கீற்றில் தேட...

பெரும்பான்மை பலத்துடன் பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது, அது தன்னை என்றென்றும் நிரந்தமாக தக்க வைத்துக் கொள்ள தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. பெரும்பான்மையான மக்களை இனவாதத்திலும், மதவாதத்திலும், சாதியவாதத்திலும் மூழ்கடிப்பதன் மூலம் அவர்களை அரசியலற்றவர்களாக மாற்றி, தனக்கான கருத்தியல் அடித்தளத்தை பாசிசம் ஏற்படுத்திக் கொள்கின்றது. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதும், அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் எந்த வகையான உரிமைகளையும் சிறுபான்மை கோரக்கூடாது என்பதும், அவர்கள் பெரும்பான்மையிடம் மண்டியிட்டு, தனது வாழ்வியல் சார்ந்த உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டுதான் வாழ வேண்டும், இல்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் பெரும்பான்மை என்னும் பாசிசம் கடைபிடிக்கும் வழிமுறை.

jerusalem

கடந்த வாரம் இஸ்ரேல் தன்னை யூத நாடாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நாட்டின் வலதுசாரி லிகுட் கட்சி அரசாங்கம் “வரலாற்றுரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி. எனவே அதன் சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன” எனக் கூறியுள்ளது. மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பு இருந்தபோதும் வலதுசாரி பாசிச அரசாங்கம் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேலை யூத நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானபோது வெளியிட்ட மதம், இனம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக அரசியல் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அது அப்பட்டமாக மீறியிருக்கின்றது.

இந்த அறிவிப்பால் இனி இஸ்ரேலில் வசிக்கும் யூதர்கள் அல்லாத 20 சதவீதம் மக்களின் உரிமைகள் சட்டப்படியே பறிக்கப்படும். இஸ்ரேலின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக இருந்த அரபி அதன் இடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அதன் இடத்தில் ஹீப்ரு மொழி ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக ஆக்கப்படும். யூதர்களைத் தவிர அங்கு வசிக்கும் அரேபியர்கள் உட்பட பிற இனத்தைச் சேர்ந்த மக்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவில் இஸ்ரேல் ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இது தான் பெரும்பான்மையின் சண்டித்தனம். தனக்கு சொந்தமில்லாத ஒரு நாட்டை ஆக்கிரமித்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கி, இன்று அந்த மண்ணின் மக்களான அரேபியர்களுக்கு சொந்தமான ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த வெளிப்படையான சண்டித்தனத்திற்குப் பின் அமெரிக்கா மற்றும் சவுதியின் கரங்கள் உள்ளன.

அமெரிக்காவிற்கு எந்த அதிபர் வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது, அதற்குத் தேவையான பண உதவியையும் ஆயுத உதவியையும் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை தாம் அங்கீகரிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார். உலக நாட்டாமை கொடுத்த இந்த தைரியத்தில்தான் இன்று இஸ்ரேல் ஜெருசலத்தை ஜ.நா.வின் கட்டுப்பாட்டை மீறி தன்னுடைய தலைநகராக அறிவிக்கச் செய்திருக்கின்றது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் இந்த உதவி என்பது இஸ்ரேலை தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதற்காகவும், அதன் மூலம் தனக்கு எதிராக செயல்படும் ஈரான் உட்பட பல எண்ணெய் வள நாடுகளை அச்சுறுத்தவும்தான்.

நாடற்ற யூதர்கள் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்று தனக்கென ஒரு யூத நாட்டை அறிவித்து இருக்கின்றார்கள். இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி இஸ்ரேல் அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேலில் அரேபிய மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது நிச்சயமாக உலகம் முழுவதும் வாழும் யூதர்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அதைப் பற்றி வலதுசாரி பாசிச லிகுட் கட்சி அரசு கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

இஸ்ரேலை யூத நாடாக அறிவித்ததன் மூலம் யூதர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாக அங்கே வாழமுடியாது என்பதை இஸ்ரேல் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அந்நாட்டின் பிரதமரான நெதன்யாஹுவினுக்கும், நம் நாட்டு மோடிக்கும் மிக நெருக்கமான ஒற்றுமை உள்ளது. இருவருமே பாசிசத்துக்கு ஆதரவான மனநிலையை கட்டமைத்ததன் மூலம்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். மோடியும், நெதன்யாஹுவும் ஒன்றுபடும் புள்ளி என்பது முஸ்லிம் எதிர்ப்புதான். யூதர்களின் பாசிசத்தை நிலைநாட்ட யூத நாடு கட்டமைக்கப்படுகின்றது என்றால், இங்கே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்து நாட்டை கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மனதளவில் தன்னை ஒரு யூதனாகவும், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட இந்துவாகவும் இருக்கும் ஒருவன் தன் சக மனிதனை இனத்தைக் காரணம் காட்டியும், மதத்தைக் காரணம் காட்டியும்,சாதியைக் காரணம் காட்டியும் ஒழித்துக் கட்டும் மனநிலைக்கு இயல்பாகவே வந்தடைகின்றான். பாலஸ்தீன முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற யூத வெறியும், இந்திய முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன இந்துமத வெறியும் தனக்கான கருத்தியலை தான் உருவாக்கி வைத்திருக்கும் புராண புரட்டுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கின்றன.

நவீன கால முதலாளித்துவத்தில் ஜனநாயகம் என்ற வார்த்தையே கேலிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. எண்ணெய் வள நாடுகளை தனது ராணுவ அத்துமீறல் மூலம் கொள்ளையடிக்கும் அமெரிக்காவும், பாலஸ்தீனத்தின் அப்பாவி முஸ்லிம் மக்களை அமெரிக்க ஆயுதங்களின் மூலம் வேட்டையாடும் இஸ்ரேலும் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வந்த தேவதூதுவன்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றன. இன்று இதனுடன் இந்தியாவும் கரம்கோர்த்துள்ளது. மதரீதியான கொலைகளை நடத்துவதிலும் சரி, வளங்களைக் கைப்பற்ற படுகொலைகள் புரிவதிலும் சரி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் கிடையாது. இஸ்ரேல் இன்று தன்னை வெளிப்படையாக யூத நாடாக அறிவித்துக் கொண்டது போல இந்தியாவும் தன்னை நாளை இந்து நாடாக அறிவித்துக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்று இஸ்லாமிய மக்கள் மீதும், தலித் மக்கள் மீதும் மாட்டுக்கறியை தின்கின்றார்கள் என்று பார்ப்பன அஜென்டாவை வைத்து தாக்கும் சங்பரிவார கும்பல்கள் அனைத்தும் தம் மனதில் இந்தியா ஒரு இந்துநாடு என்று உறுதியாக நம்புகின்றன. அந்த நம்பிக்கை தான் அவர்களுக்கு முஸ்லிகளையும், தலித்துகளையும் குறிவைத்துத் தாக்கும் உத்வேகத்தை அளிக்கின்றது. அண்மையில் சசிதரூர், "மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும்" என்றார். அது பொய்யல்ல. அதற்கான செயல்திட்டங்கள் காவிக் கும்பலிடம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வரலாற்றில் மிக மோசமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். உலகம் எங்கிலும் பாசிசம் வெற்றிபெற்று கோலோச்சி வருகின்றது. மக்களின் மனங்களை முதலாளித்துவம் இனவாதத்தாலும், மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும் கூறுபோட்டு வர்க்கப் போராட்டத்திற்கான அணி சேர்க்கையை திட்டமிட்டு தடுத்து வருகின்றது. டிரம்ப், மோடி, நெதன்யாஹுவின் போன்றவர்கள் பெரும்முதலாளிகளின் கொள்ளைக்காக அவர்களால் வளர்த்து விடப்பட்டவர்கள். இவர்கள் தங்களின் பாசிச முகத்தை வளர்ச்சி என்னும் முகமூடியால் மறைத்து வைத்துள்ளார்கள். சாமானிய மக்களின் ரத்தத்தை பணமாக மாற்றி, முதலாளிகளின் பாக்கெட்டுகளில் சேர்ப்பதும், அப்படி தங்களுடைய ரத்தம் உறிஞ்ச‌ப்படுவதை எதிர்த்து, பாட்டாளி வர்க்கம் போராடத் தயாராகும் போது அவர்களுக்குள் இனவாதத்தையும், மதவாதத்தையும் சாதியவாதத்தையும் தூண்டிவிட்டு அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைவை சீர்குலைப்பதும்தான் இந்தப் பாசிச சக்திகளின் வேலை.

இஸ்லாமிய நாடு என்பது எப்படி எந்த வகையிலும் அந்த மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவவில்லையோ, அதே போல யூத நாடு என்பதுவும் எந்த வகையிலும் யூத மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற நிச்சயம் உதவப் போவதில்லை. இந்த அறிவிப்பு இன்னும் மூர்க்கத்தனமாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான யூதப் பெருமுதலாளிகளின் திட்டமே அன்றி வேறல்ல. இதன் பின்புலத்தில் இருந்து ‘இந்து நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் காவிக் கும்பலின் யோக்கியதையைப் புரிந்துகொண்டு அதை முறியடிக்க நாம் போராட வேண்டும்.

- செ.கார்கி