“எப்பக்கம் வந்து புகுந்துவிடும் - இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?”

எனப் போர்ப் பரணி பாடி, இந்தியை 1938இல் எதிர்த்தனர் தமிழர்.

1922இல் தம் சொந்தக் கட்டடத்தில் இந்திப் பள்ளி யைத் துவக்கியவர் தேசிய காங்கிரஸ் தலைவர் பெரியார். அவரே 1926 முதல் வன்மையாக இந்தியை எதிர்த்தார்.

இந்தி கட்டாயப் பாடமாக 1937இல் தமிழகத்தில் புகுத்தப்பட்டது. தேசியத் தமிழர், சமயம் போற்றும் தமிழர், பார்ப்பனத் தமிழர், வணிகர், நீதிக்கட்சித் தமிழர், மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் கள் என்கிற பல்வேறு நிலையிலிருந்த தமிழர்களும் “கட்டாயப் பாடமாக இந்தி” திணிக்கப்பட்டதை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் கடும்போர் தொடுத்தனர்.

இந்தியாவில் அப்போது காங்கிரஸ் ஆண்ட எந்த மாகாணத்திலும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை; சென்னை மாகாணத்தில் மட்டுமே - ஆச்சாரியார் ஆளுகை இருந்ததால் இந்தி நுழைந்தது.

அதனை விரட்டிடப் புறப்பட்ட படை சென்னைக் கடற்கரையை அடைந்தபோதுதான் அந்தப் படையை வரவேற்று முழங்கிய பெரியார், “தமிழ்நாடு தமிழ ருக்கே” எனத் தனி நாடு கோரும் முழக்கத்தினை அளித்தார், 1938இல்!

அது வெள்ளையர் ஆட்சிக்காலம். அந்த வெள்ளை யர் ஆட்சிதான் 1940இல் கட்டாய இந்தியை ரத்து செய்தது.

வெள்ளையன் போல் காங்கிரஸ் கொள்ளையர் ஆட்சி - பார்ப்பன, பனியா ஆட்சி 1947இல் வந்த வுடன், மீண்டும், எந்தச் சட்ட ஆதரவும் இல்லாமலே இந்தி புகுத்தப்பட்டது. அப்போதும், அண்ணாதுரையை முதல் சர்வாதிகாரி என ஆக்கி, குடந்தையில் மாபெரும் போராட்டம் துவக்கினார் பெரியார்.

1938இல் இருந்து நிலை மாறி - இந்தி எதிர்ப்பு திராவிடர் இயக்கத்துக்குச் சொந்தம் என்கிற நிலை அப் போது 1948இல் தான் உருவாயிற்று. அரசு விளைத்த கொடுமையை எதிர்த்து நின்று, பின்னர் அப்போராட் டம் நிறுத்தப்பட்டது.

இந்தி இந்தியாவின் அலுவல் மொழி அல்லது ஆட்சி மொழி என்கிற அரசியல் சட்ட ஏற்பாடு 1950இல் வந்தது. அதனை அன்று முதல் எதிர்த்து 1952, 1953, 1954 ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் இரயில்வே யெயர்ப் பலகைகளில் இருந்த இந்தியைத் தி.க.வினர் அழித்தனர். தி.மு.க.வினரும் இதில் ஆர்வம் பூண்டு செய்தனர்.

காங்கிரஸ் ம.பொ.சி. முதல் காமராசர் ஈறாக அனைவரும் அந்த எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டினர்.

எதிர்ப்புக்கு எதிர்ப்பு வலுப்பெற்ற நிலையில் “இந்தியை ஒழிக்க, இந்திய தேசியக் கொடியை எரிப்பேன்!” எனப் புறப்பட்டார் பெரியார்.

காங்கிரஸ் கூடாரம் கலகலத்தது; தமிழ்நாடு ஆட்சி பதைபதைத்தது; தில்லி ஆட்சி துடிதுடித்தது.

“தேசியக் கொடியையே கொளுத்துவதா?” எனத் தேசியத் தலைவர்கள் உரத்துக் கூவினர். தி.மு.க. தலைவர் அண்ணாதுரைகூட அந்தப் போர் முறை யைக் கண்டனம் செய்தார்.

1.8.1955இல் கொடி கொளுத்தும் போராட்டம் - அதற்கு முதல் நாள் பிரதமர் நேரு தூங்கவில்லை; முதலமைச்சர் காமராசர் தூங்கவில்லை.

நேருவின் ஆலோசனைப்படி காமராசர் பெரி யாரிடம் தூதுவிடுத்து “இந்தி கட்டாயப் பாடம்” என் பதை எடுத்துவிட உறுதி தந்தார். எனவே, கொடி கொளுத் தும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில், “இந்தி, விருப்பப் பாடம்” எனக் கூறி எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் அப்பொழுது முதல் கற்பிக்கப்பட்டது.

ஆயினும், 1) மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி கற்பிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2) சில சமயங்களில் மத்திய அரசு இந்தியில் ஆணைகளை அனுப்பத் தொடங்கியது. 3) அரசியல் சட்ட விதிகள் 343, 344-அய் முன்வைத்து அதில் கண்டபடி பதினைந்து ஆண்டுகளுக்குள் (1965க்குள்) இந்தியே அலுவல் அல்லது ஆட்சி மொழியாக ஆகித் தீர ஏற்றவை செய்ய வேண்டும் என இந்தி மொழி வெறியர்களும், தேசியத் திலகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல் பட்டனர்.

இந்த நிலையைப் பெரியார் எதிர்த்தார்; அண்ணா துரை எதிர்த்தார்; பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்த்தனர்.

மாணவர்கள் ஒருமுகமாகப் பங்குகொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினைத் தமிழகமே அமளிப்படும் வகையில் தி.மு.க. நடத்தியது, 1965இல்.

இந்தி எதிர்ப்புக் குரல் நாடாளுமன்றத்திலேயே கடுமையாக ஒலித்தது.

இந்த நிலையில் பண்டித நேரு முன்வந்து, அவர் பிரதமர் என்கிற முறையில் நாடாளுமன்றத்தில் 1963 இல் தந்த வாக்குறுதி ஒன்றுதான், இந்தி நேரடியாக - பள்ளிகள் மூலம் வராமல், மத்திய அரசு அலுவல கங்கள் மூலமாக வரத் தொடங்கியதில் முடிந்தது.

“இந்தி பள்ளிகளில் இல்லை” என்கிற நிலை தமிழகத்திலும் வங்காளத்திலும் மட்டுமே உண்டு.

வெள்ளையர் காலத்தில் ஆங்கிலத்தில் படிக்கவும், பதவி பெறவும் முதல் வாய்ப்புக் கிடைத்தது வங்காளி களுக்கு; இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது தென்னிந் தியருக்கு - சென்னை மாகாணத்துக்கு.

1955க்குப் பிறகு சென்னை மாகாணம் என்பதாக ஒன்று இல்லை.

இந்த நிலையில் ஆந்திராவில் இந்தி அப்போதே கட்டாயப் பாடமாகிவிட்டது; கேரளாவில் இந்தி கட்டாயப் பாடமாகிவிட்டது; கர்நாடகத்தில் இன்றும் விருப்பப் பாடமாக இருக்கிறது.

1967இல் அண்ணாதுரை ஆட்சியில் வந்த “பள்ளியில் இந்தி ஒழிப்பு” என்கிற ஏற்பாடு தமிழகத்தில் மட்டுமே இன்றும் இருக்கிறது. விருப்பப் பாடம் என்பதும் ஒழிந்தது.

மேற்குவங்கத்திலும், அஸ்ஸாமிலும் இதே நிலை.

பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த இந்தியை ஒழித்துவிட்டு, இருமொழிக் கொள்கையை தி.மு.க. ஆட்சி 1967இல் அறிவித்தது.

“நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட தி.மு.க. இப்படி இந்தியை எடுத்துவிட்டதால் இந்தி ஒழிந்ததாக ஆகாது” என்பதை விளக்கி ஓர் கட்டுரையை எழுதி அப்போது “விடுதலை” அலுவலகத்தில் இருந்த தந்தை பெரியாருக்கு நான் அனுப்பி வைத்தேன். அது அச்சமயம் “விடுதலை” ஏட்டிலும் வெளியிடப்பட்டது. நிற்க.

இவற்றைத் தோற்கடிக்க மத்திய அரசு செய்யும் முயற்சிகள் என்னென்ன?

1.  இந்தியை வளப்படுத்த தனித்திட்டங்கள்.

2. இந்தியைப் பாட மொழியாக ஆக்க இந்தி மாநிலங் கள் முன்வர ஆதரவு.

3. இந்தியா முழுவதிலுமுள்ள மத்திய அரசு அலுவல கங்களில் எல்லா ஊழியர்களுக்கும் இந்தியை இலவசமாகக் கற்றுத்தர ஏற்பாடு.

4. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள “தட்சண பாரத் இந்திப் பிரசார சபா” போன்றவற்றுக்குத் தாராளமான நிதி உதவி.

5. அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் மூலம் உலக நாடுகளில் இந்தி பரப்பப்பட ஏற்பாடு.

6. வானொலி, தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பு.

7. அண்மையில் திட்டப்பொருளாகவே இந்தி மொழி பரப்பும் பணி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டமை.

8. மத்திய அரசு அலுவலகங்களில் உத்தியோக நியமனம் என்கிற போதும், உத்தியோக உயர்வு என்கிற போதும் போட்டிக்கு உரியவர்களில் இந்தி யில் தகுதி பெற்றவர்கட்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சமீபத்திய ஆணை.

9. இரண்டு மாதங்களுக்கு முன் தமிழ் ஒலிபரப்பில், “வானொலி” அகற்றப்பட்டு, “ஆகாஷ்வாணி” திணிப்பு. தமிழிரின் ஒருமுக எதிர்ப்புக்குப்பின் “ஆகாஷ்வாணி” மறைவு.

10. 15.8.82 முதல் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தொலைக்காட்சியில் நாடோறும் 1ஙூ மணிநேரம் இந்தியில் நிகழ்ச்சிகள்.

அரசியல் சட்ட ஆதரவு, நாடாளுமன்றப் பெரும் பான்மை ஆதரவு, இந்தி பேசும் நாட்டவரின் ஒருமுக ஆதரவு ஆகிய இத்துணை வலிவான ஏற்பாடுகளை யும் வைத்துக் கொண்டு -

1) மத்திய அரசு துறைகள் மூலமும்,

2)  பள்ளிகள் மூலமும் இந்தி திணிக்கப்படுவது மிக மிக விரைந்து நிறைவேறி வருகிறது.

இத்தனை மூர்க்கமான திணிப்பை இனி தமிழகமோ, மேற்குவங்கமோ தனித்தோ, ஒன்றுபட்டோ எதிர்த்து நிற்க வழி ஏது?

“கல்வி என்பது மாநில அதிகாரத்துக்கு உட்பட்டது” என்கிற உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இனி மய்ய-மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது கல்வி.

கல்வியின் எல்லா நிலைகளிலும் இந்தி வருவதற்கு மிக மிக வலிவான ஆயுதமாக தில்லி ஆட்சிக்கு இந்த வாய்ப்பும் தரப்பட்டுவிட்டது.

இவ்வளவு வலிவாக - ஆதிக்க வலிவுடன், சட்டப் பாதுகாப்புடன் வரும் இந்தியை ஆட்சி மொழி -அலுவல் மொழி - தொடர்பு மொழி என்கிற ஏதோ ஒரு பெயரால் எல்லா அனைத்திந்திய அரசியல் கட்சிகளும், கட்சி ரீதியில் ஆதரிக்கவே செய்கின்றன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொது வுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) என்பவை அனைத் திந்திய அளவில் மேற்கண்ட நிலையையே ஆதரிக் கின்றன. ஆனால் அவற்றின் மாநிலக் கிளைகள் - 1963ஆம் ஆண்டைய ஆட்சிமொழிகள் சட்டம் என் பதைக் காட்டி இந்தியை எதிர்க்க முன்வருகின்றன. அதிலும் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் இதே எதிர்ப்பைக் காட்டுகிற போது தாங்கள் பின்தங்க முடியாமல் முன்வருகின்றனர்.

1938 முதல் இந்தியை ஒழிப்பதில் நாட்டங் கொண்டு - அதற்கு ஒரு வழி நாட்டுப் பிரிவினை என முழங்கிய திராவிட இயக்கம் இப்போது நாட்டுப் பிரிவினை இயக்கமாக, அதிகாரப்பூர்வ மாக இல்லை. இவ் இயக்கத்தின் பல பிரிவு களிலும் உள்ள தனிப்பட்ட பலருக்கு நாட்டுப் பிரிவினையில் நாட்டம் இருக்கலாம்.

தேசிய காங்கிரஸ்கள், லோக் தளங்கள் போன்ற எந்தக் கட்சியும் இந்தியை எதிர்க்கின் றவை அல்ல.

இந்த நிலையில் இந்தி சடசடவென்று காட் டாற்று வெள்ளமாக வந்து சேருவதை, 1963 ஆம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டம் என்கிற மணற்கரையைக் கொண்டு தடுக்க வேண்டும் - தடுக்க முடியும் என்று கூறி, வெகுமக்கள் கண் களில் “இந்தி எதிர்ப்பாளர்” என எவர் காட்டிக் கொண்டாலும், இது, இந்த வெகுமக்களை ஏமாற்று வதே ஆகும்.

வாக்காளர்களாக இருப்பவர்கள் வெகுமக்கள் தானே. அவர்களைக் கவர நான் முந்தி - நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு கூரை மேல் ஏறி நின்று இந்தி எதிர்ப்புக் கூக்குரல் எழுப்புவது இனி பலன் தராது.

“இந்தி எதிர்ப்பு” என்கிற கெட்டிக் கட்டடம் இடிந்து சரிகிறபோது, அதைத் தாங்கிட ஆமணக்குக் கொட்டைத் தடி எப்படிப் பயன்படும்? முருங்கைக்கிளை எப்படி முட்டுக்கு நிற்கும்?

பார்ப்பனரும், பனியாக்களும், பிற இந்திக்காரர்களும், அரசியல் சட்டம், ஏக இந்தியா, “இந்தியாவுக்கு ஆட்சி மொழியாக ஓர் இந்திய மொழிதான்” என்கிற மூடத் தனங்களுக்கு ஆட்பட்டு காங்கிரிட்டுக் கட்டடம் கட்டி, அதை நிலைக்க வைக்க புளியங்கால்களை தேக்கம் விட்டங்களைத் தேடிக்கொண்ட நிலையில் - இரும்புத் தடிகொண்டு இவற்றை அடித்து - டைனமைட் வைத்து உடைத்து நொறுக்கி, “ஏக இந்தியா” என்கிற கட்டடத் தைத் தூளாக்க முன்வராமல் “நேரு தந்த உறுதி மொழியை அன்னாரின் செல்வ மகளான இந்திரா காந்தி கடைபிடிக்க வேண்டும் என்று வாயிலும் எழுத்திலும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கதைப்பதால் - வேண்டுகோள் விடுப்பதால் இனி ஆவப்போவது என்ன?”

“அந்த 1963ஆம் ஆண்டு உறுதிமொழி” கூறுவது தான் என்ன?

“இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில் இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்கிற வடிகட்டிய அயோக்கியத்தனமான உறுதிமொழி தானே நேரு தந்தது?

ஆட்சிமொழி இந்திதான்.

ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக இருக்கும்.

இந்தி பேசாத மக்கள் விரும்பிகிற வரையில் இந்த நிலைமை நீடிக்கும்.

இந்த வாசகங்களின் அமைப்பில் எது உண்மை? எப்படி உண்மை? எப்படிச் சரி?

இந்திதான் ஆட்சி மொழி என்பதற்குச் சட்டப் பாதுகாப்பு கெட்டியாக இருக்கிறது.

ஆங்கிலம் இணை ஆட்சி மொழி என்பது இந்தியா முழுவதற்கும் பொருந்த வேண்டும். ஆனால் இன்று பீகாரில், உ.பி.யில், ம.பி.யில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இல்லை.

இந்தி பேசாத தென்மாநிலங்களில் காங்கிரஸ் ஆண்டு வருகிற மூன்று மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டன.

திராவிடக் கட்சி (திராவிடர் கட்சி அன்று!) ஆளுகை யில் இருந்த-இருக்கிற தமிழகப் பள்ளிகளில், கல்லூரி களில் இந்தியை ஏற்கவில்லை.

ஆனால் இனி மேற்கொண்டு முதலில் கல்லூரி களிலும், அடுத்து பள்ளிகளிலும் இந்தியைப் புகுத்தத் தேவையான கல்வித் துறை அதிகாரத்தை மத்திய ஆட்சி 1982இல் வலிந்து பெற்றுக்கொண்டது.

இந்தக் கண்கூடான நிலைமைகளைக் கொண்டு தமிழர்கள் உணர வேண்டியது என்ன?

1.1963ஆம் ஆண்டைய நேருவின் உறுதி மொழியை - ஆட்சிமொழிச் சட்டத்தைக் காட்டி நம் மக்களிடம் இந்தி எதிர்ப்பு நாடகம் ஆடுவது ஏமாளித்தனம்; ஏமாற்றுத்தனம்; கோமாளித்தனம் என்பதை உணர வேண்டும்.

2. “ஏக இந்தியா” என இருக்கும் வரையில், இந்தி - வானொலியில், தொலைக்காட்சியில், பள்ளியில், கல்லூரியில், உத்தியோக நியமனத் தில், உத்தியோக உயர்வில் புகுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த எந்தக் கொம்பராலும் இன் றைக்கும், நாளைக்கும், என்றைக்கும் முடி யாது - முடியாது என்பதை வெகுமக்களுக்கு உணர்த்த வேண்டும்.

3.“ஏக இந்தியா இருக்கலாம் - தமிழகமும் அதில் ஓர் அடிமை மாநிலமாக இருக்கலாம்” என்றால், வெள்ளையன் காலத்தில் ஆங்கிலம் பெற்றிருந்த எல்லா நிலையிலும் இந்தி வந்தே தீரும் என்பதைத் துலாம்பரமாக வெகுமக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

தமிழர் ஒவ்வொருவரும் இந்தி எதிர்ப்பு பற்றிய இவற்றை ஆய்ந்து தேர்ந்து உண்மையை உணர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

 (சிந்தனையாளன் 21-8-1982)