thepresidentialyears book copy1950-க்குப் பிறகு இந்தியாவில் 17 குடியரசுத் தலைவர்கள் பணியாற்றி உள்ளனர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல தலைவர்களும் அறிஞர் களும் இருந்தபோதிலும் ஒன்றிய அரசிற்கு ஒத்துப் போகிறவர்கள்தான் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர் என்பது உண்மை.

முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்தும், நீலம் சஞ்சீவரெட்டியும் இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.

நீலம் சஞ்சீவரெட்டி 1969ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரசின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1969இல் காங்கிரசில் பிளவு ஏற்பட்டதன் காரணமாக, காங்கிரசின் அதிகாரப்புர்வ வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை இந்திரா காந்தி நாடினார்.

பிளவுபட்ட காங்கிரசின் ஒரு பகுதியினரும் எதிர்க்கட்சியினரும் ஒன்றாக இணைந்து வாக்களித்ததனால் வி.வி.கிரி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிரதமர் இந்திரா காந்தியின் ‘ஆமாம் சாமி’யாக சஞ்சீவ ரெட்டி இருக்கமாட்டார் என்பதே அவர் தோற் கடிக்கப்பட்டதற்குக் காரணமாகும்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களில் கருத்து வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அதிகார எல்லைக்குள் செயல்பட்டு, சிறந்த குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு. கே.ஆர். நாராயணன். வாஜ்பாய் அரசு சில மாநில அரசுகளைக் கலைப்பதற்குக் குயடிரசுத் தலைவரிடம் ஒப்புதலைக் கேட்டபோது அந்தக் கோப்பினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த ஒன்றிய அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் கடிதங்களைக் கமுக்க மாகக் காவல் துறையினர் கண்காணிக்கும் வாய்ப்பை அளித்த அஞ்சல் சட்டத்தை அன்றையக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமனும், பிரணாப் முகர்ஜியும் காங்கிரசாலும் காங்கிரசுக் கூட்டணிக் கட்சிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால், இருவரும் ஓய்வுபெற்ற பிறகு பாஜக பக்கம் சாய்ந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த பிரணாப் முகர்ஜி நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கே சென்று விழாவில் பங்கேற்றது பலருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாக்பூர் சென்ற பிறகுதான் பிரணாப் முகர்ஜிக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து சந்தர்ப்பவாத அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பதவி வேட்டையாடுவதில் வல்லவர்.

1966இல், மேற்கு வங்கத்தில், காங்கிரசிலிருந்து பிரிந்து ‘வங்கக் காங்கிரசு’ என்ற ஒரு மாநிலக் கட்சியைத் தொடங்கியவர்களில் பிரணாப் முகர்ஜி முதன்மையானவர். இக் கட்சியின் சார்பில் 1970இல் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர், பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் ஆகியோருடன் கலந்துகொண்டு மாநில உரிமைகளுக்காக முழக்கமிட்டவர்தான் பிரணாப் முகர்ஜி.

இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு தன்னை பிரதமராக காங்கிரசு முன்மொழிய வேண்டும் என உள்குத்து வேலைகளைச் செய்து அவை பலிக்காமல் போகவே 1986இல் ‘தேசிய சோசலிச காங்கிரசு’ என்ற கட்சியைத் தொடங்கி 1989 வரை நடத்தினார்.

இராஜிவ் காந்தி பிரதமராக இருந்த நேரத்தில் பிராணப் முகர்ஜியை ஒதுக்கியே வைத்திருந்தார். இராஜிவ் மறைவுக்குப் பிறகு 1991இல் ஒன்றிய அரசின் திட்டக் குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

2004இல் சோனியா காந்தி தலைமையில் காங்கிரசு வெற்றிபெற்றபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்தது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். பின்பு இதே அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.

இவ்வாறு பல கட்சிகள் அமைத்து பல அமைச்சரவையில் இடம்பெற்ற இவருக்குப் பிரதமராகும் கனவு மட்டும் பலிக்கவில்லை. இருமுறை மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றதையும் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பிராணப் முகர்ஜியின் மறைவிற்குப் பிறகு, 2021இல் அவர் எழுதிய ‘குடியரசுத் தலைவரின் ஆண்டுகள் 2012-2017’ (The Presidential Years 2012-2017) என்ற நூல் வெளிவந்துள்ளது.

1967-க்குப் பிறகு உருவான தமிழ் அரசியலும் திராவிடக் கட்சிகளுடைய ஆட்சிகளும்தான் இந்தியா இலங்கை உறவில் செல்வாக்கைச் செலுத்தின. பொதுவான இன பண்பாட்டு உறவினைக் கொண்டிருந்த தமிழ்நாடும், வட பகுதியில் இருந்த இலங்கையும் தமிழீழக் கொள்கை வலிமை பெறுவதற்குப் பொதுவான காரணங்களாக அமைந்தன.

ஆனால், இந்நூலில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா காட்டிய அக்கறை - குறிப்பாக, பிரதமர் இந்திரா காந்தி ஈழப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முற்பட்ட நடவடிக்கைகள் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளன.

“அதிமுகவும், திமுகவும் மற்றும் சிறிய கட்சிகளும் தமிழக மக்களினுடைய ஆதரவைப் பெறுவதற்காகவே இப்பிரச்சனையை ஆதரித்தார்கள்”  எனக் குறிப்பிடுகிறார்.

“1995ஆம் ஆண்டு, நான் வெளியுறவுத் துறை அமைச்சராக நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம் பெற்றபோது பிரபாகரனை இந்தியாவிற்கு நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் குடியரசுத் தலைவர் குமாரதுங்காவிடம் வலியுறுத்தினேன்” எனக் குறிப்பிடுகிறார்.

பிரபாகரனை ஒரு விடுதலை வீரனாகச் சித்தரிப்பதற்குப் பதிலாக அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடுகிறார். 2010இல் இந்தியாவின் முழுமையான ஆதரவை இலங்கைக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“இராஜிவ் காந்தி - ஜெயவர்தனே இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப் படையிலான 13ஆவது இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் வழியாக ஈழத் தமிழர்களுக்கு அளிக் கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.”

“இராஜபக்சே சீனாவின் பெருமளவிலான உதவிகளைப் பெற்றார். இதை இந்தியா எதிர்த்த போது, ‘சீனா இலங்கைக்கு அதிக அளவிற்கு உதவிகள் அளித்த பிறகுதான் இந்தியா எங்க ளுக்கு உதவ முன்வந்தது’ என்று இலங்கை கூறியது.” என்பதையும் இந்நூலில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு உட்படப் பல பொருளா தார நலன்கள் சார்ந்துள்ளன என்றும் இராசபக்சே விடம் குறிப்பிட்டேன்.”  என்கிறார்.

“இருப்பினும், சீனாவிலிருந்து அதிக நிதியுதவி இலங்கை பெறுவதைத் தடுப்பதற்காகவும், இந்தியாவின் பாதுகாப்பு கருதியும், அதிக அளவி லான நிதியை நரேந்திர மோடி ஆட்சி அமைந்த பிறகும் இந்தியா அளித்து வருகிறது.

அமெரிக்காவினுடைய கடற்படைத் தளம் இந்தப் பகுதியில் அமைவதை எதிர்த்தது போன்று, இந்தியாவினுடைய எல்லையை ஒட்டிய அரபிக்கடல் வங்கக் கடலுக்கிடையே சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருவதை எதிர்க்கவேண்டிய நிலை இந்தியாவிற்கு இருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு, இந்தியா ஈழத் தமிழர்களின் நலனில் பெரும் அக்கறை கொள்ளாமல் இந்திய நலன்களையே முன்னிறுத்தியது என்பதை பிராணப் முகர்ஜி ஐயர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

2014-க்குப் பிறகு மோடி ஆட்சி அமைந்த பிறகு, இராஜபக்சேவிற்கு தில்லியில் இரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் ஒடுக்கப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை இந்த நூலில் நன்கு உணர முடிகிறது.

சில நாட்களுக்கு முன்பு, நான்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைக் கப்பல் தாக்கி அவர்களை உயிரிழக்கச் செய்ததும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழு அளவில் தோல்வியடைந்தது என்பதைச் சுட்டுகிறது அல்லவா?

குறிப்பாக, 15 நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் செய்து, சில கொள்கைகளை வலியுறுத்தினார் எனச் செய்திகள் குறிப்பிட்டன. மறுநாளே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தி லிருந்த - ஈழப்போராட்டத்தில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவுச் சின்னம் அடித்து நொறுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் எதிர்ப்பு வரவே, இலங்கைக்கான இந்தியத் தூத ரிடம் தொடர்புகொள்ளப்பட்டது எனும் செய்தியும் வந்தது.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் மீது நடை பெற்றது. ஈழத் தமிழர்களின், தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு உணர்வுகள் கேவலப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ் இன விரோதப் போக்கில் இராஜிவ் காந்தி, மன்மோகன் சிங் கடைப்பிடித்த அணுகுமுறைகளும், இன்றையப் பிரதமர் மோடி கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளும் ஒன்றாகவே அமைந்துள்ளன.

உலகத்தில் வாழும் 10 கோடி தமிழர்கள் கேவலப் படுத்தப்படுகிறார்கள். ஆனால், இதே இந்தியா, 32 இலட்சம் மக்கள் தொகை உள்ள திபெத் பிரச்சனைக்கு ஆதரவாக நின்று சீனாவை எதிர்த்து நிற்கவில்லையா? இன்றளவும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து வருகிறதே!

அப்படி என்றால், 32 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட திபெத்துக்கு ஒரு நீதி, உலகமே கண்டிக்கக் கூடிய அளவிற்குத் தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இராசபக்சேவிற்கு ஒரு நீதியா? சீனாவைக் காட்டித் தமிழர்களின் உரிமைகளை மறுப்பதை எத்தனை காலம் தமிழர்கள் பொறுத்துக் கொள்வார்கள்?

“பிரதமர் மோடி, ரூ.500 ரூ.1000 உயர் மதிப்பு பணத் தாள்கள் செல்லாது என அறிவித்தபோது தனது அமைச்சரவையைக் கூட அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. தொலைக்காட்சி வழியாகத்தான் நாட்டு மக்கள் அறியவேண்டிய சூழல் ஏற்பட்டது.”

எனக் குறிப்பிடுகிற பிரணாப் முகர்ஜி, இந்த உரைக்குப் பிறகுதான் மோடி தன்னைச் சந்தித்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விவரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்புப் பணத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்துவதற்காகவும் தீவரவாதிகளுக்குச் செல்லும் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி தன்னிடம் விளக்கினார் எனக் கூறியுள்ளார்.

“முன்னாள் நிதி அமைச்சர் என்கிற முறையில் என்னுடைய ஆதரவை மோடி வேண்டினார். அதன் அடிப்படையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டேன்.” எனவும் கூறியுள்ளார், பிரனாப்.

அதன் பிறகு ‘சரக்கு - சேவை வரி’ பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சரக்கு - சேவை வரி அதிக வரி வருவாயை அளித்து அரசிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்க மளிக்கும் எனும் கருத்தையும் இந்நூலில் குறித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ள மேற்கூறிய கருத்துகள் எவ்வளவு பொய்யானவை என்பதை கொரானா தொற்று நோய்ப்பரவலுக்கு முன்பே தொடங்கிய பொருளாதாரச் சரிவும், என்றுமில்லா அளவிற்கு இன்று வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி, வருமானம், சொத்து ஏற்றத் தாழ்வு உருவாகி 70 விழுக்காட்டு மக்களின் வாழ்வியலைச் சிதைத்து வரும் நிலையும் சுட்டும் பல புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன.

மேலும், தற்போது 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியானது சுழியத் திற்குக் கீழே 7.8 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியாகச் சென்றுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் எப்போது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனப் பல வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘திட்டமிடப்பட்ட சூறையாடல் - சட்ட ரீதியான கொள்ளை’ (Organised Loot and Legalised Plunder ) எனப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடும் சொற்களால் சாடினார் என்பதை பிரணாப் முகர்ஜி தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தி உள்ளார். இது தந்தை பெரியார் குறிப்பிட்டதுபோலப்  “பார்ப்பனர்கள் எப்போதும் சிறந்த பணியாளர்கள், மோசமான நிர்வாகிகள்” என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பதவிக்காகப் பார்ப்பனர்கள் விலை போவார்கள்; என்ன இருந்தாலும் சீக்கியர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள் என்பதையே மேற்கூறிய கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பொறுப் பேற்பதற்கு முன்பு கலைஞரை நேரில் சந்தித்து 2012இல் ஆதரவு கேட்டார். தமிழ்நாட்டில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தனியார் உணவு விடுதியில் கலந்துகொண்ட கூட்டத்தில் எல்லோரையும் கைகூப்பி ‘ஆதரவு தாருங்கள்’ எனக் கேட்டார்.

2005இல் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிராணப் முகர்ஜி, அதிகாலை நடைப் பயிற்சியிலிருந்த கலைஞரிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையின் கீழ்ப் பணியாற்றும் தலைமைப் பொறியாளரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கும்படி அத்துறையின் அமைச்சராக டி.ஆர்.பாலுவிடம் பரிந்துரைக்கும்படிக் கேட்டார்.

உடனடியாக கலைஞர், டி.ஆர். பாலுவிடம் இதைப் பற்றித் தகவல் பெறுமாறு என்னிடம் கூறினார். நான் வீட்டிற்குச் சென்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் நண்பர் டி.ஆர்.பாலு என்னைத் தொலைப்பேசியில் அவரே தொடர்புகொண்டார். நான் நடந்த விவரத்தைக் குறிப் பிட்டேன். அப்போது டி.ஆர்.பாலு,

“சாலைப் போக்குவரத்துச் சட்டங்களின்படி மாநில அளவில் பணியாற்றும் பொறியாளர்கள் நான்கு ஆண்டுகள் வீதம் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும். பிரணாப் முகர்ஜியால் பரிந்துரை செய்யப்பட்ட பொறியாளர் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடித்திருந்தார். எனவே, உயர் அலுவலர்கள் இந்தச் சட்டத்தைக் கூறி இவருக்குப் பதவி நீட்டிப்பு செய்வதற்கு விதிகளில் வழியில்லை எனக் குறிப்பிட்டனர். அதையே நானும் ஏற்றுக்கொண்டேன்”  என்ற பதிலை அளித்தார்.

மேலும், அந்தக் குறிப்பிட்ட தலைமைப் பொறியாளர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் நிர்வாக முறைகேடுகளும் உள்ளன என அதிகாரிகள் கோப்புகளைக் காட்டி என்னிடம் தெரிவித்தனர் என டி.ஆர். பாலு என்னிடம் கூறினார்.

மறுநாள் காலை நடைப்பயிற்சியின்போது டி.ஆர். பாலு தெரிவித்த தகவலைக் கலைஞரிடம் தெரிவித்தேன். அதற்குக் கலைஞர் சிரித்துக்கொண்டே பிரணாப் டி.ஆர். பாலு மீது பழியை அல்லவா சுமத்தினார் எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறு பல நேரங்களில் கலைஞரிடம் கைகூப்பி உதவி கேட்ட பிரணாப் முகர்ஜி, கலைஞரைப் பற்றி ஒரு வரி மட்டுமே இந்நூலில் குறித்துள்ளார்.

மேலும், 117 புகைப்படங்கள் இந்நூலில் வெளியிடப் பட்டுள்ளன. பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் வாழ்வளித்த காங்கிரசு முன்னணித் தலைவர்களான காந்தியார், நேரு, இந்திரா காந்தி படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவருக்கு அரசியல் புணர் வாழ்வளித்த நரசிம்மராவ் படம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. பலர் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தில் சோனியா முகம் மட்டும் தெரிகிறது.

ஆனால், 2012இல் ஜெயலலிதா வீட்டில் நடந்த நிகழ்வு ஒரு வண்ணப் படமாக நூலின் முதல் பகுதியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. அதுபோன்றே, மோடியின் நிகழ்வு 3 இடங்களில் வண்ணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

இனப் படுகொலை செய்த இராசபக்சேவின் வண்ணப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் பார்ப்பன பூசாரிகள் இவருக்குப் பிரசாதம் கொடுக்கும் படமும் ஜெயலலிதா படத்திற்குக் கீழே வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்களே இவர் யார்? என்பதை வெளிச்சம் போட்டு அடையாளம் காட்டுகின்றன.

2004இல் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,

“பிரணாப் முகர்ஜி கொலைக் குற்றம் சாட்டப் பட்ட காஞ்சி சங்கராச்சாரியைச் சிறைக்கு அனுப்பக்கூடாது. சங்கராச்சாரியாரை அவ மதிப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். பிரதமர் உடனடியாக இப் பிரச்சினையில் தலை யிடவேண்டும்”

எனக் கேட்டுக்கொண்டார். இவரின் ஆர்.எஸ்.எஸ். அடையாளம் அப்போதே வெளியே வந்துவிட்டது அல்லவா?

இதேபோன்று ஆர்.வெங்கட்ராமன் எழுதிய ‘குடியரசுத் தலைவராக நான்’ என்ற நூல் 1994இல் வெளி வந்தது.

அந்த நூலிலும் ‘வளர்த்த கடா மார்பில் பாயும்’ என்ற பழமொழிக்கேற்ப காங்கிரசின் தலைவர்களை விமர்சனம் செய்திருந்தார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமரான போது ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வெங்கடசுப்ர மணியமும் இடம்பெற்றிருந்தார். ஆர்.வெங்கட்ராமன் பரிந்துரையின் பெயரில் வாஜ்பாய் இவரை நியமித்தார்.

இதற்குக் கடுமையான கண்டனத்தை அமைச்சரவை யில் இடம்பெற்றிருந்த முரசொலி மாறன் வாஜ்பாயிடம் நேரில் சந்தித்துத் தெரிவித்தார்.

இதுபோன்ற திராவிட இயக்கப் பரம்பரை எதிரிகளைப் பதவிகளில் நியமித்தால், திமுக அமைச்சரவையில் இருந்து விலகிவிடும் எனக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ந்த வாஜ்பாய், வெங்கடசுப்ரமணியத்தை பதவி விலகக் கோரினார். ஆனால், வெங்கடசுப்ரமணியம் பலரிடம் சென்று பரிந்துரைகளைக் கேட்டு பதவியில் நீடித்தார். ஆனால், வாஜ்பாய் அவருக்குத் திட்டக்குழுவின் பணிகளில் எந்த ஒரு துறையையும் ஒதுக்கவில்லை.

இக்கட்டுரையாசிரியர் ஒருமுறை திட்டக்குழுவி னுடைய நூலகத்திற்குச் செல்லும்போது, மின்தூக்கியில் வெங்கடசுப்ரமணியம் பார்த்துவிட்டார். அவரின் அறைக்கு அழைத்துச் சென்று, தான் பதவி இறக்கம் செய்யப்பட்டது குறித்துக் கூறி, கண்ணீர் வடித்தார். கலைஞரிடம் இது தொடர்பாக என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது, அவர் ஓர் உண்மையைப் போட்டு உடைத்தார். “குடியரசுத் தலைவராக இருந்தபோதே ஆர்.வெங்கட்ராமன் கண் பார்வை இழந்துவிட்டார். அவர் கூறிய குறிப்பின் அடிப்படையில் அவரது நூலை நான்தான் எழுதினேன். இதற்காகவா இந்தத் தண்டனையை எனக்கு மாறன் அளித்தார்” எனக் கேட்டார்.

இப்போது, பிராணப் முகர்ஜியின் ‘குடியரசுத் தலை வரின் ஆண்டுகள் 2012-2017’ (The Presidential Years 2012-2017) எனும் இந்த நூலைப் படிக்கும்போது இவருக்காக யார் எழுதியிருப்பார்கள்? என்ற ஐயம் இயல்பாக எழுகிறது.

- குட்டுவன்

Pin It