tha.pandiyanஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967-68ஆம் கல்வியாண்டில் நான் இளங்கலை பயின்று கொண்டிருந்த போது, மாணவர் பேரவையில் உரையாற்றத் தோழர் தா.பாண்டியன் அவர்களை அழைத்திருந்தோம். எதிர்பாராத போக்குவரவுத் தடங்கல்களால், உரிய கால அளவில் அவரால் வந்துசேர இயலவில்லை.

அவருடன் தோழர் குணாளனும் வந்திருந்தார். நிகழ்வை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்துவிட்டு, அவர்களைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்தோம். அன்றுதான் தா.பா. அவர்களுடன் எனக்கு முதன் முதலாக அறிமுகம் ஏற்பட்டது.

அன்றைய நாள் இரவிலிருந்து அடுத்த நாள் மாலை நிகழ்வு தொடங்கும் வரை தா.பா.வோடு உரையாடவும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒருவரையருவர் புரிந்துகொள்ளவும் அரிய வாய்ப்புகள் அமைந்தன.

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்த ஆண்டுகளில்கூட மாணவர்களிடையே எரிந்துகொண்டிருந்த கனல் தணிந்திருக்கவில்லை. மாணவர் இயக்கப் பணிகளில் நாங்கள் எதிர் கொண்ட பெரும் சிக்கலாக இந்தித் திணிப்பு நீடித்துக் கொண்டிருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிலை, அப்போது இந்தியை, இணைப்பு மொழியாக மட்டுமல்லாது, தேசிய மொழியாகவே கருதத்தக்க வகையில் இருந்தது.

அப்போது, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்த தோழர் ப. மாணிக்கம் அவர்கள் மாணவர் இயக்கப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். அவருடைய வழிகாட்டுதலில் தக்க வழிமுறைகளை வகுத்துக் கொண்டு, இந்தித் திணிப்பு எதிர்ப்பையும் உள்ளடக்கிய வகையிலான செயல்பாடுகளை அப்போது நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

இந்த நிலையில், தா.பா. அவர்களுடனான உரையாடல் எங்களுக்கு மன நிறைவைக் கொடுத்தது. கட்சியின் அரசியல் முடிவுகளை ஏற்றுக் கொள்வது என்பது வேறு, வேறுபட்ட கண்ணோட்டங்களில் மார்க்சியக் கருத்துப் பகிர்வுகள் என்பது வேறு என்ற தெளிவினை நாங்கள் முன்னரே பெற்றிருந்தோம். ஒரு தலைவர் என்ற அளவில் தா.பா.வுடன் வெளிப்படையாகப் பலவற்றையும் பேசும் வாய்ப்பினை அப்போது பெறமுடிந்தது.

மாணவர் பேரவையில் தா.பா.வின் பேருரை அனைத்து மாணவர்களது ஈர்ப்பினையும் பெற்றது. மொழிச் சிக்கலையும் தனக்கே உரிய தெளிவுடன் தா.பா. விளக்கினார்.

பேச்சாற்றல் கொண்டோர் திமுக தலைவர்கள் மட்டுமே என்ற எண்ணவோட்டத்தில் பல மாணவர்கள் அன்று இருந்தனர். ஆனால், அந்த மாயை அன்றைய தா.பா.வின் சொற்பொழிவில் மறைந்தது.

பொதுவுடைமை இயக்கம் சார்ந்த மாணவர் அமைப்பு எதுவும் 1950களின் தொடக்கத்திலிருந்தே செயல்பாட்டில் இருக்கவில்லை. தோழர் ப. மாணிக்கம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளால், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (அப்போது தமிழக மாணவர் மன்றம்) மாவட்ட மாநாடுகளை நடத்த அப்போது முடிவெடுக்கப்பட்டது.

தென்னாற்காடு மாவட்ட மாநாட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே 30-03-1968ஆம் நாளன்று நடத்த நான் முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தேன். அதில் தோழர் கே. பாலதண்டாயுதம் அவர்களையும் தோழர் தா.பா. அவர்களையும் அழைத்திருந்தேன்.

பொதுக் கூட்டத்திலும் அவர்கள் பேசினார்கள். சற்றேறக் குறைய பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர் இயக்கம் தொடர்பான முதல் மாநாடு அது. மாணவர் இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அந்த நிகழ்வினைக் கூற முடியும். பாலன், தா.பா. இருவருமே தங்களது எழுச்சி மிக்க உரைகளால் மாணவர்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டார்கள்.

பாலதண்டாயுதம் அவர்களைத் திட்டமிட்டபடி மதுரைக்கு வழியனுப்பிவிட்டு, தா.பா.வை சென்னைக்கு அனுப்பிவைக்க சிதம்பரம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. இரண்டு மணிக் கால அளவுக்கு மேலாகத் தோழர்களுடன் அவரது கலந்துரையாடல் இன்னும் எனது நினைவுகளை விட்டு அகலவில்லை. அவரது அகன்ற அறிவும் பரந்த பார்வையும் வெளிப்படையாகப் பல விவரங்களைப் பகிர்ந்துகொண்ட பாங்கும் எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தன; சிந்திக்கவும் தூண்டின.

21-07-1968 அன்று தஞ்சைத் தரணியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் அய்ந்தாவது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ் மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த எனது தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர்கள் பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மொகித்சென், தா.பா., சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சை மாநில மாநாட்டுக்குப் பின்னர் சில திங்கள்களுக்குள்ளாகவே கட்சியின் சார்பில் மாணவர் அமைப்புக்கான பொறுப்பினை தா.பா. ஏற்றுக்கொண்டார். இதனால் எங்களுடைய தொடர்புகள் மிகுந்தன.

இதற்கிடையில், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராகவும் நான் இணைத்துக் கொள்ளப்பட்டேன். கட்சி அமைப்பொன்றின் நடுவப் பொறுப்பில் இருந்தாலும், ஓராண்டு வரை சென்னைக்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தேனேயன்றி, அங்கேயே தங்கியிருக்கவில்லை.

1969இல் தமிழ் முதுகலைப் படிப்புக்காக சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். மாணவனாக இருந்தாலும், பெரிதும் காலையிலும் மாலையிலும் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். பல வேளைகளில், பகல் உணவுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் திரும்பிவிடுவேன்.

மாணவர்களைக் காணப் பிற கல்லூரிகளுக்குச் செல்லும் நாள்களிலும்கூட, அலுவலகம் வந்து மாலை வரை இருப்பேன்.

பிராட்வே சாலையில் இருந்த ஜனசக்தி அச்சகத்துக்கு எதிரில் கட்சியின் மாநில அலுவலகம் இருந்தது. அங்கேயே “ஜனசக்தி' ஆசிரியர் குழுவும் இயங்கிவந்தது. பிராட்வே சாலைக்கு இணையாக அடுத்து இருந்த பெரியண்ண மேசுதிரி தெருவில் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டது.

மாவட்ட அலுவலகத்துக்கு அடுத்த அறை மாணவர் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெளியூர் பயணம் இல்லாமல் சென்னையில் இருக்கும் நாள்களில் தா.பா. மாவட்ட அலுவலகம் வந்துவிடுவார். சென்னை மாவட்டச் செயலாளராக முன்பு இருந்ததால் ஏற்பட்ட பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.

இதனால், தா.பா. அவர்களுடனான தொடர்புகள் எனக்கு அன்றாட நிகழ்வுகளாக அமைந்தன. கட்சியின் பிற தலைவர்களுடனும் நெருங்கிய இணைவு ஏற்பட வாய்ப்புகள் வந்துசேர்ந்தன.

முன்னரே திட்டமிட்டிருந்தவாறு, நான் சென்னைக்கு வந்தவுடன் மாணவர் அமைப்புக்காக 'மாணவர் முழக்கம்' திங்களிருமுறை முதல் இதழ் 05-08-1969 நாளிட்டு வெளியிடப்பட்டது. தா.பா. ஆசிரியர்; நான் பொறுப்பாசிரியர்.

1966ஆம் ஆண்டிலிருந்து அரசியல், இலக்கியம், மாணவர் இயக்கம் தொடர்பான கட்டுரைகளையும் சிறுகதைகளையும் “ஜனசக்தி', “சாந்தி', “தாமரை', “ஆனந்தவிகடன்' போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். ஆனால், இதழ் உருவாக்கத்தில் ஈடுபட்டதில்லை. ஆயினும், “மாணவர் முழக்கம்' முதல் இதழிலேயே எனக்கு முழு உரிமை வழங்கிவிட்டார் தா.பா.

படைப்புகள் தேர்வு, தலையங்கம், வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்திலும் எத்தகைய தலையீடும் இல்லாமல் தனித்துச் செயல்படவும் எனக்கு வாய்ப்புகளைத் தந்தார். அவருடைய கட்டுரைகளைத் தரும்போதுகூட, "என்ன முடித்து விட்டீர்களா? இடம் இருக்கிறதா?" என்று கேட்கத் தவறியதில்லை. மாணவர் அமைப்பில் நான் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நிலை நீடித்தது.

இதழ் வெளியான பிறகுகூட, பெரிதும் மாற்றுக் கருத்தைக் கூறமாட்டார். அவருக்கே உரித்தான புன்னகையுடன் ஒரு சில சொற்கள், அவ்வளவுதான். உள்ளடக்கத்திலும் உருவமைப்பிலும் அன்று “மாணவர் முழக்கம்' பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

“மாணவர் முழக்கம்' இதழ் பணிகளில் நான் பெற்ற பட்டறிவுதான், பிற்காலத்தில் இதழியல் நுட்பங்களில் தேர்ச்சியும் நேர்ச்சியும் பெற எனக்கு அடிப்படையாகவும் உரமாகவும் அமைந்தது என்று துணிந்து கூறமுடியும்.

மற்றொன்று, தா.பா. கொடுத்த கருத்துரிமை. “ஜனசக்தி' இதழின் மற்றொரு மாற்று வடிவமாக “மாணவர் முழக்கம்' இருந்துவிடக்கூடாது என்ற எண்ணங்களுக்கு ஊக்கம் தந்தார். பொதுவுடைமை இயக்கத்தில் இது மிக அரிதான போக்காகும். மாறுபட்ட கண்ணோட்டத்தில் எண்ணவும் எழுதவும் செயல்படவும் முடியும் என்பதற்கு தா.பா. ஒருபோதும் தடையாக இருக்கவில்லை.

கட்சியின் அரசியல் உறவுகளையட்டி, செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளாமல், கொள்கை நிலைபாடுகளையும் மனத்தில் கொண்டு, தனித்து, வேறுபட்டுச் செயல்பட ஒப்புதல் தந்தார். இதனா.ல், கட்சி அளவிலான அரசியல் உறவுகள் ஒருபுறம் இருந்தாலும், அன்றைய திமுக ஆட்சிக்கு எதிராக, கல்வி தொடர்பான - மாணவர் நலன் தொடர்பான பல போராட்டங்களை மாணவர் பெருமன்றம் முன்னெடுக்க முடிந்தது. தமிழ்நாட்டில் அன்றைய மாணவர் போராட்டங்கள் பலவற்றுக்குப் பெருமன்றமே தலைமையும் தாங்கியது. இதில் தா.பா.வின் பங்களிப்பு குறிக்கத்தக்கது.

இந்தப் போராட்டங்களை, அரசியல் இயக்கங்களாக உருமாற்றியிருந்தால், பொதுவுடைமை இயக்கம் வலுப்பெற்றிருக்க வாய்ப்புகள் வந்திருக்கலாம்.

மக்கள் வெளியீடு நிறுவனத்தை நான் 1974இல் தொடங்கியபோது, முதல் நூலாக பாலதண்டாயுதம் அவர்களின் “ஆயுள் தண்டனை அனுபவங்கள்' என்று முடிவு செய்திருந்தேன். பாலன் உயிரோடு இருந்தபோதே, முற்றுப் பெறாத அந்தத் தொடரை முடித்துத் தருவதாக எனக்கு வாக்களித்திருந்தார்.

இதற்காகத் தோழர் விசயபாஸ்கரனின் “சமரன்' இதழில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கட்டுரைகளையும் தேடி எடுக்கச் சொல்லியிருந்தார். தோழர் வி.ராதாகிருஷ்ணனிடம் அந்தக் கட்டுரைகள் இருந்ததால் எனது பணி எளிதாயிற்று. ஆனால், எதிர்பாராத பாலன் மறைவினால், அந்த நூல் முழுமை பெறாமலேயே வெளியானது.

அடுத்து, தா.பா. அவர்கள் “ஜனசக்தி' வார இதழில் எழுதிய “மார்க்சிஸ்ட் கட்சியினரின் சிந்தனைக்கு' என்ற தொடரை நூலாக்க விழைந்தேன். மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் அது. அந்தக் காலகட்டத்தில் அது மேலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.

ஆனால், ஒரு சிறு சிக்கல் இடையிட்டது. அமைப்பு அளவில் தா.பா. அவர்களுக்கும் எனக்கும் அப்போது சில வேறுபாடுகள் தோன்றியிருந்தன. தனிப்பட்ட முறையில் அல்ல என்றாலும், தயக்கம் இருந்தது. அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தா.பா. அவர்களை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன். வழக்கம் போல், இருவரும் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை, இலக்கியங்களில் இருந்து எனது பிஎச்டி ஆய்வுகள் வரை அனைத்தையும் பேசினோம்.

ஆனாலும், மாவட்டத் தோழர்கள் முன் கேட்க மனம் வரவில்லை. அவர் பகல் உணவுக்காகப் புறப்பட்டபோது, ஜனசக்தி அச்சகம் அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் வரை நானும் சென்றேன். பேருந்து வருமுன் மக்கள் வெளியீடு வழியிலான முயற்சிகளைக் கூறினேன். குறைந்த விலையில் அரசியல் வெளியீடுகள் கொண்டு வரும் நோக்கத்தினை வரவேற்றார்.

அந்த இடைவெளியில் மனம் திறந்தேன். "போகுமா?" என்றார். "நம்பிக்கை உள்ளது. நம் தோழர்களுக்கே விளக்கங்கள் வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு, அவர் மறுமொழி கூறுமுன், "கட்டுரைகளை நான் எடுத்து வைக்கவில்லை; உங்களிடம் இருக்கிறதா?" என்றும் கேட்டுவிட்டேன். அதற்குள் பேருந்து வர அதில் ஏறிவிட்டார்.

முடிவைத் தெரிந்துகொள்ள அடுத்த நாள் அவரைப் பார்த்தேன். வரவேற்கும் வகையில் சிரித்தார். உடனே தனது கைப்பையைத் திறந்து கொண்டு வந்திருந்த கட்டுரைத் தொகுப்பைக் கொடுத்தார்.

கட்சியின் மாநில மாநாடு 1974ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அப்போது அறுபத்துநான்கு பக்கங்களுடன் ஒரு ரூபாய் விலையில் மூவாயிரம் படிகள் அச்சிடப்பட்ட அந்த நூல் சில நாள்களிலேயே விற்பனையாகிவிட்டது.

தா.பா.வின் நூலினை நான் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டதும், அவர் தனது நூலினை வெளியிட என்னிடம் மாறுபாடுகளை மறந்து வழங்கியதும், எங்கள் நிலையை அறிந்த சிலருக்கு வியப்பாகவே இருந்தது. வேறுபாடுகளை முன்நிறுத்தாமல், கொள்கைப் பரவலை மட்டுமே மனத்தில் கொண்டு இருவரும் செயல்பட்டோம்.

கட்சி பிளவுபட்ட பிறகு இருவரும் காணும் சூழல் பெரிதும் அமையவில்லை. கட்சிகளின் இணைப்பை அடுத்தும், தா.பா. ஒன்றுபட்ட கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

அப்போதெல்லாம் விரிவாகப் பேச முடியவில்லை என்றாலும், “நாம் மீண்டும் பேசுவோம்' என்று கூறத் தவறியதில்லை. பின்னரும் பல முறைகள், பல நிகழ்வுகளில் பார்த்துக்கொண்டதுதான்.

நியூ செஞ்சுரி நூல் நிறுவனத்தாரின் பொன்விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு நானும் அழைக்கப் பட்டிருந்தேன். எனது பட்டறிவிலிருந்து நியூ செஞ்சுரி நூல் நிறுவனத்தாரது பங்களிப்பின் சிறப்பு, நூல் வெளியீடு, செய்யவேண்டிய பணிகள் போன்றன குறித்துச் சில கருத்துக்களை முன்வைத்தேன்.

நான் பேசி முடித்தவுடன், தன்னருகில் அழைத்த தா.பா. எனது உரையினைப் பாராட்டினார். அப்போது மேலும் அவர் கூறியது நினைவை விட்டு இன்னும் நீங்கவில்லை. "நாம் பேசவேண்டும்; நாங்கள் ஒரு வகையில் இதுதான் சரியென்று நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; நீங்கள் வெளித் தொடர்பில் இருக்கிறீர்கள்; என்ன செய்யலாம் என்று விவாதிப்போம்; எல்லாவற்றையும் பேசலாம்; அலுவலகம் வாங்க" என்று கேட்டுக்கொண்டார். எனக்கு வியப்பாக இருந்தது. சில மூத்த தோழர்களிடமும் இதனைப் பகிர்ந்து கொண்டேன்.

கட்சியின் செயல்பாட்டு எல்லைகளை மேலும் விரிவடையச் செய்யவேண்டும் என்று அவர் விரும்பினார். தமிழர் நலன், தமிழர் பண்பாடு, தமிழ்த் தேசியம் உள்ளிட்ட சமூக-பொருளிய-பண்பாட்டு அரசியலில் பல ஆண்டுகளாகத் தொடாமல் விடுபட்ட எல்லைகளை எட்டிப்பிடிக்க எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

ஈழத் தமிழர் உரிமையில் அவரது முன்னெடுப்புகள் ஓர் எடுத்துக்காட்டாகும்.

அகவையும் நோயும் அவரைத் தடுக்க முடியவில்லை. எனது மூத்த மகன் மே.து.ரா. இனியன் மண வரவேற்பு விழா அழைப்பிதழோடு 2019 ஆகத்துத் திங்களில் அவரைக் காணச் சென்றேன். அவரது முதல் வினா “என்ன கிழமை வருகிறது' என்பதுதான். 15-09-2019 “ஞாயிறு’ என்றேன். “ஞாயிறு ஓய்வுதான்; இப்போதுள்ள உடல் நிலை நீடித்தால் கண்டிப்பாக வருவேன்' என்றார்.

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாள்கள் குருதித்தூய்மை (டயாலிசிஸ்) மருத்துவம் செய்யவேண்டிய நிலை. முதுமை, நோயினால் இன்னல், உடல் வலி, துயரம் எதுவும் அவருக்குப் பொருட்டாக இருக்கவில்லை. நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்ற மனநிலையே அவரிடம் மேலோங்கியிருந்தது.

தொன்னூறைத் தொட்டும் முடங்கிவிடாமல், மூச்சு இருக்கும் வரை மார்க்சியக் கொள்கைகளை முன்னிறுத்துவேன் என்று மதுரையில் தா.பா. இறுதி முழக்கம் செய்தது நமக்கு முன்னெடுத்துக்காட்டாக நின்று வழிகாட்டும்.

1964இல் கலைஞர் உரையாடலில், எம்ஜிஆர் நடிப்பில் வெளியான “காஞ்சித் தலைவன்' படம் அண்ணாவைக் குறியீடாக மட்டுமே காட்டியது.

ஆனால், 1994ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் வெளியான “தோழர் பாண்டியன்' என்றொரு திரைப்படம் நேரடியாகவே தா.பா.வை நினைவு கொண்டது. தா.பா. என்ற ஒரு தலைவர் ஏற்படுத்திய சமூக - பண்பாட்டு - அரசியல் தாக்கத்தின் விளைவு இது.

கொண்ட கொள்கைகளில் மட்டுமல்லாது, வாழ்ந்த வாழ்க்கையிலும் வரலாறாக என்றும் தா.பா. நிலைத்திருப்பார்.

- மே.து.ராசுகுமார்