Early Indians - Tony Josoph அவர்களால் எழுதப்பட்டது. அது ஒரு பத்திரிகையாளரால், Concerned Citizen - நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுப் போக்குகள் குறித்து அக்கறை கொண்ட ஒரு குடிமகன் என்ற வகையில் எழுதப்பட்டது. அது இந்தியாவில் தமிழகத்தில் உள்ள பத்திரிகை, பதிப்பு சூழல் ஆகியவற்றின் வரம்பிற்கு உட்பட்டு அதற்கேற்றவாறு, அறிவியலை தங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கற்றுக் கொள்ளாதவர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் சுவையாகவும் எளிமையாகவும், சிறப்பாக எழுதப்பட்ட நூல்தான். ஆனால், Who We are and How We Got Here - நாம் யார்? நாம் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தோம்? என்ற இந்த நூல் மரபணு நிபுணர் ஒருவரால் எழுதப்பட்டது.
டேவிட் ரீச் அமெரிக்காவில் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலும் எம்.ஐ.டியின் ப்ராட் கல்விக் கழகத்திலும் பணிபுரியும் ஒரு யூதர். அதை சற்றுப் பிறகு பார்ப்போம். அவர் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் கல்வி கற்க ஆரம்பித்தார். பின் உயிரியலுக்கு பாதை மாறி பட்டமேற்படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் மரபணுவைக் கொண்டு, அதாவது இன்றைக்கு வாழும் மனிதர்களின் மரபணு மாதிரிகளைக் கொண்டு மனிதகுலத்தின் வரலாற்றைக் கட்டியமைக்கும் மக்கள்தொகை மரபணுவியல் (Population Genetics) எனும் துறையில் பணிபுரிபவராக வந்து சேர்ந்தார். அது மிக சமீபத்தில்தான் உருவான ஒரு நவீன அறிவியல் புலம். 1994 ஆம் ஆண்டு The History & Geography of Human Genes - மானுட மரபணுவின் வரலாறும் புவியியலும் என்ற நூலை இத்தாலிய மருத்துவரும், பின்னாளில் தனது மருத்துவப் பணிகளையெல்லாம் விட்டுவிட்டு மனிதகுல வரலாற்றை மரபணு அடிப்படையில் கட்டியமைக்கும் பணியை முழுநேரமும் செய்தவருமான லூயி லுக்கா காவேலி ஸ்ஃபோர்ஸா எழுதி வெளியிட்டார். ‘மக்கள் தொகை மரபணுவியல்’ (Population Human Genetics) எனும் புதிய அறிவியல் புலமே அதிலிருந்துதான் தொடங்கியது.
ரஷ்ய இலக்கியத்தின் மஹா ஆளுமைகளான டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, செக்காவ், துர்க்கனேவ், புஸ்கின், மக்ஸீம் கார்க்கி ஆகிய எல்லோருக்கும் நிக்கோலாய் கோகல்தான் முன்னோடி. அவரது மேலங்கி-கோட் - எனும் சிறுகதைதான் பின்னர் வந்த மரணமற்ற ரஷ்ய இலக்கியங்களுக்கு எல்லாம் முன்னோடி. எனவே ரஷ்ய இலக்கிய மேதைகள் எல்லாம் கோகலின் கோட்டில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுவது உண்டு. அதுபோல மக்கள் தொகை மரபணுவியலின் பிதாமகன் காவேலி ஸ்ஃபோர்ஸா உலகின் இந்த அறிவியல் புலத்தின் வல்லுனர் குழாம் எல்லாம் காவேலி ஸ்ஃபோர்ஸாவின் மரபணு வாரிசுகள் என்று அறியப்படுகின்றனர்.
காவேலி ஸ்ஃபோர்ஸாவின் மாணாக்கர்களில் ஒருவரான பிரையன் சைக்ஸ் ஒவ்வொரு மானுட உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள மிட்டோகோன்றியாவின் டி.என்.ஏ அடிப்படையில் மானுட குல வரலாற்றை கட்டிஅமைத்தார். மிட்டோகோன்றியா தாயின் கருமுட்டை வழியாக அவளது குழந்தைகளை வந்து சேரும். ஆண் குழந்தைக்கு வந்து சேரும் மிட்டோகோன்றியா அவனோடு நின்று விடும். பெண் குழந்தைக்கு வந்து சேரும் மிட்டோகோன்றியா அவளது குழந்தைகளுக்கு வந்து சேரும். இப்படி தாயிடம் இருந்து மகளுக்கு, மகளிடம் இருந்து அவளது மகளுக்கு என தலைமுறை தலைமுறையாய் வந்துசேரும். இந்த மிட்டோகோன்றியாவின் டி.என்.ஏக்களை அதில் ஏற்படும் மாற்றங்களை, அடையாளங்களை ஆய்வு செய்த பிரையான் சைக்ஸ் தாயின் கொடி வழியில் மனித குல வரலாற்றைக் கட்டி அமைத்தார். அதை அந்தத் துறையில் பாண்டித்யம் பெறாத சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் ஒரு நூலாகவும் எழுதியுள்ளார். செவென் டாட்டர்ஸ் ஆஃப் ஈவ் (Seven Daughters of Eve) என்ற அந்த நூல் தமிழில் ‘ஏவாளின் ஏழு மகள்கள்’ என்று வந்துள்ளது. (தமிழில் - அமலன் ஸ்டான்லி; பாரதி புத்தகாலயம்).
காவேலி ஃபோர்ஸாவின் மற்றொரு மாணக்காரான ஸ்பென்ஸர் வெல்ஸ், இதேபோல மானுட குல வரலாற்றை தந்தையின் கொடி வழியில் ஆய்வு செய்து நிறுவியுள்ளார். ஒவ்வொரு மானுட உடலின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இரண்டு செல்களில் மட்டும் விதிவிலக்காக 23 ஜோடி என்பதற்கு மாறாக 23 குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று பெண்ணின் கரு முட்டை; மற்றது ஆணின் விந்தணு. ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஏதேனும் ஒரு குரோமோசோம் கருமுட்டையில் இருக்கும். இரண்டில் எந்த ஒன்று பெண்ணின் உடலில் உருவாகும் என்பதற்கு வழியேதுமில்லை. முற்றிலும் எதேச்சையான நிகழ்வே. அதேபோல ஆணின் உடலில் உருவாகும் விந்தணுவிலும் ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு குரோமோசோமாக 23 குரோமோசோம்கள் இருக்கும். ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைந்து இரண்டறக் கலக்கும்போது கரு உருவாகின்றது. ஒற்றைச் செல்லாக உருவாகும் அந்தக் கருவில் எல்லா செல்களிலும்போல 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். ஒவ்வொரு ஜோடியிலும் ஒன்று தாயின் கருமுட்டையிலிருந்து வந்தது; மற்றொன்று தந்தையின் விந்தணுவிலிருந்து வந்தது. இதில் 23 ஆவது ஜோடி குரோமோசோம்கள் பால் நிர்ணயம் செய்யும். குரோமோசோம் ஜோடியில் உள்ள இரண்டும் X வகை என்றால் உருவாகும் கரு பெண் குழந்தை. நினைவிருக்கட்டும் ஒன்று தாயிடம் இருந்து வந்தது; மற்றொன்று தந்தையிடம் இருந்து வந்தது. இரண்டில் ஒன்று X மற்றது Y என்றால் கரு ஆண் குழந்தை. இதில் X தாயிடம் இருந்தும் Y தந்தையிடம் இருந்தும் வரும். தாயின் உடலில் Y குரோமோசோம் என்பதே இல்லை. எனவே தந்தையின் விந்தணுவில் இருந்துதான்
Y குரோமோசோம் வர இயலும். அது இப்படி தந்தையிடமிருந்து மகனுக்கு அவனிடமிருந்து அவனது மகனுக்கு என்று தலைமுறை தலைமுறையாய் வந்து சேரும். இந்த Y குரோமோசோம்களின் டி.என்.ஏக்களை, அதில் ஏற்படும் மாற்றங்களை, அடையாளங்களை ஆய்வு செய்த ஸ்பென்ஸர் வெல்ஸ், தந்தையின் கொடி வழியில் மானுட குல வரலாற்றைக் கட்டி அமைத்தார்.
இந்த இரண்டு வெவ்வேறு ஆய்வுகளும் வரைந்தளித்த மானுட குல வரலாறும் மானுடத்தின் உலகம் தழுவிய பரவல் வரலாறும் அதன் பயணப்பாதையும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் உள்ளது. இன்று உலகெங்கும் 5 கண்டங்களிலும் பரவி வாழ்கின்ற மானுட இனம் (ஹோமோ சேப்பியன் சேப்பியன் என்பது உயிரியல் பெயர்) ஆப்பிரிக்காவில் தான் உருவாகியது என்பதை மானுட மரபணு வரலாறு காட்டுகிறது. அவர்கள் எப்போது ஆப்பிரிக்காவை விட்டு வெளியே வந்தார்கள்? வந்தவர்கள் எங்கே தங்கியிருந்தனர்? அங்கிருந்து அவர்கள் எப்போது கிழக்கேயும் மேற்கேயுமாய் கிளை பிரிந்து பயணித்தனர்? ஒவ்வொரு கண்டத்திற்கும் அல்லது இந்தியா, சீனா, ஐரோப்பா, அமெரிக்கப் பகுதிகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்த பாதை எவை? எத்தனை அலைகளில் வந்து சேர்ந்தனர் என்பதை எல்லாம் பிரையன் சைக்ஸ்ஸின் மிட்டோ கோன்றியா அடிப்படையிலான ஆய்வும், ஸ்பென்ஸர் வெல்ஸின் Y குரோமோசோம் அடிப்படையிலான ஆய்வும் எடுத்துக் கூறுகின்றன.
இந்த இரண்டு ஆய்வுகளுமே இந்தியாவிற்குள் நான்கு அலைகளாக மானுடக் கூட்டம் வந்து சேர்ந்ததைக் கூறுகின்றன. இந்தியாவிற்கு வந்த முதல் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவின் கிழக்கே மேலும் மேலும் நகர்ந்து பயணித்து சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பே ஆஸ்திரேலியாவை அடைந்து விட்டனர் என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோல ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த கூட்டத்திலிருந்து மேற்கே திரும்பிய பிரிவு மத்திய ஆசியாவிற்கும் துருக்கி, ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் சென்று சேர்ந்தார்கள். இவ்வாறு ஆப்பிரிக்காவிலிருந்து கிளை பிரிந்தவர்கள் பின் மீண்டும் அலைகளாக இந்தியாவிற்குள்ளும், சீனாவிற்குள்ளும், ஐரோப்பாவிற்கும் வந்து சேர்ந்தார்கள்.
சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 4 அலைகளில் சீனாவிற்குள் வந்து சேர்ந்தவர்கள் மேலும் வட கிழக்கே நகர்ந்து சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு அமெரிக்க கண்டங்களின் வடமேற்கு முனையான அலாஸ்காவை வந்தடைந்தனர். பின்பு அங்கிருந்து வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களின் மேற்கு கடற்கரை ஓரமாகவே நகர்ந்து சுமார் 12 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென் அமெரிக்காவின் தென் கோடி முனை வரையிலும் பரவிவிட்டனர். வேறு வார்த்தைகளில் கூறினால் சுமார் 12ஆயிரம் ஆண்டுகள் முன்பே மானுடக் கூட்டங்கள் அனைத்து கண்டங்களுக்கும் பரவிவிட்டனர் என்று இந்த மரபணு அடிப்படையிலான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இடங்களில் நடந்த புதைபொருள் ஆய்வுகளும் இந்த வரலாறும் பயணப் பாதையும் சரி என்பதையே உறுதி செய்கின்றன.
இந்தியாவிற்குள் அதன் வடமேற்குப் பகுதியிலிருந்து 4 அலைகளாக மானுடக் கூட்டங்கள் இந்தியாவிற்குள் வந்து சேர்ந்தனர். இதுதவிர இந்தியாவைக் கடந்து இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் சென்றவர்கள் இரு சிறு அலைகளாக இந்தியாவிற்குள் வந்து சேர்ந்தனர். இந்தியாவிற்கு வட மேற்கேயிருந்து இந்தியாவிற்குள் வந்த முதல் அலை ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்தபின் ஆசிய நிலப்பரப்பின் தெற்கு கடற்கரை ஓரமாகவே வந்து இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை ஓரமாக வந்து இன்றைய தமிழகத்தின் தென்பகுதியில் இன்றிலிருந்து
சுமார் 60 ஆயிரம் ஆண்டு முன்பே குடியேறிவிட்டனர். இப்படி குடியேறியவர்களின் மரபணு அடையாளங்களோடு உசிலம்பட்டி பகுதியில் இருந்தவர்களில் ஒருவர் தான் விருமாண்டி. ஸ்பென்ஸர் வெல்ஸ்ஸும் அவரோடு இணைந்து ஆய்வு நடத்திய பேராசிரியர் பிட்சப்பனும் இதனை வெளியுலகு அறியச் செய்தனர்.
இதன் பிறகு இன்றிலிருந்து சுமார் 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இரண்டாவது அலையிலும் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் முன்பு 3 ஆம் அலையிலும் மக்கள் கூட்டம் இந்தியாவிற்குள் வந்தனர். இந்த மூன்றாவது அலையில் இன்றைய இரானின் தென்பகுதியிலிருந்து வந்தவர்கள் மூலம்தான் வேளாண்மை இந்தியாவில் அறிமுகம் ஆனது.
இதன்பின் இன்றிலிருந்து சுமார் 3500 ஆண்டுகள் முன்பு மத்திய ஆசியப் பகுதியில் இருந்து ஒரு அலை இந்தியாவிற்குள் வந்தது. இந்த அலையில் வந்தவர்கள்தான் ஆரியர்கள். இந்த நான்காவது அலையில் வந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். முதல் மூன்று அலைகளில் வந்தவர்கள் எல்லாம் இரண்டறக் கலந்து, 4 ஆவது அலையில் வந்தவர்களோடு வேறுபட்ட அளவுகளில் ஒன்று கலந்து உருவானதே இன்றைய இந்திய மானுடப் பரப்பு. இதுதான் மரபணு காட்டும் இந்திய மக்கட் பரப்பின் வரலாறு. இதனையெல்லாம் தனது நூலில் விளக்கும் டேவிட் ரீச் என்ன செய்தார்?
2007 ஆம் ஆண்டு அப்போது அவர் பணியாற்றிய ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் சார்பாக இந்தியாவில் ஹைதராபாத் நகரில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் - சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகியூலர் பயாலஜி (Centre for Cellular and Molecular Biology - CCMB) என்ற இந்திய ஒன்றிய அரசின் கீழ்வரும் அறிவியல் ஆய்வு நிறுவனத்திற்கு ஒரு ஆய்வு முன்மொழிவை அனுப்பினார். அது அந்தமான் தீவுகளில் வாழக்கூடிய பழங்குடியினரின் மரபணு மாதிரிகளின் மீதான ஆய்வு குறித்தது. சி.சி.எம்.பி மரபணு நிபுணர்களான லால்ஜி சிங், குமாரசாமி தங்கராஜ் ஆகியோர் அந்தமான் வாழ் பழங்குடியினரின் மரபணு அடையாளங்கள் குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். டேவிட் ரீச் கடிதம் அந்தமான் பழங்குடிகளின் மரபணுக்களை மேற்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் ஆப்பிரிக்காவில் இருந்து நடந்த மானுட இடம்பெயர்தலை புரிந்து கொள்வதை முன் மொழிந்தது. அது அன்றைக்கு இந்தியாவில் சாத்தியமற்ற சில ஆய்வுகளை அமெரிக்காவில், பாஸ்டனில் ஹார்வர்டில் நடத்த முன்மொழிந்திருந்தது.
லால்ஜி சிங், குமாரசாமி தங்கராஜ் உள்ளிட்ட இந்திய அறிஞர்கள் ஆய்வுப் பரப்பை விரிவுபடுத்திக்கோரினர். அதன் அடிப்படையில் ஆய்வை அந்தமான் பழங்குடிகள் பற்றியதாக மட்டும் வரம்பிடுவதாக இல்லாமல் முழு இந்தியாவிற்கும் விரிவுபடுத்தக் கூறினர். அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மக்கள் தொகுதிகள் (மொழி, மதம், பிரதேசம், சாதி, பழங்குடி என வேறுபட்டவர்கள்) 18 ஆயிரம் பேரின் மாதிரிகளை வைத்திருந்தனர். இவர்கள் 300 வெவ்வேறு மக்கள் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதிலிருந்து 25 முற்றிலும் வேறுபட்ட குழுக்களின் மரபணு மாதிரிகளோடு குமாரசாமி தங்கராஜ் அமெரிக்கா, பாஸ்டன் ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் சென்று அவற்றை சமர்ப்பித்தார். அவற்றில் நடந்த ஆய்வு முடிவு விவரங்களோடு டேவிட் ரீச், அவரது சகா நிக் பேட்டர்ஸன் ஆகியோர் 2008 அக்டோபர் 28 அன்று இந்தியா ஹைதராபாத், சிசிஎம்பி வந்து லால்ஜித் சிங், குமாரசாமி தங்கராஜ் ஆகியோரை சந்தித்து ஆய்வு முடிவுகளை விளக்கியுள்ளனர். ஆய்வு முடிவுகளைக் கேட்ட சிங், தங்கராஜ் குழுவினர் கொதித்துப் போய்விட்டனர். டேவிட் ரீச் வார்த்தைகளில், "...அக்டோபர் 28 கூட்டத்தில் பெரும் எதிர்ப்பை நேர்கொண்டோம். சிங், தங்கராஜ் குழுவினர் இந்த ஆய்வுத் திட்டத்தையே கைவிடுவதாக அச்சமூட்டினர்..." என்று போகிறது. என்ன காரணம்? ஆய்வு முடிவுகள் இந்திய மக்கள் பரப்பு இரண்டு மூதாதைகளின் கலப்பில் உருவானது. இரண்டு மூதாதைகளில் ஒன்று ‘மேற்கு யூரேசியர்கள்’ மற்றவர்கள் இந்தியாவில் அதற்கு முன்பே இருந்தவர்கள் என்பதைக் காட்டுகின்றன என்பது தான். பட்டவர்த்தனமாகக் கூறினால் இந்தியாவிற்கு வெளியில் இருந்து கடைசியாக வந்த ஆரியர்களும் அதற்கு முன்பே வந்து இங்கிருந்தவர்களும் கலந்துதான் இன்றைய இந்திய மக்கட்பரப்பு என்பதே ஆய்வு முடிவு.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தால் சிங், தங்கராஜ் குழுவினர் ஆய்வு முடிவுகளையே முடக்க முயன்றனர். ‘மேற்கு யூரேசியர்கள்’ முன்பே இந்தியாவில் இருந்து வெளியே சென்றவர்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்த்துள்ளனர். ஆனால் மரபணு ஆய்வு முடிவுகளில் அதுபோன்று இந்தியாவிலிருந்து மக்கள் மேற்கே குடியேறியதற்கு சான்றுகள் இல்லையென்று டேவிட் ரீச், நிக் பேட்டர்ஸன் அணி மறுத்துள்ளது. இறுதியில் ஒரு சமரசத்திற்கு வந்தனர். இந்தியாவில் இரு மூதாதை மக்கள் தொகுதிகள் இருந்தன; ஒன்று தொல் வட இந்திய (Ancient North Indian - ANI) மூதாதைகள்; மற்றொன்று தொல் தென் இந்திய (Ancient South Indian - ASI) மூதாதைகள். இந்த இரு மூதாதை மக்கள் தொகுதியினரும் கலந்துதான் இந்திய மக்கள் தொகுதி உருவானது என்று கூறி அந்த ஆய்வுக் கட்டுரையை அமெரிக்க அறிவியல் சஞ்சிகையான நேச்சர் இதழிலும் பதிப்பித்தனர். (Nature - 461, Sep 2009).
இது நேர்மையற்ற நடவடிக்கை என்பதை அதிகம் விளக்க வேண்டியதில்லை. தொல் வட இந்திய (ANI) மூதாதை, தொல் தென் இந்திய (ASI) மூதாதை என ‘இரு’ மூதாதைகள் ஏன்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? ஏ.என்.ஐ அடையாளங்கள் அதிகமுள்ள மக்கள் பகுதியில் இந்தோ - இரானிய (சமஸ்கிருத) மொழிகளையும், ஏ.எஸ்.ஐ அடையாளங்கள் அதிகம் உள்ளவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்களாக இருப்பது எப்படி? போன்ற கேள்விகளை எழுப்பக் கூடியதும் அதற்கு பதிலில்லாததுமான ஆய்வுக் கட்டுரைதான் அனுமதிக்கப்பட்டு வெளிவந்தது.
தனது நூலில் நடந்தது அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ள டேவிட் ரீச் இன்னும் ஒரு படி மேலே போய் ஆரியப் படைஎடுப்பு எனும் கருத்து குறித்து பொதுவாக இருக்கும் ‘மறுப்பு’ நிலையையும் கேள்வி கேட்கும் விதமாக இரண்டு செய்திகளைக் கூறுகின்றார்.
ஒன்று இந்திய மக்கள் தொகைப் பரப்பு ஏ.என்.ஐ, ஏ.எஸ்.ஐ ஆகிய இரண்டு மூதாதைகளால் ஆனது என்றாலும், இது Y குரோமோசோம் டிஎன்ஏ அடிப்படையில் கூறப்படுவது. அதாவது ஆணின் கொடிவழியில் கூறப்படுவது. மிட்டோகோன்றியா, டிஎன்ஏ அடிப்படையில் பார்த்தால், அதாவது தாயின் கொடிவழியில் பார்த்தால் இந்திய மக்கள் தொகைப் பரப்பு முழுவதும் ஒரு மூதாதையிடம் இருந்து வந்ததே. அதாவது 4 ஆவது அலையில் வந்த மக்கள் கூட்டம் (ஆரியர்கள்) பெரும்பாலும் ஆண்களால் ஆனது! சாதாரணமான குடியேற்றம் என்றால் இதுபோல பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் நிரந்தரமாக இடம்பெயர்ந்து குடியேறுவது எதார்த்தமில்லையே! இதைக் கேள்வி கேட்கும் டேவிட் ரீச் இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறுகின்றனர். ஒன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மூதாதை என்று பார்த்தால், 20% ஐரோப்பியர்கள். ஆனால் அதில் ஆண், பெண் மூதாதைகள் என பார்த்தால் 4:1 என்ற விகிதத்தில் உள்ளது. ஆப்பிரிக்க அடிமைப் பெண்களும் சுதந்திரமான ஐரோப்பிய ஆண்களும் 4 மடங்கு ஆப்பிரிக்க அடிமை ஆண்களும் சுதந்திரமான ஐரோப்பியப் பெண்களும் ஒரு மடங்கு என்பதில் வியப்பேதுமில்லை. ஆப்பிரிக்கர் அமெரிக்கா வந்து சேர்ந்தது இயல்பான குடியேற்றம் இல்லையல்லவா. அவர் காட்டும் மற்றொரு எடுத்துக்காட்டு தென்னமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் கலப்பினம். கலப்பினத்தில் ஐரோப்பிய, ஆண்கள், ஐரோப்பிய பெண்களின் பங்கு 50:1 என்று உள்ளது. அங்கும் ஐரோப்பியர்கள் வந்தது ஒரு சாதாரணமான குடியேற்றம் இல்லை, படையெடுப்பு என்பதை அவர் தனியே கூறவில்லை.
இது ஒருபுறம், மறுபுறத்தில் ஆரியப்படை எடுப்பிற்கு தொல்பொருள் சான்றுகள் இல்லையே என்பவர்களிடம் சொல்கிறார்: இன்றிலிருந்து 1500 - 1600 ஆண்டுகளுக்குள் ஜெர்மானிய பழங்குடிகளின் படையெடுப்பால் அன்றைய மேற்கு ரோமானியப் பேரரசு நொறுங்கிச் சரிந்தது, ஜெர்மானியப் பழங்குடியினரான விசிகோத்துகளும் வண்டல்களும் ரோம் நகரையே தீக்கரையாக்கினர். ஆனால், ரோமானிய சாம்ராஜ்யத்தின் நகரங்கள் எல்லாம் தரை மட்டம் ஆனதற்கு எந்தவித தொல்பொருள், புதைபொருள் சான்றுகளும் இல்லை. அவற்றை எல்லாம் மிகவும் விளக்கமாக சமகால வரலாற்று ஆவணங்கள் மூலமே அறிந்து கொள்கின்றோம்.
இப்படி ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததை அறிவியல்பூர்வமாக நிறுவக்கூடிய கட்டுரையையும், ஆரியர்கள் வந்தது ஒரு சாதாரணமான குடியேற்றம் என்பதையே கேள்வி கேட்கும் ஆய்வாளரின் பெயரையும் அதற்கு நேர்மாறான தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்தினார்கள். 2009 ஆம் ஆண்டு நேச்சர் இதழில் வந்த இந்தக் கட்டுரையையும் பின் 2011 ஆம் ஆண்டு ‘அமெரிக்கன் ஹியூமன் ஜெனடிக்ஸ்’ இதழில் (AJHG-89, Dec 9,2011) வந்த ஒரு கட்டுரையையும் பயன்படுத்தி ஆரியன் - திராவிடன் என்ற பிரிவினையை அறிவியல் தவறென நிறுவிவிட்டது; ஆரியர் குடியேற்றம், ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசிய இடதுசாரி வரலாற்று அறிஞர்கள், பெரியார் எல்லாம் தவறு என நிருபிக்கப்பட்டது என்றெல்லாம் கூறி அவர்கள் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. இந்த கோஷ்டி கானத்தில் லால்ஜி சிங், குமாரசாமி தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டது மிகவும் வேதனைக்குரியது.
டாக்டர் டேவிட் ரீச் தனது நூலில் இதனையெல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார். ஆனால் அவர் இதனை மட்டும் எழுதவில்லை. மரபணு ஆய்வுகள் எப்படி மனிதகுல வரலாற்றைக் கட்டியமைக்க முடியும் என்பதையும், அந்த அறிவியல் வளர்ந்த விதத்தையும் எளிய மொழியில் விளக்குகின்றார். இந்திய, வர்ணம், ஜாதி ஆகிய பிரிவினைகள், ஐரோப்பிய சமூகத்தில் யூதர்கள், ஃபின்லாந்தியர் ஆகியோர் என இது போன்றோரின் மரபணு ரீதியான அடிப்படைகள் ஆகியவற்றையும் விளக்குகின்றார். மரபணு அடிப்படையிலான இந்திய வரலாறும், ஐரோப்பிய வரலாறும் காட்டும் ஒற்றுமையும் வேறுபாடுகளும் குறித்தும் சீன மரபணு வேறுபாடுகள் முற்றிலும் கலந்து நிரவிவிடப்பட்டது குறித்தெல்லாம் இவர் விவரிப்பது இந்திய, சீன, ஐரோப்பிய வரலாற்றுப் போக்குகளில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள உதவும் எனப்படுகின்றது. வடதென் அமெரிக்கக் கண்டங்கள், மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஒசியானியா என எந்தப் பகுதியையும் அவர் விட்டுவிடவில்லை.
இன்னும் மரபணுவியலின் மருத்துவ ரீதியான பயன்பாடு, நியாண்டர்தால் இனத்திற்கும், ஹேமோசேப்பியன் சேப்பியன் இனத்திற்குமான உறவு, தொன்மையான புதை படிமங்களின் டி.என்.ஏ ஆய்வு என மனித குலத்தின் மிக நீண்ட பயணத்தின் கதையையும் அதிலுள்ள சிக்கல்கள், சிடுக்குகள் ஆகியவற்றோடு விளக்கும் நூல் இது.
இந்தியா குறித்து எழுதியுள்ளது, ஏனைய பகுதிகளின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் நம்மிடம் சற்று மறைத்துவிடும் அபாயம் உள்ளது. ஆனால், அறிவியல் கல்வி ஏதும் இல்லாத சாதாரண அளவு ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தவர்களுக்கும் வாசிக்கத் தக்கதாக எழுதியுள்ளது பெரும் சாதனைதான்.
- ப.கு.ராஜன், மொழிபெயர்ப்பாளர், மார்க்சிய ஆய்வாளர், ‘புரட்சியில் பகுத்தறிவு’ நூலின் ஆசிரியர்.