பயங்கரவாதத்தை எதிர்த்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போராடும் என்று அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமரும் முன்பு அறிவித்தார்கள். இப்போது பிரிட்டிஷ் பிரதமரும் இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.

Blair and Manmohan singhபயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் போராடுவது ஏன் என்று புரிகிறது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் கைகோத்துக் கொள்வது ஏன், எப்படி, என்பது புரியாத புதிர்தான். யார் யாரையோ, எந்தெந்த அமைப்புகளையோ பயங்கரவாதி, பயங்கரவாத அமைப்பு என்று பட்டியல் போடும் அமெரிக்காவும் பிரிட்டனும் பயங்கரவாத நாடுகள் இல்லையா?

உலகின் பல நாடுகளிலும் பயங்கரவாதம் தலைதூக்கியதில் இந்த நாடுகளுக்குப் பொறுப்பில்லையா? பகத்சிங், நேதாஜி போன்ற பல மனித நேயர்கள் தீவிரவாதிகள் ஆனதற்கும் படை திரட்டியதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதம் தானே காரணம்? (அன்றைய பிரிட்டிஷ் அரசு பகத்சிங், நேதாஜி போன்றவர்களைப் பயங்கரவாதிகள் என்றே அறிவித்தது. இந்திய மக்களோ அவர்களைத் தேச பக்தர்களாக ஏற்றுப் போற்றினார்கள்.

விடுதலைப் போர்களைப் பயங்கரவாதமாகச் சித்திரிப்பது ஆதிக்கவாதிகளுக்கு இயல்பானதே! விடுதலைப் போரிலும் பயங்கரவாதிகள் பங்கேற்க முடியும். ஆனால், அவர்களை எப்படி அடையாளம் காண்பது? இலட்சியங்களுக்காக, சுதந்திரத்துக்காகப் போராடுகிறவன் ஒருபோதும் மக்களைக் கொல்ல மாட்டான். மதப் பழமைவாதிகளே ஆயுதங்களை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.

அரசுப் பயங்கரவாதத்துக்கு மாற்று மதவெறி அல்ல. மதங்கள் எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கே ஆராதனை செய்கின்றன. கறுப்பினத் தலைவர் லுமும்பா படுகொலை செய்யப்பட்டதிலிருந்து ஈராக் போர்வரை அமெரிக்கா நடத்திய சதிகள் கொஞ்சமா? ஈராக் மீதான போருக்கு அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று அமெரிக்கா கொண்ட வெட்கம் கெட்ட பேராசை தானே காரணம்? பொய் விதைத்துப் போர்களை உருவாக்கும் அமெரிக்காவின் பயங்கரவாதம்தானே இன்று இஸ்லாமியப் பயங்கரவாதத்தை உருவாக்கியது?

ஈராக் அதிபர் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத் துறை கண்டறிந்து தகவல் தருகிறது. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ஈராக் குவித்து வைத்திருக்கும் நாசகரமான ஆயுதங்களை முப்பது நாட்களுக்குள் அழிக்க வேண்டும் என்று கெடு விதிக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் பிரச்சாரம் பொய்; தனது நாட்டில் அவ்வாறான ஆயுதக் குவிப்பு எதுவும் இல்லை என்று மறுக்கிறார் சதாம் உசேன்.

உடனே ஈராக் மீது போர் தொடுக்கிறது அமெரிக்கா. போரின் முடிவில் அமெரிக்காவின் பிரச்சாரம் பொய் என்று அம்பலமாகிறது. ஈராக்கில் அமெரிக்கா கூறிய ஆயுதம் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஈராக் மயான பூமியான பிறகு அமெரிக்கா உளவுத்துறை (சி.ஐ.ஏ.) தவறான தகவல் கொடுத்து விட்டது என்கிறது அமெரிக்கா. நடந்தது உளவுத்துறையின் தவறா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிரா?

Troopsசெப்டம்பர் 11-ல் ‘பெண்டகன்’ (அமெரிக்க ராணுவத் தலைமையகம்) மீதும் வர்த்தக மையக் கோபுரங்கள் மீதும் நடந்த தாக்குதல்கூட அமெரிக்காவின் நாடகமே என்று இப்போது அமெரிக்க ஏடுகள் அம்பலப்படுத்துகின்றன. அதை விவரிக்கும் குறுந்தகடுகளும் விற்கப்படுகின்றன. உளவுத்துறை தவறான தகவல் தந்து விட்டது என்று ‘ஒப்புக் கொண்ட’ பிறகும் கூட அமெரிக்கக் கூட்டணிப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேற மறுப்பது ஏன்? அமைதியை விரும்பும் உலக மக்கள் எல்லோருமே எதிர்ப்புத் தெரிவித்த பிறகும்கூட அமெரிக்க - பிரிட்டிஷ் அரசுகள் திருந்த மறுப்பது ஏன்?

அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டணிகளும், புதிய நாஜிகளின் உதயமும்தான் உலகளாவிய பயங்கரவாதத்தை உருவாக்கின. அமெரிக்கக் கூட்டாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக மதத்தை முன்னிறுத்துவது வெற்றி தராது. இஸ்லாமிய மக்களின் எதிரிகள் அமெரிக்கா பிரிட்டிஷ் அரசுகள் மாத்திரம்தானா? இந்தியாவில் சங்கப் பரிவாரங்களின் மதவெறியும் ஆரிய சாம்ராஜ்ய - அகன்ற பாரதக் கனவுகளும்தான் பயங்கரவாதத்தின் ‘பிரம்மா’க்களாகும்.

இந்தியாவில் சங்கப் பரிவாரங்களைத் தடை செய்யாமல், மதவாத அரசியலை வேரறுக்காமல், உலக அரங்கில் ஏகாதிபத்தியங்களைத் தனிமைப்படுத்தாமல், பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டணியின் ராணுவம் நேர்முகமாக ஈராக்கை அழித்தது. அதை அழித்த தன் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இந்தியா போன்ற நாடுகளில் மறைமுகமாக உள்நாட்டுப் போரைத் திணிக்கிறது.

சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு இன்று அமெரிக்க - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுடன் இந்தியா கைகுலுக்குவது வரலாற்று நிர்பந்தமே! ஜவஹர்லால் நேருவின் கூட்டுச் சேராக் கொள்கை என்பது விரிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அரசியல் பால பாடமாகும்.

- ஆனாரூனா

Pin It