பின்பு தமிழ்நாட்டில் வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் பின் தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் நடத்தினர்.

இந்தப் போராட்டங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசுச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மத்திய அரசு தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தில் திமுக உட்பட பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் நடத்திய பெரும் ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான வர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில் தந்தை பெரியார், “சென்னை மாகாண உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அளித்த தீர்ப்பைப் போன்றுதான் உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கும். இதற்கு ஒரே வழி அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதுதான்” என்று உரை நிகழ்த்தினார்.

“அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவில்லை என்றால் மீண்டும் தனி திராவிட நாடு வலியுறுத்தப்படும். திராவிட நாட்டில் தென்னக மாநில மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படும்” என்று வலியுறுத்தினார்.

இந்தப் பேச்சை வெளியிட்டு அன்றைய Times of India நாளேடு அலறியது. இந்த நிகழ்விற்குப் பிறகுதான் நேரு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன் வந்தார் என சிங் குறிப்பிடுகிறார்.

அண்மையில் வெளிவந்த ‘இந்தியா மறந்த வழக்குகள்’ (The cases that india forgot) என்ற நூலில் சிந்தன் சந்தரசூட் என்ற ஆய்வாளர் இதுவரை நாம் அறியாத பல தகவல் களை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர். ஆக்ஸ்போர்ட் அமெரிக்க யேல் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்நூலில் அரசியல், பாலியல், வன்கொடுமை, மதம், நாட்டுப் பாதுகாப்பு ஆகிய நான்கு தலைப்புகளில் நீதிமன்றங்களில் நடந்து முடிந்த 10 வழக்குகள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.

இடஒதுக்கீடு ஆணை பற்றிய வழக்கை ‘மதம்’ என்ற தலைப்பின்கீழ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் முடிவில் நான்கு கருத்துகள் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன. இந்த வழக்குகளில் விண்ணப்பத்தாரர்களில் ஒருவரான திருமதி சம்பகம் துரைராசன் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்.

எனினும், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது அவரின் வேண்டுகோளை ஏற்கச் சற்றுத் தயங்கிய உச்சநீதிமன்றம் பின்பு தயக்கத்தைப் புறந்தள்ளி அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இவ்வழக்கில் தனது உரிமையைக்கோர வாய்ப்பில்லாததால், தான் சார்ந்த பிராமண சமூகத்தின் நலனை வலியுறுத்து வதற்காகவே இந்த வழக்கை சம்பகம் துரைராசன் பதிவு செய்தார்.

தற்போது நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வழக்கைப் பதிவு செய்யாவிட்டாலும் அவர் களின் சார்பில் பொதுநல வழக்கு நீதிமன்றங்களில் பதிவு செய்யும் முறை 1979-க்குப் பிறகுதான் வந்தது. அதற்கு முன்பு அரசாணையாலோ அல்லது வேறு நிறுவனங் களால் பாதிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் வழக்கை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் பதிவு செய்யும் முறை இருந்தது.

இந் நூலாசிரியர் சிந்தன் சந்திரசூட் ஆய்வாளர் திருபுர்தமன் சிங் போன்று இடஒதுக்கீடு ஆணையின் சமூக அரசியல் விளைவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. சட்டரீதியான கூறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தப் பத்து வழக்குகளை ஆய்வு செய்துள்ளார். எனவேதான் சம்பகம் துரைராசன் வழக்கு பொதுநல வழக்குகளுக்கு முன்னோடி எனக் குறிப்பிட் டுள்ளார்.

முதலில் சம்பகம் துரைராசன் வழக்கை ஏற்றுக் கொள்ளத் தயங்கிய உச்சநீதிமன்றம் பின்பு ஏன் ஏற்றுக் கொண்டது என்றால் வழக்காடியவர் அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர். அரசமைப்புச் சட்ட அவையில் அமைந்த 6 குழுக்களில் இருந்தவர். இவ் வழக்கினை உச்ச நீதி மன்றத்தில் தயக்கத்தோடு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்.

இதிலிருந்து பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம்; அவர்கள் எடுப்பதுதான் நிருவாக முடிவு; ஏற்றுக்கொள்வதுதான் நீதித்துறையின் கடமை என்ற ஒரு நிலை அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது.

இந்த வழக்கில் அண்ணல் அம்பேத்கர் எவ்வளவு சிறந்த முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்தார் எனக் குறிப்புகள் இந்நூலில் உள்ளன. அண்ணல் அம்பேத்கர், “உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொண்டு விளக்கம் அளித்துள்ளது” என வலுவான விவாதத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

“அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் முன்னாள் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்ட விதிகளைப் பற்றி அளித்த விளக்கமும் முறையும் முற்றிலும் தவறானதாகும். நான் நீதிமன்றத்தில் வழக்குகளை எடுத்து வாதிடும்போது தலைமை தாங்குகிற நீதிபதியிடம் அழுத்தமான முறையில் என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்வேன்.

வழங்குகிற தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், அந்தத் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. ஒரு நீதிபதி வழங்குகிற தீர்ப்பு தவறானது என்று சொல்கிற கருத்துரிமை ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் உண்டு. அந்தக் கருத்துரிமையை நான் விட்டுத்தரவே முடியாது” என அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு ஆணைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டார்.

நேரு அரசியல் கருத்தை முன்மொழிந்தார் என்றால் அம்பேத்கர் சட்டக் கருத்தை முன்னிறுத்தினார் (If Ambedkar presented the legal case, Nehru presented the political case). இந்நூலாசிரியர் சிந்தன் சந்திரசூட் Times of India நாளேட்டில் வெளி வந்த பின்வரும் செய்தியை வெளியிட்டு, “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் அம்பேத்கரின் உரைகள் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்தது. அம்பேத்கரின் உரை நாடாளுமன்றம் கண்ட விவாதங்களில் மிகமிகச் சிறந்த உரை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று புதிய புதிய தரவுகளை இந் நூலாசிரியர் அளித்துள்ளார். ஒன்று மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்க மறுப்பார்கள்; முடிந்த அளவிற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் கல்வி வேலை வாயப்புகளை அடித்து ஒடுக்குவார்கள் என்பதை இந்த வழக்குகளின் உண்மை நமக்குப் புலப்படுத்துகிறது.

மேலும், 2014-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மோடி தனது அதிகாரத்தை வைத்து நீதித்துறை, ஊடகத்துறை, அரசியல் தலைவர்களையும்; நடுவண் அரசின் வருமான வரித் துறை, புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை போன்றவற்றை ஆயுதங்களாக மாற்றி அச்சுறுத்துகிற நிலைமை இன்றைய ஜனநாயகத்தின் நடைமுறையாகவே மாறிவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீர் மாநிலத் திற்கு அளிக்கப்பட்ட 370ஆவது பிரிவின்படி அச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் காஷ்மீர் மாநிலச் சட்டமன்றத்தில் திருத்தத்திற்கு ஆதர வாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், உண்மையில் நடந்தது என்ன? இந்த வழக்கை இதுவரை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமல் காலந்தாழ்த்தி வருகிறது. 29 மாநிலங்கள் 28 மாநிலங்களாக மாறிவிட்டன.

காஷ்மீர் ஜம்மு, லடாக் என்று ஒன்றிய அரசின் பிரதேசங்களாக மாற்றப்பட்டு உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. மத ரீதியாகப் பிளவுபடுகிற நிலையைத்தான் இத்தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. இதை உச்சநீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது.

அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் புசண் சென்னை தில்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் அஜித் குமார் ஷா அவர்களும் “உச்ச நீதிமன்றத்தின் நம்பிக்கைத்தன்மை வீழ்ந்து வருகிறது” எனக் குறிப்பிட் டுள்ளார்கள். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், “உச்ச நீதிமன்றத்தில் உயர் சாதியினரின் செல்வாக்குப் பெருகி வருகிறது. அது நாட்டின் நலனிற்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உச்சநீதிமன்றத்தில் 98 விழுக்காடு நீதி யரசர்கள் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். 1951-இல் அண்ணல் அம்பேத்கர் போன்று நாடாளுமன்றத்திலேயே “உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் தவறாக இருந்தால் அவற்றை மதிக்க வேண்டியதில்லை” எனக் கூறுகிற ஆளுமையும் வீரமும் இன்று பல சட்ட வல்லுநர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனக் கூறி உயர் சாதி வகுப்பினர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் சில மாநில அரசுகள் வழக்குகளைப் பதிந்தும் அதற்குத் தடை விதிக்காமல் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் உடனடியாக இச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முற்படுகிற சூழ்நிலையை உச்சநீதிமன்றம் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களும், உயர்நீதிமன்றங்களும், இந்திய அளவில் உச்சநீதிமன்றமும் உள்ளன. ஆனால், உச்ச நீதிமன்றம்தான் அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை ஆய்வு செய்து சட்டப்படிச் சரியானதா? தவறானதா? எனத் தீர்ப்பளிக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கடமைகளைச் சாதி, மதம் கடந்து நடுநிலையோடு தீர்ப்புகளை வழங்குகிறார்களா? என்ற ஐயம் அண்மைக்காலமாக எல்லோரிடத்திலும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் உயர் சாதி, உயர் வர்க்க நலனிற்காகவே செயல் படுத்தப்படுகிற சூழல் அரசியல், மதவாத அரசியல் அழுத்தத்தால் நிலைபெற்று வருகிறது. மேலும், 2020 பிப்ரவரி மாதம் வரை 3.65 கோடி வழக்குகள் நீதிமன்றங் களில் தீர்ப்புகளுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டுள்ளன.

2020 ஆகத்து மாதத் தரவுகளின்படி உச்சநீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 63,000. மேற்கண்ட வழக்குகளின் தரவுகள் நீதி மன்றங்கள் சமூகநீதியைப் புறந்தள்ளுகின்றன என்பதையே சுட்டுகின்றன.

இத்தகைய நிலை மாற, சமூக நீதி அனைத்துப் பிரிவினருக்கும் கிட்டிட, உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லையை மறுவரையறை செய்யவும், இந்தியா முழுவதும் நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்று வதற்கும் ஏதுவாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

- குட்டுவன்

Pin It